என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.
    நோன்பின் மூலம் உள்ளம் தூய்மை அடையும், உடல் ஆரோக்கியம் பெறும், இறைவனின் அருளையும் பெற முடியும். ஆனால் காலை முதல் மாலை வரை உண்ணாமல், பருகாமல் இருப்பது மட்டும் நோன்பு அல்ல.

    ரமலான் நோன்பு காலம் முழுவதும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் பேணிக்காக்கப்பட வேண்டும். அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம் தேவை.

    அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய உடல் உறுப்பிகளில் முதல் நிலையில் இருப்பது கண்கள். அதன் பார்வை விசாலமானது. நல்லது- கெட்டது என்று அனைத்தையும் எந்த பாகுபாடும் இன்றி பார்க்கக்கூடியது கண்கள்.

    எனவே தன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘பார்வை என்பது சைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்து கொள்வாரே அவருக்கு உள்ளத்தில் ஈமான் பாதுகாக்கப்படும்’ (நூல்: ஹாகிம்).

    அடுத்தது நாக்கு. இதன் மூலம் ஏராளமான நன்மைகளும் கிடைக்கும், தீமைகளும் உண்டாகும். எனவே இந்த ரமலான் காலங்களில் நன்மைகள் மட்டுமே செய்யும் வகையில் நாக்கின் செயல்கள் அமைய வேண்டும். பொய் சொல்வது, கோள் மூட்டுவது, பொய்யான சத்தியம் செய்வது, தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற தீய செயல்களை செய்யக்கூடாது. இதனால் தான் நோன்பு காலத்தில் யாராவது வீண்தாக்கம் செய்யவோ, சண்டைக்கோ வந்தால் பதிலுக்கு நாம் அது போல செய்யக்கூடாது. ‘நான் நோன்பாளி’ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஒதுங்கி விட வேண்டும்.

    இது குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) இவ்வாறு அறித்தார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கொட்ட பேச்சுகளை பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி’ என்று  இருமுறை கூறட்டும்.

    இதுபோலவே நம் உடல் உறுப்புகளான கை, கால்கள், வாய், வயிறு போன்ற உடல் உறுப்புகளை தவறான செயல்களில் இருந்து விலக்கி பாதுகாக்க வேண்டும். அப்போது தான் நோன்பை சரியாக நிறைவேற்றிய பலன் கிடைக்கும். நோன்பு வைத்துக்கொண்டு தீய செயல்களை செய்தல், தீயவற்றை பார்த்தல், தீயவற்றை பேசுதல் தடுக்கப்பட்டவற்றை உண்ணுதல் போன்றவற்றை செய்தால் நோன்பினால் எந்த பலனும் கிடைக்காது.

    எனவே தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது ‘எத்தனையோ நோன்பாளிகள் வெறும் தாகம், பசியோடு மட்டும் உள்ளனர். அவர்கள் நோன்பின் நன்மையை அடைந்து கொள்வதில்லை’ என்றார்கள். ( அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: நஸயி).

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.
    இஸ்லாத்தில் நோன்பு என்பது தொழுகையைப்போல ஒரு கடமையாகும். தொழுகை எப்போது யார் மீது கடமை ஆகிறதோ, அப்போது அவர் மீது நோன்பும் கடமை ஆகிறது.

    ‘நோன்பு’ என்றால் ‘தடுத்துக்கொள்ளுதல்’ என்பது பொருளாகும். உண்ணாமல், பருகாமல், நோன்பை முறித்துவிடக்கூடிய எந்த செயலையும் செய்யாமல், இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கடைப்பிடிக்கப்படுவது தான் நோன்பு.

    தொழுகையை வேண்டும் என்றே விடுவது எப்படி குற்றமோ, அது போல நோன்பை வேண்டும் என்றே விடுவதும் குற்றமாகும். இஸ்லாத்தில் அனைத்து வணக்க வழபாடுகளும் தூய்மையான எண்ணத்தில் அனைத்தும் அல்லாஹ் ஒருவனின் அருளைப்பெறுவதற்கே என்று செய்ய வேண்டும். நமது  நற்செயலுக்கு ஏற்ப நன்மைகள் கிடைக்கும். ஆனால் நோன்பாளிக்கு மட்டும் இறைவன் நேரடியாக அதற்குரிய கூலியை தருகிறான்.

    இதுகுறித்து நபி மொழி வருமாறு...

    நோன்பு நோற்றவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி)

    இதற்கு காரணம் என்னவென்றால், மனிதனின் தொழுகை தான தர்மங்கள் குறுகிய நேரத்தில் செய்யக்கூடியது. அதோடு இந்த செயல்களை பிறர் அறியவும் வாய்ப்பு உள்ளது.

    ஆனால் நோன்பு என்பது அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் வரை நீடிக்க கூடியது. ஒருவன் நோன்பாளி என்பதையும் அவர் சொன்னால் தான் மற்றவர்களுக்கு தெரியும். நோன்பு என்பது இறைவனுக்கு அவனது அடியானுக்கும் இடையே உள்ள தொடர்பை பலப்படுத்தும் செயலாகும்.

    மேலும் இந்த நோன்பு காலத்தில் இறைவனுக்காக பசி, தாகம் மற்றும் இச்சைகள் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது இறைவனுக்கு மனிதனுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தான் ‘நோன்பாளிக்கு உரிய கூலியை நானே வழங்குவேன்’ என்று  இறைவன் கூறுகின்றார்.

    சிறப்பு மிக்க இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் அடைந்து கொள்ள வேண்டும். இதற்காக நாம் நோன்பு காலத்தில் அனைத்து தொழுகைகளையும் உரிய நேரத்தில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இது தவிர உபரியான தொழுகைகளையும் கூடுதலாக தொழ வேண்டும் தான தர்மங்களை அதிகப்படுத்த வேண்டும். உற்றார், உறவினர்களை பேணிக்காக்க வேண்டும். இதன் மூலம் இறைவன் தரும் கூலியை ஒவ்வொரு நோன்பாளியும் பெற முடியும்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
    ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.
    ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு சொர்க்கம் அலங்கரித்து வைக்கப்படும். சொர்க்கத்தை பார்த்து இறைவன் இவ்வாறு கட்டளையிடுவான். உலகத்தில் சிரமத்தில் தவித்த என் அடியான் இங்கே வந்து ஓய்வு எடுத்து நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக சொர்க்கமே உன்னை அலங்கரித்து கொள்’

    எனவே ஒரு மனிதன் நோன்பு பிடிக்க தொடங்கிய காலம் முதல் சொர்க்கம் செல்லும் வரை அந்த மனிதனுக்காக சொர்க்கம் தன்னை அலங்கரித்துக் கொண்டே இருக்கும்.

    நோன்பு வைத்து அதன் மூலம் பெற்ற நன்மையால் சொர்க்கம் செல்லும் அடியான் அந்த சொர்க்கத்தின் சிறப்பைப்பார்த்து இவ்வாறு கூறுவானாம்: ‘ வருடத்தில் ஒரு மாதம் தானே நேன்பு வைத்தேன். அதற்கே இவ்வளவு அழகான சொர்க்கமா?. இது முன்பே தெரிந்திருந்தால் வருடம் முழுவதும் நோன்பு நோற்று அதிக நன்மைகள் செய்திருப்பேனே.

    மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத பல்வேறு சிறப்புகளை பெற்ற சொர்க்கத்தில் நாம் அனைவரும் இடம் பெற உதவும். இந்த ரமலான் மாதத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறையாக நோன்பு வைத்து தொழுகையில் ஈடுபட்டு தான தர்மங்கள் செய்து பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

    நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியபடி இந்த ரமலான் நாம் அதிகமதிகம் இறையவனிடம் பிரார்த்தனை செய்து நரகத்தை விட்டு பாதுகாப்பு தேடி சொர்க்கத்தை கேட்க வேண்டும். அதிலும் குறிப்பாக நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு என்று ஒரு சொர்க்கம் உண்டு. அதன் பெயர் ‘ரய்யான்’.

    மறுமை நாளில் ஒரு மனிதனின் பாவ புண்ணிய கணக்குகள் இறைவன் முன்பு சமர்ப்பிக்கப்படும். அப்போது அந்த மனிதன் தத்தளித்து கொண்டு இருப்பான். அப்போது இறைவன் தரப்பில் இருந்து ‘ரமலான் மாதங்களில் நோன்பு வைத்திருப்பவர்கள் எங்கே?’ என்று ஒரு அழைப்பு வரும். இதைக்கேட்டு நோன்பு வைத்தவர்கள் எழுந்து நிற்பார்கள். அப்போது அவர்களை பார்த்து இறைவன் ‘நீங்கள் அனைவரும் ரய்யான் என்ற இந்த சொர்க்கச்சோலைக்குள் செல்லுங்கள்’ என்பான். இதையடுத்து நோன்பாளிகள் அனைவரும் அந்த வழியாக சொர்க்கத்திற்குள் செல்வார்கள். கடைசி நோன்பாளி சென்றதும் அந்த வழிமூடப்படும்.

    “ எவர் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் அவரின் தாகம் நீங்க நீர் வழங்கினாரே அவருக்கு மறுமையில் ‘ஹவ்ழுல் கவ்தர்’ என்ற நீர் தடாகதில் இருந்து அல்லாஹ் தண்ணீர் வழங்குவான். அதன் மூலம் சொர்க்கம் செல்லும் காலம் வரை அவருக்கு தாகம் என்பது ஏற்படாது” என்பது நபி மொழியாகும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும் போது ‘ நன்மையான காரியங்களை போட்டிபோட்டுக்கொண்டு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துவார்கள்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி தாங்கல் சென்னை.
    புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதத்தில் நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக முடியும்.
    புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதத்தில் நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் பாவமன்னிப்பு பெற்று இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்களாக ஆக முடியும்.

    குறிப்பாக 4 நற்செயல்கள் நம்மை நன்மையின் பக்கம் அழைத்து செல்லும். அவை:

    இறைவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன், அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற முதலாவது கலிமாவை அதிகமாக சொல்லுங்கள்.

    வாழ்நாளில் செய்த பாவமான காரியங்களை நினைத்து நினைத்து இறைவனிடம் பாவ மன்னிப்பு தேடுங்கள்.

    மறுமையில் சொர்க்கத்தை தருமாறு இறைவனிடம் கேளுங்கள்.

    நரகத்தை விட்டும் பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கேளுங்கள்.

    இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவது லேசான காரியம் இல்லை. அதற்கு தகுதியான நிலையை மனிதன் தன்னிடம் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். இதற்கும் இறைவனின் அருட்பார்வையும் வேண்டும். இவைகள் அனைத்தையும் இந்த புனிதமிகு ரமலானில் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    அல்லாஹ்வின் அருட்பார்வை ஒருவருக்கு தரும் நன்மைகள் என்ன தெரியுமா?

    இறைவனின் அருட்பார்வை கிடைத்தவன் செய்கின்ற வணக்க வழிபாடுகள் மற்றும் நன்மையான காரியங்கள் முழுமை அடையும்.

    உலக வாழ்வு, உணவு, உறைவிடம், மக்கள் செல்வம், சுகபோகங்கள் போன்ற எதுவும், இறைசிந்தனையில் இருந்து அவனை மாறச்செய்யாது.

    எந்த பாவமான காரியமாக இருந்தாலும் அதில் இருந்து விலகி இருக்கும் வகையில் இறைவனின் பாதுகாப்பு அவனுக்கு கிடைக்கும்.

    இறைவனின் அருட்பார்வையால் கிடைக்கும் இந்த சிறப்புகள் இறுதி நபியாகிய முஹம்மது(ஸல்) அவர்களின் கூட்டத்தினராகிய நமக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு இது வழங்கப்படவில்லை.

    ரமலான் மாதத்தில் நோன்பு வைத்திருக்கின்ற மனிதனுக்கு, வானவர்கள் (ஒளியின் மூலம் இறைவனால் படைப்பப்பட்ட குற்றமற்ற படைப்பினர்) பாவமன்னிப்பு கேட்பார்கள். இதுவும் நமக்கு கிடைத்த ஒரு பெரும் சிறப்பாகும்.

    எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலான் மாதத்தை அடைந்த பின்னரும் எவன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கவில்லையோ, அவன் ஈடேற்றம் பெறவே மாட்டான்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த மாதம் நம்மிடம் வந்துள்ளது. நாம் அதன் வருகையை மகிழ்வானதாக அமைத்து இந்த நோன்பு காலத்தில் நற்செயல்களை அதிகப்படுத்துவோம். ஆமீன்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை
    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் நோன்பு இன்று தொடங்கியது. #Ramadan
    சென்னை:

    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.

    ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான-தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

    ரமலான் மாதத்தின் முதல் பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில் முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். அவ்வகையில், இந்த ஆண்டின் ரமலான் நோன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



    அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே ரமலான் நோன்பின் சிறப்பாகும். 

    நோன்பின் இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. #Ramadan #RamadanMubarak #RamadanKareem

    மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.
    உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய முக்கிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதில் குறிப்படத்தக்கது ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் வரும் ரமலான் நோன்பு.

    மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது. இத்தனை சிறப்பு மிக்க புண்ணியங்கள் தரும் ரமலானை நாம் வரவேற்போம்.

    நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன் உள்ள சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் (திருக்குர்ஆன் 2:183) குறிப்பிடுகின்றான்.

    ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசாத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

    ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ’ இறை நம்பிக்கையாளர்களே அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நம்மை உங்களுக்கு உண்டு.

    அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல் பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கியுள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச்செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப்பெற்றுக்கொள்வார்.

    இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழ வேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்த மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.

    இநத் மாதத்தின் முதல் 10 நாட்கள் அருள்பொழியும் நாட்கள், அடுத்த 10 நாட்கள் பாவ மன்னிப்பு கிடைக்கும் நாட்கள், கடைசி 10 நாட்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெறத்தகுதியான நாட்கள் என்று நபிகளார் கூறினார்கள்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
    தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஷாபான் மாதத்தின் 29-ந் தேதியான நேற்று (மே மாதம் 5-ந் தேதி) சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ரமலான் மாத பிறை தென்படவில்லை. எனவே ஷரியத் முறைப்படி நாளை (செவ்வாய்க்கிழமை) ரமலான் மாத முதல் பிறை என்று நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

    எனவே ஷபே கத்ர், ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஆகும்.

    இவ்வாறு தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூப் கூறியுள்ளார்.

    ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும் என்பதற்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ‘சஹர்’ எனப்படும் காலை உணவில் இருந்து இந்த நோன்பு தொடங்குகிறது. விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான். அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’. இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள ஐந்து விஷயங்களில் ஒன்று. நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஜகாத். ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள் வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம்.
    உடற்பயிற்சியோடு உளப்பயிற்சியும் சேரும்போதுதான் நோன்பின் உண்மையான பலனை அடைந்துகொள்ள முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
    உடல் இச்சையைக் கட்டுப்படுத்தி கூடவே உளக்கட்டுப்பாட்டையும் உருவாக்குவதுதான் நோன்பின் நோக்கம். இரண்டில் ஒன்று விடுபட்டாலும் நோக்கம் பாழாகிவிடும்.

    நோன்பு என்பதே சில வணக்கங்களின் கூட்டுக்கலவை என்றும் சொல்லலாம். ‘கியாமுல்லைல்’ எனும் ரமலான் மாத இரவு வணக்கம், ‘ஸதகா’ எனும் தானதர்மம், ‘இஃதிகாஃப்’ எனும் பள்ளிவாசலில் இரவு தங்குதல், ‘திலாவத்’ எனும் திருமறைக் குர்ஆன் ஓதுதல், ‘லைலதுல் கத்ர்’ எனும் மாட்சிமை மிக்க ஓர் இரவை அடைவதற்காக நம்மைத் தயார் செய்தல், ஆகிய ஐந்தும் கலந்த கூட்டு வணக்கம்தான் நோன்பு.

    ரமலான் மாதத்தில் ஏன் இந்தப் பயிற்சி? உயர் ஒழுக்கம் கொண்டவனாகவும், பண்பாடு மிக்கவனாகவும் மனிதனை மாற்றுவதற்கான நல்லொழுக்கப் பயிற்சிதான் இது. இந்தப் பயிற்சியை சரிவர நிறைவேற்றுபவன் நல்ல பிரஜையாகவும், சிறந்த மனிதனாகவும், சமூகத்திற்குப் பயன்மிக்கவனாகவும் திகழ்வான்.

    இந்த அடிப்படையிலேயே ‘தக்வா’ எனும் இறையச்சத்தை உருவாக்குவதுதான் நோன்பின் அடிப்படை நோக்கம். இறையச்சம் உடைய மனிதன் பண்பாடு மிக்கவனாக பரிணாமம் பெறுகிறான். பண்பாடு மிக்கவன் நல்ல மனிதனாகவே இருப்பான் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. இந்தப் பண்பாட்டுப் பயிற்சியை தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

    தொழுகை என்பது வெறும் இறை வணக்கத்திற்காக மட்டும் அல்ல என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக நம்மில் நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

    ஏனைய இறை வணக்கங்கள் அனைத்தும் தனியொரு வணக்கமாக இருக்கும்போது நோன்பு மட்டும் உடல் கட்டுப்பாடு மற்றும் உளக்கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் ஒருசேர உள்ளடக்கியிருப்பது நம்மில் இறையச்சம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. இதற்கு உறுதுணையாக இருப்பதுதான் இரவு வணக்கமும், திருமறை ஓதுதலும், தான தர்மமும்.

    நபி (ஸல்) அவர்களிடம் அபூ உமாமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நற்செயலைச் சொல்லித்தாருங்கள்” என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “நோன்பைப் பற்றிப்பிடித்துக்கொள், அதற்கு நிகர் எதுவும் கிடையாது” என்று கூறினார்கள். (நஸாயீ)

    இது குறித்துதான் ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகின்றான்: “ஆதத்தின் பிள்ளைகள் செய்யும் அனைத்துச் செயல்களும் அவர்களுக்கே, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கானது. நானே அதற்குக் கூலி வழங்குவேன். (புகாரி, முஸ்லிம்)

    அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வுக்காகவே செய்யப்படுகின்றன. அதற்கான கூலியையும் அவனே வழங்குவான். அப்படியிருக்க.. நோன்புக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு?. அதற்கான பதிலையும் அல்லாஹ்வே ஹதீஸுல் குத்ஸியின் வாயிலாகக் கூறுகின்றான்..

    “அவன் எனக்காகவே உணவை விடுகின்றான். பானத்தையும் எனக்காகவே விடுகின்றான். மனோஇச்சையை எனக்காகவே விடுகின்றான்” (இப்னு குஸைமா)

    இங்கே மனக்கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு இரண்டையும் ஒருசேர இறைவன் குறிப்பிடுகின்றான். எனவே நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே பசி ஏற்பட வேண்டும். அந்தப் பசியை இறைவனுக்காகத் தாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே தாகம் ஏற்பட வேண்டும். அந்தத் தாகத்தை இறைவனுக்காகத் தாங்கிக்கொள்ள வேண்டும். மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான நோன்பு.

    மாறாக பசியின்றி, தாகமும் இன்றி, மனோ இச்சைகளையும் கட்டுப்படுத்தாமல் நோன்பு வைத்தால் அதன் உண்மை நோக்கமே அடிபட்டுவிடும்.

    பசியும் தாகமும் இருந்தால்தானே உடலின் வீரியம் குறையும். உடலின் வீரியம் குறைந்தால் தானே பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்கான மனப்பக்குவம் வரும். உடல் வீரியத்தை இழக்காத இந்த நோன்பு சரியான நோன்புதானா..? யோசித்துப்பாருங்கள்.

    உளப்பயிற்சி

    நோன்பின் பகல் பொழுதுகளில் உணவு, பானம் ஆகியவை நமது உடலினுள் சென்றுவிடாமல் இருப்பதில் எவ்வாறு பேணுதலுடன் நடக்கின்றோமோ அவ்வாறு மனக்கட்டுப்பாட்டிலும் பேணுதலுடன் இருக்கின்றோமா? நோன்பைக் குறித்துக் கூறும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதைக் குறித்து மட்டும் கூறவில்லையே. மனக்கட்டுப்பாட்டையும் சேர்த்தல்லவா கூறியுள்ளார்கள்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பொறுமையின் மாதத்திலும் மற்றும் பிரதி மாதம் மூன்று நாட்களிலும் யார் நோன்பு வைக்கின்றாரோ அவருடைய உள்ளத்தின் கசடை அகற்றுவதற்கு அதுவே போதுமானதாகும்”. (ஸஹீஹ் ஜாமிஉஸ் ஸகீர்)

    பொறுமையின் மாதம் என்பது ரமலான். பிரதி மாதம் மூன்று நாட்கள் என்பது பிறை 13,14,15. வெறும் பசியும் தாகமும் உள்ளத்தின் கசடை அகற்றுமா..? ஒருபோதும் அகற்றாது. பசியும் தாகமும் மட்டுமே நோன்பு என்று நினைப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதில் கூறுகின்றார்கள்:

    “எத்தனையோ நோன்பாளிகள், நோன்பினால் அவர்கள் அடைந்த பலன், வெறும் பசியும் தாகமும் தான்”. (நஸாயீ, இப்னுமாஜா)

    நபி (ஸல்) அவர்கள் கூற வருவது இதுதான், ‘வெறும் பசியும் தாகமும் மட்டுமல்ல நோன்பு. மாறாக உளப்பயிற்சியும் மனக்கட்டுப்பாடும் சேர்ந்ததுதான் நோன்பு’.

    இதனை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்: “எவர் (நோன்பு நோற்றிருந்தும்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை”. (புகாரி)

    பசியும் தாகமும் மட்டுமல்ல நோன்பு என்று இங்கே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் குறிப்பிடுகின்றார்கள். நோன்பாளி தவறான செயலில் ஈடுபட்டால் அவன் நோன்பே வைக்கவில்லை என்றுதான் பொருள். எவ்வாறு தண்ணீர் குடிப்பது நோன்பை முறிக்குமோ அவ்வாறே பாவச் செயல்களில் ஈடுபடுவதும் நோன்பை முறிக்கும் என்ற உண்மையை உணர்ந்து இருப்பது நல்லது.

    நோன்பாளி பாவச்செயல்களில் ஈடுபட்டால் அந்த நோன்பு பயனற்றுப் போய்விடும். விளைவு..? மறுமையில் நோன்பு வைக்காதவனாகவே அவன் கணிக்கப்படுவான்.

    ஆக, நோன்பு என்பது இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று: வீரியத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி. இரண்டு: பாவச் செயல்களைத் தவிர்ந்து கொள்ளும் உளப்பயிற்சி.

    ஒருமாத காலம் இந்த ஒழுக்கப் பயிற்சி பெறுபவர் மீதி இருக்கும் பதினோரு மாத காலமும் நல்ல மனிதனாக சமூகத்தில் நல்ல பிரஜையாக மாறுவார் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. ஆகவேதான் நோன்பின் நோக்கம் குறித்துப் பேசும் பிரபலமான இறைவசனம், “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்” (2:183) என்று குறிப்பிடுகிறது.

    வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் இறையச்சத்தைத் தருமா..? யோசித்துப்பாருங்கள். ஒருபோதும் இல்லை! பசியும் தாகமும் உடலின் வீரியத்தைக் குறைப்பதற்கான பயிற்சி மட்டுமே.

    நோன்பு உளப் பயிற்சியையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே உறுதுணை நற்கருமங்களாக இரவுத்தொழுகையும், தானதர்மமும், திருக்குர்ஆன் ஓதுதலும், இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்குதலும், லைலதுல் கத்ர் இரவுக்காகத் தயாராவதும் சிறப்பு வணக்கங்களாக ரமலானில் இணைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு ஒருமாத காலம் உடல் பயிற்சியையும் உளப்பயிற்சியையும் பெற்றுக்கொண்ட ஒருவர் ரமலானுக்குப் பின்னரும் நிச்சயம் இதனைக் கடைப்பிடிப்பார். அதுதான் நோன்பின் நோக்கம். ரமலான் நோன்பு என்பது ரமலானுக்காக மட்டுமல்லவே. மாறாக அது ரமலானையும் தாண்டி நிற்கும் பதினோரு மாதங்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி.

    ஆகவே, உடற்பயிற்சியோடு உளப்பயிற்சியும் சேரும்போதுதான் நோன்பின் உண்மையான பலனை அடைந்துகொள்ள முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறையச்சம்’ குறித்த தகவல்களை காண்போம்.

    இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான் இறையச்சம். மறைவானவற்றை நம்புவது இறைநம்பிக்கை என்றால், அவற்றை பின்பற்றி வாழ்வதுதான் இறையச்சம் ஆகும்.

    இவ்வுலகம், மறுவுலகம் ஆகியவற்றின் ஈடேற்றம் தரும் வழியில் வீறுநடை போடும் பாதையில் நடப்பதே இறையச்சம். மேலும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் அழிவைத்தரும் பாதையில் விலகி இருப்பதே இறையச்சம், இறைபக்தி.

    இறையச்சம் குடியிருக்கும் இடம் உள்ளம்

    ‘ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோக மிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று தடவை சைகை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

    ‘இறைவன் உங்களின் உடல்களையோ, தோற்றங்களையோ பார்ப்பது இல்லை. அவன் பார்ப்பதெல்லாம் உங்களின் உள்ளங்களைத்தான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்).

    ‘இறைவன் உங்களின் தோற்றங் களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. எனினும் அவன் உங்களின் உள்ளங்களையும், செயல்பாடுகளையும் தான் பார்க்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி) புகாரி, முஸ்லிம்)

    பக்தி பரவசம் என்பது தோற்றத்தில் மட்டும் கிடையாது. ஒருவரின் தோற்றத்தைக் கண்டு அதை தீர்மானித்தால் நாம்தான் ஏமாளிகள்.

    பெரிய தாடி, நீளமான உடை, தலையில் தொப்பி, தலையை சுற்றி தலைப்பாகை, கையில் (தஸ்பீஹ்) தியான மணி, பேச்சில் இறைவன், எந்த நேரமும் தொழுகை, இத்தகைய குறி யீடுகளை மட்டும் இறையச்சத்தின் அளவுகோலாக சுருக்கிவிட முடியாது.

    இரவெல்லாம் தொழுவது, பகலெல்லாம் நோன்பு நோற்பது, திருமணம் புரிந்தவர் இல்லற வாழ்வைத் துறப்பது அல்லது திருமணமே வேண்டாம் என வீட்டை விட்டு நாட்டை சுற்றுவது மட்டுமே உண்மையான பக்தி அல்ல. இவை அனைத்தும் பக்தியின் பெயரால் நடக்கும் ஆர்வக்கோளாறுகள். இஸ்லாமிய விரோதமான செயல்பாடுகள்.

    ‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழு வினர் வந்து, நபியவர்களின் வணக்க வழி பாடுகள் குறித்து வினாத்தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபியுடைய வணக்க வழி பாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது.

    பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) ‘முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே?, நாம் எங்கே?’ என்று சொல்லிக் கொண்டனர்.

    அவர்களில் ஒருவர் ‘இனிமேல் நான் இரவில் எப்போதும் தொழுது கொண்டே இருக்கப்போகிறேன்’ என்றார். இன்னொருவர் ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்’ என்றார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன், ஒருபோதும் திரு மணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்றார்.

    அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள் தாமே. அறிந்து கொள்ளுங்கள்! உங்களை விட நான் இறைவனுக்கு அதிகம் அஞ்சுபவன்; இறைவனுக்கு பயந்து நடப்பவன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்; விட்டுவிடவும் செய்கிறேன். தொழுகவும் செய்கிறேன்; உறங்கவும் செய் கிறேன். மேலும், நான் மண முடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுபவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    24 மணி நேரமும் தொழுகையில் ஈடுபடுவது மட்டுமல்ல இறையச்சம். அதையும் தாண்டி மக்களுடன் மக்களாக வாழும்போது யாருக்கும் எந்தத் தொந்தரவுகளையும் கொடுக்காமல், யாருடைய சொத்தின் மீதும் ஆசைப்படாமல் நன்மைகளும் புரிந்து, இறையச்சத்தின் காரணமாக பாவங்களை விட்டும் தவிர்ந்து வாழ்வதே இறையச்சம்.

    ‘நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் போது ஒரு பேரீத்தம்பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘இது ஸதகா (பொதுச் சொத்து) பொருளாக இல்லாமல் இருந்தால், அதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    பொதுச்சொத்தை சாப்பிடுவதிலிருந்து நபியவர்களை தடுத்தது இறையச்சமே. பாவம் புரிவதிலிருந்து ஒருவனை தடுக்கும் கேடயமாக இறையச்சம் இருப்பது போன்று, நடந்துவிட்ட பாவத்தை எண்ணி, அதற்குரிய தண்டனை இந்த உலகிலேயே கிடைத்தால் போதும் என நினைத்து, பரிகாரம் தேடி அலைய வைப்பதும் இறையச்சமே.

    நபித்தோழர் மாயிஸ் பின் மாலிக் (ரலி) பாவம் ெசய்ததும், குற்ற உணர்ச்சி அவரை உலுக்கியது. இறை தண்டனையை அஞ்சி நபியவர்களிடம் வந்து தான் தவறு புரிந்ததை சுயவாக்குமூலம் கூறினார். தனக்கு இவ்வுலகிலேயே மரண தண்டனை வேண்டுமென மனதார வேண்டினார்.

    மூன்று தடவை அவரின் கூற்றை மறுத்த நபி (ஸல்) அவர்கள், நான்காவது தடவை அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டார்கள். செய்துவிட்ட குற்றத்திற்கு அவரை பரிகாரம் தேடவைத்தது இறையச்சமே.

    திருக்குர்ஆனில் 258 இடங்களில் இறையச்சம் குறித்து பல்வேறு வாசக வடிவில் வருகிறது. அவற்றில் எழுபது இடங்களில் ‘நீங்கள் இறைவனை அஞ்சுங்கள்’ என இறைநம்பிக்கையாளர்களை நோக்கி நேரடி ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த ஆணைகளின் மூலம் வணக்க வழிபாடு, சமூக, பொருளாதார, தனிமனித வாழ்க்கை, இல்லற வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, நீதி, நிர்வாகம், அரசியல், கொடுக்கல் வாங்கல் என மனித வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்ட, தொடர்பில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் இறையச்சம் இடம்பெற வேண்டும் என இறைவன் ஆணை பிறப்பிக்கிறான்.

    மூன்று விஷயங்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.

    1) இறைவனை மதிப்பதில் உண்மை வேண்டும், போலித்தனம் இருக்கக்கூடாது.

    ‘எந்த மனிதருக்கும் இறைவன் எதையும் அருளவில்லை என்று அவர்கள் கூறியதால் இறைவனை மதிக்க வேண்டிய முறையில் அவர்கள் மதிக்கவில்லை’. (திருக்குர்ஆன் 6:91)

    2) இறைவனுக்காக அர்ப்பணிப்பதில் உண்மை இருக்க வேண்டும்.

    ‘இறைவனுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்’ (திருக்குர்ஆன் 22:78)

    3) இறையச்சத்தில் உண்மை இருக்க வேண்டும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! இறைவனை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்’ (திருக்குர்ஆன் 3:102)

    “மக்களில் சங்கையானவர் யார்?” என நபியவர்களிடம் கேட்கப்பட்டது. “அவர்களில் இறைவனை மிகவும் அஞ்சுபவரே!” என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுபவரே இறைவனிடம் அதிகம் சிறந்தவர்’. (திருக்குர்ஆன் 49:13)

    “நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் ‘இறைவா! நான் உன்னிடம் நேர்வழி, இறையச்சம், பத்தினித்தனம், போதும் என்ற மனம் ஆகியவற்றை கேட்கிறேன்’ என இவ்வாறு கூறுவார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்)

    வணக்க வழிபாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவும், இறைவன் விரும்பும் செயல்களை செய்யவும், அவன் வெறுக்கும் செயல்களை விட்டு பாதுகாத்துக் கொள்ளவும், நல்லவனாக வாழவும் அவசியமான தேவை இறையச்சமே. 

    மவுலவி அ: செய்யது அலி மஸ்லதி, நெல்லை
    சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.
    எந்த ஒரு மனிதனை கேட்டாலும் ‘முழுமையான நிம்மதியோடு நான் வாழ்கிறேன்’ என்று சொல்வது மிக அரிதிலும் அரிது.

    நல்ல வேலை கிடைக்கவில்லை, எதிர்பார்த்த வருமானம் இல்லை, வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரவில்லை, நோயின் தாக்கம் தள்ளாட வைக்கிறது, குடும்ப சூழ்நிலை சரியில்லை... என்று எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள்.

    அதேநேரத்தில், எத்தனையோ துன்பங் களுக்கு மத்தியில் அல்லாஹ் அருளிய மற்ற அருட்கொடைகளை எண்ணி அவனுக்கு நன்றி செலுத்தி திருப்திப்படுபவர்கள் மிகச்சிலரே.

    வாழ்க்கையில் துன்பங்களும், துயரங்களும் வரும்போது அதை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அதில் இருந்து மீளும் வழியை இறைவனிடம் தேடவேண்டும். மாறாக மனிதன் தன்னைத்தானே நொந்து கொண்டு இறைவனை நிந்திக்கத் தலைப்படுகிறான்.

    எத்தனை சோதனைகள் வந்தாலும் இறைவன் வகுத்த வழியில் இருந்து மனிதன் விலகக்கூடாது என்பதற்காகவே இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் களுக்கும் சோதனைகள் ஏற்பட்டது.

    அதுபோன்ற சோதனையான, வேதனையான நேரங்களில் அவர்கள் தங்களின் உறுதியான இறையச்சத்தின் மூலம், பிரார்த்தனையின் மூலம் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்பதையும் நாம் திருக்குர்ஆன் மூலம் அறியலாம்.

    இப்ராகிம் நபிகள், ‘அல்லாஹ்தான் உண்மை இறைவன்’ என்பதை அறிந்து கொண்ட பிறகு தன்னைச்சுற்றி வாழ்ந்தவர்களிடம் ‘அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் என்ற பெரிய பாவத்தை செய்யாதீர்கள், சிலை வணக்கத்தை கை விடுங்கள்’ என்று போதனை செய்தார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை, மாறாக இப்ராகிம் நபிகளை நெருப்புக்குண்டத்தில் தூக்கி எறிந்தார்கள்.

    இப்ராகிம் நபி சிறிதும் கவலைப்படவில்லை. இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் அருளால் எரிக்கும் தன்மையை விட்டு குளிர்ந்த பூஞ்சோலையாக நெருப்பு மாறியது. இது குறித்து திருக்குர்ஆன் (21: 69,70) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “அவர்கள் இப்ராகிமை நெருப்பு கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி, ‘நெருப்பே நீ இப்ராகிமிற்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு’ என்று நாம் கூறினோம். அவர்கள் இப்ராகிமிற்கு தீங்கிழைக்க கருதினார்கள். எனினும் நாம் அவர்களையே நஷ்டமடையச் செய்து விட்டோம்”.

    அயூப் நபியின் வாழ்க்கையும் சோதனை நிறைந்ததாகவே இருந்தது. கொடூர நோய் தாக்கி உடல் முழுவதும் புண்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இருப்பினும் அவர் இறைப்பணியை மறக்கவில்லை.

    “இறைவா, என் உடம்பெல்லாம் புழுக்கள் அரித்தாலும் என் நாவை மட்டும் காப்பாற்றி தந்துவிடு. நீ எனக்கு தந்த மற்ற அருட்கொடைகளுக்காக உன்னை புகழ்ந்து துதி செய்ய எனக்கு அருள் தா” என்று பிரார்த்தனை செய்தார்.

    அவரது பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து திருக்குர்ஆன் (21:84) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நாம் அயூப் நபியின் பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்தோம். நம் அருளால் மேலும் அதைப்போன்ற தொகையினரையும் அவருக்கு குடும்பமாக கொடுத்தோம். இது எனக்கு பயந்து என்னை வணங்குபவர் களுக்கும் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் நல்லுணர்ச்சி ஊட்டக் கூடியதாக இருக்கிறது”.

    யூனுஸ் நபிகளுக்கு ஏற்பட்ட சோதனைப் பற்றியும் அல்லாஹ் அருள்மறையிலே விவரிக்கின்றான். தனது ஊரார்கள் தன்னுடைய போதனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்று கோபமுற்று யூனுஸ் நபிகள் அந்த ஊரை விட்டு செல்வதற்காக கடற்கரைக்கு வந்தார்கள். அங்கு தயாராக நின்றிருந்த கப்பலில் ஏறி பயணம் செய்தார்கள்.

    ஆனால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அந்த ஊரை விட்டுச்செல்ல முயன்ற யூனுஸ் நபியின் செய்கை அல்லாஹ்விற்கு பிடிக்கவில்லை. எனவே, அந்த கப்பலிலிருந்து அவர் தூக்கி எறியப்பட்டு திமிங்கலம் போன்ற மீன் விழுங்கும்படி செய்தான் அல்லாஹ். அது மட்டுமல்ல திமிங்கலத்திற்கு இரையாகாமல் அதன் வயிற்றிலேயே உயிர் வாழச் செய்தான்.

    யூனுஸ் நபிகள் மீன் வயிற்றிலிருந்தபடியே இறைவனை பிரார்த்தனை செய்தவர்களாக இருந்தார்கள். இதை இறைவன் ஏற்றுக்கொண்டு மீண்டும் அவரை மீன் வயிற்றில் இருந்து உயிருடன் தரைக்கு அனுப்பி வைத்தான். இதுகுறித்து திருக்குர்ஆன் (21:87) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “யூனுஸ் நபியையும் நாம் தூதராக ஆக்கினோம். அவர் கோபமாக சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். ஆதலால் அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின் இருள்களிலிருந்த அவர், நம்மை நோக்கி ‘உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, நீ பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள்புரிவாயாக’ என்று பிரார்த்தனை செய்தார்”.

    முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்க்கைச் சரிதத்தை திருப்பிப்பார்த்தால் அங்கு வறுமை, கஷ்டத்தைத் தவிர வேறு எதையும் நம்மால் கண்டுகொள்ள முடியாது. சிறு வயதிலேயே அனாதையாகி பல நாட்கள் பட்டினி கிடக்க கூடிய அளவிற்கு வறுமையை அனுபவித்தார்கள்.

    அவர்களின் முன் பின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இரவு முழுவதும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இறைவனை வணங்கினார்கள்.

    மனித இனம் மேம்பட இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்களே இத்தனை சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இறையச்சத்தில் மிக பலவீனமானவர்களான நாம் எம்மாத்திரம். ஒன்றை மட்டும் நினைவில்கொள்ள வேண்டும். துஆ என்ற பிரார்த்தனை மட்டுமே நம் விதியைக் கூட மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்தது.

    மனிதன் தன்னிடம் பிரார்த்தனை செய்தால் அதை ஏற்று அவன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித் திருக்கின்றான்.

    சோதனைகள் வந்த போது மனம் தளர்ந்து விடாமல் பொறுமையைக் கொண்டும், மன உறுதியைக் கொண்டும், பிரார்த்தனையைக் கொண்டும் அதை எதிர் கொள்ளவேண்டும்.

    தஹ்ஜ்ஜத், பஜ்ர் போன்ற நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தொழுகையின் போது, அல்லாஹ் கீழ்வானம் வரை வந்து, ‘என்னிடம் யாராவது பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா? அதனை நான் தர காத்திருக்கிறேன். இந்த நேரங்களில் எனக்கும் என் அடியானுக்கும் இடையே எந்த திரையும் இருக்காது’ என்று கூறுகிறான்.

    இந்த நல்ல நேரங்களை பயன்படுத்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அல்லல்கள் அனைத்தும் நீங்கி, அக மகிழ்ந்து அகிலத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது அல்லது வெறுப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.

    அபூ உமாமா (ரலி) கூறுகிறார்:

    ‘யார் ஒருவரை இறைவனுக்காக நேசிக்கிறாரோ, இறைவனுக்காக வெறுக்கிறாரோ, இறைவனுக்காக கொடுக்கிறாரோ, இறைவனுக்காக தடுக்கிறாரோ அவர் இறை நம்பிக்கையை பரிபூரணமாக்கிவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அபூதாவூத்)

    ஒருவர் மற்றவரை நேசிப் பதும், வெறுப்பதும் இறை வனுக்காக வேண்டி இருந்தால் இதுவும் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக தகுதி பெற்று விடுகிறது.

    இறைவனுக்காக நேசிப்பதும், வெறுப்பதும் உள்ளம் சார்ந்த செயல். கொடுப்பதும், தடுப்பதும் உடல் சார்ந்த செயல்.

    ஒட்டுமொத்தத்தில் இறைநம்பிக்கை பரிபூரணம் அடைய நமது செயல்கள் அனைத்தும் மார்க்கத்தின் அடிப்படையிலும், இறைநேசத்தின் அடிப்படையிலும் வெளிப்பட வேண்டும்.

    ‘இறைநம்பிக்கையின் சுவையை ஒருவர் அடைய ஆசைப்பட்டால் அவர் ஒருவரை நேசிக்கட்டும். அவர் அவரை இறைவனுக்காக அன்றி வேறெந்த காரணத்திற்கும் நேசிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

    பராஉ பின் ஆஸிப் (ரலி) தெரிவிக்கிறார்:

    “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி எதுவென்று தெரியுமா?’ என்று கேட்டார்கள்.

    நாங்கள் ‘தொழுகை’ என்றோம்.

    ‘தொழுகை அல்ல, அது ஒரு அழகு சாதனம்’ என நபி (ஸல்) விளக்கமளித்தார்கள்.

    பிறகு ‘நோன்பு’ என்றோம்.

    ‘அதுவும் இல்லை’ என நபி (ஸல்) தெரிவித்தார்கள்.

    பிறகு ‘அறப்போர்’ என்றோம்.

    ‘அதுவும் கிடையாது’ என பதில் கூறினார்கள்.

    பிறகு நபியவர்கள் ‘இறைநம்பிக்கையின் பலமான பகுதி இறைவன் விஷயத்தில் நேசிப்பதும், இறைவன் விஷயத்தில் வெறுப்பதும் ஆகும்’ என தெரிவித்தார்கள். (நூல்: அஹ்மது)

    தனிப்பட்ட முறையில் ஒருவர் ஒருவரை நேசிப்பதும், வெறுப்பதும் கூடாது. ஒருவரின் அழகுக்காக, அவரின் அறிவுக்காக, அவரின் செல்வாக்குக்காக, செல்வத்திற்காக, படிப்புக்காக, பட்டத்திற்காக என குறிப்பிட்ட குண நலன்களை பார்த்து நேசிப்பதாக அமைந்தால், அந்த நேசம் நிரந்தரமானது அல்ல. அது இருக்கும் வரைக்கும் நேசம் இருக்கும். அது இல்லாதபோது நேசமும் காணாமல் போய்விடும்.

    ஒருவரை வெறுப்பதும், அவரின் தனிப்பட்ட தீய செயல்களுக்காக மட்டுமே இருந்துவிடக்கூடாது. தீயவர்களை வெறுக்க வேண்டும். தீய செயல்களை புரிபவர்களை அல்ல, தீய செயல்களை மட்டுமே.

    இறைநம்பிக்கையாளர் மீது நமக்கு நேசம் இயற்கையாகவே வரவேண்டும். அது அவரின் இறைநம்பிக்கையை வைத்து மட்டுமே. அவர் ஏழை-பணக்காரர், சிறியவர்-பெரியவர், படித்தவர்-பாமரர் என்ற அளவுகோலை வைத்து அல்ல.

    இறைமறுப்பாளர்கள் மீது வெறுப்பு இருக்கவேண்டும். அதன் அளவுகோல் இறைமறுப்பு என்ற தன்மையில் மட்டுமே, மற்ற செயல்பாடுகளில் அல்ல.

    இறைவனுக்காக விருப்பு, வெறுப்பு கொள்ளும்போது அதனால் பிறருக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும். தனிப்பட்ட காரணங்களுக்காக அது வரும்போது அதனால் பிறருக்கு தீங்குகள் மட்டுமே விளையும்.

    “நிச்சயமாக இறைவன் நாளை மறுமைநாளில் ‘எனது வல்லமையைக் கொண்டு நேசம் கொண்டவர்கள் எங்கே?’ என்று கேட்பான். பிறகு, ‘எனது நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத இன்றைய தினத்தில் நான் அவர்களுக்கு நிழல் தருவேன்’ என இவ்வாறு இறைவன் கூறுவதாக நபி (ஸல்) கூறினார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘எனக்காக ஒருவருக்கொருவர் பிரியமாக நடந்துகொண்ட இருவருக்கும், எனக்காக சபையில் அமர்ந்து கொண்ட இருவருக்கும், எனக்காக தரிசித்துக் கொண்ட இருவருக்கும், எனக்காக செலவளித்த இருவருக்கும் எனது நேசம் அவசியமாகிவிட்டதாக இறைவன் கூறியதை நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்: அஹ்மது)

    “இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் இறைவன் ஏழு பேர்களுக்கு நிழலை அளிக்கிறான். அவர்களில் ஒருவர் இறைவனுக்காகவே பிரியம் கொண்டு இணைந்து, இறைவனுக்காகவே பிரிந்து செல்கின்ற இரண்டு நண்பர்கள் ஆவர் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    “இறைவனுக்காக நேசிக்கும் இரு சகோதரர்களில் மிகச்சிறந்தவர் யாரெனில், ‘அவர்களில் மற்றவரை மிக அதிகமாக நேசிப்பவரே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (நூல்: அதபுல் முப்ரத்)

    ஒரு மனிதர் மற்றொரு ஊரில் உள்ள சகோதரரை சந்திக்கச் சென்றபோது, அவரது பாதையில் இறைவன் ஒரு வானவரை எதிர்பார்த்திருக்க வைத்தான்.

    அம்மனிதர் அந்த வானவரைக் கடந்தபோது, அவர் ‘எங்கே செல்கிறாய்?’ என்று கேட்டார்.

    அந்த மனிதர் ‘இந்த ஊரிலுள்ள எனது சகோதரரை சந்திக்கச் செல்கிறேன்’ என்றார்.

    அந்த வானவர், ‘அவர் உமக்கு ஏதேனும் உபகாரம் செய்ய வேண்டும் என்பதற்காகவா செல்கிறாய்?’ என்று கேட்டார்.

    அவர், ‘இல்லை, எனினும், நான் இறைவனுக்காக அவரை நேசிக்கிறேன்’ என்று பதில் கூறினார்.

    ‘நான் இறைவனால் அனுப்பப்பட்ட வானதூதர், நீ இறைவனுக்காக உமது சகோதரரை நேசித்தது போல் நிச்சயமாக இறைவனும் உம்மை நேசிக்கிறான்’ என்று கூறினார். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    ‘என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினால் தயார் செய்யப்பட்ட மேடைகள் உண்டு. அதில் அவரைக் கண்டு நபிமார்களும், வீரமரணம் அடைந்தவர்களும் ஆசை கொள்வார்கள்’ என இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆத்பின் ஜபல் (ரலி), திர்மிதி)

    இறைவன் தமக்காக நேசிக்கும் தனது அடியார்களுக்கு மிகஉயரிய அருட் கொடைகளை வழங்கி கவுரவப்படுத்துகின்றான்.

    இறைவிசுவாசியின் அன்பு, நேசம், பாசம் அனைத்தும் சுயநலமில்லாமல், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான சகோதரத்துவ அடிப்படையில் இறைவனுக்காக அமையவேண்டும். இதில்தான் அவர் இறைவிசுவாசத்தின் சுவையையும், இன்பத்தையும் பெறவேண்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை
    மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.
    சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதைவிட பண்பாட்டு வீழ்ச்சியால்தான் சமகால மனிதன் அதிகம் பாதிக்கப்படுகிறான். சூழல் மாசுபடுவதுகூட மனித மனங்கள் மாசு பட்டிருப்பதன் வெளிப்பாடே.

    மனிதனைத் தவிர்த்து கோடான கோடி உயிரினங்கள் இந்தப் பூமியில் உயிர் வாழ்கின்றன. அவை உயிர் வாழ்வதால் இந்தப் பூமியில் எவ்வித நாசமோ சிறு குழப்பமோ இதுவரை ஏற்பட்டதில்லை. அதேநேரம் மனித மனங்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் மட்டுமே சூழல் மாசுபடுகிறது.

    மனிதன் தன்னுடைய அனைத்துத் துறைகளிலும் அதர்மத்துடன் செயல்படுகின்றான். அமெரிக்காவுக்கான தூரம் குறைந்துள்ள அதேவேளை, அண்டை வீட்டுக்கான தூரத்தை மனிதன் அதிகப்படுத்திவிட்டான். இது இன்றைய மனிதன் செய்திருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று என்றும் கூறலாம். அதாவது உள்ளங்கையில் உலகைச் சுருக்கிய மனிதன் உள்ளங்களை தூரமாக்கிவிட்டான்.

    மனித உறவுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இனத்தின் பெயரால்.. மொழியின் பெயரால்.. தேசத்தின் பெயரால்.. மனிதன் துண்டாடப்படுவதுதான் இன்றைய மனிதன் அடைந்திருக்கும் இன்னொரு சாதனை என்றுகூட இதனைக் குறிப்பிடலாம்.

    அமெரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும், ஆப்ரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் நமக்கு, அண்டை வீட்டில் யார் வசிக்கின்றார் என்பதைக் குறித்து எதுவும் தெரிவதில்லை. அந்தோ பரிதாபம்.

    யானை முதல் திமிங்கலம் வரை அனைத்து உயிரினங்களையும் மனிதன் அடக்கி ஆளு கிறான். மனிதனைத் தவிர அனைத்து உயிரினங் களுக்கும் சிற்றறிவுதான். ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறாம் அறிவு எனும் பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது.

    இப்போது ஒரு கேள்வி எழுகிறது. சன்மார்க்க வழிகாட்டுதல்களும், இறைத்தூதர்களும், வேதங்களும் பகுத்தறிவுகொண்ட மனிதர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பகுத்தறிவற்ற ஏனைய உயிரினங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? உண்மையில் பகுத்தறிவற்ற உயிரினங்களுக்கு அல்லவா சரியான வழிகாட்டுதல்கள் தேவைப்படும்? அவைகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை? காரணம் என்ன?

    ஆம், மனித வாழ்வுக்கென சில எல்லைகள் உண்டு என்பதுதான் இதற்கான காரணம். அந்த எல்லைகளை மீறும்போது மனிதத்தன்மையில் இருந்து மிருகத்தன்மை கொண்டவனாக மனிதன் மாறுவான். அவ்வாறு அவன் எல்லை மீறாமல் இருக்கவே இந்த வழிகாட்டுதல்கள். அதேவேளை மிருகங்கள் ஒருபோதும் எல்லை மீறுவதில்லை.

    ஓர் ஆடு, குட்டியை ஈனும்போது அல்லது ஒரு மாடு கன்றை பிரசவிக்கும்போது சற்று நேரத்திலேயே அந்தக் குட்டி, பால் குடிக்க தாயின் மடியை நோக்கித் தானாகச் செல்லும். இறைவன் அவ்வாறுதான் இயற்கையிலேயே அவற்றை படைத்துள்ளான்.

    ஆனால், மனிதக்குழந்தையைப் பொறுத்தவரை பிறந்த உடன் அழுவதற்கு மட்டுமே அதற்குத் தெரியும். ஓடிச் சென்று தானாகப் பால் அருந்தத் தெரியாது. பெற்றெடுத்த தாய்தான் குழந்தையை மார்போடு வாரியணைத்து அமுதூட்டுவாள். என்ன பொருள் இதற்கு? ஆரம்பம் முதலே ஓர் உறுதுணையும் வழிகாட்டுதலும் மனிதனுக்கு தேவைப்படுகிறது என்பதுதான்.

    முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் ஒரு கோழிக் குஞ்சுக்கு முன்பாக, மண்ணில் கொஞ்சம் தானிய மணிகளை போட்டுப் பாருங்கள். மணல் எது தானிய மணி எது என்பதைப் பிரித்தறியும் ஆற்றல் அதற்கு இருக்கும். இயற்கையிலேயே இறைவன் அவ்வாறு அமைத்துள்ளான். நாய், பூனை, கழுதை ஆகிய அனைத்து உயிரினங்களுக்கு அவை பிறந்தது முதலே அவற்றுக்கான உணவு எது என்று நன்கு தெரியும். உடலுக்கு எது நல்லது? எது கெட்டது? என்பது குறித்தும் அவை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

    ஆனால், மனித விவகாரம் அவ்வாறல்ல. தவழும் பருவத்தில் இருக்கும் ஒரு குழந்தை கவனிப்பார் எவருமின்றி தனிமையில் விடப்பட்டால் என்ன நடக்கும்? ஓடும் பாம்பையும் கையில் பிடிக்கும். சுடும் நெருப்பையில் கையில் எடுக்கும். ஏன்.. சிலபோது தான் கழித்த மலத்தைக்கூட கையில் எடுத்து தின்ன முற்படும். ஒரு நாய்குட்டி கூட செய்யாத மோசமான செயலை இங்கே மனிதக் குழந்தை செய்கிறது.

    இந்த சந்தர்ப்பத்தில் தான் இது கூடாது என்று கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் எது கூடும் எது கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் கூடவே சேர்ந்து வருகிறது. ஏனெனில் கற்றுக்கொடுப்பதன் மூலமும் கற்றுக்கொள்வதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான்.

    ஆக.. கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்வு மனிதனை மிருகமாக மாற்றும். தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாடு களுக்கு விலங்கு மாட்டி, ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

    உண்மையில் கட்டற்ற சுதந்திரம் மனிதனை மனிதனாக மாற்றாது. மாறாக அது அழிவிற்கே இட்டுச் செல்லும். மனிதனே அதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றான். எய்ட்ஸ் நோய்களின் தோற்றம் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு அன்றி வேறென்ன?

    எனவே மனிதனுக்கு சில வழிகாட்டுதல்கள் எப்போதும் தேவைப்படுகின்றது. ஒரு சில எல்லைகளை அவன் மீறாமல் இருக்க சன்மார்க்க வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் படைப்பாளனாகிய அல்லாஹ் இறைத் தூதர்களையும் இறை வேதங்களையும் அனுப்பி வைத்தான்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தி இது:

    இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கத்தர்நியாகட் வனப்பகுதியில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயது பெண் சிறுமி ஒருவரை வன அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

    “இந்தக் குழந்தைக்கு ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. மனிதர்கள் அவளுக்கு அருகே சென்றால் அந்தக் குழந்தை அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்படுகிறது. அந்தச் சிறுமிக்கு மனிதர்களைப் போன்று நடக்கவோ சாப்பிடவோ தெரியவில்லை. நடப்பதற்கு எவ்வளவோ பயிற்சிகள் கொடுத்த பின்பும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி குரங்குகளைப் போன்றுதான் அவள் நடக்கின்றாள். கால்களிலும் கைகளிலும் பெரிதாக நகம் வளர்ந்துள்ளது”.

    இந்தச் செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன? மனிதன் பூனை வளர்க்கிறான், ஆடு வளர்க் கிறான். மாடு வளர்க்கிறான். ஏன் நாயைக் கூட வளர்க்கிறான். மனிதன் வளர்த்த காரணத்தால் எந்த விலங்கினமும் மனித குணாதிசயங்களை பெறுவதில்லை. எத்தனை வருடங்கள் சென்றாலும் மனிதனால் வளர்க்கப்படும் ஆடும், மாடும் ஏனைய கால்நடைகளும் விலங்குகளாகவே வளர்கின்றன. அவை மனிதக் குணங்களைப் பெறுவதில்லை. அல்லாஹ் அவற்றை அவ்வாறு படைக்கவும் இல்லை.

    ஆனால் மனிதன் அவ்வாறல்ல. எட்டு வருட காலத்திலேயே குரங்குகளால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை குரங்கின் குணாதிசயங்களைப் பெறுகின்றது என்றால் என்ன பொருள்?

    மனிதன் மனிதனாகவும், பகுத்தறிவு மிக்கவனாகவும் மாறவேண்டுமெனில் அவனுக்கு வழிகாட்டுதல்களும் பண்பாட்டுப் பயிற்சியும் தேவை. இல்லையெனில் விண்ணில் உயர்வதற்குப் பதிலாக மண்ணில் அழிந்து போவான். மிருகக் குணங்களைப் பெறுவான். ஆகவேதான் இறைத்தூதர்கள் வாயிலாகவும் இறைவேதங்கள் மூலமாகவும் மனிதனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

    மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.

    நூஹ் மஹ்ழரி, குளச்சல்

    ×