என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான்.
    • கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது.

    நீளமான கூந்தல் மீது பலருக்கும் ஆசைதான். ஆனால், அதற்குக் சீரான கேசப் பராமரிப்பும், ஊட்டச்சத்து உணவுகளும் மிக அவசியம். கூந்த வளர்ச்சிக்கு உதவக்கூடிய அடிப்படை பராமரிப்பு வழிகளை இங்கு பார்க்கலாம்.

    தலைமுடி நன்றாக வளர வேண்டும் என்றால், அதற்கு அதைச் சரியான நேரத்தில் ட்ரிம் செய்வதும் அவசியம். கூந்தல் வளர்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு அது ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம். அதனால் சீரிய இடைவெளியில், குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது, கூந்தலின் நுனிப்பகுதியில் கிளை பிரிந்திருக்கும் பலவீனமான பாகத்தை (Split Ends) வெட்டிவிடுவது நல்லது. இப்படிச் செய்வதன் மூலம், அந்த ஸ்பிளிட் எண்ட்ஸ் மேல்நோக்கிப் பரவுவதைத் தடுக்கலாம்.

    கூந்தலை அடிக்கடி அலசுவது நல்லது. தலையில் அழுக்கு, பிசுபிசுப்பு சேர்ந்தால் கூந்தலின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் பாதிக்கப்படும். வெளியில் சென்று வந்தாலோ, அழுக்காக இருப்பதாய் உணர்ந்தாலோ உடனடியாகத் தலையை அலசவும். மென்மையான ஷாம்பூகளைப் பயன்படுத்துவதும், கண்டிஷனர்கள் உபயோகிப்பதும் மிக நல்லது.

    நல்ல தரமான கூந்தல் பிரஷ்களைப் பயன்படுத்துவது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியப் பகுதியாகும். கூந்தலின் ஆரம்பப் பகுதியில் ஆரம்பித்து நுனிப் பகுதி வரை மென்மையான பிரெஷ்களைக் கொண்டு சீவ வேண்டும். மேலும், ரத்த ஓட்டத்தை தூண்டும் வகையில் ஸ்கால்ப்பில் சீப்பைக் கொண்டு மிருதுவாக சீவுவதை வழக்கமாக்கவும். முடிந்தவரை கூந்தலை சிக்கு விழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் கூந்தல் பாதிப்படையாமல் தடுக்கப்படும்.

    வழக்கமாக கூந்தலுக்கு செய்யும் ஷாம்பூ, எண்ணெய் மற்றும் கண்டிஷனர் பராமரிப்புடன் கூடுதலாக சில விஷயங்களைச் செய்வது கூந்தலின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் உதவும். 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதை உச்சந்தலையில் மசாஜ் செய்து, பின் கூந்தலின் நுனி வரை தடவவும். 30 நிமிடங்கள் ஊறவிட்டு குளிக்கவும். இதில் வைட்டமின் ஈ அதிகமாக இருப்பதால் கூந்தல் மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும். மேலும், கூந்தல் பலம் ஆகும்; உதிர்வதும் குறையும். இதை வாரத்துக்கு ஒரு முறையாவது செய்து வரலாம்.

    • எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும்.
    • ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும்.

    நம்மில் பலரும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். உங்களுடைய மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப ஷாம்பூவையும் கண்டிஸ்னரையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எந்த ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தினாலும், அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று ஒரே தன்மை கொண்ட ஷாம்பூ தான், ஆனால் பிராண்டு வேறு. அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்கிற முடிவு ஆபத்தாக அமையும். எனினும் வாங்குவதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்துவிட்டு ஒரு பிராண்டை மட்டும் முடிவு செய்யுங்கள். என்ன இருந்தாலும் ஷாம்பூவை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது முடி உதிர்வதை தடுக்காது.

    நீங்கள் வெளியில் அலைந்து திரிபவராக இருந்தால், தினசரி ஷாம்பூ பயன்படுத்தலாம். மேலும் நமது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாசுபாடு அதிகமாக நிலவுகிறது. இதனால் தூசி, துகள் தலை முடியில் ஏற்படும். தினமும் வெளியில் அலைபவர்கள், சூரியன் வெப்பத்துக்கு வெளிப்பட நேரிடும். இதனால் தலையில் வியர்வை அதிகளவில் சுரக்கும். இதையொட்டி தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்வது நன்மையாகவே அமையும். அதுதவிர, ஷாம்பூவை தினமும் பயன்படுத்த முடியாது என்றால், தினசரி உடற்பயிற்சி செய்யலாம். ஈரப்பதமில்லாத பகுதிகளில் வாழ்பவர்களும் தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளிக்கலாம்.

    ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை உள்ளிட்டவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ. எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும். அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை. முடியின் இடையில் விரல்களை விட்டு, உள்ளங்கையை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். மேலும் கேசத்தின் வேரை நன்றாக தேய்து கழுவிட வேண்டும். நகங்களை வைத்து உச்சந்தலையை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ரொம்பவும் ஈரப்பதமாக உச்சந்தலையை வைத்திருக்கக் கூடாது. முடியின் முனைகள் மிகவும் உலர்ந்து போவதை தவிர்க்க கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்.

    • பெண்களுக்கு ஜிமிக்கி கம்மல் மிகவும் பிடிக்கும்.
    • ஜிமிக்கி கம்மல் செய்முறையை எளிய முறையில் தெரிந்து கொள்வோம்...

    தேவையான பொருட்கள்:

    ஜிமிக்கி மோல்டு

    விரும்பிய வண்ணத்தில் பட்டு இழைகள்

    தங்க நிற மணிகள்

    வெள்ளை நிற கற்கள்

    கேன்வாஸ் பேப்பர்

    கம்மல் தண்டு

    மெல்லிய கம்பி

    பசை

    செய்முறை:

    1. ஜிமிக்கி மோல்டில் இருக்கும் துளையில் பட்டு இழையை நுழைத்துக்கொள்ளவும்.

    2, 3 படத்தில் காட்டப்பட்டிருப்பது போல, பட்டு இழையை மோல்டில் இறுக்கமாக துளையில் நுழைத்து சுற்றிக்கொள்ளவும்.

    4. முழுவதும் சுற்றி முடித்ததும் பசை கொண்டு பட்டுநூலின் முனையை மோல்டோடு சேர்த்து நன்றாக ஒட்டிவிடவும். பின்னர் மீதமிருக்கும் பட்டு இழையைக் கத்தரித்து விடவும்.

    5. பட்டு இழை சுற்றி இருக்கும் மோல்டின் மீது பசை தடவி, படத்தில் காட்டியுள்ளதுபோல தங்கநிற மணிகளை முழுவதுமாகச் சுற்றி நன்றாக உலர வைக்கவும்.

    6. படத்தில் காட்டியுள்ளது போல ஜிமிக்கியின் மேல்பகுதியை, கேன்வாஸ் பேப்பரின் மீது தங்க நிற மணிகளையும், வெள்ளைக் கற்களையும் ஒட்டி உருவாக்கிக்கொள்ளவும். அது நன்றாக உலர்ந்த பிறகு தனியாகக் கத்தரித்து எடுக்கவும். அதன் பின்பகுதியில் கம்மல் தண்டை பசை கொண்டு நன்றாக ஒட்டவும்.

    7. இப்போது ஜிமிக்கியையும், அதன் மேல் பகுதியையும் மெல்லிய கம்பி கொண்டு இணைத்தால், அழகான 'பட்டு இழை ஜிமிக்கி கம்மல்' தயார்.

    • பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது.
    • உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    பலருக்கும் பாடி மசாஜ் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், இதற்காக மசாஜ் சென்டர் செல்ல தயங்கிவருகின்றனர். அதற்குக் காரணம், பாடி மசாஜ் அல்லது ஸ்பாவால் ஏற்படும் நன்மைகளையும், அதன் செயல்முறைகளையும் அறியாததுதான்.

    பாடி மசாஜ் உடல் ரீதியாக மட்டுமின்றி மனரீதியாகவும் பலனளிக்கிறது. பாடி ஸ்பா சிறந்த மருத்துவ முறையாகும். வாசனை எண்ணெய்கள் அல்லது கிரீம்களுடன் மசாஜ் செய்கையில், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுவது மட்டுமின்றி தோல் செல்களில் அதிக ஊட்டச்சத்துகளைப் பெற உபயோகமாக அமைகிறது.

    பாடி ஸ்பா தசை இறுக்கம், சோர்வைப் போக்க உதவுகிறது. அதன் காரணமாகத்தான், பெரும்பாலானோர் பாடி ஸ்பாவில் சொக்கி தன்னை மறந்து தூங்குகின்றனர். இதனால் சருமத்தில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கிறது.தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மன அழுத்தம், கவலையைக் குறைக்கிறது. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

    உடல் சோர்வாகவும், மிகுந்த வலியுடனும் இருந்தால், அதனைப் போக்குவதற்கு அனைவரும் மேற்கொள்ளும் ஒரு முறை தான் மசாஜ். வாரத்திற்கு ஒரு முறை உடலுக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், உடல் வலி குறைவதோடு, உடல் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதுமட்டுமின்றி, உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும். அதிலும் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி ஆயில் மசாஜ் செய்து கொண்டால், இன்னும் சூப்பராக இருக்கும். இவ்வாறு உடலுக்கு ஆயில் மசாஜ் செய்ய பல எண்ணெய்கள் உள்ளன.

    பெரும்பாலும் அனைவரும் உபயோகிப்பது நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் மட்டும் தான். ஆனால் இவை மட்டுமின்றி, இன்னும் நிறைய எண்ணெய்கள் உடலுக்கு மசாஜ் செய்ய பயன்படுகின்றன. இந்த எண்ணெய்கள் அனைத்தும் உடல் வலியைப் போக்குவதோடு, சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளைப் போக்க வல்லது. குறிப்பாக ஸ்ட்ரெட்ச் மார்க், சரும வறட்சி, கடினமான சருமம் போன்ற பிரச்சனைகளை, உடலுக்கு மசாஜ் செய்வதன் மூலம் தடுக்கலாம்.

    • பப்பாளி அலர்ஜி இருப்பவர்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
    • பப்பாளியை முடி மற்றும் தோல் பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம்.

    பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் (Papaya skin beauty) மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். இயற்கை ஃபேஷியலுக்கு பழங்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கும் சருமத்துக்கும் எந்தவிதமான பாதிப்புகளையும் உண்டாக்குவதில்லை.

    * முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.

    * பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும்.

    அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.

    * நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.

    * பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.

    * ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

    * பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன்படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் வளர்வது தடைபடும்.

    * காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.

    * மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

    • ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.
    • தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன.

    மிக மிருதுவான துணியில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை மிகவும் அழகாக ஒரு ஓவியம் போல பிரிண்ட் செய்து புடவையில் தருவது பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. உடலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அந்த கதாபாத்திர பிரிண்ட்டுகள் இருக்க தலைப்பு மற்றும் பார்டரில் அந்த கதாபாத்திரங்கள் அடர்ந்த காடுகள் மற்றும் சோலைகளில் இருப்பது போன்று வடிவமைப்பது இருப்பதை வர்ணிக்க ஒரு நாள் போதாது என்று சொல்லலாம்.

    காடு, மலை, குளம், பறவைகள், விலங்குகள் என இயற்கையையும் அத்துடன் மனிதர்கள் இருப்பதையும் தத்ரூபமாக ஒரு ஓவியம் போல இந்தப் புடவைகள் நம் கண்முன் கொண்டுவருகின்றன. இந்தப் புடவைகளுக்கு தரப்படும் வண்ணமும் அதன் மென்மையும் நம்மை வாங்கத் தூண்டுகின்றன என்று சொல்லலாம். இந்தப் புடவைகள் ஒரு கதையை கூறுவது போலவும் நமக்கு தோன்றுகின்றது.

    உடல் முழுவதும் சிவோரி பிரண்ட்கள் ஒரு தனிப்பட்ட வண்ணத்திலோ அல்லது பல வண்ணங்கள் கலந்தோ இருப்பது போன்று வடிவமைத்து தலைப்பில் தஞ்சாவூர் ஓவியம் போன்று ஓவிய கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டுவருவது இந்தப் புடவைகளின் தனிச்சிறப்பாகும்.

    பிளெயின் வண்ண உடல் பகுதியில் மயில், மான், அன்னப்பறவை, யானை, மரம் போன்ற பிரிண்ட்களை சிறிய அளவில் தந்து சிறிய தாமரைப் பூவை பார்டராக வைத்து தலைப்பில் தாமரைப்பூ மற்றும் மயில் வடிவத்தை பெரிய அளவில் பிரிண்ட் செய்து வரும் புடவைகளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். கலம்காரி டிஜிட்டல் பிரிண்ட் உடல் முழுவதும் இருக்க பார்டரில் பெரிய டிசைன்களை வடிவமைத்து இருப்பது வித்தியாசமாக இருக்கின்றது. இந்தப் புடவைகளுக்கு தலைப்பு மிகவும் சிறியதாக இருப்பது சற்றே வித்தியாசமாக இருக்கின்றது.

    • சில பழக்கவழக்கங்களை மாற்றினால் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    • முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இதை கடைபிடிக்கலாம்.

    வயது, மரபணு மற்றும் உணவு முறை ஆகியவற்றை பொறுத்து மனிதர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு அங்குலம் வரை முடி வளரும். அதனால் முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் ஒரு சில பழக்கவழக்கங்களை தவறாமல் பின்பற்றுவதன் மூலம் இயற்கையாகவே முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்துவிடலாம்.

    அதற்கு பயன்படுத்த வேண்டிய பொருட்கள்:

    ஆளி விதைகள்: இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை உடலுக்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் நன்மை பயக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளில் 6,400 மில்லி கிராம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளடங்கி இருப்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது முடியை வலுப்படுத்தவும், நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வழிவகை செய்யும்.

    நெல்லிக்காய்: இது பல்வேறு விதமான மருத்துவ குணங்களை கொண்டது. முடி வளர்ச்சிக்கும் துணை புரியக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கொலோஜன் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்வதற்கு உதவும்.

    கறிவேப்பிலை: சமையலில் தவறாமல் இடம் பெறும் இதனை முடி வளர்ச்சிக்கும் தவறாமல் பயன்படுத்தி வரலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஈ போன்றவை தலைமுடி நீளமாக வளர உதவும். கூந்தல் பளபளப்பாக காட்சி தருவதற்கும் வழிவகுக்கும். ஒரு டம்ளர் காய்கறி சாற்றில் 10-15 கறிவேப்பிலைகளையும் சேர்த்து பருகி வரலாம். அதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம்.

    • பரு வந்தால் நம்முடைய முகத்தின் அழகே மறைந்துவிடும்.
    • பெண்களுக்கு இயற்கை முறையில் பருவை போக்க எளிய வழிகள் இருக்கிறது.

    இளமைப் பருவத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் முகத்தில் பரு வருவது இயற்கை தான். ஆனால், பரு வந்தால் நம்முடைய முகத்தின் அழகே மறைந்துவிடும்.

    இதனை போக்க அதிரடியாக செயற்கை மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் பெண்களுக்கு இயற்கை முறையில் பருவை போக்க எளிய வழிகள் இருக்கிறது.

    தக்காளி சருமத்தை சுத்தப்படுத்தி அழகாக வைத்துக்கொள்ள உதவும் சிறப்பான மருந்து. தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.

    கிராம்பும், பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான். கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர பருக்கள் குணமடையும்.

    இதேபோல் வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.

    சிறந்த மருந்தாக பயன்படும் தேனும் பருக்களுக்குரிய மருந்து தான். பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.

    கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.

    தலைவலிக்கு நாம் செய்யும் பழக்கம் தான் ஆவிபிடிப்பது. இதனை பருக்களை போக்கவும் செய்யலாம். ஆம், நம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்களை போக்க ஆவிப்பிடிப்பதும் முக்கிய ஒன்று. ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.

    • இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை.
    • இந்த புடவைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல், வாழை, புளிச்சை கீரை நார், மூங்கில் நார்கள் என அனைத்து நார் வகை உணவுப் பொருட்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    நூலினால் தயாராகும் சேலைகளுக்கு இருக்கும் அத்தனை அழகும், வனப்பும் நார்களைக் கொண்டு நெசவு செய்யப்படும் சேலைகளிலும் இருக்கின்றன.

    சணல் புடவைகள்

    காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களால் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுபவையே சணல் புடவைகள். முற்றிலும் மக்கக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினால் உருவாக்கப்படும் இந்த ஆர்கானிக் புடவைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் இதன் அழகை மேலும் கூட்டுகின்றன. விழாக்களுக்கு இந்த புடவைக்கு ஏற்ற நகை அலங்காரத்துடன் அணியும் பொழுது அனைவரின் கவனமும் உங்களைச் சுற்றியே இருக்கும். மலர்கள் மற்றும் செக்ட் பிரிண்ட்டுகளுடன் வரும் இந்தப் புடவைகளின் அழகை வெல்ல வேறு புடவைகள் இல்லை என்று சொல்லலாம்.

    மூங்கில் பட்டுப் புடவைகள்

    மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களைக் கொண்டு இந்தப் புடவைகள் நெசவு செய்யப்படுகின்றன. பாராட்டத்தக்க உறிஞ்சுதல் திறனுடன், வெப்பத்தை மூழ்கடித்து, கோடை காலத்தில் அணியும் பொழுது குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன புடவைகள், பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவையாக இருப்பதால் இவை புதிய யுகத்தின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

    இந்த மூங்கில் நார்களும் பட்டு நூல்களைப் போலவே மென்மையாக இருப்பதால் அவை இரண்டையும் இணைத்து மூங்கில் பட்டுப் புடவைகளை உருவாக்குகிறார்கள். பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் கைகளினால் அச்சிடப்பட்டு வருகிறது இந்த மூங்கில் புடவைகள். பாரம்பரிய அச்சிடு மற்றும் சிறந்த ஜரி அலங்காரங்களுடன் வரும் மூங்கில் புடவைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் அணியக் கூடிய சிறந்த தேர்வாகும். கனமான பார்டர்கள் மற்றும் விரிவான புட்டாக்களுடன் வரும் மூங்கில் பட்டுப்புடவையை நீங்கள் அணியும் பொழுது அவை உங்கள் பெண்மைக்கு ஒரு தனித்துவமான பிரமாண்டத்தைக் கொடுக்கும்.

    கற்றாழை நார் புடவைகள்

    மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே பயன்பட்டு வந்த கற்றாழையானது இப்பொழுது வண்ணப் புடவைத் தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளன. நூல்களின் விலையேற்றத்தால் அவற்றிற்கு மாற்றாக வந்த கற்றாழை நார்ச் சேலைகளுக்கு இப்பொழுது மக்களிடையே ஏக வரவேற்பு இருப்பதினால் அதன் தேவை மிக அதிக அளவில் இருக்கின்றது. பச்சையாக இருக்கும் நார்களை மொத்த விலைக் கடைகளிலிருந்து வாங்கி வந்து அவற்றை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றி பிறகு மென்மையான முறையில் ஒற்றை ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து பின்பு அந்த நார்களைக் கொண்டு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

    கற்றாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எழிலான புடவைகளின் விலையானது பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் புடவைகளின் விலையை விடக் குறைவாகவே உள்ளது. மேலும் இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் இவ்வகைச் சேலைகளினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. இவை ஆர்கானிக் புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் புடவைகள் என்று பெயர் பெற்ற சணல், வாழைநார், மூங்கில், காட்டுபட்டு மற்றும் கற்றாழை நார் கொண்டு நெசவாளர்களின் புத்திசாலித்தனமான கைவினைத் திறனைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படும் இவ்வகை சேலைகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் புடவைகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.

    • சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்கும்.
    • சருமத்தில் சுருக்கம் வராமல் தடுக்கும்.

    சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

    பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும். சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    தேவையானவை:

    ரோஜா – 3

    தயிர்- கால் கப்

    ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

    செய்முறை:

    ரோஜா இதழ்களை தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் தயார்.

    • விரும்பிய வண்ணம் நீளமாக நகம் வளர்ப்பது சாத்தியமானதுதான்.
    • நீளமாக நகம் வளர எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்.

    பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் கைகளை அலங்கரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி நகங்கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்தியமாவதில்லை. ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்துபோய்விடுவதை பார்த்து வேதனை அடைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் கிரீம்களை உபயோகிக்கலாம்.

    நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.

    நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்களின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். கியூட்டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்டிக்கிள் ஆயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்கக்கூடாது.

    நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.

    • எந்த ஒரு விழாவிற்கும் இந்த ஒரு நகையை மட்டும் அணிந்தால் போதும்..
    • கழுத்தணிகளை மிகவும் அழகான தோற்றத்துடன் வடிவமைக்கிறார்கள்.

    மிகவும் பிரம்மாண்டமான நகைகளை படங்களில் அணிந்து வருவதை பார்த்திருக்கிறோம். அதேபோல பிரம்மாண்ட தோற்றம் தரும் நகைகளை பல நகை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. சாதாரணமாக பெண்கள் அணியும் ஹாரம் என்பது நீளமாக கழுத்திலிருந்து தொங்கி சிறிய அல்லது பெரிய டாலர்களுடன் இருப்பதை பார்த்து இருக்கிறோம். இப்பொழுது வந்திருக்கும் இந்த மணமகள் அணியக்கூடிய ஹாரங்கள் கழுத்திலிருந்து துவங்கி முழு மார்பையும் மறைத்து வயிறு வரை நீண்டு இருப்பது போல் மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருக்கின்றன..

    சிறிய மயில் உருவங்களை முதல் வரிசையாக வைத்து அதன் நடுவில் லட்சுமி உருவம் இருப்பது போன்றும், அடுத்த வரிசையில் வேறுவிதமான மயில் உருவங்களை வைத்தும், அதற்கு அடுத்த வரிசையில் அதே அளவில் இருக்கும் மயில் உருவங்களை வைத்து என்று மேலிருந்து கீழ்வரை எட்டு வரிசைகளும் அகலம் குறைந்து கொண்டே வருவது போல் வடிவமைத்து நடுவில் லட்சுமி உருவத்தை பெரியதாக இருப்பது போல் வடிவமைக்கிறார்கள்.இந்த ஹாரமானது யூ வடிவத்தில் பிரம்மாண்டமாக மிரட்டுகிறது என்று சொல்லலாம்.. ஹாரம் முழுவதும் ஓரங்களில் பீட்ஸ் தொங்குவது போன்று வடிவமைத்திருப்பது இந்த ஹாரத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கின்றது..

    இதற்கு ஏற்றார் போல் காதணிகளை வைத்து அதிலும் பீட்ஸ் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது நகைகளை விரும்பாதவர்களும்வாங்கி அணியத் தூண்டும் விதத்தில் இருக்கின்றது.. இந்த நகைகளுக்கு பழங்கால தோற்றத்தை தருவதற்காகவே இந்த நகைகளை டல் பாலிஷ் இருப்பதுபோல் வடிவமைக்கிறார்கள்.இந்த நகைகளில் ரூபி மற்றும் எமரால்டு கற்கள் பதித்திருப்பது இந்த நகைக்கு கூடுதல் அழகை தருகின்றது.

    எந்த ஒரு விழாவிற்கும் இந்த ஒரு நகையை மட்டும் அணிந்தால் போதும்.. இத்துடன் வேறு நகைகளை அணிய வேண்டிய அவசியமே ஏற்படாது என்று சொல்லும் அளவுக்கு கழுத்திலிருந்து துவங்கி மார்பு முழுவதையும் மறைத்து வயிறு வரை நீண்டு தொங்கும் விதத்தில் இந்த நகைகளை வடிவமைத்திருக்கிறார்கள்.யூ வடிவத்தில் வரும் இதுபோன்ற மார்பை மறைக்கக் கூடிய ஹாரங்கள் பல டிசைன்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன..அன்னப்பட்சி, மாங்காய், இலை, சங்கு, வட்டம்,கும்பம் ,மீன் என பல வடிவங்களில் இருப்பது போன்று இந்த கழுத்தணிகளை மிகவும் அழகான தோற்றத்துடன் வடிவமைக்கிறார்கள்.

    ஜடை அலங்காரத்திற்கு தலையின் உச்சி முதல் முடிவுவரை குஞ்சலத்தோடு இணைக்கப்பட்டு வரும் ஜடை செட் இன்னும் அற்புதம் என்று சொல்லலாம்..தொடக்கத்தில் பெரிய லட்சுமி உருவம் அதன் கீழே இரண்டு மயில்கள் இணைந்திருப்பது போன்றும் அதற்கு அடுத்து வரும் லட்சுமி உருவம் அதைவிட சற்று சிறியதாகவும் அதற்கும் கீழே இரண்டு மயில்கள் இணைக்கப்பட்டு இருப்பது போன்றும் இதுபோன்று ஜடையின் முடிவுவரை லக்ஷ்மி உருவமானது சிறியதாகிக் கொண்டே சென்று அதன் முடிவில் குஞ்சலமானது இணைக்கப்பட்டிருக்கும்..

    ஒவ்வொரு லட்சுமி உருவத்திற்கும் இடையில் இரண்டு மயில்கள் இருப்பது போன்று இடைவெளியுடன் செய்யப்பட்டிருப்பது மிகவும் பாந்தமாக இருக்கின்றது.. அதேபோல் கழுத்து ஹாரத்தில் இருப்பது போன்றே இந்த ஜடை அலங்கார செட்டிலும் ரூபி மற்றும் எமரால்ட் கற்களை பதித்திருக்கிறார்கள்.. மயில்களுக்கு கீழே பீட்ஸ்கள் தொங்குவதும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கின்றது.. அதேபோல் கஜலட்சுமி உருவத்தையும் இந்த ஜடை அலங்காரத்தில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது மேலும் கூடுதல் சிறப்பாகும்..

    மணமகள் நகை என்றால் அதில் ஒட்டியாணம் இல்லாமல் இருக்குமா என்ன? ஒட்டியாணத்தின் மையப்பகுதியில் பெரிய அளவில் லட்சுமி உருவம் இருக்க பக்கவாட்டில் அதற்கு அடுத்தடுத்த அளவுகளில் லட்சுமி உருவங்கள் இருப்பது போன்று ஒட்டியாணம் முடிவடைகின்றது.. ஹாரத்தில் இருக்கும் அதே டிசைன்களையே இந்த ஒட்டியாணத்திலும் பிரதிபலித்திருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது.

    திருமணத்திற்கு முன் அல்லது பின்பு நடைபெறும் நிச்சயதார்த்தம், சங்கீத் மற்றும் மெகந்தி பங்க்ஷன்களுக்கு அணிவது போன்று சிறிய நெக்லஸ்கள் மிகவும் கண் கவரும் விதத்தில் புதுமையான மாடல்களில் வந்திருக்கின்றன.. இந்த நெக்லஸ்களில் குறைந்த இடைவெளிகளில் பாதி ஜிமிக்கிகளை அதன் கீழே முத்துக்களை இணைத்து தொங்குவது போன்று வடிவமைத்திருப்பது மிகவும் அட்டகாசமாக இருக்கின்றது..அதேபோல் ஒரே அளவில் இருக்கும் லக்ஷ்மி உருவங்களை வைத்து செய்யப்படும் நெக்லஸ்களில் எமரால்டு மற்றும் ரூபி கற்களை தொங்கவிட்டு இருப்பதும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது.

    மணப்பெண்களுக்கான காதணிகள் என்று எடுத்துக்கொண்டால் லட்சுமி உருவம் அதிலிருந்து இரண்டு பக்கமும் கிளைகள் போல பிரிந்து ஒவ்வொரு கிளையிலும் சிறிய அளவில் ஜிமிக்கிகள் தொங்க கிளையின் மத்தியிலிருந்து பெரிய ஜிமிக்கி தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றது..காது மடல்களை முழுவதும் மறைப்பது போல் டிசைன்கள் வர அதன் மேற்புறத்தில் சிறிய ஜிமிக்கி போன்ற டிசைன் தொங்குவது போன்றும் கீழ்ப்புறத்தில் பெரிய அளவிலான ஜிமிக்கி தொங்குவது போன்றும் வரும் காதணிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    இந்தப் பிரம்மாண்டமான மணமகள் நகைகளுடன் வரும் வளையல்கள் அந்த நகைகளுக்கு ஏற்றார்போல் மிகவும் பிரம்மாண்டமானதாகவே வடிவமைக்கப்படுகின்றன..நடுவில் பெரிய வளையலும் முன்னும் பின்னும் சிறிய வளையலும் சேர்த்து அணிவது போன்றும்,பட்டையாக பெரியதாக இருப்பது போன்றும், கடா மாடல்களில் அணிவது போன்றும் வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன.. கழுத்தணியில் இருக்கும் அதே டிசைன்களை வளையலிலும் வருவது போன்று வடிவமைக்கிறார்கள்.

    வங்கிகள் என்று எடுத்துக் கொண்டால் ஹாரங்களில் வரும் அதே டிசைன்களை வங்கிகளில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ வடிவமைக்கிறார்கள்.. ஹாரங்களில் தங்க,ரூபி மற்றும் எமரால்டு பீட்ஸ்கள் தொங்கினால் அதேபோன்று வங்கிகளிலும் தொங்குவது போன்று வடிவமைக்கிறார்கள்..

    இதுபோன்ற பிரம்மாண்ட நகைகளில் ஆன்டிக், செட்டிநாடு டிசைன்களை மிகக்குறைந்த தங்கத்திலும் வடிவமைத்து சில நகை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன..

    கழுத்தணியில் வரும் அன்னப் பட்சி, மீன், சங்கு, வட்டம், மாங்காய், இலை போன்ற வடிவங்களையே அத்துடன் செட்டாக வரும் ஜடை அலங்கார நகை, ஒட்டியாணம், கம்மல் மற்றும் வளையல்களிலும் இருப்பதுபோல் வடிவமைக்கிறார்கள்..ஜோதா அக்பர் மற்றும் பாகுபலி போன்ற படங்களில் வரும் பிரம்மாண்டமான நகைகளை அசலாக வாங்கி அணிய விருப்பப்படுபவர்களுக்கு இதுபோன்ற நகைகள் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

    ×