search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் 18 படிகள் உருவானது எப்படி?
    X

    சபரிமலையில் 18 படிகள் உருவானது எப்படி?

    • பரசுராமரின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெறப்பெற்றது.
    • 18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது.

    சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகள் என்ற அடைமொழிகள் சபரிமலையில் உள்ள 18 படிகளுக்கும் உண்டு. ஐயப்பன் சபரிமலையில் எழுந்தருளும் சமயம் ஐயப்பனாய் அவதரித்த மணிகண்டனுக்கு, கோவில் எழுப்பிய போது கோவிலின் ஞான பீடத்தில் அமர ஐயப்பன் எழுந்தருளினார். அப்போது தான் 18 படிகள் உருவானது.

    அதாவது ஐயப்ப அவதாரத்தில் 12 வயது பாலகனாக ஐயப்பன் உள்ளதால் சிறு வயதினராக நடந்து வரும் ஐயப்பன் உயரமாக அமைந்திருக்கும் ஞான பீடத்தில் ஏறி அமர சிரமப்படக் கூடாது என்ற தெய்வீக எண்ணத்தில் அங்கு கூடியிருந்த தேவர் கூட்டத்தில் உள்ள 18 தேவதைகள் தரையில் இருந்து கோவில் பீடம் வரை படிக்கட்டுகள் போல வரிசையாகப் படுத்துக் கொண்டனர். ஐயப்பன் பதினெட்டுப் படிகளாகப் படுத்துள்ள தேவதைகள் மீது பாதம் வைத்து ஏறி வந்து ஞான பீடத்தில் அமர்ந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டார்.

    இப்படி, எண்ணிக்கை முறையில் பதிக்கப்பட்ட 18 படிகளானது மகாவிஷ்ணுவின் மறு அவதாரமான பரசுராமரின் கரங்களால் பூஜிக்கப்பட்டு தெய்வாம்சம் பெறப்பெற்று, இந்த 18 படிகளும் சத்தியமான பொன்னுகளால் பதினெட்டாம் படிகளாக இன்று கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    18 என்ற கணக்கு வந்த விதம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. இந்திரியங்கள் - 5, புலன்கள் - 5, கோஷங்கள் - 5, குணங்கள் - 3, மொத்தம் - 18 என்பர்.

    இந்திரியங்கள் : கண், காது, மூக்கு, நாக்கு, கை - கால்கள், ஐந்து புலன்கள் : பார்த்தல், கேட்டல், சுவாசித்தல், ருசித்தல், ஸ்பரிசித்தல், கோஷங்கள் ஐந்து: அன்மைய கோஷம், பிராமணய கோஷம், மனோமய கோஷம், ஞானமய கோஷம், ஆனந்த மய கோஷம், மூன்று குணங்கள் : சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம்.

    மேற்கூறிய பதினெட்டையும் கட்டுப்படுத்தி ஜெயித்து இந்த பதினெட்டுப் படிகளையும் கடப்பவர்கள் மட்டுமே அய்யப்பனின் முழு அருளைப் பெற முடியும்.

    பகவத்கீதை 18 பாகங்கள், புராணங்கள் 18, குருஷேத்திரப் போர் நடந்த நாட்கள் 18 எனக் கூறுவர். போர் வீரனாகிய அய்யப்பன் 18 வகை போர்க்கருவிகளை இயக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தான். சபரிமலைக் கோவில் பிரதிஷ்டைக்கு வந்த ஐயப்பன் 18 ஆயுதங்களையும் 18 படிகளாகத் தியாகம் செய்தான் என்றும் கூறுவர்.

    சரீர சாஸ்திர அமைப்பின்படி உடல் அமைப்பு முதுகுத் தண்டில் ஆரம்பித்து 1. மூலாதாரம், 2. ஸ்வாதிஸ்டானம், 3. மணிபூரகம், 4. அனாகதம், 5. வம்பி, 6. விசுத்தி, 7. ஆங்கத, 8. பிந்து, 9. அர்த்தசக்கரம், 10. ரோகினி, 11. நாகம், 12. சாந்தாரம், 13. சக்தி, 14. வியனிக, 15. சமன, 16. உன்மன, 17. மஹாபிந்து, 18. சகஸ்ராரம் என்கிற யோக சாஸ்திர ரகசியம் 18 படிகள் மூலம் அறிவிக்கப்படுகிறது என்றும் கூறுவர்.

    இப்பேற்பட்ட மகிமை வாய்ந்த படிகளின் தெய்வீகத் தன்மையைக் காப்பாற்றவும் முறையாக விரதம் இருந்து படியேறுவோர் நல்ல பயன்களைப் பெறவும், சரியான விரதம் இல்லாமல் இந்த படிகளைக் கடப்பவர்களால் ஏற்படும் அபசாரத்திற்குப் பரிகாரமாகவும் தான் படி பூஜை நடக்கிறது. இந்தப் படிகளில் வீற்றிருக்கும் ஒவ்வொரு தேவதைக்கும் தனித்தனியாக `ஆவாகனம்' என்ற கோட சோப சார பூஜையையும் செய்து 18 படிகளின் புனிதத் தன்மையை இன்றளவும் காத்து வருகின்றனர்.

    Next Story
    ×