என் மலர்
அழகுக் குறிப்புகள்
- நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளை கொண்டுள்ளது.
- நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் பெரிதும் உதவியாக உள்ளது. நெல்லிக்காயில் உடல் நன்மைகள் மட்டுமின்றி, அழகு நன்மைகளும் அதிகம் நிறைந்துள்ளது.
தற்போது நிறைய மக்கள் ஆம்லா/நெல்லிக்காய் எண்ணெய், நெல்லிக்காய் இருக்கும் ஹென்னா போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏனெனில் நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது, அடர்த்தியான கூந்தலை வளரச் செய்வது என்ற பலனைத் தருகின்றன.
நெல்லிக்காய் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு நெல்லிக்காயில் 80% ஈரப்பதம் உள்ளது இது ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராகும். எனவே இதனை தலைக்கு போட்டுக் குளித்தால், தலைக்கு கண்டிஷனர் போட்டது போன்று இருக்கும்.
நெல்லிக்காய் முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் மற்றும் இயற்கையான கண்டிஷனராகும். நெல்லிக்காயில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளது. இது உச்சந்தலை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
நெல்லிக்காயை தலைக்கு பயன்படுத்தும் போது, அது மயிர்துளைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.
தினமும் நெல்லிக்காய் எண்ணெய் கொண்டு, தலைக்கு 45 நிமிடம் மசாஜ் செய்து, பின் தலைக்கு குளித்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நிறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. அவ்வாறு முடியின் நிறம் இளமையிலேயே மாறாமல் இருக்க, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரித்து வர வேண்டும்.
நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து ஒரு மெல்லிய பேஸ்ட் செய்யலாம். கூந்தலுக்கு ஊட்டச்சத்தை வழங்க முடியின் வேர்கள் மற்றும் உச்சந்தலையில் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். பிறகு 15- 20 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி விடுங்கள்.
பச்சை நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து அந்த தண்ணீரை கொண்டு கூந்தலை அலசுவது கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
நெல்லிக்காய் தினமும் சாப்பிடுவது முன் கூட்டிய நரைப்பதை தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
- வெண்ணையில் மிக அதிக அளவில்வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.
- உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.
வெண்ணையில் மிக அதிக அளவில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்து உள்ளதால் இது உங்கள் சருமத்தினை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மற்றும் ஒளிரும் தன்மையுடையதாகவும் மாற்றும் பண்பினை கொண்டுள்ளது.
பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் கலந்து கிரீம் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த கிரீமை முகம் முழுவதும் தடவி அப்ளை செய்து பின் துடைத்து எடுத்தால் ஆரம்பத்தில் முகத்தில் எண்ணெய் ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றினாலும், சிறிது நேரத்தில் நல்ல ரிசல்ட் தெரியும். வாரம் இரண்டு முறை இதை செய்யலாம்.
ஒரு கப் தயிரில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வறண்ட சருமத்தினர் இதை முகத்தில் வாரம் ஒரு முறை தடவி, உலர விட்டு கழுவினால் மெத்தென்று மிருதுவாக ஈரப்பதத்துடன் உங்களுடைய சருமம் நீடிக்கும்.
ஒரு வாழைப்பழம் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெயை மிக்ஸியில் போட்டு அரைத்து அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் விட்டு பின்பு குளிர்ந்த நீரில் அலசுங்கள். இந்த மாஸ்கினை கழுவிய பின்பு முகத்தில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பினைத் தரும்.
ஒரு தேக்கரண்டியளவு ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டியளவு உப்பு இல்லாத வெண்ணெய் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து காட்டன் பஞ்சினை எடுத்து அதில் நனைத்து உங்கள் முகம் மற்றும் கழுத்தில் நன்றாக அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தினை கழுவி மாய்ஸ்சரைசரை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம். ரோஸ் வாட்டர் மற்றும் வெண்ணெய் இரண்டும் கலந்த கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி புதுப்பிக்கிறது. அத்துடன் ரோஸ் வாட்டர் சருமத்தினை நீரேற்றமாகவும் மற்றும் ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.
இவற்றுள் எது உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றோ அதனைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.
- வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும்.
- வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
நாம் ஒவ்வொருவரும் அழகாக இருக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறோம். அந்த வகையில், இயற்கை நமக்கு பல்வேறு தீர்வுகளையும் வழிகளையும் கொடுக்கிறது. அத்தகைய ஒரு தீர்வு வேம்பு. வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பலனைத் தரும். வேம்பு உங்கள் முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதோடு, தெளிவான மற்றும் பொலிவான சருமத்தையும் உங்களுக்கு கொடுக்கிறது. வேம்புவை சருமத்தில் எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு வேம்பு ஃபேஸ்பேக் பயன்படுத்துவது இயற்கையான சிறந்த வழியாகும். வேப்பம்பூ ஃபேஸ்பேக்கை வழக்கமாகப் பயன்படுத்துவது சரும வீக்கத்தைக் குறைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.
வேப்பம்பூ அல்லது வேப்பம் இலைகளை தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் போன்ற கேரியர் எண்ணெயுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டாகவும் தயாரித்து முகப்பரு உள்ள இடத்தில் இந்த பேஸ்ட்டை போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை அடிக்கடி போட்டு வந்தால் விரைவில் நல்ல பலனை நீங்கள் பார்ப்பீர்கள்.
வேப்பிலையை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, தண்ணீரின் நிறம் மாறும் வரை ஊற வைத்து, நீரை வடித்து ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் குளிக்கும் போது, குளிக்கும் நீரில் சிறிது ஊற்றி, குளித்தால், சருமத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
ஸ்கின் டோனராகவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும். அதேப்போன்று, அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.
வேப்பிலையை நன்கு பேஸ்ட் போல் அரைத்து, அதில் சிறிது தேன் கலந்து, தலைக்கு தடவி, ஷாம்பு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, கூந்தல் பட்டுப் போன்று மின்னும். இந்த முறை ஹேர் கண்டிஷனர் போன்றது.
வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.
- தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது.
- பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது.
மருதாணி (மெஹந்தி) என பிரபலமாக அறியப்படும் ஹென்னா என்பது இயற்கையான மூலிகை தூள் ஆகும். இது முடியின் நிறத்திற்கு மட்டுமல்ல, beauty இதன் பொதுவான முடி பராமரிப்பு திறனுக்காக பொடுகுத்தொல்லை மற்றும் தலைமுடி அரித்தல் போன்ற மற்ற முடி சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.
தலைமுடிக்கு ஹென்னா கண்டிஷனிங் மிகவும் நல்லது. ஹென்னா பவுடருடன் முட்டை கலந்து தலையில் போட்டு தேய்த்து குளித்து வர முடி நன்றாக வளரும்.
இள வயதிலேயே நரை முடி எட்டிப் பார்க்கும் போது 'டை' அடிக்க முடியாது. எட்டிப்பார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடிகளை நீக்குவதும் கஷ்டம். இப்படிப்பட்டவர்கள், மருதாணி இலை, கையாந்துரை இலை, செம்பருத்தி இலை ஆகியவற்றை சம அளவில் கலந்து நிழலில் காய வைத்து மெஷினில் பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
வாரம் ஒருமுறை இந்தப் பொடியை குழைத்து அரைமணி நேரம் ஊற வைத்து குளித்துவர நரைமுடி இருந்த இடம் தெரியாது. இக்கலவை மயிர்க்கால்களுக்கு பலமும் கொடுக்கும். இவற்றுடன் வேப்ப இலை கலந்தால் பொடுகு பிரச்சனையும் போய்விடும். மருதாணி குளிர்ச்சி என நினைப்பவர்கள் இரண்டு சொட்டு நீலகிரித் தைலம் தேய்த்துக் கொண்டால் சளி பிடிக்காது.
பெரும்பாலும் ஹென்னா பயன்படுத்துவதன் மூலம் மற்ற கெமிக்கல் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை தவிக்கலாம். இது உங்கள் கூந்தளுக்கு ஊட்டமளிக்கவும், மென்மையாகவும் செய்து அழகூட்டுகிறது. ஹென்னாவை முடிக்கு கண்டிஷனராக பயன்படுத்துவதற்கு ஒரு எளிய வழி, கால் கப் மருதாணி பொடியை அரை கப் தயிருடன் கலந்து ஒரு மென்மையான பசையை தயாரிக்க வேண்டும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர் உங்கள் முடியில் இந்த கலவை தடவி 20 நிமிடங்களுக்கு அதை உலர விட்டு பின்பு தலை கழுவவும்.
ஹென்னாவை முடியில் அடிக்கடி பயன்படுத்தும்போது, தலை பொடுகு சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இது பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது. தலை பொடுகை குணப்படுத்த, ஒரு சில வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அதை அரைக்கவும். இந்த கலவையில் மருதாணி மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பசையைப் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அதை உலரவிட்டு, பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவவும்.
உங்கள் நரை மூடியை மறைக்கவும், உங்கள் தலைமுடிக்கு ஒரு அழகான பழுப்பு நிற இளஞ்சாயத்தை சேர்க்கவும் ஹென்னாவை பயன்படுத்தலாம். அதற்கு 3 தேக்கரண்டி நெல்லி தூள், ஒரு கப் ஹென்னா(இதற்கு புதிதாக அரைத்த மருதாணி இலையை தான் பயன்படுத்த வேண்டும்) சேர்க்கவும். இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து, உறிஞ்சும் தூரிகையை பயன்படுத்தி, தலையில் இக்கரைசலை உபயோகிக்கவும். ஒரு மணி நேரத்திற்கு அதை உலர விட்டு, ஒரு லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
- ஹேர்டை தலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
- தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.
30 வயதிலேயே நரை முடிகள் வருவதால் பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஹேர் டை ஆபத்து இல்லை என்றாலும் செயற்கையான முறையில் கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்துவது ஆபத்து என்கிறார் தோல் மருத்துவர்.
சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ... எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்துவிடுங்கள். அடுத்து சிறுநீர் கழிக்கும்போது டையால் உடலுக்குள் சேர்ந்த நச்சு வெளியேறிவிடும்.
டை உபயோகிக்கும்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட நேரத்தில் தலையை அலசிவிட வேண்டும். தலைக்குக் குளிக்கும்போது வாயையும் கண்களையும் மூடிக்கொண்டு அலசவும்.
`காஸ்ட்லியான டைதான் உபயோகிக்கிறேன்... ஆனால், எனக்கு அது நிற்பதே இல்லை... சட்டென வெள்ளையாகிவிடுகிறது' என்று பலர் புலம்புவதைப் பார்க்கலாம். தலைமுடி மிகவும் எண்ணெய்ப் பசையோடு இருப்பவர்களுக்குத்தான் டை நிற்காது. நம்முடைய சருமமானது சீபம் என்ற எண்ணெயைச் சுரக்கும். சருமத்தின் உள்ளே உள்ள செபேஷியஸ் சுரப்பியின் வழியே சுரக்கும் அந்த எண்ணெயானது வெளியே கசியும். அது முடியின் வேர்க்கால்களிலும் படியும். அதனால்தான் தலைக்குக் குளித்த இரண்டாவது நாளே தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். தலைமுடியில் எண்ணெய் தடவியதுபோலவே இருக்கும்.
இந்த எண்ணெய்ப்பசையானது தலைமுடியில் போடப்படும் டையின் நிறத்தை எடுக்கக்கூடிய தன்மை கொண்டது. எந்த டையும் மாதக் கணக்கில் நீடிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஆரோக்கியமானதே இல்லை. சீக்கிரம் நரைத்தாலும் மறுபடி ரீடச் செய்துகொள்வதில் தவறில்லை.
நரைமுடியை கடைகளில் வாங்கும் கெமிக்கல் ஹேர்டை கொண்டு மறைப்பதால் உண்டாகும் கடும் தீங்குகளை மருத்துவர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்காலிகமாக இது தீர்வு தந்தாலும் இதனால் உண்டாகும் பாதிப்புகள் நிறைய.
கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பல விதமான பாதிப்புகளை உண்டாக்கும். இந்த பாக்கெட் ஹேர் டைகளில் அமோனியா மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்னும் இரு வகையான ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர்.எனவே ஹேர் டை வாங்கும் முன் இந்த இரண்டு கெமிக்கல்களும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள்.
- ஆப்பிள் சிடர் வினிகர் ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- இது கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிள் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர்தான் ஆப்பிள் சிடர் வினிகர். முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கும், பொடுகு போன்ற தலைமுடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.
பொதுவான அழகு சார்ந்த பிரச்சினைகளுக்கு மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக ஆப்பிள் சீடர் வினிகர் உள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் உச்சந்தலையில் அமில-கார சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது.
பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெருகேற்றுவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம்.
உங்கள் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டாலோ, அதிகமாக கொட்டினாலோ நீங்கள் ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தி பார்க்கலாம். இது உங்கள் கூந்தலுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. நீங்கள் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். பின்னர் ஒரு குவளை தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கடைசியாக ஒரு முறை மீண்டும் அலசவும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.
சரும பராமரிப்பிலும் ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுகிறது. ஆப்பிள் சிடர் வினிகரை சிறிதளவு தூய நீருடன் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பஞ்சில் தொட்டு சருமத்திலும், முகத்தில் பருக்கள், தேமல், கரும்புள்ளி உள்ள இடங்களிலும் தடவி 5 - 10 நிமிடங்கள் காற்றில் காய வைத்து பிறகு, குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர சருமம் பளபளவென்று பொலிவடையும். ஆனால், சோரியாசிஸ், சிரங்கு, சிராய்ப்பு போன்ற சருமப் பிரச்னை உள்ளவர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது
ஆப்பிள் சீடர் வினிகரைக் (apple cider vinegar ) கொண்டு தினமும் முகத்திற்கு சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் ஆப்பிள் போன்ற கன்னங்களைப் பெறலாம். இதனை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி புத்துணர்ச்சி கிடைக்கும்.
அனைத்து வித சருமத்திலும் ஆப்பிள் சீடர் வினிகர் செயலாற்றுகிறது. வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவி விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான தோற்றம் தக்கவைக்கப்படும்.
- நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம்.
- நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன.
'நெய்ல் ஆர்ட்' எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.
பெண்கள் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டு அழகுபடுத்துவது பேஷனா இருந்துச்சு. அதுலயும் பிரவுன், சிவப்பு, பிங்க்ன்னு குறிப்பிட்ட நிறங்கள் மட்டுமே போட்டு வந்தாங்க. அதன்பின் கருப்பு, அடர் நீலம், கரும்பச்சை, வயலெட்… என மாறியது.
இன்றைய பெண்கள் பார்ட்டி, திருமண விழாக்கள், ஹாலிடே ஷாப்பிங் என சூழலுக்கு ஏற்ப நெயில் ஆர்ட்டில் பின்னியெடுக்கின்றனர்.
வெறுமனே பாலிஷ் மட்டுமே போடுவதை விட நெயில் ஆர்ட் தான் இளம் பெண்களின் விருப்பம். அழுத்தமான நிறங்களில் நெயில் பாலிஷ் போட்டுக்கோண்டு அதன் மேல் வெள்ளை கலர் பாலிஷ் டிசைன் போடுவது ஒருவகை நெயில் ஆர்ட். மிக நுணுக்கமான டிசைனைப் போட ஸ்டாம்பிங் நெயில் ஆர்ட்டும் இருக்கிறது.
பூக்கள் புள்ளிகள் ஜியாமெட்ரிக் டிசைன்கள் அவரவர் ராசிகள் என தீம் டிசைன்கள் போடுகிறார்கள். ஸ்டென்சில் முறையில் இந்த டிசைன்களை நெயிலில், ஸ்டாம்ப் பண்ணினால் மிக அழகாக இருக்கும்! தவிர ரெடிமேடாக நெயில் ஆர்ட் டிசைனில் நகங்கள் விற்கின்றன. அதையும் வாங்கி அதிலிருக்கும் க்ளு வைத்தே நம் நகங்களில் ஒட்டிக்கொள்ளலாம். சாதாரண நெயில் பாலிஷில் நெயில் ஆர்ட் நன்றாக வராது. அழுத்தமாக நிற்கவும் நிற்காது. இதற்கென ஸ்பெஷல் நெயில் பாலிஷ் விற்கிறது.
- தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது.
- வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.
தேன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது சருமத்திற்கு ஊட்டமளித்து, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ரசாயனம் இல்லாத மேக்கப்-க்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டிஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தைப் பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகளை பற்றி பார்க்கலாம்.
தயிர், தேன் தலா 1 தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தில் நன்றாக இருப்பது மட்டுமின்றி, அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோபயாடிக்குகள், வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தணிக்கும். தேன் அழற்சி எதிர்ப்பு மற்றும் மிகுந்த ஈரப்பதத்தை வழங்குகிறது.
சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிப் புது பொலிவை தரும்.
1 டீஸ்பூன் ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாகத் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். அதை வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது. தேன் மற்றும் ஓட்ஸ், இவை இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. ஓட்ஸ், நம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும் அதே சமயம், தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம். முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.
- புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு.
- நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் அதனை போக்கி விட முடியாது.
புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு. தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.
நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அதனை போக்கி விட முடியாது. இதற்கு இந்த பதிவில் கூறும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நம்மால் தீர்வை பெற இயலும். இவை அனைத்துமே பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பின் பற்றி வந்த குறிப்புகள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
பொதுவாக முடி கருமையாக மெலனின் என்கிற நிறமி தான் காரணம். இதன் அளவு குறைந்தால் உங்களின் முடி வெள்ளையாக மாற தொடங்கும். நாம் செய்கின்ற ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. நரை முடி வந்து விட்டால் அவ்வளவு எளிதில் இதை போக்கவும் முடியாது.
இளம் வயதிலே முடி நரைத்து போக சில காரணிகள் உள்ளன. அவற்றில் சில...
- புகை பழக்கம்
- வைட்டமின் டி குறைபாடு
- மரபணு ரீகியாக
- ஊட்டசத்து குறைபாடு
- மாத்திரை தொடர்ந்து எடுத்து கொள்ளுதல்
எளிய வழி வெள்ளை முடியாக உள்ள உங்கள் புருவத்தை மிக எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு குறிப்பில் கூறுவது போன்று செய்து வந்தாலே போதும்.
தேவையான பொருட்கள்..
பிளாக் டீ
பிளாக் காபி
செய்முறை :- முதலில் பிளாக் டீ மற்றும் பிளாக் காபியை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை புருவத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து புருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விடலாம். இந்த குறிப்பை பயன்படுத்தும் போது கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ளவும்.
தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை புருவத்தில் தடவி வந்தால் இளம் வயதில் நரைத்தல் நிகழ்வு தடை செய்யப்படும். மேலும், புருவம் கரு கருவென வளரவும் இந்த குறிப்பு உதவும்.
தலை முடியின் வளர்ச்சிக்கு எப்படி நெல்லிக்காய் உதவுகிறதோ அதே போன்று புருவ முடிக்கும் இது நல்ல தீர்வை தருகிறது. நெல்லியை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவினால் புருவத்தில் உள்ள வெள்ளை முடிகள் கருமை பெறும். இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் சி போன்ற தாதுக்கள் தான்.
இந்த பூமியில் இருக்க கூடிய எல்லா வவித இயற்கை பொருட்களும் நமக்கு அதிக பயனை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. அந்த வகையில் சூரிய ஒளியும் அடங்கும். தினமும் 15 நிமிடம் இளம் வெயிலில் இருந்தாலே இது போன்ற நரை பிரச்சினை உங்களுக்கு உண்டாகாது.
நீங்கள் சாப்பிட கூடிய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே அது பயனுள்ளவை. இல்லையெனில் பல வித பாதிப்புகள் உண்டாகும். வைட்டமின் பி12 அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரைகளின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
- பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன.
- ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது.
ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வகையான நன்மைகளைக் கொண்டது. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பூக்களில் ஏராளமான வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இதனால் சருமத்தை இளமையாக மாற்றுவதோடு, மினுமினுப்பாகவும் வைக்க உதவுகிறது. அந்த வகையில், பூக்கள் முக அழகை பராமரிக்க எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்:
சாமந்திபூ: இது வெயிலினால் கலை இழந்த முகத்தை முற்றிலுமாக அழகுபெற செய்கிறது.
தேவையானவை: சாமந்தி பூக்கள் 3, பால் 1 தேக்கரண்டி, யோகர்ட் - 1 தேக்கரண்டி, துருவிய கேரட் -2 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் துருவிய கேரட்டையும், சாமந்தி பூ இதழ்களையும் ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் மற்றும் யோகர்ட் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் மினுமினுக்க செய்யும்.
ரோஜா பூ
தேவையானவை: ரோஜாப் பூ- 1, பால் - 1 தேக்கரண்டி, கோதுமை தவிடு - 1 தேக்கரண்டி.
செய்முறை: முதலில் ரோஜாப் பூவின் இதழை நன்கு அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் கோதுமை தவிடையும் சேர்த்து அரைத்துக் கொண்டு பால் சேர்க்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் மிகவும் அழகு பெறும்.
செம்பருத்தி பூ: செம்பருத்தி பூ முடி பிரச்னையை சரி செய்வதோடு, முக அழகை பராமரிக்க உதவுகிறது.
தேவையானவை: செம்பருத்தி பூ -1, தயிர் - 1 தேக்கரண்டி, முல்தானி மட்டி- 2 தேக்கரண்டி, ரோஜா பூ - 1.
செய்முறை: முதலில் ரோஸ் மற்றும் செம்பருத்தி இதழ்களை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தயிர் மற்றும் முல்தானி மட்டி கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து இந்த முக பூச்சை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் மிருதுவாகும். அத்துடன் கரும்புள்ளிகள், அழுக்குகள் போன்றவற்றையும் நீக்கிவிடும்.
- நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன்.
- ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம்.
முகத்தில் தோன்றும் பருக்களே பொதுவாக முக அழகை மாற்றி கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இயற்கையாக இவற்றை நீக்கி பழைய தோற்றத்தை பெறுவது என்பதே கடினமான ஒன்று. ஆனால், அதைவிட மன அழுத்தம் தரக்கூடிய ஒன்று திடீரென்று அல்லது இருபதுகளின் பாதியிலேயே ஏற்படும் முதுமை தோற்றம்.
முகத்தில் ஏற்படும் சுருக்கங்களும் இதில் முக்கிய இடம் பெறுகிறது. ஆரோக்கியமான சருமம் பெற இவற்றை சரி செய்து கொள்வது என்பது மிகவும் அவசியமானதாகிறது. இதற்கு கொலாஜன் அவசியமாகிறது.
கொலாஜன் என்பது என்ன?
''நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன்(Collagen). இந்த புரதச்சத்து சருமங்களில் அதிகமாக இருக்கும். ஒருவருடைய சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். இது சருமங்களில் மட்டுமல்லாமல் எலும்பு மூட்டுகள், ரத்த குழாய்கள், செரிமானப் பாதையிலும் உற்பத்தியாகிறது.
பொதுவாக கொலாஜன் என்பது உடலுக்கு மிக அவசியமாகிறது என்றாலும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. நம் உணவுமுறையில் சில மாற்றங்களை செய்யும்போது நம் உடலில் கொலாஜன் இயற்கையாகவே உற்பத்தியாகும். உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்தாலும் சரியான உணவுமுறையின் மூலம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.''
கொலாஜனின் முக்கியத்துவம் என்ன?
''கொலாஜன் உற்பத்தி நம் உடலில் சீராக இருக்கும்பட்சத்தில் சுருக்கங்கள், முதுமைத் தோற்றம் போன்றவை இருக்காது. கொலாஜன் சருமத்தை மிருதுவாகவும், அழகாகவும், ஈரப்பதத்துடனும், இறுக்கமாகவும் வைக்க உதவுகிறது. சில நேரங்களில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும்போது சருமத்தில் சுருக்கங்கள், தொய்வுகள், நெற்றி மற்றும் கண்களை சுற்றி சிறு சிறு கோடுகள் தோன்ற ஆரம்பிக்கும். சருமத்தில் ஆங்காங்கே தொங்கி முதுமை தோற்றத்தையும் உண்டாக்கும். இந்த பிரச்னையை சரியான உணவு பழக்க வழக்கத்தின் மூலம் சரி செய்யலாம்.''
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியுமா?
''ஃபேஷியல் மசாஜ்கள், மாய்சரைஸர்கள், சன் ஸ்க்ரீன் லோஷன் போன்றவற்றிலும் குறிப்பிட்ட அளவு கொலாஜன் உற்பத்தி ஆகும். வைட்டமின் சி க்ரீம்கள் மற்றும் ரெட்டினால் இருக்கும் க்ரீம்கள் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் 15-லிருந்து 20 சதவீதம் வரை கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கும்.
இது தவிர மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க மாத்திரைகளும் அறிவுறுத்தப்படுகின்றன. கடைகளில் சில தவறான கொலாஜன் உற்பத்தி மாத்திரைகளும் கிடைக்கின்றன. அதனால் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே மாத்திரைகள் எடுத்துக் கொள்வது அவசியம். இது மருத்துவர் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே எடுப்பதால் இதில் எந்த பக்க விளைவுகளும் இருக்காது.''
கொலாஜன் மிகுந்துள்ள உணவுகள் என்னென்ன?
''உணவு முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய முடியும். நேரடியாக உடலில் கொலாஜன் உற்பத்தி குறையும்போது சரியான உணவுப்பழக்கம் கொலாஜனை உற்பத்தி செய்ய வழி வகுக்கும்.
பச்சைக் காய்கறிகள், கீரைகள், ப்ரொக்கோலி, குடை மிளகாய், தக்காளி, பூண்டு போன்றவை கொலாஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. வைட்டமின் சி மிகுந்துள்ள சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, லெமன், ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி, கொய்யா போன்ற பழ வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும்போதும் கொலாஜன் உற்பத்தி தூண்டப்படும்.
இது தவிர அசைவ உணவில் முட்டையின் வெள்ளைக்கரு, மீன் வகைகள், சிப்பி மீன் வகைகள் போன்றவையும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். மிக பழமையான மற்றும் அனைவரும் அறிந்த ஆட்டுக்கால் சூப் போன்றவற்றிலும் கொலாஜன் உற்பத்தி மிகுதியாக இருக்கும்.''
கொலாஜன் உற்பத்தியை கெடுக்கும் உணவுகள் என்ன?
''அரிசி, மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள், இனிப்பு வகைகள், வெள்ளை சர்க்கரை போன்றவற்றை தொடர்ந்து உண்ணும்போது உடலில் கொலாஜன் உற்பத்தி அளவு குறையும். எனவே, சருமத்தின் ஆரோக்கியம் காக்க முடிந்தவரை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.''
- வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
- பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.
தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.
பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:
தேவையானவை:
அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்
பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்
மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.
முகச்சுருக்கத்துக்கான பேக்:
தேவையானவை:
தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்
முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்
தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.
முகத்தொய்வை நீக்கும் பேக்:
தேவையானவை:
யோகர்ட் - 5 டீஸ்பூன்
காபித்தூள்- கால் டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.
கருவளையத்திற்கான பேக் :
தேவையானவை:
தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்
உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.






