என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதியில் ஆகஸ்டு 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது.
- ஆன்லைனில் ஆகஸ்டு 1-ந்தேதி தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 8-ந்தேதியில் இருந்து 10-ந்தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்று தரிசனம் செய்யும் பக்தர்களுக்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி காலை 10 மணியளவில் தரிசன டோக்கன்களை வெளியிடுகிறது.
மொத்தம் 600 தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து பவித்ரோற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம். பவித்ரோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்கள் பாரம்பரிய உடையில் காலை 7 மணியளவில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 1-க்கு வர வேண்டும்.
தரிசன டோக்கன்களுடன் ஏதேனும் அசல் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tirumala.org அல்லது www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
- வாடகைக்கு வீடு எடுத்து சிறுவனுடன் இளம்பெண் தங்கி இருந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே தெருவை சேர்ந்தவர் 15 வயது சிறுவன். இவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சிறுவன் தனது நண்பனை சந்திக்க செல்வதாக வீட்டில் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே தெருவில் இருந்த 30 வயது இளம்பெண்ணும் காணாமல் போனதால் அவர் மீது சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அவர் ஐதராபாத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஐதராபாத் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பாலா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுவனுடன் இளம்பெண் தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு கொண்டு வந்தனர்.
இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளிக்கு சென்று வரும்போது சிறுவனை மயக்கி அவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும், கணவர் மற்றும் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் சிறுவனை கடத்தி வந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சிறுவனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வீரபத்திர ராவ் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், நந்தி காம அடுத்த கம்மவாரி பாளையத்தை சேர்ந்தவர் வீர பத்ரராவ். இவரது மனைவி அருணா ஸ்ரீ. தம்பதிக்கு 2 மகள்கள் இருந்தனர். இவர்களது மூத்த மகள் ஹர்ஷிதா வர்த்தினி (வயது 19). இவர் அங்குள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.டெக் படித்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால் வீர பத்ர ராவ் அங்குள்ள வங்கியில் ரூ.3.50 லட்சம் கடன் வாங்கினார். வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டினர். வங்கி ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்த வீரபத்திர ராவ் மனைவி மற்றும் மகள்களை விட்டுவிட்டு டெல்லிக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீரபத்திர ராவ் வீட்டிற்கு வந்த வங்கி ஊழியர்கள் அவரது மனைவி மகள்களை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹர்ஷிதா வர்த்தினி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது தாய் மற்றும் சகோதரி கதறி அழுதனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹர்ஷிதா வர்த்தினியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது ஹர்ஷிதா வர்த்தினி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், கடன் தொல்லை இருப்பதால் நாம் பிழைப்பது கடினம். மேலும் கல்லூரிக்கு கட்டணம் கட்ட கூட வசதியில்லை.
இதனால் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. நான் எம்.டெக் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் உள்ளவர்களிடம் தெரிவிக்கவும். கல்லூரி ஸ்காலர்ஷிப் வர வேண்டி உள்ளது. அதனை வாங்கி தங்கையை நன்றாக கவனித்து கொள்ளவும் என உருக்கமாக எழுதி இருந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான வங்கி ஊழியர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியநாராயண சாமி கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர்.
- 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சத்தியநாராயண சாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள சாமிக்கு அதே பகுதியை சேர்ந்த சத்திய பிரசாத் குடும்பத்தினர் நேற்று வைர கிரீடம் வழங்கினர். 682.23 கிராம் தங்கம் மற்றும் 90 சதவீத வைரக் கற்கள் பதித்த கிரீடத்தை சாமிக்கு காணிக்கையாக வழங்கினர்.
இந்த கிரீடம் சென்னையில் உள்ள தனியார் நகைக்கடை மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1.50 கோடி என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- அமைச்சர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மிரட்டி 150 விஐபி தரிசன டிக்கெட் பெற்று நேற்று தரிசனம் செய்தார்.
- திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இதேபோல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் சார்பில் வழங்கப்படும் பரிந்துரை கடிதங்களுக்கு அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வி.ஐ.பி. தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநில மீன்வளத்துறை அமைச்சர் அப்பாலா ராஜு தன்னுடைய குடும்பத்தினர் உறவினர்கள் தரிசனம் செய்வதற்காக 150 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை மிரட்டி 150 விஐபி தரிசன டிக்கெட் பெற்று நேற்று தரிசனம் செய்தார்.
இதுகுறித்து அமைச்சர் அப்பாலா ராஜு கூறுகையில்:-
எனது குடும்பம் மிகப்பெரியது. அவர்களுடன் உறவினர்களும் சாமி தரிசனம் செய்ய விருப்பம் தெரிவித்தனர். அதனால் 150 பேரை தரிசனத்திற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.
திருப்பதியில் இலவச தரிசனத்தில் மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்யும் வேளையில் அமைச்சர் ஒருவர் தன்னுடைய உறவினர்கள் 150 பேருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்திருப்பது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
- முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அம்பவாரி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 16-ந் தேதி விஜயவாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தம்பதியினர் ஐதராபாத்தில் வாடகை வீடு எடுத்து தங்கினர்.
இந்த நிலையில் புதியதாக வீடு கட்ட ரூ.80 லட்சம் தேவைப்படுவதாகவும், உன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று பணத்தை வாங்கி வர வேண்டும் என இளம்பெண்ணிடம் சதீஷ்குமார் கூறினார். அதற்கு இளம்பெண் தன்னுடைய தாய் வீட்டில் அவ்வளவு பணம் இல்லை என தெரிவித்தார்.
பணத்தை வாங்கி வரவில்லை என்றால் படுக்கை அறையில் எடுத்த நிர்வாண போட்டோக்களை ஆபாச வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதையடுத்து இளம்பெண் பணம் வாங்கி வருவதாக கூறி தனது தாய் வீட்டிற்கு செல்லாமல் பெங்களூருவில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
பெங்களூருக்கு சென்ற சதீஷ்குமார் தனது மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று மனைவியை மீண்டும் மிரட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் கணவரின் செல்போனை பிடுங்கி அதில் உள்ள போட்டோக்களை ஆய்வு செய்தபோது மேலும் 4 பெண்களை அவர் திருமணம் செய்த போட்டோக்கள் செல்போனில் இருந்தது.
இதனைக் கண்டு திடுக்கிட்ட இளம்பெண் இதுகுறித்து குண்டூர் டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகூர் மீரான், தரங்கினி ஆகியோர் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து தனது மனைவியுடன் அமெரிக்காவில் வேலைக்குச் சென்ற சதீஷ் பாபு முதல் மனைவிக்கு தெரியாமல் 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்துள்ளார்.
மீண்டும் ஆந்திராவிற்கு வந்த சதீஷ்குமார் குண்டூர் நரசராவ் பேட்டை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டும், 2019-ம் ஆண்டு நெல்லூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து மேலும் இதுபோல் வேறு பெண்கள் யாரையாவது திருமணம் செய்து ஏமாற்றினாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண நாளையொட்டி ரவி கடந்த 25-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்தார்.
- மறுநாள் திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது மனைவி சாய்பிரியாவுடன் வைசாக் கடற்கரைக்கு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் ரவி. இவர் ஐதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியா (வயது 22) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை 26-ந்தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சாய்பிரியா விசாகப்பட்டினத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து இருந்தார். திருமண நாளையொட்டி ரவி கடந்த 25-ந் தேதி மாமியார் வீட்டிற்கு வந்தார். மறுநாள் திருமண நாளை கொண்டாடும் விதமாக தனது மனைவி சாய்பிரியாவுடன் வைசாக் கடற்கரைக்கு சென்றனர்.
இருவரும் கடலில் குளித்தபடி விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது சாய்பிரியா சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி வருமாறு கணவரிடம் கூறினார்.
இதையடுத்து ரவி உணவு பொருட்களை வாங்கி வருவதற்காக சென்றார். பின்னர் திரும்பி கடற்கரைக்கு வந்தபோது சாய்பிரியா திடீரென காணாமல் போனார்.
இதனைக் கண்டு திடுக்கிட்ட அவர் கடற்கரை முழுவதும் தனது மனைவியை தேடினார். மாமியார் வீட்டுக்கு போன் செய்து கேட்டபோது சாய்பிரியா வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து ரவி போலீசில் புகார் செய்தார். போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர்கடற்கரைக்கு வந்து படகுகள் மூலம் சாய் பிரியாவை தேடினர்.
மேலும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு விடிய விடிய விசாகப்பட்டினம் கடல் மற்றும் கடற்கரை முழுவதும் தேடினர். ஆனால் சாய்பிரியாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் சாய்பிரியா தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் நெல்லூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தேன். ஆனால் ரவியுடன் எனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை.
தற்போது காதலனுடன் பெங்களூரில் இருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் என கூறியிருந்தார்.
படகுகள் மற்றும் ஹெலிகாப்டர் மூலமும் விடிய விடிய அவரை தேடியதால் ரூ.1 கோடி வரை செலவு ஏற்பட்டுள்ளது. பொய் புகார் அளித்ததால் நஷ்டஈடு தொகையாக ரூ.1 கோடி தருமாறு அதிகாரிகள் பெண்ணின் பெற்றோருக்கு நோட்டீஸ் வழங்கினர்.
அதற்கு அவர்கள் தன்னுடைய மகள் காதலனுடன் ஓடியது தெரியாமல் மருமகன் போலீசில் புகார் தெரிவித்தார். புகாருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
- 1-ந்தேதி கருடசேவை நடக்கிறது.
- 2-ந்தேதி தங்கத்தேரோட்டம் நடைபெற உள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி நடக்கிறது. அதையொட்டி 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் நான்கு மாடவீதிகளில் வாகனச் சேவை நடக்க உள்ளது.
அதையொட்டி திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி மற்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந்தேதி கொடியேற்றம், 1-ந்தேதி கருடசேவை, 2-ந்தேதி தங்கத்தேரோட்டம், 4-ந்தேதி தேர்த்திருவிழா, 5-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
பிரம்மோற்சவ கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி திருமலைக்கு வந்து மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து முதல் நாள் இரவு 9 மணியளவில் வாகனச் சேவை தொடங்குகிறது. வாகனச் சேவை காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரையிலும் நடக்கிறது.
தமிழ் புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமை கருடசேவை வருவதால் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானப் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க என்னென்ன ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ஆலோசனை நடத்தப்படும்.
பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தில் காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கான தரிசனம் மற்றும் பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. தனியாக வரும் புரோட்டோக்கால் வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டுமே பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். இதற்காக லட்டு பிரசாதம் இருப்பு வைக்கப்படும். பாதுகாப்பு, போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாத வகையில் போலீசாரும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை துறை அதிகாரி நரசிம்மகிஷோர், திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஷ்வர்ரெட்டி ஆகியோர் கூட்டாக கோவிலின் நான்கு மாட வீதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாடவீதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்தனர். பாதுகாப்பு தேவைக்காக காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். திருமலையில். 24 மணி நேரமும் இயங்கும் காவல் கட்டுப்பாட்டு மைய அறை அமைக்கப்படும். பல்ேவறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகள், தரிசன வரிசைகள் மற்றும் இதர என்ஜினீயரிங் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அலிபிரியில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும். தடையில்லாத மின்சாரம் வழங்குவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
கோவில் மற்றும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்படும். பக்தர்களுக்கு சேவை செய்ய 3,500 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள். புகைப்பட கண்காட்சி மற்றும் மலர், கலை கண்காட்சி ஏற்பாடு செய்யப்படும். சுகாதாரத்துறையின் கீழ் தூய்மைப் பணியில் தீவிர கவனம் செலுத்தப்படும். அதற்காக, கூடுதலாக 5 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.
மருத்துவத் துறையின் கீழ் சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடங்களில் முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். திருமலை முழுவதும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, கருடசேவை அன்று கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். நடைபாதையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க, கருடசேவை அன்றும், மறுநாள் மதியம் 12 மணி வரை திருப்பதி மலைப்பாதைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படும்.
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதால் வாகனச் சேவை தொடர்பாக இந்து தர்ம பிரசார பரிஷத் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி கூறுகையில், பிரம்மோற்சவ விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். மாவட்ட அளவில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படும். முழுமையான செயல் திட்டத்தை தயார் செய்து மீண்டும் ஒருமுறை தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலரை சந்தித்து இதுபற்றி தெரிவிப்போம், என்றார்.
- கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.
- தற்போது 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
திருப்பதியில் கடந்த 2 மாதங்களாக கட்டுக்கடங்காத அளவுக்கு தினமும் 80 முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்காக குவிந்து வந்தனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வந்தனர்.
இதனால் 2 நாட்கள் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாயும் அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்து வருகிறது.
தற்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதியில் நேற்று 68,982 பேர் தரிசனம் செய்தனர். 29,092 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.60 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
- பக்தர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பங்கேற்று தரிசனம் செய்யலாம்.
- தரிசன டிக்கெட்டுகள் நேரிலும், ஆன்லைனிலும் வழங்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரலட்சுமி விரத உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சானூரில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்க உள்ள வரலட்சுமி விரத உற்சவ ஏற்பாடுகள் நடந்து வருகிறது. உற்சவத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அனைத்து வசதி ஏற்பாடுகளும் செய்து தரப்படும். பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கோவில் வளாகத்தில் தனித் தரிசன வரிசை அமைக்கப்படும். பக்தர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ பங்கேற்று தரிசனம் செய்யலாம். அதற்கான தரிசன டிக்கெட்டுகள் நேரிலும், ஆன்லைனிலும் வழங்கப்படும்.
வரலட்சுமி விரத உற்சவத்தையொட்டி கோவிலும், ஆஸ்தான மண்டபமும் பல்வேறு வகையான மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்படும். அன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்கும் வரலட்சுமி விரத உற்சவ நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏழுமலையான் கோவில் பக்தி சேனலில் நேரடியாக ஒளி பரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- உண்டியல் வருமானம் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது.
திருமலை :
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. உண்டியல் வருமானமும் குறைவாகவே வந்தது.
தற்போது கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் வருமானமும் தொடர்ந்து 5 மாதமாக ரூ.100 கோடிக்குமேல் வந்துள்ளது. ஜூலை மாதத்தில் 23 நாட்களில் ரூ.106.4 கோடி வருமானம் கிடைத்தது.
மார்ச் மாதத்தில் ரூ.128 கோடி, ஏப்ரல் மாதம் ரூ.127.5 கோடி, மே மாதத்தில் ரூ.19.93 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.120 கோடி கிடைத்துள்ளது.
பக்தர்கள் அதிகமாக உண்டியலில் காணிக்கை செலுத்துவதால், இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1,500 கோடி உண்டியல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.
கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.






