search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொங்கு பாலம் விபத்து- பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது
    X

    தொங்கு பாலம் விபத்து- பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது

    • தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
    • இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது.

    இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மிகப்பழமையான தொங்கு பாலம் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாகும். ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த தொங்கு பாலம் கட்டப்பட்டு இருந்தது.

    சுற்றுலா தலமாகவும் இந்த பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்த பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது.

    அந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்பு பணியை முடித்து கடந்த 26-ந்தேதி பாலத்தை திறந்தது. அன்று முதல் அந்த பாலத்தில் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்ல தொடங்கினார்கள்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை தினம் என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்டனர்.

    அந்த தொங்கு பாலத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி நின்று சாத் பூஜை செய்தனர். சுமார் 500 பேர் ஒரே நேரத்தில் அந்த பாலத்தில் நின்றதால் பாரம் தாங்க முடியாதபடி பாலத்தில் தொய்வு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் சில இளைஞர்கள் தொங்கு பாலத்தில் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர்.

    ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

    பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×