என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    மனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது.
    மனிதன் உயிர்வாழ காற்று தேவைப்படுவது போன்று, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் செல்ல வாகனம் தேவைப்படுவதுபோன்று, சமூகப்பிரச்சினைகளைக் களைவதற்கு ஒரு கருவி தேவைப்படுகிறது.

    அந்தக்கருவிதான் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆன். உடலுக்கு உணவு எனும் ஊட்டச்சத்து தேவைப்படுவது போன்று, மனித உணர்வுக்கும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. மனிதனின் ஆன்மிக உணர்வை உயிரோட்டத்துடன் வைத்திருக்க வேண்டுமென்றால் வான்மறைக் குர்ஆனின் தொடர்பு அவசியம் தேவை.

    அன்றைய அரபுகுலத்தில் வாழ்ந்து வந்த கரடுமுரடான மனிதர்களை திருக்குர்ஆன் எனும் இந்தக்கருவிதான் பண்பாடுமிக்கவர்களாக, மென்மையானவர்களாக மாற்றியது. நூலைப்போன்று பிரிந்து கிடந்த மக்களை ஆடையைப்போன்று ஒன்று சேர்த்தது. நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் கிடந்த மக்களின் வாழ்க்கையை இந்தக் திருக்குர்ஆன் தான் புரட்டிப்போட்டது.

    23 வருட காலகட்டத்தில் திருக்குர்ஆன் செய்த புரட்சியைப்போன்று மானுட சரித்திரத்தில் வேறு எந்த நூலும் செய்ததில்லை.

    நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாத அரபிகள் உலகிற்கே நாகரிகம் கற்றுத்தந்தது எவ்வாறு?, ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருந்த கிராமப்புற அரபி கள் உலகிற்கே தலைமை தாங்கும் தகுதிபடைத்தவர்களாக மாறியது எவ்வாறு?

    அனைத்திற்கும் காரணம் திருக்குர்ஆன்.

    தொழுகையில் முதல் வரிசையில் நின்ற நபித்தோழர்கள், இஸ்லாத்தை பரப்புவதிலும் முதல் வரிசையில் நின்றனர். நடமாடும் திருக்குர்ஆன் பிரதிகளாக திகழ்ந்தனர்.

    நம்மிடம் இருப்பதும் அதே திருக்குர்ஆன் தான். ஓர் எழுத்து என்ன... ஒரு புள்ளி கூட மாறாமல் இன்றும் நம்மிடம் அதே திருக்குர்ஆன் அப்படியே இருக்கின்றது. நாமும் மாறாமல் அப்படியே இருக்கின்றோம்.

    திருமண வாழ்வு பரக்கத் (அருள்வளம்) மிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒருசில பகுதிகளில் மணமக்களின் கைகளில் திருக்குர்ஆனைக் கொடுப்பார்கள்.

    ஆயினும் அந்த திருக்குர்ஆனில் சொல்லப்பட்டவற்றை செயல்படுத்தினால் அல்லவா ‘பரக்கத்’ கிடைக்கும். வெறுமனே வாங்கி உயரமான ஓரிடத்தில் வைப்பதால் எவ்வாறு அருள் கிடைக்கும்?

    இதில் கொடுமை என்னவென்றால் திரு மணத்தின்போது கொடுக்கப்பட்ட அந்த திருக்குர்ஆன் தூசி படிந்து ஓரிடத்தில் இருக்கும். பின்னர் மரணத்தின்போதுதான் யாரே எடுத்து அதை ஓதுவார்கள்.

    மனிதன் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கும் திருக்குர்ஆன் அழகிய தீர்வுகளை முன்வைக்கிறது. ஆனால் நாமோ, பிரச்சினை ஏற்பட்டால் திருக்குர்ஆன் என்ற நீதியின் பக்கம் செல்லாமல் நீதிமன்றங்களின் பக்கம் சென்று கொண்டிருக்கிறோம்.

    பொருளாதாரக் கொடுக்கல்-வாங்கலில் வங்கிகள் சொல்வதைப் பின்பற்றுகிறோம். போராட்டம் என்றால் அரசியல் கட்சிகளைப் போன்று செயல்படுகிறோம். குடும்ப விவகாரம் என்றால் அப்பா-அம்மா சொல்வதை மட்டுமே செவியேற்கிறோம். ‘ஹராம்’, ‘ஹலால்’ என்றால் ‘மனோ இச்சை’ என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கிறோம்.

    இவ்வாறு எல்லா விவகாரங்களிலும் அருள்மறை திருக்குர்ஆனின் உபதேசங்களை மறந்து மனித வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம். விளைவு பிரச்சினைகளும் தீர்ந்த பாடில்லை. நிம்மதியான வாழ்வும் கிடைத்தபாடில்லை.

    ஆக, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அருள்மறைக் திருக்குர்ஆன் வழிகாட்டியாக இருக்க, முஸ்லிம்களோ மனோஇச்சையின் அடிப்படையில் வேறு எதையோ பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் மனித வாழ்வு சிரமத்திற்கு மேல் சிரமமாக இருக்கிறது.

    இதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: “எவன் என்னுடைய ‘திக்ரை’ (நல்லுரையைப்) புறக்கணிக்கின்றானோ, அவனுக்கு (இவ்வுலகில்) கடினமான வாழ்க்கை இருக்கிறது”. (திருக்குர்ஆன் 20:124)

    நமது நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் கேட்பதில்லை, நமது வியாபாரம் எவ்வாறு அமைய வேண்டும் என்று திருக்குர்ஆனிடம் விசாரிப்பதில்லை, என் நட்பு யாருடன் இருக்க வேண்டும்?, நான் விட்டுவிட வேண்டிய கெட்ட குணங்கள் என்னென்ன?, நான் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்கள் என்னென்ன?, எதில் எனது வெற்றி இருக்கின்றது?, எதில் எனது தோல்வி இருக்கின்றது? என்று திருக்குர்ஆனைக் கேட்க மறந்தோம்.

    ‘இறையச்சத்தைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது இறையச்சம் நிறைந்தவனாக மாறப்போகின்றேன்’ என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    இந்த திருக்குர்ஆன் ‘தவக்குல்’ எனும் அல்லாஹ்வை சார்ந்திருப்பது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது ‘தவக்குல்’ கொண்டவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    இந்த திருக்குர்ஆன் உண்மையைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது உண்மையை மட்டும் பேசுபவனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    பொறுமை குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பொறுமையாளனாக மாறப்போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    பாவமன்னிப்பு குறித்து இந்தக் திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது பாவமன்னிப்புக் கேட்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    இந்த திருக்குர்ஆன் நாவைப் பேணுவது குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது என் நாவை பேணப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    மரணம், மண்ணறை மற்றும் சுவனம் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றது, இவற்றுக்காக என்னை நான் தயார் செய்துள்ளேனா என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    அல்லாஹ் விரும்பும் செயல்களைக் குறித்து இந்த திருக்குர்ஆன் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் விரும்புவதை விரும்பப் போகின்றேன், இந்த திருக்குர்ஆன் அல்லாஹ் வெறுப்பவற்றைக் குறித்துப் பேசுகின்றதே; நான் எப்போது அல்லாஹ் வெறுத்தவற்றை வெறுக்கப் போகின்றேன் என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    என்னைக் குறித்து பிறருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று இந்த திருக்குர்ஆன் கூறுகின்றதே; நான் எப்போதாவது எடுத்துச் சொல்லியிருக்கின்றேனா, என்று திருக்குர்ஆன் ஓதும்போது என்றைக்காவது யோசித்ததுண்டா?

    இந்த ரீதியில் நம்மை நாமே கேள்விகள் கேட்டு திருக்குர்ஆனுடன் நெருக்கம் ஏற் படுத்தும்போது மட்டுமே திருக்குர்ஆனால் நாம் பயன் பெற முடியும்.

    ஆஸம் கனி, அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி, திருச்சி.
    நோயிலிருந்து தமது உடலை பாதுகாத்திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சுத்தம் பேணுவீர், சுகாதாரம் பெறுவீர்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    மனிதன் உடல் மற்றும் உளரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனின் வாழ்வு சிறப்பாக அமையும். நலமான வாழ்விற்கு வழிகாட்டுவதே சுத்தமும், சுகாதாரமும் தான்.

    சுத்தம் செய்வதை, சுத்தமாக இருப்பதை, சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்திருப்பதை இஸ்லாம் இறை நம்பிக்கையின் உடல் சார்ந்த ஒரு பகுதியாகவே பார்க்கிறது. இறைநம்பிக்கைக்கு அடுத்து இஸ்லாத்தில் இடம் பிடித்ததும், தடம் பிடித்ததும் சுத்தம்தான். இதையே இந்த நபிமொழியும் வலியுறுத்துகிறது:

    ‘சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி), நூல்: முஸ்லிம்).

    உடல் சுத்தம்

    சுத்தம் சம்பந்தமான 3 நடவடிக்கைகளை இஸ்லாம் போதிக்கிறது. முதலாவதாக உடல் சுத்தம் குறித்து இஸ்லாம் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கடமையான குளிப்பின் மூலம் உடல் முழுவதையும் சுத்தமாக வைத்திருப்பது அல்லது தினம் தினம் வழமையான குளிப்பின் மூலம் உடல் முழுவதையும் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பது.

    கணவன்-மனைவி இருவரும் உடல் உறவு கொண்டாலோ, அல்லது பருவ வயதை அடைந்த ஆண்-பெண் இருபாலினத்தவருக்கும் ஸ்கலிதம் ஏற்பட்டாலோ இருவரும் குளித்து, சுத்தமாக இருப்பது கடமையாகும்.

    வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையாக உள்ளது.

    ‘வெள்ளிக்கிழமை உங்களுக்குக் குளிப்புக்கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: தாவூஸ் (ரஹ்), நூல்: புகாரி)

    குளிப்பது என்பது உடல் ரீதியான பெரும் சுத்தமாகும். இதைத் தவிர சிறிய வகையான சுத்தமும் இருக்கிறது. அதற்கு ‘அங்கசுத்தம்’ என்று பெயர். இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் கடமையான ஐவேளை தொழுகைகளை நிறைவேற்றும் முன்பு அங்கசுத்தம் செய்து கொள்வது அவர்களின் மீது கடமையாகும். இது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் விளக்குவதை காண்போம்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது, உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக்கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள். குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 5:6)

    இந்தப் பகுதிகளை ஏன் கழுவ வேண்டும்? இதற்கு இஸ்லாமிய ஆன்மிக ரீதியான காரணங்களும் இருக்கிறது, அறிவியல் ரீதியான காரணங்களும் இருக்கிறது. ஆன்மிக காரணங்களை காண்போம். அங்கசுத்தம் செய்வதால் அவர் உறுப்புகள் செய்த சிறு பாவங்கள் கழுவப்பட்டு, பாவ அழுக்கிலிருந்து அவர் பரிசுத்தப்படுத்தப்படுகிறார். இதுகுறித்து பேசும் நபி மொழிகளை படிப்போம்:

    ‘ஒருவர் முறையாக அங்கத்தூய்மை செய்யும் போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில் அவரது நகக் கண்களுக்குக் கீழேயிருந்தும் பாவங்கள் வெளியேறி விடுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: உஸ்மான் (ரலி), நூல்: முஸ்லிம்)

    அங்க சுத்தம் செய்யும் போது நீரை வைத்து வாயை சுத்தம் செய்வதும், மூக்கை சுத்தம் செய்வதும் நபி வழியாக அமைந்துள்ளது.

    ‘அங்கசுத்தம் செய்பவர் மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி வெளியாக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து விட்டு மூக்கிற்கு நீர் செலுத்தி மூக்கு சிந்தினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), நூல்: முஸ்லிம்)

    வாய், மூக்கு இரண்டையும் சுத்தம் செய்யும் போது அவ்விரண்டும் செய்த பாவங்கள் நீரால் கழுவப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அறிவியல் ரீதியான காரணங்கள் யாதெனில் ‘செத்து போன செல்கள் உடம்பில் இருக்கின்றன. அவை உடல் தோலின் மேல்பகுதிக்கு வந்துவிடுகின்றன. அவை கழுவப்படாமல் விடப்பட்டால் அது காற்றின் மூலமாக உடலுக்குச் சென்று நோய் தாக்குதலை ஏற்படுத்திவிடும். அந்த வியாதி எத்தகைய தன்மை உடையது எனில் நினைத்ததையே நினைப்பது, பேசியதையே பேசுவது, விரக்தியாக இருப்பது போன்று ஏற்படும். இதனால் ஒருவகையான மனச்சிதைவுக்கு ஆளாக நேரிடும்.

    அங்கத் தூய்மை செய்யும் போது வாய் கொப்பளிப்பதாலும், மூக்கிற்கு நீர் செலுத்துவதாலும், காதுகளை நீரால் தடவுவதாலும் அவற்றிலுள்ள பாக்டீரியாக்கள் வெளியேறிவிடுகின்றன. இந்த ஆய்வை ஒரு மனோதத்துவ நிபுணர் 1997-ல் கண்டுபிடித்துக் கூறினார்.

    நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது பிறகு இவற்றிலிருந்து எவ்வாறு தூய்மை பெறுவது போன்ற சின்ன சின்ன விஷயங்களையும் தமது தோழர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

    ‘சல்மான் பார்ஸீ அவர்களிடம் ‘மலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார் போலும்’ என்று பரிகாசத்துடன் இணைவைப்பாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் ‘ஆம், உண்மைதான்; மலம் கழிக்கும் போது மேற்கு திசையை முன்னோக்க வேண்டாமென்றும், கழித்தபின் வலக்கரத்தால் துப்பரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச் சாணத்தாலோ, எலும்பாலோ துப்பரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை எங்கள் நபி தடுத்தார்கள்’ என்று கூறினார்’. (நூல்: முஸ்லிம்)

    உடை சுத்தம்

    இஸ்லாம் உடல் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று உடையை சுத்தமாக வைத்திருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. உடை அசுத்தமானதாக இருந்தால், அதில் நுண்கிருமிகள் உருவாகி, அதை உடுத்தியவரின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    ‘உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக, அசுத்தத்தை வெறுப்பீராக’ என்று திருக்குர்ஆன் (74:4,5) வலியுறுத்துகிறது.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    ‘நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரின் தலைமுடி சீர் செய்யப்படாமல் பரட்டையாக இருந்தது. ‘இவர் முடியை சரி செய்வதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?’ என்று கேட்டார்கள். இன்னொரு மனிதரை அவரின் அழுக்கான ஆடையைக் கண்டு ‘அவர் தமது ஆடையை கழுவதற்கு தேவையான பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?’ என்று கேட்டார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அபூதாவூத்)

    இடம் சுத்தம்

    அதாவது நோயிலிருந்து தமது உடலை பாதுகாத்திட நினைப்பவர் தாம் வசிக்கும் இடத்தையும், தமது சுற்றுச்சூழலையும் தாம் பயன்படுத்தும் தளவாட சாமான்களையும் சுத்தமான முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    ஒருவர் எச்சிலை துப்புவதாக இருந்தாலும் கண்டபடி கண்ட இடத்தில் துப்பக் கூடாது. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, பலவிதமான நோய் தொற்றுகள் காற்றினால் பரவி, மனிதர்களை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். இதை வலியுறுத்தும் நபிமொழி இது:

    ‘உங்களில் ஒருவர் எச்சில் துப்பினால் வலது புறமோ, தமது முன்புறமோ துப்ப வேண்டாம். இடது புறம் அல்லது கால் பாதத்திற்கு கீழ் துப்பட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: அஹ்மது)

    மேலும், தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து, தண்ணீரையும் மாசுபடுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால் நீரின் வழியாகவும் நோய் தொற்று பரவக்கூடும்.

    ‘ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    இவ்வாறு வீட்டில் இருக்கும் உணவு பாத்திரம், நீர் பாத்திரம் இவற்றையும் மூடி வைக்க வேண்டும். இதுகுறித்து தூய்மை நடவடிக்கையை துரிதமாக எடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் விழிப்புணர்வு செய்கிறார்கள்.

    ‘நீங்கள் உறங்கப் போகும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். கதவு களைத் தாழிட்டு விடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது மூடி வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), புகாரி)

    எல்லாவற்றிலும் சுத்தம் பேணி, சுகாதாரமாக இருந்து, ஆரோக்கியமாக வாழ்வோம்.

    மவுலவி அ.செய்யதுஅலி மஸ்லஹி,நெல்லை
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது.
    பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. ஏழை-பணக்காரன் என்பது முதல் வாழ்க்கையின் பல்வேறு தரப்பிலும் மனிதர்களிடம் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகளை களைவதற்கு, தான-தர்மங்கள் என்ற இரண்டையும் ‘ஜகாத்’, ‘ஸதகா’ என்ற சொற்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.

    ஒருவன் தன் வாழ்வில் சம்பாதிக்கும் செல்வங்களில் தன் தேவைக்குப்போக மீதி இருக்கும் தொகையில் 2½ சதவீதம் பணத்தை தானமாக கொடுத்து விட வேண்டும். ‘ஜகாத்’ என்ற இந்த தானத்தை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

    செல்வங்கள் என்று சொல்லும் போது பணம், நகைகள், அசையா, அசையும் சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக கருதப்படும். உதாரணமாக, ஒருவரிடம் ஒரு ஆண்டில் 80 கிராம் வெள்ளி அல்லது அதற்கு இணையான பணம், இதில் எது மிஞ்சுகிறதோ அப்போது அவர் மீது ‘ஜகாத்’ கடமையாகி விடும்.

    ‘ஜகாத்’ என்ற தானத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதனை யாருக்கு கொடுக்க வேண்டும்?, எப்படி கொடுக்க வேண்டும், என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.

    ‘(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன் 9:60)

    இவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவது ‘ஸதகா’ என்ற உபரி தர்மத்தைச் சாரும். ‘ஜகாத்’ கட்டாய கடமை, ‘ஸதகா’ நினைத்தால் செய்யக்கூடிய தர்மம். இந்த இரண்டிற்கும் வரையறுக்கப்பட்ட நன்மைகளும் வெவ்வேறானது.

    தர்மத்தைப் பற்றி குறிப்பிடும் போது திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “(நபியே! பொருள்களில்) ‘எதைச்செலவு செய்வது?, (யாருக்குக் கொடுப்பது?)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்”. (திருக்குர்ஆன் 2:215)

    ‘ஜகாத்’ என்ற தானத்தை சமுதாயத்திற்காக செலவிடுங்கள், என்று சொல்லி விட்டு, ‘ஸதகா’ என்ற தர்மத்தை சொந்தங்களுக்காக செல விடுங்கள் என்கிறது திருக்குர்ஆன். அடுத்துச் சொல்லும் போது, இதையும் தாண்டி நன்மைகளை நாடி நல்ல செயல்களில் ஈடுபடும் போது அவற்றை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான் அதற்குரிய நன்மைகளைத் தனியே தருவதாகவும் சொல்கிறான்.

    அதுபோல சிரமத்தில் இருப்பவர்களுக்கு உதவும்படியும், அவ்வாறு உதவி செய்வது அல்லாஹ்வுக்கே கடன்கொடுப்பது போன்றது என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது.

    ‘சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம் அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன் மடங்கு அதிகரிக்கும்படி செய்வான்’. (திருக்குர்ஆன் 2:245).

    தர்மமாக எதைக்கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது, “உங்களிலுள்ள நல்லவற்றையே தர்மமாக செலவு செய்யுங்கள். அவற்றில் கெட்டவற்றை கொடுக்க விரும்பாதீர்கள். ஆகவே நீங்கள் விரும்பாத பொருள்களை பிறருக்கு தர்மமாக கொடுக்காதீர்கள்” (திருக்குர்ஆன் 2:267) என்று சொல்லி நல்ல பொருள் களையே தர்மம் செய்ய வேண்டும் என்று கட்டளைப் பிறப்பிக்கின்றான்.

    மேலும், தர்மம் செய்பவர்களை வறுமை நெருங்காது என்றும் அருள்மறையிலே அல்லாஹ் சொல்கின்றான்.

    “(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை சைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தர்மங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:268)

    அதுபோல தர்மம் எப்படி செய்யவேண்டும் என்றும் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 2:271)

    இப்படி எல்லா வகையிலும் சிறப்புற்ற இந்த தர்மங்களை மக்கள் செய்யும் போது அவர் களுக்கு கைமாறாக அல்லாஹ் எதனை வழங்குகின்றான் என்று திருக்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது:

    “அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணி களைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்”. (திருக்குர்ஆன் 2:261)

    அல்லாஹ் வழங்கும் இந்த வாக்குறுதி உண்மையானது. எனவே ஜகாத் என்ற தானத்தை நிறைவேற்றும் நாம், ஸதகா என்ற தர்மங்களை நிறைவேற்றவும் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் நம் உற்றார், உறவினர், சுற்றத்தார், ஏழைகளின் மனங்களை குளிர்விப்பதுடன், மறுமையில் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அது உறுதுணையாக நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் நம் பாவங்களுக்கும் பரிகாரமாக அமைகின்றது.

    மு.முகமது யூசுப், உடன்குடி.
    நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அண்டை அயலாரிடம் அன்புடன் நடப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    அண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகுவது, அழகிய முறையில் உறவாடுவது இறைநம்பிக்கையை பசுமையாக்கும் சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வது உடல் சார்ந்த இறை நம்பிக்கையாக இருப்பதால் உடல்ரீதியான நலன்களை அண்டைவீட்டாருக்கு முடிந்தளவு சேர்த்திட வேண்டும். உடல் ரீதியான கெடுதி களை கொடுப்பதைவிட்டும் தவிர்ந்திட வேண்டும். இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளராக கருதப்படுவார்.

    நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர் களுடைய கையைப்பிடித்து அற்புதமான ஐந்து விஷயங்களை கற்றுத்தருகிறார்கள். அவற்றில் ஒன்று அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அடங்கும்.

    ‘உமது அண்டை வீட்டாரிடம் நீர் அழகிய முறையில் நடந்து கொள்வீராக. அப்போது நீர் ஒரு இறைநம்பிக்கையாளராக ஆகிவிடுவீர், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    இறைவனும், திருக்குர்ஆன் மூலம் ‘அண்டை வீட்டாரிடம் அழகியமுறையில் உறவாடும்படி’ உத்தரவு பிறப்பிக்கிறான்.

    ‘நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்’. (திருக்குர்ஆன் 4:36)

    3 வகையினர்

    அண்டை வீட்டார் மூன்று வகையினர் ஆவார்கள். அவர்களிடம் அன்பாக, பண்பாக, பாசமாக, உதவியாக நடந்திட வேண்டும் என இஸ்லாம் முஸ்லிம்களை வற்புறுத்துகிறது. இஸ்லாமிய எதிர்பார்ப்பை முஸ்லிம்கள் பூர்த்தி செய்வது அவர்கள் மீது தார்மீகக் கடமை. அண்டை வீட்டார் எந்த இனத்தவராயினும் அவர் தமது அண்டைவீட்டு முஸ்லிம் சகோதரரிடமிருந்து மூன்று வகையான உரிமைகளை பெறமுடியும்.

    1) அண்டை வீட்டார் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையை மட்டும் பெற முடியும். ஒரு முஸ்லிமும் அவரின் உரிமைகளை முழு மனதுடன் நிறைவேற்றிட வேண்டும்.

    2) அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையையும், முஸ்லிமாக இருந்து பெற வேண்டிய உரிமையையும் சேர்த்து இரண்டு வகையான உரிமைகளை பெற முடியும்.

    3) அண்டை வீட்டார் உறவுக்கார முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமை, முஸ்லிமின் உரிமை, உறவுக்கார உரிமை ஆகிய மூன்று வகையான உரிமைகளையும் பெறமுடியும். ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் தமது அண்டை வீட்டாருக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும், தமது உறவுக்காரருக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் உள்ளது.

    அவர் தமது அண்டை வீட்டாரை, சண்டை வீட்டாராக பாவிக்கக் கூடாது, வேறு நாட்டவரைப் போன்று நடத்தக் கூடாது. அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உபகாரங்களை செய்து, தோள் கொடுத்து தோழர்களாக வாழ்ந்திட வேண்டும்.

    ‘எவர் இறைவனின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனின் தூதரே, அண்டை வீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் யாவை?’ என நபித்தோழர்கள் வினவினர்.

    அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் அவர் ஏதேனும் கேட்டால், அவருக்கு அதைக் கொடுங்கள்; அவர் உதவி தேடினால், அவருக்கு உதவிடுங்கள்; அவர் தம் தேவைக்கு கடன் கேட்டால், அவருக்குக் கடன் கொடுங்கள்; அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் நோயுற்றால், அவரை நலம் விசாரியுங்கள்; அவர் இறந்துவிட்டால், அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளுங்கள்; அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவருக்கு ஆறுதல் கூறுங்கள்; தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம். (ஏனெனில் வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்; அவரின் அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி, அவரின் வீட்டிற்கு காற்று வராதபடிக் கட்டாதீர்கள்’ எனக்கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    அண்டை வீட்டாரை நம் வீட்டாரைப் போன்று மதிக்க வேண்டும். நமக்கு எதுவெல்லாம் தேவைப் படுமோ அது அவருக்கும் தேவைப்படும் என நினைக்க வேண்டும். தான் விரும்புவதை அவருக்கும் விரும்ப வேண்டும். இவ்வாறு நடப்பது தான் இறை நம்பிக்கை. இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளர் ஆவார். இதுதான் இறை நம்பிக்கையின் குறியீடு என நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்.

    யாருக்கு முதல் மரியாதை

    அண்டை வீடுகள் என்று வரும் போது அடுத்த வீடு, எதிர் வீடு, பின் வீடு யாவும் அடங்கும். ‘இந்த உரிமை எது வரைக்கும்?’ என இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் ‘முன் பக்கமாக 40 வீடுகளும், பின்பக்கமாக 40 வீடுகளும், வலதுபுறம் 40 வீடுகளும், இடதுபுறம் 40 வீடுகளும் அண்டை வீடு களின் உரிமையில் வரும்’ என்று பதில் கூறினார்கள்.

    இவர்களில் முன்னுரிமை பெற்றவர் யார்? எனும் கேள்விக்கு இதோ விடை:

    “ஆயிஷா (ரலி) அறிவித்தார்: ‘இறைத் தூதர் அவர்களே, எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று நான் கேட்டேன்’. அதற்கு நபிகளார் ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு’ என்றார்கள்”. (புகாரி)

    ஒரு முஸ்லிம் பெண் தமது வீட்டில் சமைக்கப்படும் உணவை தமது அண்டை வீட்டாருக்கு ருசிக்கவும், புசிக்கவும் அன்பளிப்பு செய்ய வேண்டும். இதில் ஜாதி, மதம், நிறம், மொழி போன்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இவள் தரும் உணவை அண்டை வீட்டுப் பெண்மணியும் மனமகிழ்ந்து ஏற்க வேண்டும். அது சாதாரணமாக இருந்தாலும் அற்பமாகக் கருதக்கூடாது.

    சொத்துக்களை விற்கும் போது கூட அண்டை வீட்டாருக்கு அது தேவையா? இல்லையா? என்று கலந்தாலோசிக்க வேண்டும்.

    ‘ஒருவரின் தோட்டத்திற்கு பங்குதாரரோ, அல்லது அண்டை வீட்டாரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் விற்க வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (நூல் : ஹாகிம்)

    ‘அண்டை வீட்டார் குறித்து என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் அஞ்சினேன் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    ‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    ‘இறைவனின் மீது ஆணை, அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்’ என நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள். ‘அவன் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) ‘எவனது நாச வேலைகளிலிருந்து அவனது அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஷுரைஹ் (ரலி), புகாரி)

    ‘எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)

    அண்டை வீட்டாருக்கு நோவினை தரும் விஷயங்கள்:

    1) இருவருக்கும் பொதுவான சுவரில் கட்டை, ஆணி, கம்பி போன்றவற்றை அடிப்பது. 2) அண்டை வீட்டாருக்கு காற்று, சூரிய வெளிச்சம் தடையாகும் விதத்தில் அவர்களது அனுமதியின்றி தமது வீட்டை உயரமாகக் கட்டிக் கொள்வது. 3) அவர் களது மறைவிடங்களை காணும் வகையில் தமது வீட்டில் ஜன்னல்களை அமைப்பது. 4) அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சப்தங்களை அதிகரித்து கதவுகளைத் தட்டுவது; குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களைத் தூங்கவிடாமல் சப்தமிட்டு பேசுவது, கூச்சலிடுவது, டி.வி., ரேடியோவின் ஒலிபெருக்கியை சப்தமாக ஆக்குவது.

    5) அவர்களின் பொருட்களை அவர்களின் அனுமதி பெறாமல் எடுப்பது. 6) அப்பொருட்களின் தேவை அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவற்றை இரவல் கேட்டு தொல்லை கொடுப்பது. 7) இரவல் வாங்கியதை திரும்ப ஒப்படைக்கும் போது அதில் குறைகளை ஏற்படுத்துவது (அல்லது) அதை விட தரம் குறைந்த பொருளைத் தருவது. 8) கழிவு நீர், குப்பை போன்ற அசுத்தமானவற்றை அவர்களது வீட்டின் முன்பு எறிவது. 9) அவர்களது குழந்தைகளை அடிப்பது.

    10) அவர்களது குடும்ப விவகாரங்களில் தலை யிடுவது; அது பற்றி பிற வீடுகளில் புறம் பேசுவது. 11) அவர்களது வீடுகளில் திருடுவது. 12) அவர் களது குடும்பப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது.

    இவை யாவும் தொல்லைகள் தரும் செயல்கள். இவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார். நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.

    ‘நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கெடுதல் புரிந்துவிட்டேன் என்று நான் அறிந்து கொள்வது எப்படி?’ என ஒரு மனிதர் நபிகளாரிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘நீ நல்லது செய்துவிட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ நல்லது செய்துவிட்டாய். நீ கெடுதல் செய்து விட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ கெடுதல் செய்து விட்டாய்’ என்றார்கள்’. (நூல்: அஹ்மது)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    “எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.
    இறைவனின் படைப்புகளிலேயே உன்னதமான படைப்பு தான் மனிதன். இந்த உலகமே இவனுக்காகத் தான் இரவு-பகலாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இத்தனை சீரும் சிறப்பும் மிக்க மனிதன் தனது வாழ்க்கையை கண்ணியமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

    மனித வாழ்க்கையில் கண்ணியம், மரியாதை, மதிப்பு என அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள் பல இருக்கின்றன. இவை மிகச் சரியாக பேணப்படும் காலமெல்லாம் மனித வாழ்க்கை சிறப்புற்றிருக்கும். ஒருவரையொருவர் மதிக்காத பொழுது, அங்கே நிகழ்வது இணக்கமல்ல பிணக்கமே.

    நமது கண்ணியத்தை எங்கிருந்து தொடங்குவது என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் விளக்குகின்றன.

    “(நபியே!) அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்; ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:65)

    “எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ- அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர் களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான(வேதத்)தையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்”. (திருக்குர்ஆன் 7:157)

    இறைவனையும், இறைத்தூதரையும் எவர் கண்ணியப்படுத்துகிறாரோ, அவருக்குத் தான் வெற்றி வாசல் திறந்திருக்கிறது என்றும், அந்த கண்ணியம் இறை நம்பிக்கையாளர்களுக்கு உரியது என்றும் இந்த திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகிறது:

    “நாங்கள் திருமதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும்,அந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்”. (திருக்குர்ஆன் 63:8)

    ஆக கண்ணியம் என்பது இறைவனையும், இறைத்தூதரையும் மதிப்பதில் தான் இருக்கிறது. கூடவே இருவரையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட இறை விசுவாசிகளுக்கும் இருக்கிறது. கண்ணியமாக வாழவேண்டுமென்றால் முதலில் நாம் மற்றவர்களை இன, மொழி, நிற, சமய வேறுபாடின்றி சமமாக மதிக்கக்கற்றுக் கொள்ளவேண்டும்.

    இதையடுத்து நமக்கு இறைவனால் அருளப்பட்ட திருக்குர்ஆனுக்கு நாம் முழு கண்ணியம் கொடுக்க வேண்டும்.

    “உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?” (திருக்குர்ஆன் 21:10)

    திருக்குர்ஆன் என்பது சாதாரண புத்தகமல்ல. அது இறைவனால் அருளப்பட்ட மறைநூல். அதில் கூறப்பட்டுள்ள உபதேசங்களின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதில் தான் நமக்கான முழு கண்ணியமும் இருக்கிறது.

    “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக் கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்”. (திருக்குர்ஆன் 20:124)

    இதையடுத்து நாம் வாழுமிடங்களில் உள்ள இறை இல்லங்களை கண்ணியப்படுத்த வேண்டுமென திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

    “இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்பட வேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்”. (திருக்குர்ஆன் 24:36)

    நமது வீட்டை பல வண்ணங்களாலும், விளக்குகளாலும் அலங்கரிப்பது போல, திருக்குர்ஆன் ஓதுதல், இறைவனை நினைத்து திக்ர் செய்தல், தொழுகையை கடைப்பிடித்தல் போன்ற நற்செயல்கள் மூலம் இறை இல்லங்களை அலங்கரிக்க வேண்டும்.

    கண்ணியான சொற்களால், செயல்களால், பழக்க வழக்கங்களால் நமக்கான கண்ணியத்தை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு நன்முறையில் நடந்து கொள்ளும் போது தான் நமது இல்லமும் உள்ளமும் பரிசுத்தமடையும். அதுதான் அவருக்கு கண்ணியம் தரும். இதுகுறித்து நபிகள் நாயகம் குறிப்பிடும் போது, “அல்லாஹ் உங்களின் வௌித்தோற்றங் களைப் பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங் களையேபார்க்கிறான்” என்றார்கள்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடும் போது, “எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (திருக்குர்ஆன் 26:89) என்று கூறுகிறது.

    கண்ணியமான வாழ்வே அச்சமற்ற அமைதியான வாழ்வு தரும். இன்றைக்கு தேசம் எங்கும் நிம்மதியற்ற நிலை நீடிக்கிறது என்றால் அதற்கு அடிப்படைக்காரணம் ஆங்காங்கே கொடுக்கப்பட வேண்டிய கண்ணியம் முறையாக கொடுக்கப்படாததே.

    “எவர் பெரியவர்களை கண்ணியம் செய்யவில்லையோ, அவர் நம்மைச் சார்ந்தவரல்ல” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நபிகள் நாயகம் சொல்லிச்சென்றது இன்றும் நினைத்துப் பார்க்கத்தக்கது.

    பெரியவர் என்றால் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் நம்மை விட பெரியவர்களாய் இருக்கக் கூடும். அவர்களை நாம் மதிக்கின்ற போது தான் நமது மதிப்பும், மரியாதையும் மாண்பு பெறும். நம் வாழ்வும் உயர்வு பெறும். கண்ணியம் கூடக்கூட அங்கு மனநிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி இருக்கக் காணலாம்.

    வாருங்கள்... மனித கண்ணியம் பேணிடுவோம்! புனித புண்ணியம் பெற்றிடுவோம்!!

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3
    கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழாவில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.
    கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டில் அமைந்திருக்கும் இறைநேசர் சைய்யதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்காவின் 214-வது கந்தூரி விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 2-வது நாளான நேற்று மாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்றது.

    தர்காவில் இருந்து மாலை 6 மணிக்கு நெல்லிக்குப்பம் ரபாய் ஜமா குழுவினரின் ராத்திபு உடன் ஊர்வலம் புறப்பட்டு மஞ்சக்குப்பத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு 9 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. இதன்பிறகு தர்காவுக்கு பக்தர்கள் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. தங்களின் வேண்டுதல நிறைவேறியவர்கள் நேர்ச்சை வழங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து பக்தி கச்சேரி நடைபெற்றது. விழாவில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தர்கா நிர்வாகிகளும், சாதி, சமய வேறுபாடின்றி பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    3-வது நாளான இன்று(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் விளக்கேற்றுதல் நிகழ்ச்சியும், அனைத்து மதத்தவருக்கும் அன்னதானம் வழங்குதலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தர்கா உரிமையாளர் அமானுல்லாஷரீப் மற்றும் அவரது சகோதரர்கள் செய்து உள்ளனர்.
    கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா கந்தூரி விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது.
    கடலூர் மஞ்சக்குப்பம் நேத்தாஜி சாலையில் சைய்யிதினா முகமத் காலப்ஷாஹ் அவுலியா தர்கா உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை குர்ஆன் ஷரீப் மற்றும் துவா தொழுகை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாதி, மத பாகுபாடு இன்றி பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    விழாவின் 2-வது நாளான இன்று(புதன்கிழமை) சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது. மாலை 6 மணியளவில் தர்காவில் இருந்து புறப்படும் சந்தன கூடு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தர்காவை வந்தடைகிறது. பின்னர் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடக் கிறது. நாளை(வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை விளக்கேற்றும் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சைய்யிதினா முகமத் காலப் ஷாஹ் அவுலியா தர்கா உரிமையாளர்கள் மற்றும் விழாகுழுவினர் செய்து வருகிறார்கள். 
    உலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.
    அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை இறைவன் அதிகாலை நேரத்திலேயே நிகழ்த்துகின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது.

    நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள்: “யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக” (நூல்: அபூதாவூத்).

    “பாத்திமா (ரலி) அறிவிக்கின்றார்: அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன். அந்நேரம் அண்ணலார் (ஸல்) என்னருகே வந்து இவ்வாறு கூறினார்கள்: ‘அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறிவிடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான்”. (நூல்: பைஹகீ)

    ஏனெனில், உழைப்பாளர்களும் சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப்படுகின்றார்கள்.

    அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்: “படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: “வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள். படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..? எனது அருள்மீது ஆசை வைத்தா...? எனது தண்டனையைப் பயந்தா...?”.

    பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்: “உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.” (நூல்: அஹ்மத்)

    அதிகாலைத் தொழுகையை விட்டதால் நாம் கண்ட நன்மை என்ன? இத்தொழுகையை விட்டதால் வங்கியில் நாம் சேமித்த பணம் எவ்வளவு..? இத்தொழுகையை விட்டதால் நாம் அடைந்த பதவி உயர்வுகள் எத்தனை? இதனை அலட்சியம் செய்ததால் வியாபாரத்தில் நாம் கண்ட லாபம் என்ன? மனதில் நாம் அடைந்த நிம்மதி எவ்வளவு? எண்ணிப்பார்த்தால் எதுவும் இல்லை.

    நபிகளாரின் வேதனை

    உபை இப்னு கஅப் (ரலி)அறிவிக்கின்றார்: ஒரு நாள் அண்ணலார் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகை முடித்த பின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள்: “இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா?” மக்கள், “இல்லை” என்று கூறினர். மீண்டும், “இன்னவர் வந்தாரா?” என்று கேட்க, மக்களும் “இல்லை” என்று கூற, நபி (ஸல்) அவர்கள் வேதனையுடன் கூறினார்கள்: “நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இவ்விரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் ஊர்ந்தேனும் இதற்காக வருவார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    இப்னு உமர் (ரலி) கூறுகின்றார்: “அதிகாலைத் தொழுகைக்கும் இஷா தொழுகைக்கும் யார் வழக்கமாக வருவதில்லையோ அவர்களைக் குறித்து நாங்கள் மோசமாகவே எண்ணியிருந்தோம்” (அதாவது நயவஞ்சகர்கள் என்று).

    அண்ணலாரின் அமுத மொழிகள்

    நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “(பள்ளிவாசலை நோக்கி அதிகாலை) இருளில் நடந்து செல்பவர்களுக்கு மறுமையில் முழுமையான ஒளி கிடைக்கும் எனும் நற்செய்தியைக் கூறுங்கள்”. (நூல்: பைஹகீ)

    “சூரிய உதயத்திற்கு முன்புள்ள தொழுகையையும் சூரியன் மறைந்ததற்குப்பின் உள்ள தொழுகையையும் (ஸுபுஹ், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் நரகில் ஒருநாளும் நுழைய மாட்டார்”. (நூல்: முஸ்லிம்)

    “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் இறைவனின் பாதுகாப்பில் இருக்கின்றார்”. (நூல்: தபரானி)

    ஒவ்வொரு நாளும் வானவர்கள் இரு தடவை இந்தப் பூமிக்கு வருகை தருகின்றார்கள். அவர்கள் அனைவரும் அஸர் தொழுகையிலும், ஸுபுஹ் தொழுகையிலும் சந்தித்துக் கொள்கின்றார்கள். பணி முடித்துத் திரும்பும் வானவர்களிடம் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் அல்லாஹ் கேட்கின்றான்: “எனது அடியார்களை எந்நிலையில் சந்தித்தீர்கள்? எந்நிலையில் விட்டு வந்தீர்கள்?” அதற்கு வானவர்கள் கூறுவார்கள்: “அவர்கள் தொழுகையில் இருக்கும் நிலையில் சந்தித்தோம். தொழுகையில் இருக்கும் நிலையிலேயே விட்டு வந்தோம்.” (நூல்: திர்மிதி)

    இந்த நபிமொழிகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். பல ஆண்டுகளாக ஸுபுஹ் தொழுகை என்றால் என்ன என்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவரைக் குறித்து வானவர்கள், ‘இறைவா! அவர் தூங்கிக் கொண்டிருந்தார்’ என்றோ, ‘தொழாமல் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார்’ என்றோ கூறுவதாக இருந்தால் எப்படி இருக்கும்? அதிலும் 5 அல்லது 10 ஆண்டுகளாக இதே பதிலை வானவர்கள் இறைவனிடம் கூறினால் நம்மைக் குறித்து இறைவன் என்ன நினைப்பான்?

    அதிகாலை சூரியன் உதயமாகும் வரை தூங்குபவர்களைக் குறித்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகளார், “அந்த மனிதரின் காதுகளில் சைத்தான் சிறுநீர்க் கழித்து விட்டான்” என்று கூறினார்கள்.

    கற்பனை செய்து பாருங்கள். இருபது முப்பது ஆண்டுகளாக ஒருவரின் காதுகளில் தொடர்ந்து சைத்தான் சிறுநீர்க் கழிக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட துர்பாக்கியவானாக இருக்க வேண்டும்.

    மாற்றத்தின் நேரம் அதிகாலை

    உலகில் பெரும் பெரும் மாற்றங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் நடைபெறுகின்றன. உலகில் அழித்து நாசமாக்கப்பட்ட சமூகங்கள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன.

    ஆத் கூட்டத்தைக் குறித்து அல்லாஹ் கூறுகின்றான்: “இறுதியில் அவர்களின் நிலைமை என்னவாயிற்று எனில், அவர்கள் வசித்த இல்லங்களைத் தவிர வேறு எதுவும் அதிகாலையில் அங்கு தென்படவில்லை.” (திருக்குர்ஆன் 46:25)

    சமூத் கூட்டத்தைக் குறித்து இறைவன் குறிப்பிடுகின்றான்: “திடுக்குறச் செய்கின்ற ஒரு நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதிகாலையில் அவர்கள் தம் இல்லங்களில் முகங்குப்புற (உயிரற்றவர்களாக) வீழ்ந்து கிடந்தார்கள்” (திருக்குர்ஆன் 7:91)

    லூத் (அலை) அவர்களின் சமூகத்தைக் குறித்து இறைவன் கூறுகின்றான்: “இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?” (திருக்குர்ஆன் 11: 81)

    ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தைக் குறித்துக் கூறுகின்றான்: “இறுதியில், ஒரு கடும் நிலநடுக்கம் அவர்களைப் பீடித்தது. அவர்கள் தம் வீடுகளிலேயே அதிகாலையில் குப்புற வீழ்ந்து மடிந்தார்கள்”. (திருக்குர்ஆன் 29:37)

    மண்ணோடு மண்ணாக்கப்பட்ட அத்தனை சமூகங்களும் அநேகமாக அதிகாலை நேரத்திலேயே அழிக்கப்பட்டுள்ளனர்.

    பண்டைய காலத்தில்தான் அதிகாலை என்பது அழிவிற்கான நேரமாக இருந்தது என்று நிம்மதி அடைய வேண்டாம். இன்றும் அவ்வப்போது இறைவனின் எச்சரிக்கைகள் அதிகாலை நேரத்திலேயேதான் வருகின்றன.

    2004-ல் ஏற்பட்ட சுனாமி, துருக்கி பூகம்பம், ஈரானின் நிலநடுக்கம், 2009- ல் ஆப்பிரிக்கா ஹெய்தியில் 3 லட்சம் பேர் பலியான பூகம்பம் அனைத்தும் அதிகாலை நேரத்திலேயே நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதருக்கு வரும் மாரடைப்பு எனும் திடீர் மரணமும் அநேகமாக அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குத்தான் வருகின்றது என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

    மரணம் என்பது இறைவனின் விதி. அது வந்தே தீரும். அதில் எந்த ஐயமும் இருக்க முடியாதுதான். ஆனால், துர்மரணம் என்பது? இறைவனின் தூதரே பாதுகாப்பு கேட்ட விஷயம் அல்லவா? மேலே கூறிய அனைத்தும் துர்மரணம் அல்லவா?

    “யார் ஸுபுஹ் தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கின்றார்” என்று மேலே கூறிய ஹதீஸின் முழுமையான பொருள் இப்போதாவது புரிகின்றதா..?

    செய்ய வேண்டியது என்ன?

    1) தூங்கு முன் நாளை கண்டிப்பாக ஸுபுஹ் தொழுவேன் என்ற உறுதியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள் (எழுந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்றல்ல!)

    2) படுக்கும் முன் இறைவனிடம் துஆ கேளுங்கள்.

    3) தவறிய தொழுகைகளுக்காக பாவமன்னிப்புக்கேளுங்கள்.

    4) நாம் தொழுதால்தான் நமது பிள்ளைகள் தொழுவார்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

    5) அலாரம் வைத்துக் கொண்டு தூங்குங்கள்.

    6) சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவதே நபிவழி என்பதை நினைவில் வையுங்கள்.

    7) கெட்ட முஸ்லிம்களுக்கு நாமே முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது என்பதாக உறுதி எடுங்கள்.

    8) வழக்கமாக ஸுபுஹ் தொழும் நல்லவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள்.

    9) ஒளுவுடன் தூங்குவதற்கு முயலுங்கள்.

    10) தம்பதிகளாக இருந்தால் முதலில் எழும் ஒருவர் மற்றவரைத் தண்ணீர் தெளித்தாவது எழுப்ப முயலுங்கள். அல்லாஹ்வின் அருள் அதில்தான் அடங்கியுள்ளது.

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

    சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பெற்றோருக்கு நன்மை செய்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    பெற்றோருக்கு நன்மை செய்வதும், நன்மைகள் பல கிடைக்கும் நற்செயலே. பெற் றோருக்குச் செய்யும் நன்மை அது அவர்களுக்கானது அல்ல, அது நமக்கே திரும்பவும் கிடைக்கும் நன்மையாகும்.

    இஸ்லாத்தின் பார்வையில் ஆன்மிகம் என்பது இறைவனுடன் மட்டும் தொடர்பில் இருப்பது அல்ல. பெற்றோரின் தொடர்பில் நிலைத்திருப்பதும் ஆன்மிகம் தான். பெற்றோருக்கு பணிவிடை செய்வதும் இறைச் சேவைதான். பெற்றோரிடம் பணிந்து நடப்பதும் இறை பக்திதான். பெற்றோருக்காக அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதும் அறப்போர்தான். அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவதும் இறை ஆணைகளுக்கு கட்டுப் படுவது போன்றுதான். அவர்களுக்கு ஊழியம் செய்வதும் இறைஊழியமே.

    பெற்றோருக்கு நன்மை புரியும்படி திருக்குர்ஆன் நெடுகிலும் இறைவன் வேண்டுகோள் விடுக்கிறான். அதுகுறித்து பார்ப்போம்:

    ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (திருக்குர்ஆன் 4:36).

    ‘தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ (திருக்குர்ஆன் 46:15).

    ‘பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது’ (திருக்குர்ஆன் 31:14).

    இறைவன் விதித்த கடமைகளில் மிகச் சிறந்ததும், முதல் நிலை பெறுவதும் தொழுகைதான். அந்தத் தொழுகைக்கு பிறகு சிறந்த செயல், பெற்றோருக்கு நன்மை புரிவதுதான். இதை உணர்த்தும் விதமாக பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது:

    இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனுக்கு மிகவும் விருப்பமான செயல் எது?’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்று பதில் கூறினார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். ‘பிறகு எது?’ என்று கேட்டதற்கு ‘இறை வழியில் அறப்போர் புரிவது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)

    “நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே, நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்?’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உன் தந்தை’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    முக்கிய மூன்று இடங்களை தாய் ஆக்கிரமித்துக் கொள்கிறார். தந்தை நான்காவது இடத்தை பெறுகிறார். குழந்தைகளுக்காக தாய் மூன்று விதமான தியாகங்களை செய்கிறாள். 1) குழந்தையை பத்து மாதங்கள் தமது கருவில் சுமந்தது. 2) தன் உயிர் கொடுத்து குழந்தையை பிரசவித்தது. 3) இரண்டாண்டுகள் தமது உதிரத்தையே பாலாக மாற்றி அமுதூட்டியது. இந்த மூன்று விதமான கட்டங்களை தாய் வெகு சிரமத்திற்கு மேல் சிரமப்பட்டு கடந்து செல்வதால் அவளுக்கு முக்கியமான மூன்று புள்ளிகள் கிடைத்து விடுகிறது.

    தாயின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல், தந்தையின் தியாகமும் குழந்தைகளை சூழ்ந்துள்ளது. தாயின் தியாகம் முப்பது மாதங்கள் என்றால் தந்தையின் தியாகம் பல வருடங்களாக நீண்டு செல்கிறது.

    குழந்தைகளுக்காக தந்தை மாடாக உழைத்து, ஓடாய் தேய்வது; குழந்தை உயரச் செல்லும் படிக்கட்டுகளாக தனது உடலையே அமைப்பது, தன்னை விட உயர்வான இடத்தை அடைய தனது தலைக்கு மேலே குழந்தையை உயர்த்திப் பிடிப்பது போன்ற தந்தையின் வலிகள் நிறைந்த தியாகங்களை எந்த தராசிலும் அளந்து விட முடியாது. பல கிளைகளை ஒரு வேர்தான் தாங்கிப் பிடிக்கிறது. அது என்றுமே மறைந்துதான் இருக்கும். அந்த வேர் தான் தந்தை. குழந்தைகளின் வளர்ச்சியின் அடித்தளம்தான் தந்தை. அவரையும் இஸ்லாம் தனியாகவும் கவுரவிக்கிறது.

    ‘ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நான் அறப்போருக்குச் செல்ல நாடி, உங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’ என்று கூறினார். உடனே நபியவர்கள் ‘உனக்கு தாய் (உயிருடன்) உண்டா?’ என்று கேட்க, அவர் ‘ஆம்’, என்று கூறினார். ‘அப்படியானால், உனது தாயைப் (அவருக்கு பணி விடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக்கொள். நிச்சயமாக சொர்க்கம் அவளுடைய இருபாதங்களின் கீழ்தான் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா பின் ஜாஹிமா (ரலி), நூல்: நஸயீ)

    அறப்போருக்குச் சென்று, அதில் வீரமரணம் அடைந்து சொர்க்கத்தை அடைவதை விட, பெற்றோருக்காக பாடுபட்டு அவர்களின் தயவால் சொர்க்கம் செல்வதே மேல் என்பதுதான் இஸ்லாமிய சிந்தனை.

    பெற்றோர்கள் இணை வைப்பவராக இருந்தாலும் உலக விஷயங்களில் அவர்களுக்கு உடன்பட்டு, உறவாடி மகிழ வேண்டும். மார்க்கத்திற்கு முரணாக நடக்குமாறு உத்தரவிட்டால் அதை மட்டும் கேட்க வேண்டியதில்லை. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்வில் அவ்விருவருடனும் அழகியமுறையில் உறவு வைத்துக்கொள். என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று’. (திருக்குர்ஆன் 31:15)

    பெற்றோரிடம் உறவாடுவதற்கும், நன்மை புரிவதற்கும் மதம் தடையாக வரக்கூடாது. பெற்றோருக்கு எந்தவிதத்தில் எல்லாம் நன்மையும், உதவியும் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யவேண்டும்.

    “ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளது. மேலும் எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘நீயும், உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)

    ‘தாம் எதைச்செலவிட வேண்டும் என உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்’ எனக்கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:215)

    சில பெற்றோருக்கு அரவணைப்பும், உடல் சார்ந்த உதவியும் தேவைப்படும். குழந்தைகள் பக்கத்தில் இருந்து பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில பெற்றோருக்கு ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். அப்போது, பெற்றோருக்கு அருகில் அமர்ந்து அவர்களின் தலையை வருடிக் கொடுத்து, அவர்களின் கை கால்களை இதமாக தடவிக்கொடுத்து ஆறுதலான வார்த்தைகளை கூற வேண்டும்.

    இன்னும் சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.

    ‘நல்லறங்களில் சிறந்தது, ஒருவர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்)

    இன்னும் சில பெற்றோருக்கு குழந்தைகளின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. குழந்தைகள் தமக்காக வேண்டும் பிரார்த்தனையில் தமது பெற்றோரையும் இணைத்து, அவர்களுக்காகவும், அவர்கள் நீண்ட ஆயுளுக்காகவும், அவர்களின் சரீர சுகத்திற்காகவும், அவர்களின் பிழைகள் மன்னிக்கப்படவும் வல்ல இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு நன்மை செய்தால் இறை நம்பிக்கையும் முழுமை அடையும், சொர்க்கத்தையும் அடைய முடியும். இது உடல் சார்ந்த இறை நம்பிக்கை.

    ‘நபி (ஸல்) அவர்கள் ‘மூக்கு மண்ணை கவ்வட்டும்’ என்று மூன்று தடவை கூறினார்கள். ‘இறைவனின் தூதரே, அது யார் மூக்கு?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் ‘தம் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும், பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன் (மூக்குத்) தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)

    பெற்றோரை பாதுகாப்பீர், சொர்க்கத்தைப் பெறுவீர்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    மனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது.
    மனிதர்களின் நிம்மதியை கெடுத்து, அவர்களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கும் தீமைகள் எதனால் ஏற்படுகின்றது என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே திருக்குர்ஆன் இந்த வசனம் மூலம் சொல்லிக்காட்டுகின்றது.

    “(நபியே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: ‘வாருங்கள், உங்கள் இறைவன் உங்களுக்குத் தடுப்பவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு யாதொன்றையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். ரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடுத்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக இவற்றை (இறைவன்) உங்களுக்கு (விவரித்து) உபதேசிக்கின்றான்.

    “அநாதைகளின் பொருளை அவர்கள் பருவமடையும் வரையில் நியாயமான முறையிலன்றி தொடாதீர்கள். அளவை (சரியான அளவுகொண்டு) முழுமையாக அளங்கள். எடையை நீதமாக நிறுத்துங்கள். யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நாம் நிர்ப்பந்திப்பதேயில்லை. நீங்கள் எதைக் கூறியபோதிலும் (அதனால் பாதிக்கப்படுபவர்கள்) உங்கள் உறவினர்கள் ஆயினும் (சரியே!) நீதத்தையே கூறுங்கள். நீங்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுங்கள். நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காகவே இவற்றை அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (6:151-152)

    இந்த வசனத்தின் மூலம் மனிதனின் தவறுகளையும், சமுதாயத்தில் அவனால் ஏற்படும் தவறுகளையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அல்லாஹ் சொல்கிறான்.

    முதலில் குறிப்பிடும் போது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கு இணை கற்பிக்காதீர்கள் என்று குறிப்பிடுகிறான். இது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை.

    அடுத்து தாய் தந்தையரை மகிழச்செய்யுங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று குறிப்பிடுகிறது. இன்றைய காலச்சூழ்நிலைகள், பிள்ளைகள் பெற்றோரை பாரமாய் கருதும் நிலை காணப்படுகிறது. இன்று மகனாய் இருக்கும் ஒருவன் நாளை பெற்றோராய் மாற வேண்டிய கட்டாயம் இருப்பதை மறந்து விடுகிறான். தன் பெற்றோருக்கு நேர்ந்த கதி தனக்கும் நேரும் என்பதை அறிந்தும் அதில் பாராமுகமாயிருக்கின்றனர். எனவே தான் அதை தவிர்ந்திடுங்கள் என்று அறிவுரை பகர்கிறது.

    அறியாமை காலத்தைப்போன்றே இப்போதும் சிலர் தான் கருவில் சுமக்கின்ற பிள்ளை பெண்ணாக இருந்தால் கருவிலேயே சிதைத்து விட எண்ணுகிறார்கள். பாவமான இந்தக்காரியத்தைச் செய்யக்கூடாது என்று சொல்வதோடு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம், உங்களைப் போல் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்’ என்று அல்லாஹ் கூறுகிறான்.

    அடுத்துச் சொல்லும் போது பொய், புரட்டு, திருட்டு, மது, ஆணவம், அகம்பாவம், புறம் கூறுதல், விபச்சாரம் போன்ற மானக்கேடான செயல்களின் பக்கம் நெருங்காதீர்கள் என்கின்றது. எல்லா தீமைகளுக்கும் இவைகளில் ஒன்றாவது காரணமாக இருக்கின்ற காரணத்தால் இதனை நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கிறது.

    கொலை செய்வது மகாபெரிய பாவம். உயிரைப் படைப்பதற்கு சக்தியற்ற மனிதனுக்கு, அதனைப் பறிப்பதற்கு உரிமை கிடையாது. எனவே கொலை பாதகத்தைச் செய்யாதீர்கள் என்று அச்சுறுத்துகிறது.

    இத்தனையும் தனிமனித ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள். அதனை அனைவரும் உணர்ந்து வாழ்ந்தால், அவர்கள் வாழ்வில் சுபீட்சமும் அமைதியும் நிலவும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்காது.

    பொதுவாழ்வு சார்ந்த தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது, ‘நீங்கள் அனாதைகளின் சொத்திற்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டால், அதனை நீங்கள் அனுபவிக்க எண்ணாதீர்கள்’ என்று குறிப்பிடுகிறது. காரணம் அனாதைகள் சொத்தும், அமானிதமும் அபகரிக்கப்பட்டால் அது உங்களுக்கு கேட்டை விளைவிக்குமே தவிர ஒருபோதும் நன்மையை பெற்றுத்தராது. எனவே அதில் கவனம் தேவை.

    அடுத்து வணிகத்தில் நிகழும் தவறுகளை சுட்டிக்காட்டும்போது, ‘அளவினை முறையாக அளந்து கொடுங்கள் எடையை நீதமாக நிறுத்துக்கொடுங்கள்’ என்று கட்டளையிடுகிறது. அளவுகளில், நிறுவைகளில் மோசடி செய்வது பெரும் பாவமாகும். ஆனால் சிலர் இதை அறிந்தும் இந்தப்பாவத்தை செய்து வருகிறார்கள். இதற்கான இறைவனின் தண்டனை மிகக்கடுமையானது என்பதை திருக்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகிறது.

    வாழ்வில் சில சம்பவங்கள் நிகழும் போது சாட்சியம் கூறுவது அவசியம். அது ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் என்பதும் யதார்த்தம். அப்படி சாட்சி கூறும்போது, ‘உண்மையைத் தவிர எதையும் சொல்லலாகாது, அது உங்கள் உறவுகளை பாதிக்கின்ற போதும்’ என்றும் குறிப்பிடுகிறது திருக்குர்ஆன்.

    சாட்சியும் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. சாட்சிகள் தவறும்போது வழக்கின் போக்கே மாறி தவறான தீர்ப்புகள் வந்து விடலாம். அதில் எச்சரிக்கை தேவை என்பதை தான் அழுத்தமாக கூறுகிறது.

    இக்கால சூழ்நிலையில் நடந்து கொண்டிருக்கிற அத்தனைப் பாவங்களுக்கும் ஆணிவேர் மேலே குறிப்பிட்டவைகளாகத்தான் இருக்க முடியும். இவற்றைச் சரி செய்தால் பாவங்கள் குறைந்துவிடும் என்பதை வலியுறுத்தவே இந்த வசனத்தில் ஒட்டுமொத்த செய்திகளையும் விவரித்து கூறியுள்ளான் அல்லாஹ்.

    தனிமனித ஒழுக்கம், சமுதாய சிந்தனை இவற்றுக்கு பங்கம் ஏற்படாமல் ஒருவன் வாழ்வை அமைத்துக்கொண்டால் அது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழியாக அமையும்.

    எந்த ஒரு மாற்றமுமே நம்மில் இருந்தே தொடங்க வேண்டும். மாற்றங்களில் விளைவுகள் வெளிவர சற்று கால அவகாசங்கள் தேவைப்படலாம். அதற்கு பொறுமை வேண்டும். பொறுமையாளர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்ற நம்பிக்கையும் வேண்டும்.

    1400 ஆண்டுகளுக்கு முன்னால் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு மாற்றங்களை மக்கள் மனங்களில் விதைத்துச் சென்றார்கள். இதன்மூலம் ஒரு பண்பட்ட சமூகம் உருவாகி இருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட சறுக்கல்களாலும், சைத்தானின் தூண்டுதலாலும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

    நன்மையின் பக்கம் நாம் திரும்ப வேண்டும் எனில், இந்த வசனங்களின் அறிவுரைகள் நம் செயல்பாட்டிற்கு வந்தாக வேண்டும். அது கற்பித்த வாழ்வியல் மீண்டும் மலர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக, ஆமீன்.

    மு.முகமது யூசுப், உடன்குடி.
    பிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான உறவோடு உறவாடு, சமூக உறவை பசுமையாக்கு என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய லட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் அவசியம். சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை உருவாக்கிட வேண்டும்.

    குடும்ப உறவு என்று வரும் போது அதில் பலவிதமான உறவுகள் உறவாடுகின்றன. அதில் ரத்த உறவு, சம்பந்த உறவு, சமூக உறவு, நெருங்கிய உறவு, தூரத்து உறவு, நட்புறவு, வெளியுறவு போன்றவைகள் ஐக்கியமாகின்றன.

    இவற்றில் ரத்த உறவு மட்டும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. நமக்கான ரத்த உறவை இறைவன் தேர்வு செய்கின்றான். இது குறித்து இறைவனின் கூற்றை பார்ப்போம்.

    ‘அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு ரத்த சம்பந்தமான உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 25:54)

    உறவு என்பது இறைநம்பிக்கையின் ஒரு கிளை. மற்ற உறவுகளை நாம் மாற்றிவிடலாம். மற்ற உறவுகளை உறவில் இருந்து கழற்றிவிடலாம். ஆனால், ரத்த உறவுகளை நாம் மாற்ற முடியாது. அதன் பந்தத்தை நாம் அறுத்துவிடவும் முடியாது.

    இந்த உறவைப் பேணி வாழ்வது வெறும் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்காகவோ, சமூகக் கட்டமைப்பிற்காகவோ மட்டும் அல்ல. அது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாக இருப்பதால், உறவைப் பேணி வாழ்வது இஸ்லாத்தில் அவசியமாக உள்ளது.

    ‘யார் இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கொள்கிறாரோ, அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி).

    ‘உறவு என்பது இறையருளின் ஒரு கிளை. எனவே அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக்கொள்ளும் நபரை நானும் முறித்துக் கொள்வேன்’ என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).

    இது குறித்த நபிமொழி வருமாறு:

    ‘இறைவன் படைப்பினங்களை படைத்து முடித்த போது, உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) ‘உறவுகளைத் துண்டிப்பதில்இருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்’ என்று கூறி மன்றாடியது.

    ‘ஆம், உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்திஅளிக்கவில்லையா?’ என்று இறைவன் கேட்டான்.

    அதற்கு உறவு ‘ஆம், திருப்தியே என் இறைவா’ என்று கூறியது.

    இறைவன் ‘இது உனக்காக நடக்கும்’ என்று சொன்னான்.

    பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால், ‘(நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனை கிறீர்களா?’ எனும் (திருக்குர்ஆன் 47:22-வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    ‘எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த இறைவனை அஞ்சுங்கள். மேலும் (உங்கள்) ரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்), நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:1)

    ‘உறவு முறை அறிவோம்’

    உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு முன்பு யார் யார் எந்த உறவுமுறை என்பதை நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

    ‘தமது வம்ச வழிகளைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் உங்கள் சொந்த பந்தங்களோடு சேர்ந்து வாழ ஏதுவாக இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அலா பின் காரிஜா (ரலி), தப்ரானீ)

    உறவுமுறை என்பது இருவரும் பரஸ்பரம் நல்லமுறையில் நடந்து கொள்வது என்பதல்ல. ஒருவர் தவறாக நடந்தாலும், உறவை முறித்தாலும் அவரையும் மற்றவர் அரவணைத்துச் செல்வது தான் உண்மையான உறவுமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.

    ‘பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் உண்மையில் உறவைப் பேணுகிறவர் அல்லர் ; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி)

    ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனின் தூதரே, எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு தீங்கு விளைவிக்கின்றனர். (என்னைப் புண்படுத்தும் போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். ஆனாலும், அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்து கொள்கின்றனர்’ என்றார்.

    நீர் சொன்னதைப் போன்று நீர் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீர் சுடுசாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதேநிலையில் நீர் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உம்முடன் இருந்து கொண்டேயிருப்பார்’ என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    ‘தம் வாழ்வாதாரம் விசாலமாக்கப்படுவதும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    “ஒருவர் நபிகளாரிடம் ‘என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்குக் கூறுங்கள்’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீர் இறைவனை வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும், ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்’ என்று கூறிவிட்டு ‘உமது வாகனத்தை உமது வீடு நோக்கி செலுத்துவீராக’ என்று கூறினார்கள்” (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி), புகாரி).

    உறவுகளுடன் அழகிய முறையில் உறவாடும் போது அளவில்லாத நன்மைகள் இறையருளால் நிச்சயம் கிடைக்கும். அதேநேரத்தில் உறவுகளை வெட்டியும், உதாசீனப்படுத்தியும் வாழும் போது அவருக்கு இவ்வுலகிலேயே அதற்கான தண்டனைகள் வழங்கப்படும். மறுமையிலும் அவருக்கு தண்டனைகள் கிடைக்கும். அவரால் சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியால் போய்விடும்.

    ‘உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஜூபைர் பின் முத்யிம் (ரலி), புகாரி)

    சமூக உறவை பசுமையாக்குவது

    ரத்த உறவு என்பது குறிப்பிட்ட நெருங்கிய சில குடும்ப உறவுகளைக் குறிக்கும். சமூக உறவு என்பது பலதரப்பட்ட உறவுகளையும், தூரத்து உறவுகளையும் குறிக்கும். பல்வேறு குடும்பங்களை, பல்வேறு குழுக்களை, பல்வேறு கோத்திரங்களை ஒன்றிணைப்பதுதான் சமூக உறவு. சமூகங்களுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தி, அதன் உறவை பசுமையாக்குவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

    சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கும். நமது தொடர்பில் உள்ள அனைவரிடமும் நமது நல்லுறவை பசுமையாக்கி, அறுந்துவிடாத அளவுக்கு காலத்தால் அதை பாதுகாக்க வேண்டும்.

    ‘நிச்சயமாக நீங்கள் எகிப்தைக் கைப்பற்றுவீர்கள். அப்போது அவர்களுடன் மிகவும் இங்கிதமாக நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களுக்கு அவர்களுடன் குடும்ப உறவும், திருமண உறவும் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)

    நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் அன்னை ஹாஜிராவும், நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராகீம் தாய் மாரிய்யதுல் கிப்தியாவும் ‘கிப்தி’ வம்சத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் பூர்வீகம் எகிப்து நாடாகும். இதை கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் தமக்கு முன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அன்னை ஹாஜிரா (ரலி) அவர்களின் குடும்ப உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பின்வரும் காலங்களில் இங்கிதமாக நடந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறார்கள்.

    சமூகம் என்று வரும்போது அதில் கலாசாரம் மாறுபாடு கொண்ட பல மக்கள் இருப்பார்கள். இருந்தாலும் அவர்களிடையேயும் சமூக உறவைப் பேணி வாழ வேண்டும் என்பதுதான் இஸ்லாமியக் கொள்கையாகும். இதை நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

    உறவுகள் கசந்து விடக்கூடாது, அதை காய்ந்து கருகிவிடச் செய்யவும் கூடாது. உறவுகளை பசுமைப்படுத்திட வேண்டும். பிரிந்து போன உள்ளங்கள், தொலைந்து போன உறவுகள், எதிரும் புதிருமாக உள்ள சமூகங்கள் ஒன்றிணைந்து, புதியதோர் வரலாற்றை படைக்க ஆயத்தமாக வேண்டும். உறவு களை முறிக்கும் செயல்களைத் தகர்ப்போம், உறவுகளை இணைக்கும் செயல்களை கட்டமைப்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.
    நபிகளார் நடைமுறைப் படுத்திக்காட்டிய பொருளாதாரம் என்பது இறைவனின் அருளியலை அடிப்படையாக கொண்டதாகும். பொருளாதாரம் உலகில் சுழல வேண்டுமானால் அதற்காக நபிகளார் தேர்வு செய்த முதல் தளம் என்பது மனித மனங்களில் உண்டாக்கிய இறைபக்தியும், இரக்க சிந்தனையுமே ஆகும்.

    நபிகளார் ஏற்படுத்திய அந்த தாக்கம் தான் இன்று உலகில் மக்கள் எங்கு துயருவதைக் கண்டாலும் அங்கு இஸ்லாமியர்கள் ஓடோடிச் சென்று உதவ வைக்கின்றது. எளிமையான வாழ்க்கையை தானும் கடைப்பிடித்து, அதனை மற்ற மக்களையும் கடைப்பிடிக்கச்செய்து, ஆடம்பர வாழ்விலிருந்து மக்களை மீட்டெடுத்தது என்பதும் பொருளாதார மேம்பாட்டிற்கான மற்றொரு முக்கிய அம்சமாகும்.

    நபிகளாரின் எளிமை என்பது செல்வம் இல்லாத காலத்தில் கடைப்பிடித்துக் காட்டப்பட்டது அல்ல. அவர்கள் மக்கா மதீனாவின் மன்னராக வாழ்ந்த போதும் சரி, ஆரம்பம் முதல் கடைசிவரை அவர்களது வாழ்வில் எளிமை என்பது என்றும் இணைபிரியா நண்பனாகவே இருந்தது.

    ஆடம்பர வாழ்வு என்பது பிற மனிதர்களின் வாழ்வை நிலைகுலைய வைக்கும் ஊதாரித்தனமான செயல் என்பதை உலகிற்கு நபிகளார் தெளிவுபடுத்திக் காட்டினார்கள்.

    இதுகுறித்து அருள்மறை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    ‘(இறைவன் உங்களுக்கு கொடுத்ததை) உண்ணுங்கள், பருகுங்கள்; (ஆனால்) வீண் விரயம் (மட்டும்) செய்யாதீர்கள்’ (திருக்குர்ஆன் 7:31).

    இது உண்ணுவதில் மட்டுமல்ல, உடுத்தும் உடைகளிலும், கட்டும் வீடுகளிலும், நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலும் வீண் விரயம் அறவே கூடாது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

    வீண் விரயமும், ஆடம்பரமும், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாகும் என்பதால் தான் இஸ்லாம் அதனை வெறுக்கிறது.

    ‘பேரீத்தம் பழத்தின் சிறிய துண்டையாவது பிறருக்கு வழங்கி, நீங்கள் நரகத்தின் நெருப்பை அணைத்து விடுங்கள்’ என நபிகளார் கூறியது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

    தர்மம், நரகத்தின் நெருப்பை அணைத்திடும் ஆற்றல் கொண்டது. இங்கு பேரீத்தம் பழத்தின் துண்டு என்பது ஒரு உதவியின் குறியீடாகவே சொல்லப்பட்டுள்ளது.

    அதன் நுட்பமான பொருள், ‘தேவைக்குப்போக மிஞ்சி இருப்பது எதுவாயினும் அதனை தேவையுடையோருக்கு வழங்கி அவர்களின் வயிற்றுப்பசியை தணிப்பதே நரகத்தின் நெருப்பை அணைப்பதற்கு ஒப்பானது’ என்று இங்கு கூறப்படுகிறது.

    இது குறித்து இறைவன் திருமறையிலே என்ன கூறுகிறான் என்று பார்ப்போம்:

    ‘(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்’. (திருக்குர்ஆன் 2:3)

    இந்த உலக செல்வங்கள் எதுவாக இருந்தாலும் அதுவெல்லாம் இறைவனிடமிருந்து நமக்கு கிடைத்ததே ஆகும். அப்படி இறைவன் வழங்கிய அந்த ஆற்றல்களை, செல்வங்களை நல்வழியில் மற்றவர்களுக்கு செலவு செய்து பகிர்ந்து கொள்வதே இறை பக்தியாளர்களின் அடையாளம் என திருக்குர்ஆன் கூறுகிறது.

    இதுதொடர்பான திருக்குர்ஆனின் இந்த வசனத்தையும், அண்ணலாரின் அமுத மொழிகளையும் உலகம் பின்பற்றினால் சோமாலிய போன்ற பட்டினியால் வாடும் நாடுகள் இருக்காது. உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைந்து விடும்.

    பொருளாதாரத்தை நசுக்கி மனித வாழ்வின் உன்னத நோக்கத்தை முறித்திடும் வட்டி குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

    ‘அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை’. (திருக்குர்ஆன் 2:276)

    வட்டி (பணம்) வாங்குவதும், வட்டிக்கு (பணம்) கொடுப்பதும் அதற்கு உறுதுணையாக இருப்பதும் முற்றிலும் இறைவனால் தடுக்கப்பட்ட (ஹராமான) காரியமாகும்.

    வட்டி என்பது மனித இதயத்தை நாசமாக்கி மனிதனின் நல்வாழ்வையும், இரக்க மனதை, உதவி செய்யும் மனப்பான்மையையும் ஒழித்துகட்டும் ஓர் அரக்கனாகும்.

    எனவே தான் அந்த வட்டி என்ற அரக்கனை அழித்து ஒழித்துகட்டவும், தர்மங்களையும் உதவி ஒத்தாசைகளையும் உலகில் வளர்ந்தோங்கச் செய்யவும் இந்த இறைவசனம் நமக்கு அறிவுறுத்து கிறது.

    எனவே தான், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக செல்வம் அடையப் பெற்றவர்கள், அந்த செல்வத்தில் இரண்டரை சதவீதத்தை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும் என இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கி உள்ளது.

    வியாபாரத்தில் மோசடி, லஞ்சம் பெறுவது, உடல் தகுதியிருந்தும் உழைக்காமல் பிச்சை எடுப்பது போன்ற சுய மரியாதையை இழக்கச்செய்யும் அநியாயமான காரியங்களில் ஈடுபடக்கூடாது எனக்கூறிய நபிகளார், ‘இறைவா உன்னிடம், இறை அச்சத்தையும் நல்வழியையும் சுயக் கட்டுப்பாட்டையும், தன்னிறைவையும் வேண்டுகிறேன்’ என பிரார்த்தனை புரிந்தார்கள்.

    இறைவனும் அவனது தூதரான நபிகளாரும் சொன்ன இந்த உயரிய பொருளாதாரக் கோட்பாடுகளை உலகில் யார் பின்பற்றினாலும் அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைவார்கள்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம். 
    ×