என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மனத்தூய்மை’ குறித்த தகவல்களை காண்போம்.
    மனத்தூய்மை என்றால் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வணக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நற்கருமங்களாக இருந்தாலும் சரி, அதை உலக ஆதாயத்திற்காகவும், மக்களின் வரவேற்பிற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யாமல் இறைவனுக்காக மட்டுமே செய்வது தான் மனத்தூய்மை ஆகும்.

    இப்படி நடந்து கொள்ளும்படிதான் இறைவனும் திருக்குர்ஆன் மூலம் இவ்வாறு உத்தரவு போடுகின்றான்:

    ‘இறைவனுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக இறைவனை அவர்கள் வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்’. (திருக்குர்ஆன் 98:5)

    “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ‘ஒருவரின் ‘ஹிஜ்ரத்’ (மக்காவை துறந்து மதீனாவிற்குச் செல்லுதல்), அவர் அடைய இருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்க இருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது ‘ஹிஜ்ரத்’ எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), புகாரி).

    மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயலும் அவனது எண்ணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் சொல்லப்படுகிறது. அந்த எண்ணம் தூய்மையானதாகவும், மாசற்றதாகவும், இறைவனுக்கு மட்டுமே உரித்தானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைந்திருப்பதுதான் உண்மையான இறைநம்பிக்கை ஆகும்.

    அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த அபூபராஸ் தெரிவிப்பதாவது: “ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மனத்தூய்மை’ என பதில் அளித்தார்கள்”. (நூல்: பைஹகீ)

    மனத்தூய்மை என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிவிட்டது. மனத்தூய்மை இல்லாத எந்த ஒரு செயலையும் இறைவன் ஏற்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை.

    ‘(பலியிடப்படும்) மாமிசங்களோ, அவற்றின் ரத்தங்களோ இறைவனை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்’. (திருக்குர்ஆன் 22:37)

    ‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை இறைவன் அறிகிறான்’. (திருக்குர்ஆன் 3:29)

    ‘இறைவனுக்காக வேண்டி மனத்தூய்மையாக செய்யப்படக்கூடிய, அவனின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படக்கூடிய செயல்களைத் தவிர வேறெந்த செயலையும் இறைவன் பொருந்திக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: நஸயீ)

    பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், முகஸ்துதிக்காகவும் நிறைவேற்றப்படக்கூடிய செயல்களில் இறைவனுக்காக மட்டுமே செய்யவேண்டியதில் பிறரையும் கூட்டுச் சேர்க்கும் இணைவைப்பு செயல் அரங்கேற்றப்படுகிறது. இணைவைப்பு இறைநம்பிக்கையின் எதிர்நிலையாகும். இந்த செயல் மனத்தூய்மையில் மாசு ஏற்படுத்தி, அதை பாழாக்கி விடுகிறது.

    ‘எவர் பிறருக்கு காட்டவேண்டும் என்பதற்காக தொழுகிறாரோ, நோன்பு நோற்கிறாரோ, தர்மம் வழங்குகிறாரோ அவர் இறைவனுக்கு இணைவைத்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    ‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்’. (திருக்குர்ஆன் 107:4, 6)

    “மறுமைநாளில் முதன் முதலாக தீர்ப்புச் சொல்லப்படுகின்ற மனிதர் இறைவழியில் வீரமரணம் அடைந்த தியாகி ஆவார். அவர் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவரும் அதை ஏற்றுக்கொள்வார். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் வீரமரணம் அடையும் வரை போராடினேன்’ என்று அவர் பதில் அளிப்பார். அதனை இறைவன் மறுத்து, ‘இல்லை, நீ பொய் பேசுகிறாய். நீ வீரன் என்று போற்றப்பட போர் செய்தாய்’ என இறைவன் கூறுவான். பிறகு, அவன் முகங்குப்புற இழுத்துக்கொண்டு வரப்பட்டு, நரகில் வீசப்படுவான்”.

    “மேலும் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து திருக்குர்ஆனை ஓதிய மனிதனும் கொண்டுவரப்படுவான். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். ‘உனக்கு அருளப்பட்ட இந்த அருட்கொடையை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, திருக்குர்ஆனையும் ஓதினேன்’ என்று அவன் பதிலளிப்பான். அதற்கு இறைவன் மறுப்பு தெரிவித்து ‘இல்லை, நீ பேசுவது பொய். நீ அறிவாளி என்று மக்கள் போற்றவேண்டும். நீ அழகாக குர்ஆனை ஓதுபவர் என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாய்’ என்று கூறுவான். அவனும் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துக் கொண்டுவரப்பட்டு, அதில் வீசப்படுவான்”.

    “மேலும், செல்வந்தன் ஒருவன் கொண்டுவரப் படுவான். அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவனும் அதை ஏற்றுக்கொள்வான். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று அவனும் விசாரிக்கப்படுவான். அதற்கு அவன் ‘இறைவா! நீ எந்த வழியில் செலவு செய்ய வேண்டுமென விரும்பினாயோ அத்தனை வழிகளிலும் அதனை செலவு செய்தேன்’ என்பான். ‘இல்லை, நீ பேசுவதெல்லாம் பொய். நீ ஒரு கொடை வள்ளல் என்று மக்கள் போற்ற வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய்’ என்று இறைவன் கூறுவான். அவனும் முகங்குப்புற இழுத்துக் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

    மூவரும் மனத்தூய்மை இல்லாமல், முகஸ்துதிக்காக மட்டும் நடந்து கொண்டதினால் இறைவன் அவர்களின் நல்லறங்களை பாழாக்கிவிட்டு, நாளை மறுமையில் அதிபயங்கரமான தண்டனைகளையும் வழங்கி, இவ்வாறு நடந்து கொள்ளும் மற்றவருக்கும் இறைவன் எச்சரிக்கை விடுகின்றான்.

    ‘நிச்சயமாக இறைவன் உங்களின் தோற்றத்தையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பது கிடையாது. எனினும், உங்களின் உள்ளங்களையும், உங்களின் (மனத்தூய்மையான) செயல்களையும் தான் பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.
    கடவுளின் படைப்பில் இந்த மனிதப்படைப்பு மிகவும் வித்தியாசமானது. எல்லா உயிரினங்களுக்கும் ஒரே ஒரு முகம் தான். அதுவும் என்றும் மாறா முகம். ஆனால் இந்த மனிதனுக்குத் தான் எத்தனை எத்தனை முகங்கள்?

    வீட்டில் ஒரு முகம், வேலை செய்யும் இடத்தில் ஒரு முகம், உறவினர்களிடத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், ஏழைகளிடத்தில் ஒரு முகம், பணக்காரர்களிடத்தில் ஒரு முகம்... என ஒரே முகத்தில் வெவ்வேறு வகையான முகமூடிகளை அணிந்த மனிதர்களை, மனித முகங்களை அன்றாடம் நாம் கண்டு கொண்டிருக்கிறோம், காட்டிக்கொண்டும் இருக்கிறோம்.

    உண்மையில் மனிதனின் நிஜமான முகம் எது?

    அன்பான முகம் தான் மனிதனின் உண்மையான முகம்.

    ‘நண்பனை புன்முறுவலுடன் சந்திப்பது(ம் கூட) தர்மமாகும்’ என்றார்கள் நபிகள் நாயகம்.

    இன்று எங்கு பார்த்தாலும் மனிதர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் இருக்கவேண்டிய அந்த அன்பும், அரவணைப்பும், பற்றும், பாசமும், நேசமும், நேயமும் இருக்கிறதா?

    எங்கு பார்த்தாலும் மனிதநேயத்திற்கு முற்றிலும் மாற்றமான செயல்களே நடக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படி நற்செயல்கள் என்று ஏற்றுக்கொள்ளமுடியும்? மனிதனை மனிதனே அழிப்பதற்கு முயற்சிப்பது என்றைக்கும் ஏற்க முடியாத ஒன்று. இதுகுறித்த நபிமொழி வருமாறு:-

    “எவர், சிலரிடம் ஒரு முகத்துடனும், வேறு சிலரிடம் ஒரு முகத்துடனும் இருந்தாரோ அவர்தான் மறுமையில் கடும் வேதனைக்கு உரியவர், எவர் இம்மையில் இருமுகத்துடன் இருந்தாரோ அவர் மறுமையில் நெருப்பினால் ஆன இருநாக்குகளுடன் இருப்பார்” என்று நபிகளார் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், தாரமி)

    எனவே, ஆளுக்கு தகுந்தாற்போல் வேஷம் போடுவதும், நடிப்பதும், கள்ளத்தனம் செய்வதும் கூடாது. உண்மையான முகம் தான் என்றைக்கும் வெற்றிபெறும். மனிதர்களை வேண்டுமானால் எளிதில் ஏமாற்றி விடலாம், ஆனால் நம்மைப் படைத்துப் பாதுகாக்கும் அந்த இறைவனை நாம் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி விட முடியுமா என்ன?

    ‘கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்); நீங்கள் எந்தப்பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; எல்லாம் அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 2:115)

    ‘மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்’. (திருக்குர்ஆன் 55:27)

    இறைவன் எத்தகைய முகம் உள்ளவன் என்பதை நாம் அறிவதற்கு இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும். எனவே அவனது திருமுகத்தை விட்டும். நாம் நம் முகத்தை வேறொரு திசைப்பக்கம் திருப்பிக்கொள்ள முடியாது என்பதை இந்த வசனங்கள் உணர்த்துகின்றன..

    நாம் இறைவனின் திருமுகத்தை முன்னோக்குகிற அதே வேளையில் மனிதர்களின் முகத்தையும் நாம் முன்னோக்க மறந்து விடக்கூடாது என்பதை பின்வரும் வான்மறை வசனம் மிகத்துல்லியமாக சொல்லி எச்சரிக்கிறது:

    ‘புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவைகள் தான் புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்)’. (திருக்குர்ஆன் 2:177)

    இறைபக்தியுள்ளோர்களின் முகம் எப்படியெல்லாம் இருக்கும் என்பதை இவ்வசனம் தெள்ளத்தௌிவாகக் கூறுகிறதல்லவா?

    நாம் பெருஞ்செலவு செய்து பூசும் அழகு சாதனங்களில் முகஅழகும், வசீகரமும் இல்லை; நாம் வௌிப்படுத்தும் நமது நற்குணங்களில் தான் இருக்கின்றது. நமது அகம் அழகு பெற்றுவிட்டால் நிச்சயம் நமது முகமும் பேரழகு பெற்றுவிடும் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.

    இதனால் தான் நமது நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள்:

    “நற்குணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டவர்கள் தான் இறை நம்பிக்கையில் பரிபூரணமானவர்கள்”.

    பணத்தை எப்படியும் நாம் சம்பாதித்து விடலாம், ஆனால் குணம் என்பது அப்படியா? நம் முகம் நற்குணத்தால் பிரகாசிக்க வேண்டும் என்றால் அதற்கு கொஞ்ச காலம் பயிற்சியும், நல்ல முயற்சியும் எடுக்க வேண்டும்.

    ‘யாரைப்பற்றியும் என்னிடம் குறை சொல்லாதீர்கள்’ என்று நபிகளார் தன் தோழர்களுக்கு அவ்வப்போது சொல்லி வந்தார்கள், என்று அவர்களது வாழ்வியல் வரலாறு கூறுகிறது என்றால் நபிகளார் தம் முகத்தை, தன் சமூகத்தை எப்படி வௌிக்காட்ட வேண்டும் என்பதில் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

    முகங்களில் எத்தனையோ முகங்கள் உண்டு. அதில் இந்த பெருமை முகம் தான் பேராபத்திற்குரிய முகம் என்று அருள்மறை அறிமுகம் செய்கிறது இப்படி:

    ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக்கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)

    நம் முகத்தில் அலங்காரம் இருக்கலாம், அகங்காரம், ஆணவம், அகம்பாவம், அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கக்கூடாது. குறிப்பாக, பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் அறவே கூடாது. இது குறித்து நமக்கு மன்னிப்பின் மறுமுகத்தை திருக்குர்ஆன் இவ்வாறு அடையாளப்படுத்திக் காட்டுகிறது:

    ‘எனினும், ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்’ (திருக்குர்ஆன் 5:45).

    இன்றைக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டும் நயவஞ்சக முகங்களே திரும்பும் திசையெல்லாம் திகைப்பூட்டுகின்றன. அவற்றை நாம் துல்லியமாக அடையாளம் காண்பதற்குள் நமது முகமே கூட வேறொரு முகமாக மாறிப்போய்விடக்கூடும்.

    “பேசினால் பொய் பேசுவான், வாக்கு கொடுத்தால் நிறைவேற்ற மாட்டான், நம்பினால் மோசடி செய்வான்” இவைதான் ஒரு நயவஞ்சகனின் அசல் அடையாளங்களில் சில என நபிகள் நாயகம் பட்டியலிட்டு கூறியிருக்கிறார்கள்.

    உண்மைக்கு என்றைக்கும் ஒரே ஒரு முகம் தான். பொய்களுக்குத் தான் பலமுகங்கள்; பல முகமூடிகள் தேவைப்படுகின்றன.

    எல்லோரும் ஒரே முகத்தோடு இன்முகமாய் இருக்க வேண்டும். மனித முகங்கள் மலரும் போது தானே மனித நேயமும் வளரும்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம், ‘இறைவனை நேசிப்பது’, ‘இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை நேசிப்பது’, மற்றும் ‘நபி வழியை பின்பற்றுவது’ ஆகிய இறை நம்பிக்கைகள் குறித்த தகவல்களை காண்போம்.

    இறைவனையும், இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நேசிப்பது, நபி வழியைப் பின்பற்றுவது இறை நம்பிக்கையின் முக்கியமான அம்சங்களாகும். நாம் அவ்விருவரையும் நமது உயிரை விடவும், உடைமைகளை விடவும், பெற்றோரை விடவும், குடும்பத்தாரை விடவும், வியாபாரத்தை விடவும், உடன்பிறந்தாரை விடவும், வீட்டை விடவும், செல்வத்தை விடவும் உயர்வாக நேசிக்க வேண்டும்.

    அவர்களின் நேசத்திற்கு நிகராக வேறெந்த நேசமும் இருக்கக்கூடாது. இத்தகைய நேசமே பரிபூரண இறைநம்பிக்கையின் அடையாளம். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நீங்கள் நஷ்டத்தை அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் இறைவனைவிட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் இறைவன் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள். குற்றம் புரியும் கூட்டத்துக்கு இறைவன் வழிகாட்டமாட்டான், என்று நபியே கூறுவீராக’ (திருக்குர்ஆன் 9: 24)

    இது குறித்த நபிமொழிகள் வருமாறு:

    ‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். அவை: 1) இறைவனும், அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவராக இருப்பது. 2) ஒருவர் மற்றொருவரை இறைவனுக்காகவே நேசிப்பது. 3) நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

    ‘உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தை, அவரின் குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரை விடவும் நான் மிக நேசமானவராகும் வரை அவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அறிவிப்பதாவது:-

    “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் ‘இறைத்தூதரே! எனது உயிரைத் தவிரவுள்ள எல்லாவற்றையும் விட நீங்களே எனக்கு நேசமானவர்கள்’ என்று கூறினார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! உமது உயிரைவிடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவராக ஆகும் வரை நீர் உண்மை இறைவிசுவாசியாக முடியாது’ என்றார்கள். உடனே உமர் (ரலி) நபியை நோக்கி ‘இப்போது இறைவனின் மீதாணை! எனது உயிரை விடவும் தாங்களே எனக்கு மிகவும் நேசமானவர்கள்’ என்றார். ‘இப்போதுதான் உமரே! சரியாகச் சொன்னீர்’ என நபி (ஸல்) கூறினார்கள்.” (புகாரி)

    இறைவன் மற்றும் இறைத்தூதரை நேசிப்பது என்பது, ஒன்று மற்றொன்றுடன் தொடர் புடையது. ஒருவரை நேசித்து, மற்றவரை நேசிக்காமல் இருக்கமுடியாது. ஒருவரை வெறுத்தாலும் மற்றவரை வெறுக்க வேண்டியது வரும்.

    இருவரின் நேசத்தையும் ஒருசேர அடைய சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அது என்ன வழி? இறைவனும், இறைத்தூதரும் கட்டளையிட்டதை முடிந்தளவு கடைப்பிடித்து வாழவேண்டும். அவ்விருவரும் தடுத்ததை முற்றிலும் தவிர்ந்து நடக்கவேண்டும். அவர்களுக்கு எது பிரியமானதோ அது நமக்கும் பிரியமானதாகவும், அவர் களுக்கு எது வெறுப்பானதோ அது நமக்கும் வெறுப்பானதாகவும் இயற்கையாகவே ஆக வேண்டும்.

    சொல்லாலும், செயலாலும், இன்பத்திலும்-துன்பத்திலும், லாபத்திலும்-நஷ்டத்திலும், செழுமையிலும்-வறுமையிலும், ஆரோக்கியத்திலும்-நோயிலும், இளமையிலும்- முதுமையிலும் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் முழுமையாக அவர்களை பின்பற்ற வேண்டும்.

    மனோ இச்சைக்கு எதிராக எதை தூண்டினார்களோ அதை தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். பிரியப்படும் இருவரையும் அதிகம் நினைவு கூரவேண்டும். பிரியமான இருவரையும் நினைவு கூரப்படும் போது பணிவு, பயபக்தியுடன் கண்ணியப்படுத்திட வேண்டும்.

    இருவரும் யாரை நேசித்தார்களோ அவரையும் நாம் நேசிக்க வேண்டும். வெறுத்தோரை நாம் வெறுக்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் அவ்விருவரின் எண்ணம் போன்று நமது வாழ்வு அமைந்திட வேண்டும்.

    ‘ஒன்றை நேசிப்பது அது உன்னை குருடனாகவும், செவிடனாகவும் மாற்றிவிடும்’ என்பது அரேபிய பழமொழி. நாம் இறைவனையும், இறைத்தூதரையும் உண்மையாக நேசிக்கும் போது மற்றதை காணமாட்டோம். மற்றதை கேட்க மாட்டோம். இருவரின் ஆழமான நட்பில் நாம் மூழ்கும் போது கண்முன் நடப்பது தெரியாது.

    காதுக்கு நேராக பேசுவது கேட்காது. நமது பார்வையும், செவிப்புலனும் நாம் யாரை நேசிக்கிறோமோ அவர்களுக்காகவே மட்டும் செயல்படும். மற்றவர்களுக்காக செயல்படாது. இதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம். இந்தத் தன்மை இறைவனையும், இறைத்தூதரையும் நேசிப்பவர்களிடம் வெளிப்பட வேண்டும்.

    இறைவனை நேசிப்பதினால் நன்மையான காரியங்கள்தான் வெளிப்படுமே தவிர தீமைகள் அல்ல.

    ‘(நல்லவர்கள்) இறைவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்’. (திருக்குர்ஆன் 76:8)

    இறைவனை அறியாதோருக்கு, அவனின் நேசத்தை உளப்பூர்வமாக உணராதோருக்குக்தான் சாதாரண இறைக்கட்டளைகளும், இறைக்கடமைகளும் கடினமாகத் தெரியும். இறை நேசத்தை உணர்ந்தோருக்கு மலையளவு கடமை கூட மலைக்க வைக்காது.

    ‘இறைவனை அறிந்தவன் அவனை நேசிக்கின்றான். இவ்வுலகை அறிந்தவன் அதை வெறுக்கின்றான்’. (ஹஸன் பஸரீ (ரஹ்).

    உலகில் வாழும் ஒவ்வொரு இறைவிசுவாசியின் உள்ளமும் மூன்று விதங்களில் இறை வனைப் பற்றி நினைக்கிறது.

    1) இறைவனின் அச்சத்தை உணர்வது, 2) இறைவன் தனக்கு சொர்க்கத்தை தரவேண்டும் என இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது, 3) இறைவனை நேசிப்பது.

    மெய்யான அன்பு

    நபி (ஸல்) அவர்களின் மீது கொண்ட அன்பினால் ஒரு பெண் எப்படி நடந்து கொண்டார்? என்பதை அறியும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    ஒரு அன்ஸாரிப் பெண்மணியின் தந்தை, அவரின் சகோதரர், அவரின் கணவர் மூவரும் உஹதுப்போரில் நபியவர்களுடன் கலந்து கொண்டனர். அதில் வீரமரணமும் அடைந்தனர்.

    அந்தப்பெண் போர்க்களம் காண வந்தபோது, அந்த மூவரும் கொல்லப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ‘நபி (ஸல்) எப்படி இருக்கிறார்கள்?’ என்றுதான் முதலில் விசாரித்தார். நபியை கண்கூடாக கண்ட போதுதான் அவரின் கவலை மாயமாகிப் போனது. இதுதான் மெய்யான அன்பு.

    “ஒருவர் நபியவர்களிடம் வந்து, ‘உலகம் எப்போது அழியும்?’ என கேட்டார். ‘அதற்காக நீர் என்ன ஆயத்தப்படுத்தி வைத்துள்ளீர்?’ என நபி (ஸல்) அவர்கள் அவரிடம் திரும்பக் கேட்டார்கள். ‘நான் அதிகமான தொழுகை களையோ, நோன்புகளையோ, தானதர்மங் களையோ தயார்படுத்தி வைக்கவில்லை. எனினும் நான் இறைவனையும், இறைத்தூதரையும் நேசிக்கிறேன்’ என்று அவர் பதில் கூறினார். உடனே நபியவர்கள், ‘நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடனேயே இருப்பீர்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி).

    இறைவனின் நேசத்தை அடைய இறைத்தூதரையும், இறைத்தூதரின் நேசத்தை அடைய நபிவழியையும் பின்பற்றினால் போதும்.

    “(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 3:32)

    இறைவனை நேசிப்போம், இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நேசிப்போம், நபி வழி நடப்போம், இறைநம்பிக்கையை வளமாக்குவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.
    நாம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக திருக்குர்ஆனில் சொல்லிக்காட்டியுள்ளான். இன்னும் முகம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.

    இறைவனின் அன்பைப் பெற்றவர் களுள் ஒருவராக நாம் இருக்க வேண்டுமென்றால் இறைவனுக்குப் பிரியமான வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்கின்றனவா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இறைவனின் திருப்பொருத்தத்தை பெறும் முயற்சியில் வணக்க வழிபாடுகளை செம்மையாகச் செய்யும் ஒருவர் தன் உறவினர்களிடமும், பார்க்கும், பழகும் மனிதர்களிடமும் நல்ல விதமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால், அவரின் வணக்க வழிபாடுகள் இறைவனின் நெருக்கத்தைப் பெற்றுத்தராது.

    மாறாக ஒருவர் இறைவனுக்குப் பிடித்தமானவற்றை செய்யும் அதே வேளையில் மற்ற மனிதர்களிடமும் அன்பாகவும், இணக்கமாகவும் நடந்து கொண்டால், அவருக்கு ஈருலக நன்மைகளையும் அல்லாஹ் வாரி, வாரி வழங்குவான். இன்ஷாஅல்லாஹ், கீழ்ப்படிதல் என்னும் ஒரேயொரு பண்பு நம்மிடம் இருக்குமானால், மற்ற நற்பண்புகளும் நம்மிடம் குடி கொள்ளும். அதனால், இறைவனுக்கு நெருக்கமானவர்களின் நாமும் ஒருவராகி விடுவோம்.

    இறைவனின் அன்பைப்பெற்ற நபிமார்களில் இப்ராகிம் (அலை) அவர்கள் முக்கியமானவர்கள். அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை தன் ‘மெய்யன்பர்’ என்று பொருள் படக்கூடிய ‘கலீல்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறான்.

    ‘மேலும், இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன்’ என்று இறைவன் திருமறையில் (2:124) கூறியுள்ளான்.

    அந்த அளவுக்கு அல்லாஹ்வின் பிரியத்தைப் பெறுவதற்கு முக்கியமான காரணம், இப்ராகிம் (அலை) நபியவர்கள் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத அளவிற்கு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அத்துடன், அல்லாஹ்வின் கட்டளைக்கு மறுபேச்சின்றி கீழ்ப்படியக்கூடியவர்களாக இருந்ததும் ஒரு காரணமாகும்.

    சிதிலமடைந்திருந்த இறையில்லத்தை இறைவனின் கட்டளைப்படி தன் மகனார் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் சேர்ந்து இப்ராகிம் (அலை) அவர்கள் சீரமைத்தார்கள். அன்னாரின் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ், மக்காவில் வசிக்கும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு உணவை அளித்து, அதனை பாதுகாப்பான இடமாகவும் ஆக்குவதற்கு வாக்குறுதி கொடுத்தான்.

    அல்லாஹ், ‘இப்ராகிம் (அலை) அவர்களை மக்களுக்கு தலைவராக ஆக்குகிறேன்’ என்று வாக்களித்ததும், இப்ராகிம் (அலை) அவர்கள், ‘தங்கள் சந்ததியரிலும் அப்படிப்பட்டவர்களை ஆக்குவாயா?’ என்று இறைவனிடம் கேட்டார்கள்.

    இந்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு அவர்களின் சந்ததியில் இருந்து இறுதித்தூதரான முகம்மது நபி (ஸல்) அவர்களை, மக்களுக்கு இமாமாக, வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்தருளினான்.

    இப்ராகிம் (அலை) அவர்கள், இறைவனின் கட்டளையை ஏற்று மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் கொதிக்கும் பாலைநிலத்தில் விட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்கள். இறைவன் ஏவிய போதெல்லாம், காரண, காரியங் களைப் பற்றி ஒரு முறை கூட சிந்தித்தார்களில்லை. அருமை மகனைப் பலியிட உடனே தயாரானது கூட இறைவனிடம் அவர்களுக்கு இருந்த கீழ்ப்படியும் குணத்தினால் தான்.

    இதனாலேயே இறைவனின் அன்பையும், நெருக்கத்தையும் பெற்றார்கள். இன்னும் அவர்கள் ஒருபோதும் தங்களைப் பற்றி எந்தக்கவலையும் கொண்டிருக்கவில்லை. எப்பொழுதும் தங்களின் சந்ததியினருக்காகப் பிரார்த்தனை புரிபவர்களாக இருந்தது அவர்களின் சிறப்பான குணமாக இருந்தது. இப்படி, இப்ராகிம் (அலை) அவர்களின் வரலாற்றில் இருந்து பல சம்பவங்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

    எனவே, இறைவனுக்கு கீழ்ப்படிதல் என்பது மிக முக்கியமான விஷயமாகும். கீழ்ப்படிதல் என்னும் ஒரு குணம் ஒருவரிடம் இருக்குமானால், அவரிடம் மற்ற நல்ல குணங்கள் நிச்சயமாக இருக்கும்.

    இறைவனுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இறைவனுக்கு மாற்றமான விஷயங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.

    கீழ்ப்படிதல் என்றாலே, என்ன செய்ய வேண்டும் என்று ஏவப்படுகிறோமோ அவற்றை மறுபேச்சின்றி செய்வதாகும்.

    தொழுகை முதலான வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, நாம் எப்படி இருக்க வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுள்ளானோ, அவற்றை எல்லாம் பின்பற்றவேண்டும் என்பதாகும்.

    கீழ்ப்படிதல் என்னும் மேலான குணம் உள்ள மனிதர்கள் தங்கள் பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் தங்கள் மேலதிகாரி களுக்கு கட்டுப்படுவார்கள். இதனால் அவர்களைப் பார்த்து அவர்களின் பிள்ளைகளும் அவர்களின் சொல் கேட்டு நடப்பார்கள்.

    கீழ்ப்படிதல் என்னும் குணத்தின் அடிப்படையில் மனிதர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

    இறைவன் சொல்லிக்காட்டியுள்ள கீழ்ப்படிதல் குணமுடையவர்கள் ஒரு வகையினர். இவர்கள் இறையச்சம் உடையவர்களாக இருப்பார்கள். இறையச்சத்தின் காரணமாக எல்லா ஒழுக்கங்களையும் பேணக்கூடியவர்களாக இருப்பார்கள்.

    இன்னொரு வகையினர், இறை வனுக்கு கீழ்ப்படியாதவர்கள். இவர்கள் வாழ்க்கையிலும் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கமாட்டார்கள். இறையச்சமின்றி பொய், களவு, புறம், அவதூறு, பிறன்மனை நோக்கல் என எல்லா கெட்ட பழக்கங்களையும் கொண்டிருப்பர். எல்லா பலன்களையும் அனுபவித்து விட்டு இனி ஒன்றும் கிடைக்காது என்ற நிலை ஏற்படும்பொழுது நெருக்கமாகப் பழகியவர்களையே காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்கள்.

    இவர்கள் இறைவனின் வெறுப்பிற்கும், கோபத்திற்கும் ஆளாவார்கள். இறைவனின் தண்டனைக்குப் பயந்து இறைவனிடமும், தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்டு திருந்தி வாழ்வதற்கு இவர்கள் முயற்சி செய்தால் அவர்களின் வாழ்வு சீர் படும்.

    இன்னும் ஒரு வகையினர், இறைவனுக்கு மட்டும் கீழ்ப்படிந்து விட்டு மனிதர்களிடம் உறவினை முறித்து வாழ்பவர்கள். இவர்களுக்கும் இறைவனின் அன்பு கிடைக்காது.

    இன்ஷாஅல்லாஹ், இறைவனிடம் கலப்படமில்லாத அன்பும், உண்மையான கீழ்ப்படிதல் குணமும் கொண்டு நம் வாழ்வு செம்மையாக, அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக. 

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம்
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தர்காக்களில் திட்டுவிளை வாகையடி பக்கீர்பாவா ஹயாத் ஒலியுல்லா தர்காவும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி கொடியேற்று விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பிற்பகல் 1 மணிக்கு ஜூம்மா பள்ளிவாசல் முன்பிருந்து பிறைகொடியை தாங்கிய யானை ஊர்வலம் சிங்காரி மேளத்துடன் புறப்பட்டது.

    இந்த ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வலம் வந்து இரவு தர்கா மைதானத்தை அடைந்தது. அதைதொடர்ந்து பக்தர்களின் இறைநாம முழக்கத்துடன் மைதானத்தின் முன் உள்ள அலங்கார கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களால் நேர்ச்சை வழங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து முஸ்லிம்களின் புனித இரவாக கருதப்படும் மிஹ்ராஜ் இரவு என்பதையொட்டி இஸ்லாமிய மார்க்க பேரூரை நடைபெற்றது. பேரூரை நிகழ்ச்சிக்கு உதுமான் லெப்பை சாகிபு சுன்னத் ஜமாத் பள்ளி அறக்கட்டளை தலைவர் மைதீன்பிள்ளை தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வன அலுவலர் முகமது அனிபா மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலர் அப்துல் ஹலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டணம் பெண்கள் அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அப்துல் காதிர் ஆலீம் சிறப்புரையாற்றினார். தொடக்கத்தில் ஜூம்மா பள்ளி இமாம் சயீது ரஹ்மானி வரவேற்றார். முடிவில் விழாக்குழு தலைவர் நாஞ்சில் காஜா நன்றி கூறினார்.

    விழாவின் கடைசி நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தப்ரூக் என்கிற நேர்ச்சை வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. முடிவில் விழாக்குழு செயலாளர் முகமது ரபீக் நன்றி கூறுகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை உதுமான் லெப்பை சாகிபு ஜூம்மா பள்ளி டிரஸ்ட் நிர்வாகம் மற்றும் விழாக் கமிட்டியினரோடு பொதுமக்களும் இணைந்து செய்துள்ளனர்.
    மறுமை நாளை நம்புவது இறைநம்பிக்கை சார்ந்த செயல் மட்டுமல்ல. அது நன்மையான காரியமும் கூட என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதை மறுப்பது தூரமான வழிகேடாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மறுஉலகு’ குறித்த தகவல்களை காண்போம்.

    மறுஉலகை நம்புவது என்பது மறுமைநாளை ஏற்றுக்கொள்வது.

    ‘மறுமைநாள்’ என்பது குறிப்பிட்ட இரண்டு நாட்களின் பொதுவான பெயராகும்.

    ஒன்று ‘உலகம் அழிக்கப்படும் நாள்’.

    மற்றொன்று, ‘மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள்’.

    உலகம் அழிக்கப்படும் நாளுக்கும், அழிக்கப்பட்ட பின்னர் மீண்டும் உயிர் கொடுத்து விசாரிக்கப்படும் நாளுக்கும் பொது வான சொல்லே ‘மறுமைநாள்’ என்பதாகும்.

    வானம், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், தாவரங்கள், மலை கள், கடல்கள், வானில் வாழும் வானவர்கள், இவ் வாறு அனைத்தும் ஒருநாள் அழிக்கப் படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத் திருப்பான். பின்னர் மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படு வார்கள். அவர்கள் விசாரிக்கப்படவும் செய்வார்கள்.

    உலகில் தவறு செய்த அனைத்து உயிரினங்களும் அந்நாளில் விசாரணைக்கு உட்படுத்தப்படும். ஒரு ஆடோ, மாடோ அல்லது கொம்புள்ள பிராணிகள் தங்களுக்கிடையே சண்டையிடும்போது கொம்பை உடைத்த பிராணியும், உடைக்கப்பட்ட பிராணியும் இறைவனின் சமூகத்திற்கு கொண்டு வரப்பட்டு, நீதி விசாரணை நடத்தப்பட்டு நியாயம் வழங்கப்படும்.

    விசாரணைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும். நல்லவர்களுக்கு பேரின்பம் கிடைக்கும். தீயவர்களுக்கு நோவினை தரும் பல விதமான தண்டனைகள் வழங்கப்படும்.

    மறுமை வாழ்விற்கு அழிவே வராது. அது ஒரு நிரந்தரமான உலகம். அந்த நாளுக்கு பல பெயர்கள் கூறப்பட்டு திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் அழைக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

    மறுஉலகம், அவ்வுலகம், மறுமை, நியாயத்தீர்ப்பு நாள், ஒன்று திரட்டப்படும் நாள், யாராலும் உதவமுடியாத நாள், திரும்பச்செல்லும் நாள், விசாரிக்கப்படும் நாள், பயன்தரும் நாள், உயிர்ப்பிக்கப்படும் நாள், இறைவனைச் சந்திக்கும் நாள், கை சேதப்படும் நாள், இறைவன் முன்நிற்கும் நாள், தப்பிக்க இயலாத நாள், எழுப்பப்படும் நாள், சந்தேகம் இல்லாத நாள், மகத்தான நாள், அந்நாள், அந்நேரம், வாக்களிக்கப்பட்ட நாள் போன்ற பல பெயர்களால் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது. இந்நாள் உலகம் அழிக்கப்படும் நாளுக்கும், அழிக்கப்பட்ட உலகம் மீண்டும் உயிர்ப்பிக் கப்படும் நாளுக்கும் பொதுவாக கூறப்படுகிறது.

    இத்தகைய நாள் எப்போது வரும் என்பதை நபி (ஸல்) மற்றும் வானவர்கள் உள்ளிட்ட யாராலும் அறிய முடியாது.

    மறைவானவற்றில் இதுவும் ஒன்று என்பதால் இதையும் இறைவிசுவாசிகள் நம்புவார்கள் என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது :

    ‘இறையச்சம் உடையோர் மறைவானவற்றை நம்புவார்கள்’. (திருக்குர்ஆன் 2:3)

    ‘மறைவானவற்றை நம்புதல்’ என்பது ஐம்புலன்களுக்கு எட்டா தவை அனைத்தும் மறைவானவை யில் அடங்கும்.

    ‘மறைவானவற்றை நம்புவது’ என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை குறிக்கும். அவற்றில் இறைவன், வானவர்கள், சொர்க்கம், அதில் கிடைக்கும் பேரின்பம், நரகம் அதில் கிடைக்கும் தண்டனைகள், மறுஉலகம், அந்நாளில் ஏற்படும் அமளிகள் போன்றவற்றைக் கண்களால் காணாமல் இருந்தும் நம்புவதுதான் என்பதை மேற்கூறப் பட்ட இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

    மறைவான ஞானம் இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதில் மறுமை நாளும் ஒன்று என பின்வரும் இறைவசனம் கோடிட்டு காட்டுகிறது.

    ‘யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு இறைவனிடமே உள்ளது’. (திருக்குர்ஆன் 31:34)

    அந்த நாள் வெள்ளிக்கிழமை அன்று ஏற்படும் என ஒரு சிறுதகவல் மட்டுமே நபிமொழியில் காணப்படுகிறது. அது எந்த ஆண்டு?, அது எந்த மாதம்?, அது எந்த காலம்? போன்ற எந்தத் தகவலும் எதிலும் காணப்படவில்லை.

    எனினும், அது ஏற்படுவதற்கு முன் நிகழும் பலவிதமான அடையாளங்கள் திருக்குர் ஆனிலும், நபிமொழிகளிலும் விவரமாக கூறப்படுகின்றன.

    “நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்களுக் கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து ‘மறுமைநாள் எப்போது?’ என்று அம்மனிதர் கேட்டார். ‘அதைப் பற்றி கேட்கப்படக் கூடிய நான், கேட்கின்ற உம்மைவிட அறிந்தவரல்லர். வேண்டுமானால் அதன் சில அடையாளங்களைப்பற்றி உமக்குச் சொல் கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப் பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    அதாவது, குழந்தைகள் தங்களை ஈன்றெடுத்த தாயை அடிமைப்பெண் போன்று நடத்துவதும், வசதியற்றவர்கள் வானளாவிய அளவு கட்டிடங்களை எழுப்பும் அளவுக்கு வசதியாக வாழ்வதும் அதன் அடையாளங்கள் ஆகும்.

    இந்த அடையாளங்கள் இன்று தத்ரூபமாக நடந்து கொண்டிருக்கிறது. சூரியன் மிக அருகாமையில் உதிப்பதும் அதன் அடையாளம்.

    மேலும், மறுமை நாளில் மனிதர்களிடம் கேள்வி கேட்கப்படும். சிலருக்கு அது எளிதாகவும், வேறு சிலருக்கு அது கடினமானதாகவும் இருக்கும்.

    ஒவ்வொருவருக்கும் அவரவர் புரிந்த நன்மை, தீமை பதிவு செய்யப்பட்ட ‘பட்டோலை’ வழங்கப்படும். அதை வலது கரத்தில் வழங்கப்பட்டவர் மகிழ்ச்சியடைவார். இடது கரத்தில் கொடுக் கப்பட்டவர் நஷ்ட மடைவார்.

    ‘யாருக்கு வலது கையில் பதிவுப்புத்த கம் கொடுக்கப்படு கிறதோ, அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். அவர் தனது குடும்பத் தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார். முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான். நரகிலும் கருகுவான்’. (திருக்குர்ஆன் 84:7-12)

    “எனவே, தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் ‘வாருங்கள், எனது புத்தகத்தை வாசியுங்கள், நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள், பருகுங்கள். (எனக்கூறப்படும்)”.

    “புத்தகம் தனது இடதுகையில் கொடுக்கப் பட்டவன் ‘எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே, (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா?, எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே, எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்துவிட்டதே’ எனக்கூறுவான்”.

    “அவனைப் பிடியுங்கள். அவனுக்கு விலங்கு மாட்டுங்கள். பின்னர் நரகில் கருகச்செய்யுங்கள். பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள் (எனக்கூறப்படும்)”. (திருக்குர்ஆன் 69:19-32)

    ‘மறுமைநாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும்’. (திருக்குர்ஆன் 39:67)

    ‘சூர் ஊதப்படும். இறைவன் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண் டும் ஒருமுறை, அது ஊதப்படும். உடனே அவர் கள் எழுந்து பார்ப்பார்கள்’. (திருக்குர்ஆன் 39:68)

    ‘மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்’. (திருக்குர்ஆன் 21:47)

    இந்த விஷயங்கள் அனைத்தும் மறை வானவை. இது நடக்கும் நாள் மறுமை நாள் ஆகும். அதை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.

    சொர்க்கம், நரகம், விசாரணை, உலகம் அழிக்கப்படுதல், மீண்டும் அது உருவாக்கப்படுதல், மனிதனின் செயல்கள் நீதியான தராசில் நிறுக்கப்படுதல், நல்லோருக்கு பேரின்ப வாழ்வு, தீயவர்களுக்கு பரிதாபமான வாழ்வு, இவற்றை நம்பவேண்டும்.

    ‘உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக இறைவனையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் நம்புவோரே நன்மை செய்பவர்கள்’. (திருக்குர்ஆன் 2:177)

    மறுமை நாளை நம்புவது இறைநம்பிக்கை சார்ந்த செயல் மட்டுமல்ல. அது நன்மையான காரியமும் கூட என்பதை நம்மால் உணரமுடிகிறது. அதை மறுப்பது தூரமான வழிகேடாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! இறைவனையும், அவனது தூதரையும், தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்! இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்துவிட்டார்’ என்பது திருக்குர்ஆன் (4:136) வசனமாகும்.
    நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.
    ஒருவர் மரணமடைந்து விட்டால் உலகத்துடனான அவருடைய தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விடும் என்பது உண்மை. ஆயினும் அவர் விட்டுச்செல்லும் சுவடுகள், அவருடைய மறைவுக்குப் பின்னரும் உலகில் இருந்துகொண்டே இருக்கும். அவை நல்ல சுவடுகளாக இருக்கலாம், அல்லது தீயவையாக இருக்கலாம்.

    எனவே, வாழும் காலத்திலேயே நல்ல அடையாளங்களை விட்டுச்செல்லும் வண்ணம் வாழ்வை அமைத்துக்கொள்ளல் வேண்டும்.

    அனைத்துச்செயல்களையும் இறைவன் பதிவு செய்துகொண்டே இருக்கின்றான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆயினும் நாம் விட்டுச்செல்லும் சுவடுகளைக்கூட இம்மி பிசகாமல் பதிவு செய்கிறான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இறைவன் கூறுகின்றான்: “திண்ணமாக, நாமே மரணமடைந்தவர்களை ஒரு நாள் உயிர்ப்பிப்போம். அவர்கள் செய்தவற்றையும் நாம் குறித்துக்கொண்டே இருக்கின்றோம். அவர்கள் விட்டுச்சென்ற சுவடுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம். மேலும், நாம் ஒவ்வொன்றையும் ஒரு தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டுக் குறித்து வைத்துள்ளோம்”. (திருக்குர்ஆன் 36:12)

    இறைவனின் மன்னிப்பையும், மறுமை வெற்றியையும் பெறுவதற்கு சிலபோது நாம் விட்டுச்செல்லும் நல்ல சுவடுகள்கூட நமக்கு துணை நிற்கலாம்.

    ஆம், நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர் நமது தர்மத்தை உண்டவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது வார்த்தைகளால் ஆறுதல் அடைந்தவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். ‘நம்மை போன்று ஆறுதல் வார்த்தைகள் கூற யாரும் இல்லையே’ என்று அவர் ஆதங்கப்பட வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நம்மால் நல்வழி பெற்றவர் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    நாம் இந்த உலகைவிட்டு சென்றபின்னர், நமது நல்ல நடத்தையால் கவரப்பட்டவர்கள் நமது இழப்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

    நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த சுவடுகள்தான் நமது இறைவனை, மன்னிக்கும் இறைவனாக நமக்குப் பெற்றுத்தரும்.

    ஆயினும், நம்மில் பெரும்பாலானோர் விட்டுச்செல்லும் அடையாளங்கள் எப்படி இருக்கின்றன?

    அரண்மனை போன்ற வீடு, வசதிமிக்க வாகனம், பேர் சொல்லும் பிள்ளை, குடும்பத்தினர் சிரமம் இன்றி உண்டு கழித்து மகிழ்ந்திருக்க திரண்ட செல்வம்.

    இதைத்தானே அனேகமானவர்கள் விட்டுச்செல்கின்றார்கள்.

    இந்த அடையாளங்களும், சுவடுகளும் நமக்கான மறுமை வெற்றியைப் பெற்றுத்தருமா?

    ஒருபோதும் இல்லை. மாறாக மறுமை வெற்றியை சிலபோது இவை கேள்விக்குறியாக மாற்றிவிடக்கூடும்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “மனிதன் மரணித்துவிட்டால் மூன்றே மூன்று விஷயங்களைத் தவிர அவனது அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டுவிடும். அவை: நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, அவனுக்காக பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை”. (முஸ்லிம், திர்மிதி)

    இவைதான் உண்மையான சுவடுகள். இதுபோன்ற சுவடுகள்தான் மன்னிக்கும் இறைவனை மறுமையில் பெற்றுத்தரும்.

    அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்வையற்ற மூதாட்டி ஒருவரைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார். அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த பிற்பாடு, அந்த மூதாட்டியைப் பராமரிக்கும் பொறுப்பை உமர் (ரலி) ஏற்றுக்கொண்டார். ஒருநாள் அந்த மூதாட்டியைச் சந்திக்கச் செல்கின்றார் உமர் (ரலி) அவர்கள்.

    உமர் (ரலி) அவர்களிடம் அந்த மூதாட்டி கேட்டார்: “உமது நண்பர் மரணித்துவிட்டாரா?”

    உமர் (ரலி) சற்று நேரம் திகைத்துவிட்டார். காரணம் அபூபக்கர் (ரலி) அவர்கள் மரணித்த செய்தி அந்த மூதாட்டிக்குத் தெரிய வாய்ப்பு குறைவு. அந்த மூதாட்டியிடம் கேட்டார்கள், “உங்களுக்கு எப்படி அது தெரியும்?”

    மூதாட்டி: “உமது நண்பர், பேரீத்தம் பழங்களை எனக்கு உண்ணத் தரும்போது அதன் விதைகளை அகற்றிவிட்டுத்தான் எனக்குத் தருவார். ஆனால் நீர் விதைகளுடன் தருகின்றீரே”.

    உமர் (ரலி) அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

    அலி (ரலி) அவர்களின் பேரர் ஜஅபர் (ரலி) அவர்கள், கோதுமையையும் உணவுகளையும் கோணிப்பையில் அடைத்து, மதீனாவில் வசிக்கும் ஏழைகளின் வீட்டுவாசல்களில் அதிகாலைப் புலர்வதற்கும் முன்னரே ஒவ்வொரு நாளும் வைப்பார்கள். யார் இந்த உணவை வைக்கின்றார்கள் என்று எவ்வளவுதான் முயன்றும் எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒருநாள் ஜஅபர் (ரலி) மரணமடைகின்றார். அன்றைய தினத்தின் அதிகாலையில் ஏழைகளின் வீட்டு வாசல்களில் உணவுப் பொட்டலங்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

    அவரது உடலைக் குளிப்பாட்டும்போது இடது தோளில் ஒரு வடு இருப்பதை மக்கள் கவனிக்கின்றார்கள். ஆம்... நாளெல்லாம் ஏழைகளுக்காக உணவுகளை சுமந்த வடுதான் அது.

    இக்கட்டான சந்தர்ப்பங்களில் உதவியவர்களை மனிதர்கள் ஒருபோதும் மறப்பதில்லை.

    பொதுப்போக்குவரத்து வாகனங்களில் வயது முதிர்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கிக் கொடுப்பது, சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் தாம் போகும் பாதையில் இருப்பவர்களை ஏற்றிச்சென்று உதவுவது, பாரமான பொருட்களை வாகனங்களில் ஏற்றவும், இறக்கவும் உதவுவது, அவசரத் தேவைகளின்போது கை கொடுத்து உதவுவது.. போன்றவைதான் நல்ல சுவடுகள்.

    ஆம், அடுத்தவர்களை மகிழ்விப்பதற்கும், அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்பதல்ல.

    மாறாக, நமது சின்னச்சின்ன செயல்பாடுகள்கூட தூய்மையாக அமைந்துவிட்டால், மரணத்தைத் தாண்டியும் நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மரணத்திற்குப் பின்னரும் அவை நம்மைக் காப்பாற்றக்கூடும்.

    இவ்வுலகில் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்கள், காற்றில் கரைந்து காற்றோடு காற்றாக மறைந்துவிடுகிறது. இன்னும் சிலர் விட்டுச்செல்லும் அடையாளங்களோ பசுமரத்தாணி போன்று மனித மனங்களில் அப்படியே பதிந்துவிடுகிறது. எனவே நாம் விட்டுச்செல்லும் சுவடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டிய நேரம் இதுதான்.

    நூஹ் மஹ்ளரி, குளச்சல்
    நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான விதியை நம்புவது மற்றும் விதியின் வினையை ஏற்பது குறித்த தகவல்களை காண்போம்.

    உலகில் நடக்கும் அனைத்தும் இறைவன் விதித்த விதிப்படியும், அளவுப்படியுமே நடக்கிறது என்று நம்பிக்கை கொள்வதுதான், ‘விதியை நம்புவது’ ஆகும்.

    நன்மை-தீமை, லாபம்-நஷ்டம், செல்வம்-வறுமை, இன்பம்-துன்பம், பிறப்பு-இறப்பு... இவை அனைத்தும் இறைவனால் உண்டாக்கப்பட்டவை. இவை அனைத்தும் இறைவனால் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் நடக்கிறது.

    மனிதன் செய்யும் நன்மையான காரியங்களுக்கு நற் கூலியையும், தீமையான காரியங்களுக்கு தண்டனையையும் இறைவன் வழங்குவான்.

    நன்மையும், தீமையும் இறைவன் நாட்டப்படி அரங்கேறினாலும், அவன் நன்மையை பொருந்திக்கொள்வான். தீமையைப் பொருந்தமாட்டான் என்றும் நம்பவேண்டும்.

    ‘அவன் தனது அடியார்களிடம் மறுப்பைப் பொருந்திக் கொள்ள மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களிடம் அதைப் பொருந்திக்கொள்வான்’. (திருக்குர்ஆன் 39:7)

    ‘நன்மை-தீமை இரண்டும் இறைவன் நாட்டமில்லாமல் நடக்காது’ என்று கூறும் பொழுது, நன்மை புரிந்தவருக்கு நல்ல பிரதி பலனும், தீமை செய்தவருக்கு தண்டனையும் கொடுப்பது நியாயமா? என்ற ஒரு நியாயமான கேள்வி எழுகிறது அல்லவா?.

    ஆம், பின்னாளில் நடக்க இருக்கிற காரியங்களை அவன் இன்னதென நமக்கு தெரிவிக்கவில்லையே. அவன் நமக்கு வெளிப்படையாக அறிவித்ததெல்லாம் ஏவல்களும், விலக்கல்களும் தான். எனவே, அறிவித்தபடி ஏவலை ஏற்றும், விலக்கியதை விட்டும் தவிர்ந்து நடந்திட வேண்டும். இது ஒரு சாத்தியமான நடவடிக்கையே. இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடு கிறது:

    ‘உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்தவன் மீதும் சத்தியமாக, அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான். அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார். அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்’. (திருக்குர்ஆன் 91:7-10).

    விதி ஒரு பக்கம் இருந்தாலும், இவ்வாறு கூறியதிலிருந்து நன்மை-தீமைகளை சீர்தூக்கிப் பார்த்து செயல்களில் ஈடுபடுவதற்குரிய தகுதியை இறைவன் மனிதனுக்கு வழங்கியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

    விதி அடிப்படையில் எதுவும் நடக்கும் என்று எப்படியும் இருந்து விடக்கூடாது. நடந்ததை விதியின் மீது சுமத்தி, நடக்க இருப்பதை முழுமுயற்சியால் அடைய முற்பட வேண்டும்.

    “ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! சொர்க்கவாசிகள் யார்?, நரகவாசிகள் யார்? என்று (முன்பே இறைவனுக்குத்) தெரியுமா?’ என முகம்மது நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

    ‘ஆம்! தெரியும்’ என்றார்கள் நபிகளார்.

    ‘அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகிறவர்கள் நற்செயல் புரிய வேண்டும்?’ என்று அந்த நபர் கேட்டார்.

    அதற்கு நபியவர்கள், ‘ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ அல்லது எதை அடைவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ அதற்காகச் செயல் படுகிறார்கள்’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹூஸைன் (ரலி), புகாரி)

    ஒவ்வொருவரின் விதியும் அவர் படைக்கப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை.

    ‘இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது இறைவனுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறிவிட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் (விதியை ஏற்படுத்தியுள்ளான்)’. (திருக்குர்ஆன் 57: 22,23)

    ‘ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்’. (திருக்குர்ஆன் 54:49)

    ‘அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் படைத்தான்; அதைத் திட்டமிட்டு அமைத்தான்’. (திருக்குர்ஆன் 25:2)

    ‘அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:38)

    ‘இறைவன் வானங்களையும், பூமியையும் அமைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து படைப்பினங் களின் விதிகளையும் தீர்க்கமாக எழுதிவிட்டான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), முஸ்லிம்)

    எது நடந்தாலும், அது விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது. நடந்துவிட்ட ஒன்றுக்கு யாரும் யாரையும் குறைகூறக்கூடாது. நடந்துவிட்டதை நினைத்து வாழ்க்கையே முடங்கிவிட்டது என்று ஊனமாகி விடவும் கூடாது. வாழ்வின் அடுத்தகட்ட நகர்வுக்கு நம்மை தயார்படுத்திட வேண்டும்.

    ‘(இறைத்தூதர்களான) ஆதம் (அலை) அவர்களும், மூஸா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதமிடம் மூஸா (அலை) அவர்கள், ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்களின் பாவத்தின் காரணமாக) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்’ என்றார்கள்.

    அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘மூஸாவே! இறைவன் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் வேதத்தை) வரைந்தான். இப்படிப்பட்ட நீங்கள், இறைவன் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்து விட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள்.

    (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டதாக மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    தாயின் கருவறையில் கருவாக உருவானதிலிருந்து கல்லறை வரைக்கும் நடக்கும் ஒவ்வொரு செயலும் இறைவன் விதித்த விதியின் அடிப்படையிலேயே நடக்கிறது என்பதை நபிகள் நாயகம் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

    இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) தெரிவிப்பதாவது:

    ‘உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு, அதைப் போன்றே (40 நாட்கள்) அந்த கரு (அட்டை போன்று கருப்பையின் கவரைப் பற்றிப் பிடித்துத்தொங்கும்) ஒரு கட்டியாக மாறுகிறது. பிறகு, அதைப்போன்ற (மேலும் 40 நாட்கள்) மெல்லப்பட்ட சக்கை போன்ற ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது’.

    ‘பிறகு (அதனிடம்) இறைவன் ஒரு வானவரை அனுப்பு கிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப் படுகிறார். 1) அந்த மனிதனின் வாழ்வாதாரம், 2) வாழ்நாள் (செயல்பாடு), 3) அவன் துர்பாக்கியசாலியா? 4) அல்லது நற்பாக்கியசாலியா? (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும்’.

    “இதனால்தான் இறைவன் மேல் ஆணை, ‘உங்களில் ஒருவர் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே விரிந்த இரண்டு கைகளின் நீட்டளவு, அல்லது ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்ய, அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்து விடுவார். இதைப் போன்றே ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும், சொர்க்கத்திற்கும் இடையே ஒரு முழம் அல்லது இரண்டு முழங்கள் இடைவெளிதான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசி களின் செயலைச்செய்து, அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்து விடுவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (புகாரி)

    ‘இயலாமை, மற்றும் புத்துணர்ச்சி உட்பட யாவும் விதியின் பிரகாரமே நடக்கிறது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), முஸ்லிம்)

    விதியை நம்பவேண்டும். அதிலே தர்க்கம் செய்யக் கூடாது. விதி குறித்து விவாதம் செய்ய ஆரம்பித்தால் அது எல்லை தாண்டி போய்விடும். அதனால் இறைநம்பிக்கையும் பாழாகிவிடும்.

    ஷைத்தான் தான் விதியைப் பற்றி தர்க்கம் செய்பவன். அவன் இறைவனிடம் ‘உன்னுடைய விதியில் நான் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரசை தாழ்த்துவேன் என்றிருந்தால், அவ்வாறு நான் செய்யாமல் போனதற்கு எனக்கு சக்தி இருக்குமோ?’ என விவாதம் செய்தான். இதனால் இறைவனின் நிரந்தரமான சாபத்திற்கு அவன் ஆளாகி விட்டான்.

    கூபா நகரப் பள்ளிவாசலில் ஒருவர் விதியைப் பற்றி மக் களுக்கு உரை நிகழ்த்தினார். அதனைக் கேள்விப்பட்ட அலி (ரலி) அவர்கள் அவரை அழைத்து, ‘இனிமேல் நமது இறைஇல்லங்களில் விதி குறித்து பேசக்கூடாது’ என எச்சரிக்கை செய்தார்கள்.

    விதியைப் பற்றி வீணாக விவாதித்து, வழிகெட்டுப் போனவர்கள் ஜப்ரிய்யா, கத்ரிய்யா கூட்டத்தினர் ஆவர். அவர்களைப் போன்று நாமும் வழிகெட்டு போய்விடக்கூடாது.

    நடந்து போனதை எல்லாம் ‘அவன் செயல்’ என்று கூறி, விதி என நம்பி கடந்து போக வேண்டும். கடக்க வேண்டியதை கதி என்று நினைத்து முயற்சி செய்து முன்னேற வேண்டும். விதியை நம்புவதிலும் நன்மைகள் பல இருக்கத்தான் செய்கிறது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை
    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.
    திருக்குர்ஆனில் மொத்தம் 25 நபிமார்களின் திருப்பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. அதில் நபி இப்ராகிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை) போன்ற நபிமார்களின் பெயர்கள் பல முறை இடம் பெற்றுள்ளது. முகம்மது நபி (ஸல்) அவர்களின் திருப்பெயர் 4 முறை இடம் பெற்றுள்ளது.

    அதுபோல நபிகளாருக்கு ஆயிரமாயிரம் உயிர்த்தோழர்கள் (சஹாபாக்கள்) இருந்த போதிலும், அவர்களில் ‘ஸைத்’ என்ற ஒரு நபித்தோழரின் பெயர் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவாகி உள்ளது.

    அத்தகைய சிறப்பு மிக்க நபித்தோழர் ஸைத் குறித்த வரலாற்று பின்னணியை பார்ப்போம்.

    பாரம்பரியமிக்க கல்ப் குலத்தை சார்ந்த ஹாரிதாவின் மகன் ஸைத். அவரது தாய் புகழ்பெற்ற வள்ளலான ஹாதிம் தாயின் பரம்பரையை சார்ந்தவர்.

    ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாயி என்ற கிராமத்திற்கு தனது தாயாருடன் ஸைத் சென்றிருந்தார். அப்போது ஒரு கொள்ளைக்கும்பல் குதிரையில் வந்து அக்கிராமத்தை சூறையாடியது.

    அப்போது அக்கொள்ளையர்கள் ஆண்கள் பலரையும் சிறைபிடித்து சென்றார்கள். அவர்களில் இளைஞரான ஸைதும் கைதாகி இருந்தார். பின்னர் கைதிகளாக பிடிபட்டவர்களை எல்லாம் உக்காஸ் என்ற அரேபிய சந்தையில் அடிமைகளாக விற்று விட்டார்கள்.

    அந்த சந்தைக்கு கதீஜா (ரலி) அவர்களின் சகோதரரின் மகனான ஹிஷாம் என்பவர் சென்று சில அடிமைகளை விலைக்கு வாங்கினார். அதில் ஸைதும் ஒருவராய் வாங்கப்பட்டு இருந்தார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அவர்களை திருமணம் முடித்திருந்த காலகட்டம் அது. மணமகளாக இருந்த கதீஜா அவர்கள் தனது மருமகனான ஹிஷாமை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.

    அது சமயம் ஹிஷாம் சில அடிமைகளை கதீஜா (ரலி) அவர்களிடம் காட்டி, அவர்களில் ஒருவரை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொண்டார். கதீஜா (ரலி) அவர்கள், அந்த அடிமைகளில் ஸைதையே தேர்வு செய்தார்கள்.

    அச்சமயம் பராகா என்ற அடிமைப்பெண் நபிகளாருக்கு பணிவிடை செய்துவந்தார். ஆனால் அவரை நபிகளார் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து சுதந்திரமாக செல்ல அனுமதித்து இருந்தார்.

    எனவே, கதீஜா (ரலி) அவர்கள் தனது கணவருக்கு உதவியாக இருக்க, ஸைதை அனுப்பினார்கள்.

    நபிகளார், ஸைதிடம் அன்பாகவும், பரிவாகவும் ஒரு தந்தையை போன்றே நடந்து கொண்டார்கள். நாட்கள் செல்லச்செல்ல ஸைத் நபிகளாரின் உற்ற நேசராகவே மாறிப்போனார்.

    இந்த நிலையில் ஸைதை அவரது பெற்றோர்கள் தேடிஅலைந்தனர். எவ்வளவோ அலைந்து திரிந்தும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் அவர்கள் தவியாய் தவித்தனர்.

    கஅபாவின் புனித யாத்திரை காலம் தொடங்கியபோது, கல்ப் குலத்தவர்கள் பலரையும் மக்காவின் வீதிகளில் நடமாடுவதை ஸைது கண்டார்.

    ஸைத் அவர்களை அணுகி தான் மக்காவில் இருப்பதை தனது பெற்றோரிடம் தெரிவிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவர்களிடம் இவ்வாறு கூறி அனுப்பினார்:

    ‘எனது குடும்பம் எனக்காக துயரப்படுவதை நான் நன்கறிவேன். இறைவனின் அருள் நிறைந்த தலங்களில் (மக்காவில்), புனிதமானதோர் (நபிகளாரின்) இல்லம் தான் எனது உறைவிடமாகும். உயர் குலங்களில் அனைத்திலும் உயர்ந்த இடத்தில் நான் உறைந்திருக்கின்றேன். என்னை தேடி அலைவதினால் ஒட்டகங்களை களைப்படையச் செய்யாதீர்கள். எனக்கெனச் சுமந்த துயரங்களை எல்லாம் உடனே விட்டு விடுங்கள்’.

    இவ்வாறு தன்பெற்றோரிடம் கூறுமாறு ஸைத் தகவல் அனுப்பினார்.

    இச்செய்தி கிடைத்தவுடன் ஸைதின் தந்தையான ஹாரிதா தனது தம்பியை உடன் அழைத்துக் கொண்டு மக்காவுக்கு விரைந்து சென்றார்.

    மக்காவை வந்தடைந்ததும் அவர் நபிகளாரை நேரில் சந்தித்தார். தனது மகன் ஸைதை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென வேண்டியதோடு, அதற்கு ஈட்டுத்தொகையாக எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாக நபிகளார் முன் பணிவுடன் கூறி நின்றார்.

    ஸைத் யாருடன் இருக்க வேண்டும் என்பதை ஸைதே முடிவு செய்யட்டும் என்றார்கள் நபிகளார்.

    ‘ஸைத், உங்களோடு வர சம்மதித்தால், எனக்கு எந்த ஈட்டு தொகையும் தராமல் தாராளமாக உங்களது மகனை நீங்கள் அழைத்துச்செல்லலாம். ஆனால் அவர் என்னுடன் இருக்க விரும்பினால், என்னை தேர்வு செய்யும் எவரையும் நான் நிராகரித்து நிற்பவன் அல்ல’ என்று நபிகளார் உறுதியுடன் கூறினார்கள்.

    அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் ஸைத் அங்கு வந்தார்.

    அவரை அழைத்த நபிகளார், ‘ஸைதே இவர்களை உமக்கு தெரியுமா?’ எனக்கேட்டார்கள்.

    ‘ஆம்’ என்ற ஸைத், ‘ஒருவர் தனது தந்தை, மற்றவர் தனது சிறிய தந்தை’ என்று கூறினார்.

    ‘இவர்கள் உம்மை மீட்டு உமது ஊருக்கு அழைத்துச் செல்ல வந்துள்ளார்கள். உமது விருப்பப்படி நீர் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்’ என்ற நபிகளார், முடிவெடுக்கும் பொறுப்பை ஸைதின் விருப்பத்திற்கே விட்டுவிட்டார்கள்.

    ஸைத் அதற்கு மிக நிதானமாகவே பதில் கூறினார்.

    ‘அண்ணலே, உலகில் உங்களுக்கு பகரமாக வேறு எவரையும் நான் தேர்வு செய்ய மாட்டேன்’ என்றார்

    இதைக் கேட்ட அவரது தந்தை ஹாரிதா இடி விழுந்ததை போல திகைத்து நின்றார். அவரது நிலை கண்டு மனம் இரங்கிய நபிகளார் ஹாரிதாவையும் அவரது தம்பியையும், புனித தலமான கஅபாவிற்கு அழைத்துச்சென்றார்கள்.

    மக்களை எல்லாம் சப்தமாக அழைத்து ஒன்றுகூட்டி, ஸைதின் கையை பிடித்துக்கொண்டு, ‘இன்று முதல் ஸைத் எனது மகனாவார், நான் அவரது தந்தை’ என பிரகடனம் செய்தார்கள்.

    இது ஸைதின் தந்தைக்கும், அவரது தம்பிக்கும் மிகுந்த ஆறுதலை தந்தது.

    தனது மகன், அருள் நிறைந்த அன்பாளரான நபிகளாரிடம் சுதந்திரமாகவும் கண்ணியமாகவும் கருதப்படுவதை கண்டு மன நிறைவோடு தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    நபிகளாரை, ஸைத் தனது பெற்றோர்களை விடவும், தன்னைவிடவும் பெரிதும் நேசித்தமையும், நபிகளாரை ஸைத் அளவு கடந்த பிரியத்தோடு தேர்வு செய்து கொண்டமையும் அவருக்கு மிக அரியதோர் வாய்பை ஏற்படுத்தி தந்தது எனலாம்.

    திருக்குர்ஆனில் அவரது பெயர் 33-வது அத்தியாயம் 37-வது திருவசனத்தில் இடம் பெற்றுள்ளது.

    நபிகளாரும் ஸைதும் தந்தை மகன் என்ற பலமான நேசமும் பாசமும் கொண்டவர்களாக இருந்த போதிலும், உலகில் வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற சொந்த மகனைப் போன்று ஆக முடியாது என்பதை வலியுறுத்தி இறைவன் தன் வசனத்தை குர்ஆனில் இவ்வாறு இறக்கி வைத்தான்:

    ‘(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. (ஆகவே, அவர் ஜைதுக்கு எவ்வாறு தந்தையாவார்?) எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (ஆகவே, அவருக்குப் பின்னர் யாதொரு தூதரையும் அனுப்பமாட்டான்.) அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (திருக்குர்ஆன் 33:40).

    உண்மையாளர்களை, உண்மையாகவே நேசித்தால் உயர்வான இடம் நிச்சயம் கிடைக்கும் என்பதை ஸைத் (ரலி)யின் வாழ்வு நமக்கு வலியுறுத்தும் நற்பாடமாகும்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.
    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைத்தூதர்களான நபிகளை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    நபிமார்கள் என்றால் யார்?

    நபிமார்கள் என்பவர்கள் மனிதர்களில் புனிதர்கள், மாமனிதர்கள்.

    இவர்களுக்கு இறைவனிடம் இருந்து இறைச்செய்திகள் அறிவிக்கப்படுகிறது. அவற்றை, அவர்கள் நன்றாக விளங்கி, அதில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சமுதாயத்தவர்களுக்கு போதிப் பவர்கள்.

    இவர்கள் சீரிய சிந்தனையாளர்கள், புரட்சியா ளர்கள். சமூக சீர் திருத்த கருத்துக்களை விதைத்து, சமூக முன்னேற்றத்திற்கு அயராது அல்லும் பகலும் பாடுபடக்கூடியவர்கள். சமூக தீமைகளுக்கு எதிராக போராடுபவர்கள், சமூகக்கொடுமைகளை துணிவுடன் அகற்றியவர்கள்.

    மக்களை, சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்கள், அசத்தியத்தை தயங்காமல் எதிர்ப்பவர்கள். இறைவனை அடைய எளியமுறையில் இறைக்கோட்பாடுகளை இனிமையாக பேசுபவர்கள். நல்லதை ஏவுபவர்கள், தீயதை தடுப்பவர்கள். சமூக ஒற்றுமைக்காக உழைத்தவர்கள். இறைவழியிலும், நேரான பாதையிலும் மக்களை அழைத்து நல்வழி காட்டுபவர்கள்.

    அவர்கள் அன்பானவர்கள்; அழகானவர்கள்; பண்பாளர்கள்; வாய்மையாளர்கள்; மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்; பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்; இறை நேசர்கள்; சமூக சேவகர்கள். இப்படி பன்முகத்தன்மை வாய்ந்தவர்கள் தான் நபிமார்கள்.

    இவர்களையும், இவர்கள் கொண்டு வந்ததையும், செய்து வந்ததையும், சொல்லி வந்ததையும், அங்கீ கரித்து வந்ததையும் நம்பிக்கை கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    நபி-ரசூல்

    நபிமார்கள், ரசூல்மார்கள் இடையே சிறிய வேறுபாடு உள்ளது. ரசூல் என்பவருக்கு தூதுத்துவம், நபித்துவம் ஆகிய இரண்டு தன்மைகளும் உண்டு.

    நபி என்பவருக்கு நபித்துவம் மட்டுமே இருக்கும். அதாவது, மார்க்கத்தின் புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு இறைச்செய்தி இறக்கப்பட்டு, அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் இறைத்தூதர் எனப்படுவார். இவருக்கு தனிவேதமோ, சிறிய ஏடுகளோ வழங்கப்பட்டாலும், வழங்கப்படவில்லையானாலும் சரியே.

    நபி என்பவருக்கு புதிய சட்டங்களைக் கொண்டு, வேத செய்தி இறக்கப்படாது. அவருக்கு முன்பு வந்த இறைத்தூதரின் சட்டங்களையே பின்பற்றி பிரச்சாரம் செய்பவராக இருப்பார்.

    நபிமார்களை நம்புவதில் நான்கு விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அவற்றை விரிவாக காண்போம்...

    1) இறைவன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பி வைத்தான். ஒரே இறைவனை மட்டுமே வணங்கிட அவர் தம் மக்களை அழைப்பார்; இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துப் பேசுவார். இறைச் செய்திகளிலிருந்து எதையும் மறைக்காமல், மாற்றாமல் உள்ளதை உள்ள படியே தெரிவிப்பார். அவற்றிலிருந்து தங்களது விருப்பப்படி ஒரு எழுத்தை கூட கூடுதலாகவோ, குறைவாகவோ கூறமாட்டார்.

    ‘தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர் களுக்கு வேறு எதுவும் உள்ளதா?’ (திருக்குர்ஆன் 16:35)

    ‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக, அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’ (திருக்குர்ஆன் 14:4).

    இறைத்தூதர்களின் அழைப்புப்பணி, முதல் தூதரிடமிருந்து அவர்களின் இறுதித்தூதர் வரை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையின் மீதே ஒன்றுபட்டிருந்தது.

    அனைத்து வகையான வணக்கங்களையும், இறைவனுக்கு மட்டுமே ஆற்றிடவேண்டும். அவற்றில் பிறரை கூட்டுச் சேர்க்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் உரக்கச் சொன்னார்கள்.

    ‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள், என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை’. (திருக்குர்ஆன் 21:25)

    ‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய (இறைத்) தூதர்களிடம் கேட்பீராக’. (திருக்குர்ஆன் 43:45)

    தூதர்களிடையே வணக்க வழிபாடு முறைகள் மாறுபட்டிருக்கலாம். அவரவர் மார்க்கச் சட்டத்தின்படி ஆகுமானவைகள், கூடாதவைகள், கடமைகள் போன்ற விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு மாறுபட நேரிடலாம். எனினும், ஓரிறைக் கொள்கையில் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாகத்தான் இருந்தார்கள்.

    ‘உங்களில் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். இறைவன் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை)’. (திருக்குர்ஆன் 5:48)

    2) யாரின் பெயரை நாம் அறிந்திருக்கிறோமோ அவரையும், யாரின் பெயரை நாம் அறியவில்லையோ அவரையும், பெயர் இல்லாமல் எவர் குறிப்பிடப்படுகிறாரோ அவரையும் நம்புவது முஸ்லிம்கள் மீது கடமை.

    ‘உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. இறைவனின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டுவருவது எந்தத் தூதருக்கும் இல்லை’. (திருக்குர்ஆன் 40:78)

    ‘(முகம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர் களின் வரலாற்றை உமக்குக் கூறவில்லை’. (திருக்குர்ஆன் 4:164)

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரி வித்ததாக அபூதர் (ரலி) கூறுவது:

    “அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் ஆவர். அவர்களில் முன்னூற்றி பதினைந்து பேர் ரசூல் (இறைத்தூதர்)கள் ஆவர்’ என்று கூறினார்கள்”. (நூல்:அஹ்மது, மிஷ்காத்)

    இவர்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றவர்கள் 25 நபிமார்கள். அவர்கள் பெயர் வருமாறு:-

    ஆதம் (அலை), நூஹ் (அலை), இத்ரீஸ் (அலை), இப்ராகிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுப் (அலை), லூத் (அலை), ஷீத் (அலை), ஸாலிஹ் (அலை), சுஅய்ப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), தாவூத் (அலை),

    சுலைமான் (அலை), அய்யூப் (அலை), துல்கிப்லு (அலை), யூனுஸ் (அலை), இல்யாஸ் (அலை), அல்யஸஉ (அலை), ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்).

    இவர்களில், ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராகிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்) ஆகியோர் உறுதிமிக்க தூதர்கள் எனும் சிறப்புப்பெயரை பெற்றவர்கள்.

    3) இறைத்தூதர்களிடம் இருந்து வந்த சரியான தகவல்களையும் நம்ப வேண்டும். மேலும் முகம்மது (ஸல்) அவர்களையும் நம்பி, அவர் காட்டிய வழியிலும் செயல்பட வேண்டும்.

    ‘(முகம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 4:65)

    4) முகம்மது (ஸல்) அவர்களை இறை வனின் இறுதித்தூதராகவும் நம்பவேண்டும்.

    இதுகுறித்தும் திருக்குர்ஆன் இவ் வாறு ஆணித்தரமாக அறிவிக்கிறது:

    ‘முகம்மது, உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக இறைவனின் தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்’. (திருக்குர்ஆன் 33:40)

    ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்ள மதீனாவில்) அலி (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப் பிரதிநிதியாக) நியமித்தார்கள். அப்போது அலி (ரலி) ‘குழந்தைகளையும், பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில், என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி).

    மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் இறைத் தூதர்களான நபிமார்களை நம்பவேண்டும். இறை வனால் அருளப்பட்டது என்று அவர்கள் கூறிய தகவல்களையும் நம்பி அவர்களை பின்பற்றவேண்டும்.

    முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரைகளையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிமாக ஆவார். 
    சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.
    இன்று நம்மில் பலர், ‘சோதனை என்பது எனக்கு மட்டும்தான் நடக்கிறது’ என்று கற்பனை செய்து கொள்கிறார்கள். அது உண்மை தானா?

    சோதனை என்பது இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதே சமயத்தில் அந்த சோதனையை மாற்றி சாதனை புரிபவர்கள் சொற்பமானவர்களே.

    சிலருக்கு சோதனை ஏற்பட்டுவிட்டால் அப்படியே இடிந்து போய்விடுகிறார்கள். அனைத்தும் கை மீறி போய்விட்டது என்று நினைத்துக்கொள்கிறார்கள். அவற்றையே நினைத்து உழன்று கொண்டிருக்கிறார்கள்.

    நாம் செய்யவிருக்கும் சாதனைகள், சோதனை என்ற கற்பனையால் முடங்கி போய்விடக்கூடாது, முட்டுக்கட்டையாக மாறிவிடக்கூடாது.

    கரப்பான் பூச்சியைப் பாருங்கள், அந்தப் பூச்சி தலைகீழாக புரண்டுவிட்டால் என்ன செய்யும்? முதலில் கால்களை அடித்து திரும்ப முயற்சிக்கும். முடியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வாறே கால்களை அடிக்கும். அப்போதும் திரும்பவில்லையென்றால் அவ்வளவு தான் என்று விட்டுவிடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து எப்படியாவது எழுந்துவிடும்.

    மனிதனும் அவ்வாறுதான் முயல வேண்டும். முடியவில்லை என்பதற்காக மூலையில் அமர்ந்து விடக்கூடாது.

    சோதனையை சாதனையாக மாற்று

    சோதனைகளைப் பொருட்படுத்தாமல் சாதனை படைத்தவர் தான் மிகப்பெரிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். இவருக்கு இளமைப்பருவத்திலேயே உடலில் உள்ள கையும், காலும் செயல் இழந்துவிட்டது. இவரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிய போது, மருத்துவரிடத்தில் இவர் கேட்ட ஒரே கேள்வி என்ன தெரியுமா?

    “இதனால் என் மூளைக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா?”

    அதற்கு மருத்துவர்கள், “இதனால் உங்கள் மூளைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை” என்று கூறியவுடன், தனக்கு ஏற்பட்ட நோயையும் பொருட்படுத்தாமல் மகிழ்ந்தார்.

    பின்னர் அவருடைய உடலில் உள்ள மொத்த உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்தது. ஆனாலும், இதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த கட்ட செயலுக்கு நகர்ந்து, இந்த உலகமே போற்றும் விஞ்ஞானியாக மாறி வரலாறு படைத்துள்ளார். அவர் சோதனைகளை வெறும் சோதனையாக மட்டும்தான் பார்த்தாரே தவிர, அதனால் மன தளரவும் இல்லை, அவற்றை தனது முன்னேற்றத்திற்கு தடையாக, பாரமாக பார்க்கவும் இல்லை.

    சோதனை என்றால் என்ன? என்பதனை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    சோதனை என்பது நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்வதற்கான வாய்ப்பு.

    ஆம், சோதனையின் போதுதான் ஒரு மனிதன் அதனை சமாளிப்பதற்கு சக்தி பெறுகின்றானா? அல்லது துவண்டு விடுகின்றானா? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    அவ்வாறுதான் நம் வாழ்வில் ஏற்படும் சோதனைகளும். அதில் ஏற்படும் இடையூறுகளையும், பிரச்சினைகளையும் தகர்த்துக்கொண்டு முன்னேறும் வாய்ப்பாக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

    பெரும்பெரும் வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆனால், அதில் எந்தவொரு கஷ்டமும் இருக்கக்கூடாது என்றால், அது உழைப்பின்றி ஊதியம் பெற முயற்சிப்பதைப் போன்றாகும்.

    திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: “மனிதனுக்கு தான் முயற்சி செய்ததை தவிர வேறெதுவும் இல்லை” (53:39)

    அவ்வாறென்றால், ஒவ்வொரு மனிதனும் உறுதிபட மனதில் நிலைநிறுத்த வேண்டிய விஷயம் என்ன?

    ‘நமது செயலுக்கான பலன் இன்னொரு மனிதனுக்கு கிடைக்காது. நான் எதனைச் சிரமம் எடுத்துச் செய்கின்றேனோ அதன் பலனும் எனக்குத்தான், சிரமம் எடுக்காமல் செய்கின்றேனோ அதற்கான விளைவும் எனக்குத்தான்’.

    நிலைகுலையாமையுடன் இரு

    உலக விவகாரங்களில் ஈடுபடும்போது மட்டும்தான் சோதனைகள் வரும் என்பதில்லை. மாறாக இறை உவப்பையும், மறுமை வெற்றியையும் பெற்றுத்தரக்கூடிய இறைப்பணியை செய்யும் போதும் சோதனைகள் மலைபோல் குவியும்.

    ஏனென்றால், ‘நிலைகுலையாமையுடன் இறைப்பணியைத் தொடர்ந்து செய்கிறோமா; அல்லது நிராசையடைந்து அதனை விட்டு விடுகிறோமா?’ என்பதை இறைவன் சோதிப்பான்.

    இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடங்கி நபித்தோழர்கள், இமாம்கள், பெரும் பெரும் ஆளுமைகள் அனைவரும் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேவேளை அவற்றைக்கண்டு அவர்கள் அஞ்சவுமில்லை, தங்களது இறைப்பணியிலிருந்து சிறிதளவேனும் தடம் புரளவுமில்லை.

    ஓர் இறைநம்பிக்கையாளனுக்கும். இறைநம்பிக்கை அற்றவனுக்குமான வேறுபாடு இங்குதான் வெளிப்படும்.

    ‘எனது இறைவன் என்னைச் சோதிக்கின்றான். எனது பொறுமையை பரிசோதிக்கின்றான்’ என்று எண்ணி ஓர் இறைநம்பிக்கையாளன் அனைத்தையும் சகித்துக்கொள்வான்.

    அதேசமயம் நம்பிக்கையில்லாதவன் அரற்றுவான், அலறுவான். பின்னர் நமக்கெதுக்கு வம்பு என்று செய்துகொண்டிருந்த நல்ல செயல்களை விட்டுவிடுவான்.

    நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைப்பணியைச் செய்து வந்த நேரத்தில் மக்காவாசிகள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்ல தாக்குதலையும் மேற்கொண்டனர்.

    அவை அனைத்தையும் பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுத்துக்கொண்டார்கள். பின்னர் தாயிப் நகரில் இறைச்செய்தியை எடுத்துச்சொல்லும் போதும்கூட. கல்லாலும், கடும் சொல்லாலும் பெருமானாருக்கு பெரும் சோதனைகளைக் கொடுத்தனர்.

    எந்தளவிற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றால்... உடலில் இருந்து வழிந்தோடிய ரத்தம் உறைந்து காலோடு காலாக ஒட்டிக்கொண்டது. நபியவர்களின் செருப்பை காலை விட்டும் கழற்ற முடியவில்லை.

    அப்போதும் கூட நபி (ஸல்) அவர்கள், ‘போதும்... இவ்வளவு துயரங்களைத் தாண்டி இந்த அழைப்புப்பணி செய்ய வேண்டுமா?’ என்று நினைக்கவில்லை. மாறாக, தாயிபிலிருந்து திரும்பி வரும் சமயத்தில் கூட ஒரு மனிதரை சத்திய மார்க்கத்தை ஏற்கச்செய்தார்கள் என்று சொன்னால் எந்த அளவிற்கு இறைப்பணியில் நிலைகுலையாமல் இருந்திருப்பார்கள்.

    முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்வு முழுக்க முழுக்க சோதனைகளாகவே நிறைந்திருந்தது. பெருமானார் (ஸல்) தமக்கு வந்த சோதனைகள் அனைத்திலும் நிலை குலையாமல் நின்றார்கள், வெற்றி பெற்றார்கள். இன்று உலகம் முழுக்க இஸ்லாமிய செய்திகள் பேசப்படுகிறது.

    அதேபோலத்தான் நபித்தோழர்கள் வாழ்விலும் சோதனைகள் வந்திருக்கின்றன. பெருமானார் (ஸல்) மரணமடைந்த பிறகு மக்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். ஜகாத் கொடுக்க மாட்டோம் என்றார்கள்.

    அப்போது கலிபாவாக பொறுப்பில் இருந்தவர் அபூபக்கர் (ரலி) அவர்கள் தான்.

    அபூபக்கர் (ரலி) அவர்களிடம் அரபுகள் சொன்னார்கள்: “அபூபக்கரே, வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். மரணம் வரை நீங்கள் உங்களுடைய வீட்டிலேயே இறைவனை வணங்குங்கள்”.

    இவ்வளவும் நடந்த பின்னரும், அபூபக்கர் (ரலி) அவர்கள் மனம் தளரவில்லை. அந்த சோதனைகளை எல்லாம் தகர்த்தெறிந்து சிறந்த இஸ்லாமிய ஆட்சியை தந்தார்கள். காரணம், பொறுப்பின் மீது கொண்ட கடமை உணர்வு.

    எனவே, நாமும் சோதனைகளின்போது துவண்டு போகாமல், நிலை குலையாமல் நின்று வெற்றிகளை தட்டிச் செல்லக் கூடியவர்களாக மாறுவதற்கு வல்ல இறைவன் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

    எஸ். முகமது அலி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
    திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைவேதங்களை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    இறைநம்பிக்கையில் அடுத்த கட்டம் இறைவேதங்களை நம்புவது. இறைவனால் இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட இறைவேதங்களையும், சுஹுபுகள் எனும் சிறிய ஏடுகளையும் உண்மை என உளமாற நம்ப வேண்டும்.

    பிரதான இறைவேதங்கள் என்று வரும்போது முக்கியமான நான்கு வேதங்களை குறிப்பிடலாம். அவை வருமாறு:-

    தவ்ராத்:இது அப்ரானி எனும் ஹிப்ரு மொழியில் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் அருளினான். மேலும் அவருக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அளித்தான்.

    சபூர்:இது யூனானி எனும் கிரேக்க மொழியில் தாவூத் (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கினான்.

    இன்ஜீல்:இது ஈஸா (அலை) அவர்களுக்கு சுர்யானி மொழியில் இறைவன் இறக்கிவைத்தான்.

    திருக்குர்ஆன்:இது அரபி மொழியில் முகம்மது (ஸல்) அவர் களுக்கு இறைவன் அருளினான். இந்த வேதம் படிப்படியாக 23 ஆண்டுகள் அருளப்பட்டது.

    இதைத்தவிர முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும், ஷீது (அலை) அவர்களுக்கு ஐம்பது ஏடு களையும், இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு முப்பது ஏடுகளையும், இப்ராகிம் (அலை) அவர்களுக்கு பத்து ஏடுகளையும் இறைவன் அருளினான்.

    மேற்கூறப்பட்ட நான்கு இறைவேதங்களும், 110 ஏடுகளும் இறைவனின் திருவசனங்கள் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன்’ என்று கூறுவீராக’. (42:15)

    ‘தவ்ராத்தையும் நாம் அருளினோம், அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது’. (5:44)

    ‘நபிமார்களில் சிலரைவிட சிலரைச் சிறப்பித்திருக்கிறோம். தாவூத் (அலை) அவர்களுக்கு ஸபூர் (வேதத்தை) கொடுத்தோம்’. (17:55)

    ‘தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீல் வேதத்தையும் வழங்கினோம். அதில் நேர்வழியும், ஒளியும் இருந்தது. தனக்கு முன்சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர்வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது’. (5:46)

    ‘இன்ஜீலுக்குரியோர் அதில் இறைவன் அருளியதின் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும்’. (5:47)

    ‘உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை (திருக்குர்ஆனை) தன் அடியார் (முகம்மது (ஸல்) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்’. (25:1)

    ‘(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தை, (திருக்குர்ஆனை படிப்படியாக) அவன் தான் உம்மீது இறக்கி வைத்தான். இது இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும். தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்’.

    ‘இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக நன்மை-தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் புர்கான் (எனும் குர்ஆனையும்) இறக்கிவைத்தான். ஆகவே, எவர் இறைவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன்’. (3:3,4)

    இறைவேதங்களான நான்கு வேதங்களும் வெவ்வேறு வகையான காலகட்டங்களில் வெவ்வேறு நபிமார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து இறக்கப்பட்டது. முந்தைய வேதத்தை, பின் இறக்கியருளப்பட்ட வேதம் உண்மைப்படுத்துகிறது; அதை பாதுகாக்கவும் செய்கிறது.

    நான்கு வேதங்களும் மக்களை நல்வழிப்படுத்தவே இறங்கியது. அவை மக்களுக்கு பலவிதமான வகையில் ஒளிவீசும் நேர்வழி காட்டுபவைகளாகவே அமைந்தன.

    இறுதியாக வந்த இறைவேதமாகிய திருக்குர்ஆனும், இறுதித்தூதராக அனுப்பப்பட்ட முகம்மது (ஸல்) அவர்களும் முந்தைய வேதங்களையும், முந்தைய நபிமார்களையும் ஏற்று, மெய்ப்படுத்தினார்கள்.

    ‘உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன் சென்ற வேதத்தை உண்மைப்படுத்துவதற்காகவும், அதை பாதுகாப்பதாகவும் இருக்கிறது. எனவே இறைவன் அருளியதின் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக’. (5:48)

    ‘(முஹம்மதே) நேர்வழி நோக்கி அழைப்பீராக, உமக்குக் கட்டளையிட்டவாறு நிலைத்திருப்பீராக, அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். இறைவன் அருளிய வேதத்தை நம்பினேன். உங்களுக்கிடையே நீதியாக நடக்க கட்டளையிடப்பட்டுள்ளேன். அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு’. (42:15)

    ‘எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்தவும், உங்களுக்கு தடைசெய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து சான்றுடனும் வந்துள்ளேன். எனவே, இறைவனை அஞ்சுங்கள், எனக்குக் கட்டுப்படுங்கள் என்றும் கூறினார்’. (3:50)

    ‘இது (திருக்குர்ஆன்) மனிதர்களுக்கு விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்’. (3:138)

    மேலும், வேதம் அருளப்பட்ட நபிமார்களும் தங்களுக்கு இறங்கிய வேதத்தை நம்பவேண்டும். இறைநம்பிக்கையாளர்களும் அனைத்து வேதங்களையும், ஏடுகளையும் நம்பவேண்டும். இந்த நம்பிக்கை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

    ‘நம்பிக்கை கொண்டாரே, இறைவனையும், அவனது தூதரையும், தமது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும், இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்’. (4:136)

    ‘இத்தூதர் (முகம்மது) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். இறை நம்பிக்கை கொண்டோரும் இதை நம்பினார்கள். ஒவ்வொருவரும் இறைவனையும், அவனது வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நம்பினார்கள்’. (2:285)

    நான்கு இறைவேதங்களும் நான்கு சமுதாயத்தினருக்கு மட்டுமே உரிமையானது அல்ல. அகில உலக மக்களுக்கும் உரித்தானது. உலக மக்கள் அனைவருக்கும் நேரான பாதையை காட்டி, அவர்களை நேர்வழிப்படுத்தக்கூடியது.

    இறுதியாக இறங்கிய திருக்குர்ஆன் அனைத்து வேதங்களையும் தன்னிடம் உள்வாங்கி, அனைத்து பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து, அழகான தீர்வுகளை அளித்து பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தலைசிறந்தது.

    இன்று வரை அன்று இறங்கியது போன்றே திருக்குர் ஆன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதை மாற்ற முடியாது. மாற்றத்திற்கு உட்படாதது. இதில் சந்தேகம் என்பதே கிடையாது.

    இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆராயலாம், பின்பற்றலாம். இது உங்கள் உரிமை. இது உங்கள் வேதம். 

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    ×