என் மலர்
இஸ்லாம்
அடிமைகளிடம் மோசமாக நடந்து கொள்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது. இறைநம்பிக்கைக்கு எதிரான எந்த ஒரு செயலும் இறை நம்பிக்கையாளரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. இது குறித்த எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் கடின வார்த்தைகளால் பிரயோகிக்கிறார்கள்.
‘கஞ்சனும், மகா மோசடிப் பேர்வழியும், தன் அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளனும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), நூல்:அஹ்மது).
‘அடிமைகளை மோசமாக நடத்துகின்ற உரிமையாளர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ஒருவர் ‘இறைவனின் தூதரே, இந்தச் சமுதாயம் அடிமைகளும், அநாதைகளும் நிறைந்த சமுதாயம் என்று எங்களிடம் கூறினீர்களே?’ என்று கேட்டார். ‘ஆம், அவர்களை உங்களின் பிள்ளைகளைப் போன்று கண்ணியப்படுத்துங்கள். நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கும் உண்ணக்கொடுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இறைவனின் தூதரே, இவ்வுலகில் எங்களுக்குப் பயன் அளிப்பவை எவை?’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபிகளார் ‘இறைவனின் பாதையில் அறப்போரில் ஈடுபடுத்த நீ ஆயத்தம் செய்து வைத்திருக்கும் ஆரோக்கியமான குதிரையும், உமது அடிமையும் உமக்குப் போதும். அடிமை, தொழுகையை நிறைவேற்றினால், அவன் உமது சகோதரன் ஆவான்’ என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), நூல்: அஹ்மது)
மேற்கூறப்பட்ட நபிமொழியில் இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. 1) அடிமைகளை தமது பிள்ளைகளைப் போன்று எஜமான் நடத்த வேண்டும், 2) உங்களைப் போன்று அடிமைகளும் தொழுது வந்தால், அவர்கள் உங்களது சகோதரர்கள் ஆவர்.
மஃரூர் (ரஹ்) கூறுகிறார்: ‘நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும், அவ்வாறே அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டு அதைப்பற்றி அவரிடம் கேட்டதற்கு, நான் ஒரு தடவை ஒரு மனிதரை (எனது அடிமையை) ஏசிவிட்டு, அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர், அவரையும், தாயையும் சேர்த்து குறை கூறி விட்டீரே.
நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர். உங்களது அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். இறைவன் தான் அவர்களை உங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால், அவர் தாம் உண்பதிலிருந்தே அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால், நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என கூறினார்கள். ‘இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்’ என அபூதர் (ரலி) கூறினார். (நூல்: புகாரி)
இந்த நபிமொழி எஜமானரின் கனிவான நடத்தையும், அடிமைகளின் உரிமைகளையும் அழகாக போதிக்கிறது. அடிமையை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கேட்பதற்கு ஆள் கிடையாது என நினைத்து எஜமான் வரம்பு மீறி நடக்கக் கூடாது. நாளை மறுமையில் இதை தட்டி கேட்பதற்கு இறைவன் இருக்கிறான். அடிமைகளின் உரிமை விஷயத்தில் இறைவனை அஞ்சி நடக்க வேண்டும்.
இதுகுறித்த நிகழ்வு ஒன்றைக் காண்போம்:
‘ஒரு நபித்தோழர், நபி (ஸல்) அவர்களுக்கு முன் அமர்ந்து ‘இறைத்தூதர் அவர்களே, எனக்கு பல அடிமைகள் உண்டு. அவர்கள் யாவரும் என்னை பொய்ப்படுத்துகிறார்கள்; மேலும் எனக்கு மோசடியும் செய்கிறார்கள்; எனக்கு மாறும் செய்கிறார்கள். இதனால் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன்; அவர்களை திட்டவும் செய்கிறேன். அவர்களின் விஷயத்தில் நான் எப்படி ஒழுங்காக நடக்கிறேனா?’ என்று கேட்டார்.
‘அவர்களின் பொய்க்கும், அவர்களின் மோசடிக்கும், அவர்களின் மாறுபுரிதலுக்கும் தகுந்த மாதிரி உமது தண்டனை அவர்களுக்கு அமைந்திருந்தால் அதுவே உமக்கும் போதும், அவர்களுக்கும் போதும். யாரின் மீதும் ஒன்றுமில்லை. உமக்கு அவர்கள் செய்த துரோகத்தை விட அவர்களுக்கு உமது தண்டனையின் அளவு குறைவாக இருந்தால், அது உமக்கு மேல் மிச்சமான நன்மை. அவர்களின் பாவத்தை விட உமது தண்டனை கூடுதலாக அமைந்துவிட்டால், உம்மிடமிருந்து நன்மை எடுக்கப்பட்டு, அது அவர்களுக்கு கொடுக்கப்பட்டு நீர் பழி வாங்கப்படுவாய்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது, அவர் நபிக்கு முன்பு சப்தமிட்டு அழுதார்.
அவருக்கு நபிகளார், பின்வரும் இறைவசனத்தை படிக்கவில்லையா?, “மறுமைநாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்” (திருக்குர்ஆன் 21:47) என்று கேட்டார்கள்.
அதற்கு அவர் ‘இறைவனின் தூதரே, இவர்களை விடுவிப்பதை விட சிறந்த நன்மை வேறெதையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவரையும் நான் விடுதலை செய்கிறேன். அதற்கு நீங்களே சாட்சி, என்று அவர் கூறினார்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அஹ்மது).
‘தொழுகையைப் பேணுங்கள், தொழுகையைப் பேணுங்கள். உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் விஷயத்தில் இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள்’ என்பது தான் நபி (ஸல்) அவர்களின் இறப்புத் தருவாயில் பேசிய இறுதிப் பேச்சாக இருந்தது’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: அஹ்மது)
எந்த நிலையிலும் கைவிடக்கூடாத கடமை தொழுகை. அது போன்று மனித உரிமைகள் தொடர்புடைய அடிமைகளின் நலனும் எந்நிலையிலும் பேணப்பட வேண்டும் என்பதற்காகவே தொழுகையுடன் அடிமைகளின் உரிமைகளையும் இணைத்துத் தமது இறுதிப்பேச்சில் நபி (ஸல்) அவர்கள் அறைகூவல் விடுத்து இறைவனடி சேர்ந்தார்கள். தமது இறப்பின் இறுதியிலும் அடிமைகளின் உரிமைக்காக போராடி மாண்டவர் தான் மாமனிதர் முஹம்மது (ஸல்) அவர்.
நபி (ஸல்) அவர்களுக்கு தமது மனைவி அன்னை கதீஜா (ரலி) அவர்களின் மூலமாக அன்பளிப்பாக வழங்கப்பட்டவர் அடிமை ஜைத் (ரலி). இவரை நபி (ஸல்) அவர்கள் விடுதலை செய்து விட்டார்கள். இருந்தாலும் அவரை, நபி (ஸல்) அவர்கள் தனது வளர்ப்பு பிள்ளையாக கனிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சிறந்த கோத்திரமாக விளங்கிய குறைஷி குலத்தைச் சார்ந்த தமது மாமி மகளான ஜைனப் பின்த் ஜஹ்ஷை தமது முன்னாள் அடிமை ஜைத் (ரலி)க்கு தாமே பேசி மணமுடித்துக் கொடுத்தார்கள்.
கி.பி. 629-ம் ஆண்டு சிரியா நாட்டின் பல்கா மாநிலத்தின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ‘முஅத்தா’ எனும் இடத்தில் போர் நடந்தது. இந்தப் போரில் சுமார் 3000 வீரர்கள் கொண்ட இஸ்லாமியப் படைக்கு நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமையாக இருந்த ஜைத் (ரலி)யை தளபதியாக நியமிக்கப்பட்டார்.
எஜமான் வாகனத்தின் மீதும், அவனின் அடிமை அவருக்குப் பின்னால் நடந்தும் செல்வதையும் கண்ட அபூஹுரைரா (ரலி), எஜமானைப் பார்த்து ‘இறையடியானே, உமக்குப் பின்னால் உமது அடிமையையும் சவாரி செய்ய வை. அவனும் உமது சகோதரன் தான். அவனது உயிரும் உனது உயிரைப் போன்று தான்’ என்றார். இவ்வாறு எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவுடன் நடக்கும் வரலாற்றுச் சான்றுகள் ஏராளம்.
எஜமானர்கள் அடிமைகளிடம் கனிவாக நடந்து கொள்வது போன்று, அடிமைகளும் எஜமானர்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அடிமைகள் நடப்பதும் இறை நம்பிக்கையை கடைப்பிடிப்பதாகவே அமையும். அதுகுறித்து ஒரு சில தகவல்களைப் பார்ப்போம்.
‘மூன்று மனிதர்களுக்கு இறைவனிடம் இரண்டு விதமான கூலிகள் உள்ளன. ஒருவர் வேதக்காரர்களில் தம் சமூகத்தாருக்கு அனுப்பப்பட்ட தூதரையும், முஹம்மதையும் (ஸல்) நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடமுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சியளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களையும் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத் தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு கூலிகள் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ மூஸா அஷ்அரீ (ரலி), புகாரி)
‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவார். அடிமை தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)
‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘எந்த நற்செயல் சிறந்தது?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இறைவனின் மீது நம்பிக்கை வைப்பதும், அவனது பாதையில் அறப்போர் புரிவதும்’ என்றார்கள். நான் ‘எந்த அடிமையை விடுதலை செய்வது சிறந்தது?’ என்று கேட்டேன். ‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும், தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் தான் சிறந்தவர்கள்’ என நபி (ஸல்) பதில் உரைத்தார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), புகாரி)
‘தம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றியிருந்தால், சொர்க்கத்தின் கதவை முதலில் தட்டுபவர்கள் அடிமைகளாகத்தான் இருப்பர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்ர் (ரலி), அஹ்மது).
அடிமைகளும் எஜமானர்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளும்போது இறைவனிடம் ஈடு இணையில்லாத நற்கூலி அவர்களுக்கும் உண்டு.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
நோய்வாய்ப்பட்டு மரணத் தருவாயில் கிடந்த ஒரு வாலிபனிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். “எப்படி இருக்கிறீர்கள்?”.
“இறைத்தூதர் அவர்களே, அல்லாஹ்வின் அருள் மீது நம்பிக்கை வைத்தவனாகவும், என் பாவங்களை நினைத்து பயந்தவனாகவும் இருக்கிறேன்”.
“இந்த இரண்டு சிந்தனையும் எந்த மனிதனின் உள்ளத்தில் இருந்தாலும் சரியே, அல்லாஹ் அவனுடைய நம்பிக்கைக்கு மோசம் செய்யமாட்டான். அவன் பயப்படுவதிலிருந்து பாதுகாப்பும் கொடுப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோய் மூலம் உடலாலும் உள்ளத்தாலும் மனிதன் அடைகின்ற பலா பலன்கள் ஏராளம். அவை:
1) தீமைகள் மன்னிக்கப்படுகின்றன
‘நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு சிறிய சோதனையோ, கவலையோ, துக்கமோ, ஒரு முள் குத்துவதால் வரும் சிறிய வேதனையோ, எது வந்தாலும் சரி அதன் மூலம் அல்லாஹ் அவனின் பாவங்களை மன்னிக்காமல் விடுவதில்லை’.
ஒரு முஸ்லிம் பாவங்கள் செய்து அவை மன்னிக்கப்பட அவன் வேறு முயற்சிகள் செய்யாதபோது கவலை, நோய் போன்றவற்றால் அல்லாஹ் அவற்றை மன்னிக்கின்றான்.
எனவேதான் அரபியில் ஒரு பழமொழி கூறப்படுகிறது. ‘சோதனைகள் மட்டும் இல்லாவிட்டால் மறுமையில் நாம் நன்மைகள் இல்லாதவர்களாக அல்லாஹ்வின் முன் நிற்போம்’.
2) மறுமையில் பன்மடங்கு நன்மைகள்
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸ் திர்மிதியில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது. “மறுமையில் ஒரு கூட்டத்தினர் இப்படி நினைப்பார்கள். உலகில் வாழ்ந்தபோது தங்களின் உடல்கள் வெந்நீரில் கொதிக்க வைக்கப்பட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?. காரணம் உலகில் சோதிக்கப்பட்டவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நன்மைகளை கண்ணால் காணுகின்ற போது இப்படி நினைப்பார்கள்.
3) நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம்
சாதாரண நெருக்கமல்ல மிக அதிக நெருக்கம். மறுமையில் அல்லாஹ் கேட்பான், “ஆதத்தின் மகனே, உலகில் நான் பசித்திருந்தேன், தாகித்திருந்தேன், நீ ஏன் உணவளிக்கவில்லை; நீர் புகட்டவில்லை என்று தொடங்கும் ஹதீஸின் தொடரில் ‘நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை நீ நலம் விசாரிக்கவில்லையே’ என்று கேட்டு “இன்ன அடியான் நோயாளியாக இருந்தான், அவனை நோய் விசாரித்திருந்தால் என்னை அங்கு நீ கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்த ஹதீஸில், நோய் நலம் விசாரிப்பதைப் பற்றிக் கூறும்போது ‘என்னையே அங்கு கண்டிருப்பாய்’ என்கிறான். அந்த அளவுக்கு நோயாளியுடன் அல்லாஹ்வின் நெருக்கம் இருக்கிறது.
‘உள்ளங்கள் உடைந்து போன மனிதர் களுக்கருகில் நான் இருக்கிறேன்’ என்ற ஹதீஸ் குத்ஸியும் இதையே வலியுறுத்துகிறது.
4) பொறுமையின் அளவைத் தெரிந்துகொள்ள
சோதனைகள் இல்லையெனில் பொறுமையின் சிறப்பு வெளியே தெரியாது. பொறுமை எல்லா நன்மையையும் கொண்டு வரும்.
‘அதிக நற்கூலி அதிக சோதனைகளில் உள்ளது. யாரை அல்லாஹ் சோதிக்கின்றானோ அவரை அல்லாஹ் அதிகம் நேசிக்கின்றான். யார் சோதனைகளைப் பொருந்திக் கொள்கிறாரோ அவரை அல்லாஹ்வும் பொருந்திக்கொள்கிறான். அவற்றைக் கண்டு கோபப்படுகின்றவர் மீது அல்லாஹ்வும் கோபப்படுகிறான்’ என்று நபி (ஸல்) கூறுகிறார்கள்.
5) உள்ளத்தால் இறைவனைத் தேடுதல்
அல்லாஹ்வை மறந்து அவனிடம் பிரார்த்திக்காமல் ஓர் அடியான் இருந்தால் அவனை சோதிக்க அல்லாஹ் நோயை கொடுக்கின்றான். நோய்வாய்ப்பட்டவன் இறைவனை அதிகமாக நினைப்பதை நாம் கண்கூடாகக் காண்பதுண்டு.
“அவனை ஏதாவது ஒரு தீங்கு தொட்டாலோ நீண்ட நெடிய இறைஞ்சுதல்களைப் புரியத் தொடங்குகிறான்”. (திருக்குர்ஆன் 41:51)
‘நீண்ட நெடிய இறைஞ்சுதல்கள்’ என்று இறைவனே கூறுவதைக் கவனியுங்கள். ஏதோ படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அப்போதுதான் உணர்ந்தவன் போல் ஆகிவிடுகின்றான். சோதனைகளின் போதுதான் ‘தான் இறைவனின் அடிமை’ என்ற உணர்வு ஏற்படுகிறது.
6) பெருமை, கர்வம், தலைக்கனம் தகர்க்கப்படுகின்றன
இவை ஒருவனிடம் குடிகொள்ளும்போதுதானே தலைகால் தெரியாமல் ஆடுகிறான். நோயை அவனுக்குக் கொடுக்கும் போது பசித்திருக்கின்றான். வேதனையை அனுபவிக்கின்றான். அதற்காக யாரிடமும் கோபப்பட முடிவதில்லை. உள்ளம் உடைந்துபோய், பெருமை, கர்வம் பறந்து போய் விடுகிறது.
‘உள்ளங்கள் உடைந்து போனவர்களுடன் நான் இருக்கிறேன்’ எனும் அல்லாஹ்வின் வாக்கும் ‘அநீதி இழைக்கப்பட்டவன், பயணி, நோயாளி ஆகியோரின் பிரார்த்தனைகள் உடனே ஏற்றுக்கொள்ளப்படும்’ எனும் நபிமொழியும் ஒரே கருத்தையே வலியுறுத்துகிறது.
7) நோயாளிக்கு அல்லாஹ் நன்மையை நாடுதல்
நபி (ஸல்) கூறினார்கள்: ‘எவருக்கு இறைவன் நன்மை செய்யவேண்டும் என்று விரும்புகின்றானோ அவரை சோதிப்பான்’ (நூல்: புகாரி). எனவே எவருக்கு நன்மை செய்ய இறைவன் நாடவில்லையோ அவருக்கு எந்தச் சோதனையும் இல்லை. நோயும் ஒரு சோதனைதானே.
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் உடல் ஆரோக்கியமுள்ள திடகாத்திரமான ஒரு கிராமவாசியை சந்திக்கிறார்கள். அவருடைய உடல் வலிமையை ஆச்சரியத்துடன் நோக்கியவர்களாய் அவரிடம் கேட்டார்கள்.
“எப்போதாவது கடும் வேதனையுடன் கூடிய உடல் சூட்டை அடைந்திருக்கின்றாயா?”
“அப்படி என்றால் என்ன?”
“காய்ச்சல்”
“காய்ச்சல் என்றால் என்ன?”
“தோலுக்கும் எலும்புக்கும் இடையே ஏற்படும் கடும் சூடு”.
“என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவிக்கவில்லை”
“எப்போதாவது தலைவலி வந்ததுண்டா?”
“தலைவலி என்றால் என்ன?”
“நெற்றியின் இரண்டு கீழ்பகுதிக்கும் தலைக்குமிடையே ஏற்படும் கடும் வலி”
“என் வாழ்நாளில் அப்படி எதையும் நான் அனுபவித்தது இல்லை”.
அந்த மனிதர் சென்ற பின் நபி (ஸல்) தம் தோழர்களிடம் கூறினார்கள், “நரகவாசியைக் காண வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இவரைக் கண்டு கொள்ளட்டும்”.
எனவே காய்ச்சலும் தலைவலியும் இறைவனின் கருணையே. ஓர் அடியான் நோயாளியாகிறபோது, சாதாரண வேளையில் எவ்வளவு நற்செயல்கள் செய்தானோ அதே கூலி இப்போதும் கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் நோயாளியானதால் நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டால் வானவர்களிடம் அல்லாஹ், ‘எனது அடியான் ஆரோக்கியமாக இருந்தபோது இரவும் பகலும் என்னென்ன நற்செயல்கள் செய்தானோ அதையே இப்போதும் எழுதுங்கள்’ என்று கூறுவான்”.
ஆக, நோய் என்றாலே நன்மைதானா? உலகில் மனிதர்களுக்கு இறைவன் அருளும் எல்லா அருட்கொடைகளையும் விட நோய்தான் சிறந்ததா? அப்படியானால் “இறைவா, எனக்கு என்றென்றும் நோயைத் தா” என்று பிரார்த்திக்கலாமா?
இல்லை; ஒருபோதும் அவ்வாறு பிரார்த்திக்கக் கூடாது. மாறாக நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்த மிகச்சிறந்த பிரார்த்தனையே “மன்னிப்பையும் உடல் நலத்தையும் அல்லாஹ்விடம் கேளுங்கள். இறைநம்பிக்கைக்குப் பின் ஆரோக்கியத்தைத் தவிர சிறந்த அருள் எதுவும் இல்லை” என்பதுதான்.
எனவே நோய் வந்துவிட்டால் மருத்துவம் பார்க்கச் சொல்லும் இஸ்லாம், அதே நேரம் பொறுமையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. நோய் என்பது சாபத்திற்குரிய துர்குறி அல்ல என்பதை நினைவில் நிறுத்துவோம்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
அதன்படி இந்த ஆண்டு மொகரம் பண்டிகை விழா தேசிய தர்காக்கள் பேரவை மற்றும் மொகரம் விழா கமிட்டி சார்பில் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ஷமிமுல்லாஷா பள்ளிவாசல் அருகே நேற்று முன்தினம் இரவு அலாவா எனப்படும் நேர்த்திக்கடனாக தீ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தர்காக்கள் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
அடிமை கலாசாரம் என்பது இன்று, நேற்று உருவாக்கப்பட்டது அல்ல. எப்போது போர் தொடங்கப்பட்டதோ அப்போது உருவாக்கப்பட்டதுதான் அடிமை கலாசாரம்.
சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருப்போர் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களை அடக்கி ஒடுக்கி, அவர்களின் உரிமைகளை பறிக்கத் துவங்கினார்களோ அன்றிலிருந்து சங்கிலித்தொடராக மரபு வழியாக வந்ததுதான் அடிமை முறை.
மனிதர்களை மனிதர்களே அடிமைப்படுத்துவதை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இஸ்லாம் அனுமதித்தது இல்லை. அடிமைகளை விடுவிப்பதற்கு ஆர்வமூட்டி, ஏராளமான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்துள்ளது. அடிமையை விடுதலை செய்வதும் இறைநம்பிக்கை ஆகும். அது உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாக அமையும் என்பதை இஸ்லாம் புரிய வைக்கிறது.
இந்த அடிமை முறை நபி (ஸல்) அவர்களின் வருகைக்கு முன்பே இருந்து வந்தது. நபி மூஸா (அலை) காலத்தில் எகிப்தை ஆட்சி செய்த சர்வாதிகாரி பிர் அவ்ன் இஸ்ரவேலர்களை ஒடுக்கி, அடிமைகளாக அடக்கி, இழிவாக நடத்தி வந்தான். அவனது அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க மூஸா (அலை) போராடினார்கள். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“எனவே, நீங்கள் இருவரும் பிர்அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: ‘நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள். எங்களுடன் பனூ இஸ்ராயீல்களை அனுப்பிவிடு’ (எனவும் கூறுங்கள்). அவன் (மூஸாவிடம்) கூறினான்: ‘நீர் குழந்தையாக இருந்த போது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா?, இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடம் நீர் தங்கவில்லையா?’ (திருக்குர்ஆன் 26:16-18)
‘பனூ இஸ்ராயீல்களை அடிமையாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இது நீ எனக்குச் சொல்லிக் காண்பிக்கக் கூடிய பாக்கியமா?’ என்று மூஸா (அலை) கூறினார்.’ (திருக்குர்ஆன் 26:22)
மரபு வழித் தொடரில் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் இந்த முறை தொடர்ந்தது. இருப்பினும் நபிகளார் அதில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை அடைப்பதற்கு நவீன சிறைக்கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு யார் கவனித்துக் கொள்வது?
இது போன்ற சிக்கல் இருப்பதினால்தான் போர்க் கைதிகளை போரில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சமமாக பங்கு வைத்து கொடுத்தனர். தமது பங்குக்கு பாத்தியப்பட்டவர்களை வேண்டுமானால் தங்களிடமே வைத்துக்கொண்டு வேலை வாங்குவார்கள். தேவையில்லாத பட்சத்தில் பிறருக்கு விலைபேசி விற்றும் விடுவார்கள்.
பெண் கைதிகளை பொறுத்த அளவில் அவர்கள் தங்களது எஜமானர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்து விடுவார்கள். எஜமான் தேவையென்றால் அவளுடன் குடும்பம் நடத்துவான். இல்லையென்றால் விற்றுவிடுவான். அவளுக்கென்று குறிப்பிட்ட எஜமான் இல்லாதபட்சத்தில் அவளை என்ன செய்தாலும் யாரும் கேட்க முடியாது. கூட்டுப் பலாத்காரத்திற்கு அவள் ஆளாகி விடக்கூடாது என்ற காரணங்களுக்காக ஒரு எஜமானனின் கட்டுப்பாட்டில் அவள் சென்று விடுகிறாள். இவர்களை பிணையில் எடுக்க சொந்தங்கள் முன் வந்தால் இவர்கள் அடிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எஜமானனுடன் குடும்பம் நடத்தி குழந்தைபேறு பெற்றெடுத்தால், தானாகவே அவள் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்றுவிடுவாள்.
அடிமைகள் விடுதலை பெறுவதற்கு எந்தெந்த வழிகளெல்லாம் உண்டோ அந்த வழிகளையெல்லாம் இஸ்லாம் பயன்படுத்தி, அடிமைகளை விடுவிப்பதற்கு பாடுபட்டது. அடிமைகளை விடுதலை செய்வதற்கு ஊக்குவித்தது.
‘ஒரு முஸ்லிமான அடிமையை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அவரின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக விடுதலை செய்தவருடைய ஓர் உறுப்பை இறைவன் நரகத்திலிருந்து விடுவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
‘இருவருக்குப் பங்குள்ள ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியுடையவராக இருப்பாராயின் அவ்வடிமையின் (சந்தை) விலை மதிப்பிடப்பட்டு (மீதி விலையும் செலுத்தப்பட வேண்டும்) பின்னர் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’, (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)
நபி (ஸல்) அவர்கள் தமது ஜீவிய காலத்தில் 63 அடிமைகளை விடுதலை செய்தார்கள். அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) 67 அடிமைகளை விடுதலை செய்திருந்தார்கள்.
அடிமைகளை விடுதலை செய்வதற்கு, அடிமைத் தன்மையை முற்றிலும் துடைத்து, அது இல்லாமல் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களும் பாடுபட்டார்கள். திருக்குர் ஆனும் உரத்த குரல் கொடுத்தது.
‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)’, (திருக்குர்ஆன் 90:11-17)
அடிமையை உரிமை விடுவது நரகத்திலிருந்து பாதுகாக்கும் எனும் நபிமொழியை கேட்டதும், திருக்குர் ஆனின் போதனையை ஏற்றதும் அலி பின் ஹூசைன் (ரஹ்) அவர்கள் தமது அடிமையைப் பார்த்து ‘நீ இன்று உரிமை பெற்றுவிட்டாய்’ என்று வாக்குமூலம் கொடுத்து, 10 ஆயிரம் வெள்ளிக்காசுகளையும் அவர் கையில் அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
‘ஸகாத் பணத்தால் அடிமைக்கு விடுதலை வழங்குவது’
ஸகாத் கொடுப்பது கடமையானவர், தம் ஸகாத்தை எட்டு வகையினருக்கு செலவு செய்யலாம் என திருக்குர்ஆன் பரிந்துரைக்கிறது. அவர்களில் ஒருவர் அடிமை ஆவார். அடிமையை விடுதலை செய்வதற்கும் ஸகாத் பணத்தை பயன்படுத்தலாம் என்பது சிந்திக்கத்தக்கது.
‘(ஸகாத் எனும்) தர்மங்கள் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் உரியவை’, (திருக்குர்ஆன் 9:60)
‘நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்றுவிட்டால், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அவனுடைய குடும்பத்தாருக்கு நஷ்டஈடும் கொடுக்க வேண்டும். அவர்கள் (நஷ்ட ஈட்டுத் தொகையை மன்னித்து) அதை தர்மமாக விட்டாலே தவிர; அவர் உங்களுக்கு எதிராகவுள்ள சமுதாயத்தைச் சார்ந்தவராகவும், நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தால், நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவர் உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தால், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கி, நம்பிக்கை கொண்ட அடிமையையும் விடுதலை செய்ய வேண்டும். (இதில் எதுவும்) கிடைக்காதோர் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். (இது) இறைவனின் மன்னிப்பாகும். அவன் அறிந்தவன்; ஞானமிக்கவன்’, (திருக்குர்ஆன் 4:92)
‘செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டாலும் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்’
‘உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக இறைவன் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான். அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே. (இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக்கொள்ளுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இறைவன் இவ்வாறே தமது வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான்’, (திருக்குர்ஆன் 5:89)
‘கோபத்தில் மனைவியை தாய் என்று கூறினால், அதற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.’
‘தமது மனைவியரைக் கோபத்தில் தாய் எனக்கூறிவிட்டு தாம் கூறியதைத் திரும்பப் பெறுகிறவர், ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதுவே உங்களுக்குக் கூறப்படும் அறிவுரை. நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். (அடிமை) கிடைக்காதவர் ஒருவரையொருவர் தீண்டுவதற்கு முன் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருக்க வேண்டும். யாருக்குச் சக்தியில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்’, (திருக்குர்ஆன் 58:3,4)
மனைவியைத் தாயுடன் ஒப்பிடுதல் அன்றைய அறியாமைக்கால மக்களிடம் இருந்து வந்த ஒரு மூட நம்பிக்கையாகும். இதை இறைவன் திருத்துகிறான். மனைவியை பிடிக்காத போது ‘உன்னை என் தாயைப் போல கருதிவிட்டேன்’ எனக்கூறி மனைவியோடு குடும்ப வாழ்க்கை நடத்தமாட்டார்கள். இதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. இறைவன் மேல் சத்தியமிட்டு இப்படிக் கூறினாலும் அந்தச் சத்தியத்தை முறித்து விட்டு, நான்கு மாதங்களுக்குள் மனைவியுடன் சேர்ந்து விட வேண்டும். அதற்கான பரிகாரத்தை மேற்கூறப்பட்ட வசனத்தின்படி செய்திட வேண்டும்.
‘ரமலான் நோன்பை மனைவியுடன் உறவு கொண்டு அதை முறித்தால், அதற்கு பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்’
ரமலான் நோன்பை ஒருவர் தமது மனைவியுடன் உறவு கொண்டு, அதை முறித்தால், அந்த நோன்பை திரும்பவும் நிறைவேற்றுவதுடன் அதற்கு பரிகாரமாக கணவன் ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதற்கு வசதி இல்லாத போது தொடர்ச்சியாக 60 நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இதுவும் இயலாமல் போனால் 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.
‘இரு ஹுதைல் குலத்துப் பெண்கள் சண்டையிட்டனர். ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளின் வயிற்றில் பட்டு விட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளின் வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்று விட்டாள். இந்த வழக்கு நபி (ஸல்) அவர்களிடம் வந்தது. சிசுவுக்காக ஓர் ஆண் அடிமை, அல்லது ஓர் பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தர வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
இவ்வாறு குற்றப்பரிகாரத்தின் வழியாக இஸ்லாம் அடிமைகளை உரிமை விடுவதின் மூலமாக அடிமைத்தனத்தை முற்றிலும் ஒழித்துக்காட்டியது. பிறப்பால், நிறத்தால், இனத்தால் இஸ்லாத்தில் அடிமை என்பதே கிடையாது. ஆண்டான், அடிமை என்ற கோஷமும் கிடையாது. மனிதன் மனிதனுக்கு அடிமையாக முடியாது. மனிதன் படைத்த இறைவனுக்கு மட்டுமே அடிமை என்ற தத்துவத்தை இஸ்லாம் இறுதியில் நிலை நாட்டியது.
‘உங்களில் ஒருவர் ‘எனது அடிமை, எனது அடிமைப் பெண்’ என்று கூற வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் இறைவனுக்கு அடிமைகள். உங்களில் உள்ள ஒவ்வொரு பெண்களும் இறைவனின் அடிமைப் பெண்கள். எனினும் அவர் ‘எனது பணியாள், எனது பணிப்பெண், எனது இளம் ஆண், எனது இளம் பெண்’ இவ்வாறு கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2-ந் தேதி சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கு இஸ்லாமே முன்னோடி. இறைவனே முன் உதாரணம். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே முன் மாதிரி, திருக்குர்ஆனே முன் அனுபவ வழிகாட்டி. அடிமைத்தனத்தை ஒழிப்பதும் இறைநம்பிக்கையே.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
அதனாலேயே அல்லாஹ் நமக்கென அருளியுள்ளவற்றுள் மிகச் சிறந்த செல்வமான குழந்தைச் செல்வத்தைப் போற்றிக்கொண்டாட நமக்கு நேரமில்லாமல் போய்விட்டது.
மனிதர்கள் அனைவருக்கும் பிள்ளைச்செல்வம் கிடைப்பதில்லை. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கே குழந்தைச் செல்வத்தை அளிக்கிறான். சிலருக்கு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அருளியது போல ஆண் மக்களாகக் கொடுக்கிறான். அல்லது லூத் (அலை) அவர்களுக்கு அளித்தது போல் பெண் மக்களாகக் கொடுக்கிறான். இன்னும் சிலருக்கோ நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கியது போல் ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்து கொடுக்கிறான்.
எனினும், மக்கள் ஆண் பிள்ளைகளையே விரும்புபவர்களாக இருக்கின்றனர். ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் உள்ள குடும்பங்களில் சில பெற்றோர் மகன்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை, பெண் மக்களுக்குத் தருவதில்லை.
இன்னும் அல்லாஹ் நாடியதாலேயே நம்மை, மனிதர்களாகப் படைத்துள்ளான். இவ்வுலகில் உயர்ந்த படைப்பாக மனிதர்கள் கருதப்படுகிறார்கள். மனிதப் படைப்பைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்.
‘நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்’. (திருக்குர்ஆன் 95:4).
இன்னும் நம்மில் பலர் நம்முடைய குழந்தைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் பிரார்த்தனை செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி, மறுமை நாள் வரை நம்மிலிருந்து வரக்கூடிய நம்முடைய சந்ததியினர் அனைவருக்கும் ‘துஆ’ (பிரார்த்தனை) செய்பவர்களாக இருக்க வேண்டும்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனிடம் இவ்வாறு பிரார்த்தனை புரிபவர்களாக இருந்தார்கள்: “மேலும் அவர்கள், ‘எங்கள் இறைவா, எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக. இன்னும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக’, என்று பிரார்த்தனை செய்வார்கள்” (திருக்குர்ஆன் 25:74).
“என் இறைவனே, என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே, என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக’ (திருக்குர்ஆன் 14:40).
“ஒருவர் தன் மனைவியிடம் நெருக்கமாக இருக்கும் நேரத்தில் ‘பிஸ்மில்லாஹ், இறைவா, சைத்தானை எங்களிடமிருந்து விலகி இருக்கச் செய். நீ எங்களுக்கு அளிக்கும் சந்ததியினரிடமிருந்தும், சைத்தானை விலகியிருக்கச் செய்’ என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால், அந்தச் சந்ததிக்கு சைத்தான் தீங்கு செய்யமாட்டான்’’ என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பெற்றோர்கள் தங்களுக்கு குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே அவர்களுக்காக ‘துஆ’ செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். ஜக்கரியா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் தனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியை தங்களின் முதுமைக்காலத்தில் கேட்டபொழுது, ஈசா (அலை) அவர்களின் வருகையை முன்னறிவிப்புச் செய்யக்கூடியவரான யஹ்யா (அலை) அவர்களை, அல்லாஹ் மகனாக வழங்குகிறான்.
கருத்தரித்ததை அறிந்தவுடன் பெற்றோர் இருவரும் அக்குழந்தைக்காக ‘துஆ’ செய்ய வேண்டும். தாய்மைப்பேறு அடைந்தவர்கள், தொழுகைகளை விடாமல் தொழக்கூடியவர்களாகவும், குர்ஆனை ஓதக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். பொய், புறம் பேசாமல், நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புவதுடன், ‘திக்ர்’ செய்பவர்களாகவும் மாற வேண்டும்.
ஆறு மாதக்கருவாக சிசு இருக்கும் நிலையில் அதற்கு கேட்கும் சக்தியை அல்லாஹ் அளிக்கிறான். எனவே பயனற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணாக்காமல், நம் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கேட்கும் பாக்கியத்தை வழங்குவது நம் கையிலேயே இருக்கிறது. இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்:
‘உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது’ (திருக்குர்ஆன் 64:15).
செல்வத்தை அல்லாஹ்விற்கு விருப்பமான வழியில் செலவழித்து, பிள்ளைகளையும் அவன் விரும்பும்படி வளர்க்கும் பெற்றோர்களுக்கு அல்லாஹ்விடம் மகத்தான கூலி உள்ளது என்ற இந்த வசனத்தின் மூலம் பிள்ளைகளை வார்த்தெடுப்பதில் நாம் தேர்ச்சி பெற்றால் மறுமை நாளிலும் அல்லாஹ்வினால் நற்கூலி கொடுக்கப்படுவோம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
மறுமையில் வெற்றி அடைவதற்கு பெற்றோர்கள் மட்டுமல்லாது, பிள்ளைகளும் தங்களின் அமல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். சுவனத்திற்கு அனுப்பப்படும் பெற்றோர்களின், குறையற்ற அமல்களின் காரணமாக கருணையின் பெருங்கடலான அல்லாஹ் அவர்களின் பிள்ளைகளையும் அவர்களுடன் சேர்த்து வைக்கக் கூடியவனாக இருக்கிறான். அதுபோலவே பிள்ளைகளின் நல்ல அமல்களின் பொருட்டு அவர்களுடன் சேர்த்து அவர்களின் பெற்றோர்களும் சுவனம் அனுப்பப்படுவதாக சொல்லப்படுகிறது.
நம் பிள்ளைகள் நம்முடைய அமானிதமாகவும் இருக்கிறார்கள். நம்மிடம் கொடுக்கப்பட்ட ஒரு அமானிதப் பொருளை எப்படி பத்திரமாக, கொடுத்தவரிடம் திருப்பிக் கொடுக்கிறோமோ, அதுபோல நம்முடைய மக்களை, அல்லாஹ்விடம் நன்மக்களாகத் திருப்பித் தரும் கடமையை பெற்றோர் இருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது இலேசான காரியம் அல்ல. பிள்ளைகள் வளரும் பருவத்தில் அவர்களுக்கு ஆடை, உணவு, அரவணைப்பு தரும் அதே நேரத்தில் ஒரு சிற்பியைப் போல அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் சீர்படுத்துவதில் அதிக கவனமும், அக்கறையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக செல்லமும் ஆபத்து, அதிக கண்டிப்பும் ஆபத்து. அன்பையும், கண்டிப்பையும் தேவைக்கேற்ப கொடுத்து, அவற்றுடன் இஸ்லாம் கூறும் நெறி முறைகளையும், விழுமியங்களையும் கற்பித்து வளர்க்க வேண்டும்.
பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் முதல் ஆசான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆகவே பெற்றோர்கள் சிறந்த ஆசிரியர்களைப் போல, மிகச் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினால், அவர்கள் எதிர்காலத்தில் நல்ல மாணாக்கர்களாக, இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அடையக்கூடியவர்களாக மாறுவார்கள், இன்ஷாஅல்லாஹ்.
ம.அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை -7
‘லைலத்துல் கத்ர்’ என்பதின் பொருள் ‘கண்ணியமிக்க இரவு’ என்பதாகும். இந்த இரவுக்கு இஸ்லாத்தில் தனி மரியாதையும், மாண்பும் இருக்கிறது. மேலும் அதற்கு பல விதமான சிறப்புகளும் உண்டு.
அது- இறையருள் இரங்கும் புனித இரவு, அபிவிருத்தி இறங்கும் அற்புத இரவு, பாவங்கள் மன்னிக்கப்படும் புண்ணிய இரவு, திருக்குர்ஆன் இறங்கிய திரு இரவு, ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு, வானவர்கள் வருகை புரியும் வசந்த இரவு.
மனிதன் பிறக்கும் முன்பே அவனது வயது, வாழ்வு, உழைப்பு, நன்மை-தீமை, மரணம், வாழ்வாதாரம் போன்ற விதி சம்பந்தப்பட்ட யாவும் இறைவனால் தீர்மானிக்கப்பட்ட பிறகு, அந்த விதியின் வினைகளை ஒவ்வொரு ஆண்டிலும் செயல்படுத்த ரமலானில் வரும் லைலத்துல் கத்ர் அன்று விதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் வித்தியாசமான விதி இரவு.
இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய அந்த மகத்தான இரவை யார்தான் அடையாமல் இருப்பார்?. இத்தகைய இரவை அடைய, அதன் முழுப் பயன்களையும் பெற, முழு உடலுழைப்பை பயன் படுத்திட வேண்டும். இந்த இரவின் மேன்மையையும், நன்மையையும் அடைவது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இஸ்லாம் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் பொருத்தமானதே.
லைலத்துல் கத்ரை அடைய ஒட்டுமொத்த உடல் சக்தியையும் முழுவீச்சில் உட்படுத்திட வேண்டும். ஆயிரம் மாதங்களை விட சிறந்த அந்த இரவின் சிறப்பை அடைய அனைத்துலக முஸ்லிம்களும் ரமலானின் கடைசிப் பத்து நாட்களிலும் உணவை சுருக்கிக் கொள்ள வேண்டும். தூக்கத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணர்வுடன் விழித்துக் கொண்டு இரவு நேர வணக்க வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
முன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே, இந்த இரவை அடைய அனைத்தையும் துறந்திருக்கிறார்கள். தமது குடும்பத்தினரையும் தூண்டியிருக்கிறார்கள். இதுதொடர்பான சில நபிமொழிகளை காணலாம்:
‘நபி (ஸல்) அவர்கள் மற்ற எல்லா மாதங்களை விடவும் ரமலான் மாதத்தில் கடுமையாக முயற்சி செய்து, வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். அதிலும் குறிப்பாக கடைசிப் பத்து நாட்களில் முழுவீச்சில் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘(ரமலானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். இரவை இறைவனைத் தொழுது உயிர்ப்பிப்பார்கள். (இறை வணக்கத்தில் ஈடுபட) தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)
‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி).
ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான பிறை 21, 23, 25, 27, 29 ஆகிய ஐந்து தினங்களில் ஏதேனும் ஓர் இரவில் அது அமைந்துள்ளதாக அறியமுடிகிறது. ரமலான் 27-ம் இரவிலும், அது வர வாய்ப்புள்ளதாக பின்வரும் நபிமொழி ஆதாரமாக உள்ளது.
‘லைலத்துல் கத்ர் இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத்)
அந்த இரவு 27-ல் மட்டுமே இருப்பதாகச் சொல்லவில்லை. அதிலும் உள்ளது; மற்ற இரவுகளிலும் இருக்க வாய்ப்புள்ளது எனும் தொனியில் இந்த கருத்தை நபிகளார் பதிவு செய்துள்ளார்கள்.
அது எந்த இரவு என்பதை அறிவிப்பதற்காக நபி (ஸல்) வெளியே வந்தபோது, இரண்டு நபித்தோழர்கள் தங்களுக்குஇடையே கொடுக்கல்-வாங்கலில் கருத்து முரண்பாடு கொண்டு, சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டிருந்தனர். அந்த சண்டையை விலக்க நபி (ஸல்) அவர்கள் கவனம் செலுத்திய போது ‘அது எந்த இரவு?’ எனும் குறிப்பு அவர்களின் நினைவில் இருந்து அகன்றுவிட்டது. இருவரின் சண்டையால் பாக்கியமிக்க அந்த இரவின் குறிப்பிட்ட தினம் மறைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“லைலத்துல் கத்ரைப் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகளார் ‘லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்போது இன்னாரும், இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது. அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: உபாதா பின் ஸாமித் (ரலி), புகாரி)
அந்த ஒற்றை இரவு மறைக்கப்பட்டதும் இந்த சமுதாயத்திற்கு நன்மைதான். குறிப்பிட்ட அந்த இரவில் மட்டும் வணங்கும் நிலைமாறி, கடைசிப் பத்து இரவுகளிலும் வணக்கம் புரியும் மிகப்பெரும் பாக்கியம் கிடைக்கிறது.
அந்த இரவு வேறெந்த சமுதாயத்திற்கும் வழங்கப்படவில்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
‘பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒரு மனிதர் இரவு முழுவதும் நின்று வணங்குவார். காலை உதயமானதும் மாலை வரை எதிரியைச் சந்திக்க போர்க்களம் சென்று போராடுவார். இவ்வாறு அவர் ஆயிரம் மாதங்கள் ஈடுபட்டார்’ என முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள்.
இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.
உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)
“நிச்சயமாக நாம் அதை (திருக்குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் வானவர்களும், ஆன்மா எனும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்”. (திருக்குர்ஆன் 97:1-5)
“இதை (திருக்குர்ஆனை) பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் (லைலத்துல் கத்ரில்) முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது. அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்”. (திருக்குர்ஆன் 44:3,4,5)
அந்த இரவை அடைய முதலில் முயற்சி தேவை. அடுத்த கட்டமாக இரவு வணக்கம் புரிய ஆவல் அவசியம். இதுகுறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒரு நபிமொழியில் பதிவாகியுள்ளது.
‘யார் லைலத்துல் கத்ரில் இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்கினாரோ அவர் (அதற்கு) முன் செய்த (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
“இறைத்தூதர் அவர்களே, ‘நான் லைலத்துல் கத்ரை பெற்று விட்டால் என்ன பிரார்த்தனை புரிய வேண்டும்?’ என ஆயிஷா (ரலி) நபிகளாரிடம் கேட்டார்கள். அதற்கு நபிகளார் ‘இறைவா, நீ மன்னிப்பவன். நீ மன்னிப்பை விரும்புகிறவன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று நீ கேட்பீராக’ என்று இவ்வாறு கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: இப்னுமாஜா).
இஸ்லாமிய ஆண்டின் பொதுப்பெயருக்கே இவ்வளவு அர்த்தங்கள் இருக்கும் என்றால் அது தோன்றிய வரலாறும் எவ்வளவு முக்கியத்துவமிக்கதாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம். அந்த வரலாறை அறிந்துகொள்வோம் வாருங்கள்...
அது உமர்(ரலி)யின் உன்னதமான ஆட்சிகாலம். கடிதங்கள் பல திசைகளிலிருந்து வருவதும், போவதுமாய் இருந்தன. அன்றொருநாள் கூஃபா நகரின் ஆளுநர் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்து கடிதம் ஒன்று வந்திருந்தது.
அதில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘ஆண்டுக்கணக்கு என்று எதுவும் நம்மிடம் இல்லாமல் இருப்பதால், அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் எதுவும் அது எந்த வருடம் நிகழ்ந்தது என்று தெரியாமல் அனைவரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. எனவே, விரைவாக தாங்கள் இதற்கு நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’.
இதன் அடிப்படையில் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், நபிகளார் பிறந்த தினம், மரணித்த தினம், நபி பட்டம் பெற்ற தினம், நபி ஹிஜ்ரத் செய்த தினம் என நபிகளாரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு திருப்புமுனை தினங்கள் முன் மொழியப்பட்டு, இவற்றில் ஏதோ ஒன்றை நாம் தேர்வு செய்து அந்த நாளிலிருந்து நமது இஸ்லாமிய ஆண்டைத் தொடங்கலாமே என ஆலோசிக்கப்பட்டது.
அப்போது அவற்றில் அலி (ரலி) அவர் களின் கருத்தான ‘ஹிஜ்ரத் தினம்’ ஏக மனதுடன் தேர்வாகி அன்று முதல் இந்த ‘ஹிஜ்ரி ஆண்டு’ என்ற சொல் அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் உச்சரிப்புப் பெறத் தொடங்கிற்று. நபிகளார் மரணித்து சுமார் பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹிஜ்ரியாண்டு உருவானது.
‘அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்’ என்ற திருவாசகத்தை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்று வாழ வேண்டும் என்று மக்கா நகரத்து மக்களிடம் நபி களார் சொன்னபோது, தினம் ஒரு தெய்வம் என்று வாழ்ந்து வந்த மக்காவாசி களால் அவ்வளவு சீக்கிரம் இக்கோட்பாட்டை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதன் எதிர் விளைவாகத் தான் நபி களார், அவர்கள் பிறந்த ஊரிலிருந்தே விரட்டப்பட்டார்கள். அப்போது அவர்கள் அடைக்கலம் தேடி பயணப்பட்ட ஊர் தான் மதீனா. நபிகளாரின் அந்த புனிதப் பயணத்திற்குத் தான் ‘ஹிஜ்ரத்’ என்று பெயர். இது குறித்து திருக்குர்ஆன் வசனம் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘இன்னும் எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் பெற்றுக்கொள்வார்; இன்னும், தம் வீட்டை விட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால், அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவனாகவும், பேரன்பு மிக்கவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:100)
‘ஹிஜ்ரத்’ என்பது ஊர் விட்டு ஊர் செல்வதில் மட்டும் இல்லை. நாம் நமது அன்றாடப்பாவங்களை முற்றிலும் விட்டொழிப்பதிலும் இருக்கிறது என்கிறது இந்த நபிமொழி:
‘எவர் சின்னச்சின்ன குற்றங்களை, பாவங்களை விட்டு விடுகிறாரோ அவரே ஹிஜ்ரத் செய்தவராவார்’. (நூல்: மிஷ்காத்)
நாயகத் தோழர் ஒருவர் கேட்டார்: ‘தூதரே! ஹிஜ்ரத்தில் சிறந்தது எது?’
‘உன் ரப்பு உனக்கு எதை வெறுத்திருக்கிறானோ அதை நீயும் வெறுத்து விடு’ என்று பதிலளித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். (நூல்: அஹ்மது)
உங்களில் எவர் தீமையைக் காண் கிறாரோ முதலில் அவர் அதை தமது கையால் தடுக்கட்டும். இயலாவிடில் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் இயலவில்லையெனில், மனதளவில் வருத்தப் படட்டும். இதுதான் ஈமானின் மிகப்பலவீனமான நிலையாகும். இந்த நபிமொழி நமக்கான நல்வழியை அவரவர் சக்திக்கு ஏற்ப செயல்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறது.
இன்னொரு முக்கியச் செய்தியும் நமக்கு இன்னொரு நபிமொழியில் இப்படி இருக்கிறது:
‘எவர் குழப்பமான காலங்களில் நன் முறையில் வணக்கம் புரிகிறாரோ, அவர் என்னை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர் போன்றவர் ஆவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)
‘இபாதத்’ (வணக்கம்) என்பது ஹஜ், ஜகாத், நோன்பு, தொழுகை மட்டுமல்ல. அதையும் தாண்டி நாம் செய்யும் எந்தவொன்றும் அது அந்த அல்லாஹ், ரசூலுக்கு விருப்பமானதாக, கட்டுப்பட்டதாக இருக்கும் நிலையில் நிச்சயம் அதுவும் ஒரு இறைவணக்கம் தான்.
‘புன்முறுவல் பூப்பது கூட ஒரு தர்மம்’ என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இந்தச்செயல் வெளித்தோற்றத்தில் சிறியது தான். என்றாலும் அதன் உள் வீரியம் அழுத்தமானது; வணக்கம் என்ற நிலையில் வைத்துப் பார்க்கத்தக்கது என்ற செய்தியை இந்த நபி மொழி நமக்கு நன்கு தெரிவிக்கிறது.
‘ஹிஜ்ரத்’ என்பது வெறும் ஒரு இஸ்லாமியப் புத்தாண்டின் தொடக்கம் மட்டுமல்ல, அது ஒரு தியாகத்தின் தொடக்கம். அதனால் தான் ஆண்டின் ஆரம்பத்திலேயே நோன்பு வைக்கச் சொல்கிறது இனிய இஸ்லாம். அதற்கு ‘முஹர்ரம் நோன்பு’, ‘ஆசூரா நோன்பு’ என்று பெயர். ‘புத்தாண்டில் நீ புத்தம் புது சந்தோஷங்களோடு இருக்கலாம், அது தவறல்ல. ஆனாலும் நீ உன்னைச் சுற்றியுள்ள ஏழைகளின் பசியை என்றைக்கும் மறந்து விடாதே’, என்பது தான் அந்த நோன்பின் அடிப்படைத் தத்துவம். அதை நாம் என்றைக்கும் மறந்து விடக்கூடாது.
குறிப்பாக, ‘ஹிஜ்ரத்’ என்பதே நபிகளாரின் தியாக வாழ்க்கையைத் தானே முன்னிறுத்துகிறது. அந்த தியாகத்தை என்றைக்கும் நாம் நினைவு கூறிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவும் உடல், பொருள், ஆவி (உயிர்) என நம்மிடம் இருப்பவற்றில் இருந்தெல்லாம் தியாகம் செய்துகொண்டேயிருக்க வேண்டும். காரணம் நம்மிடம் இருப்பவை யாவுமே உண்மையில் நம்முடையதல்லவே. எல்லாம் அவனுடையது தானே. அவனுடையவைகளை அவனுக்காக கொடுப்பதில் நமக்கென்ன தயக்கம். அத்தகைய தியாகப்பண்பும், ஈகைத் தனமும், துறவு நிலையும் நமக்குள் வராதவரை நமது ஹிஜ்ரி வருடங்கள் அர்த்தமற்றவை தான்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
‘இஃதிகாப்’ என்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இதன் பொருள், ஒரு செயலை பற்றிப்பிடித்துக் கொண்டு, அதன் மீது மனதை பறிகொடுத்து, அதை சிறைவைப்பது ஆகும்.
இஸ்லாம் கூறும் இஃதிகாப் என்பது ரமலான் மாதத்தில் பிறை 21-ல் இருந்து 30 வரை கிட்டத்தட்ட பத்து நாட்கள் வரை நோன்பாளிகள் ஜூம்ஆ எனும் வெள்ளிக்கிழமை சிறப்புத்தொழுகை நடைபெறும் இறையில்லம் சென்று, இறைவனிடம் தஞ்சமடைந்து, உலக காரியங்களிலிருந்து விலகி, மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை இனியமுறையில் தியானிப்பதற்கு சொல்லப்படும்.
இந்த தியானத்தில் உடல் சார்ந்த பங்களிப்புகள் அதிகம் இருப்பதால் இது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாகவும், உடல் சார்ந்த வணக்கமாகவும் உற்று கவனிக்கப்படு கிறது.
மனது இறை சிந்தனையில் திளைத்தாலும், உடல் இறை உணர்வுடன், இறைபக்தியுடன் செயல்படும். பசித்திருப்பது, தனித்திருப்பது, விழித்திருப்பது போன்ற உடல்கூறு அம்சங்கள் இஃதிகாபில் வெளிப்படுகிறது.
ஒரு முஸ்லிம் ரமலானின் கடைசிப் பத்து தினங்களில் ஏதேனும் ஒரு இறையில்லத்தில் இஃதிகாப் இருந்து வரும் போது, பசித்திருந்து நோன்பிருப்பது, தனித்திருந்து தியானிப்பது, விழித்திருந்து இரவு வணக்கத்தில் ஈடுபடுவது என்பன போன்ற செயல்பாடுகள் அரங்கேற்றப்படுகிறது. அவரின் உடல் ஒரு பக்கம் நோன்பிருக்கிறது. மறுபக்கம் தனிமையில் தியானிக்கிறது. இன்னொரு பக்கம் விழித்துக் கொண்டே விழிப்புணர்வுடன் செயல்படுகிறது.
நோன்பு என்பது உள்ளம் சார்ந்த சீர்திருத்தத்தை செவ்வன செய்கிறது என்றால், இஃதிகாப் என்பது உடலை சீர் செய்கிறது. பாவங்களிலிருந்து உட லுறுப்புகளை பாதுகாக்கிறது. இதன் அழகிய விவரத்தை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
‘அறிந்து கொள்ளுங்கள், மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீராகி விட்டால் (மனித) உடலுறுப்புகள் யாவும் சீராகிவிடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகிவிடும். அறிந்து கொள்ளுங்கள் அதுதான் உள்ளம் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவி மடுத்துள்ளேன்’. (அறிவிப்பாளர்: நுஃமான் பின் பசீர் (ரலி), புகாரி)
‘இஃதிகாப் இருப்பவர் பாவங்களை விட்டும் பாதுகாக்கப்படுகிறார்; நற்செயல் கள் அனைத்தையும் செய்பவரைப் போன்ற நன்மைகள் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)
இஃதிகாபின் செயல்பாடுகள் மூன்று விதங்கள் ஆகும். அவை:
1) அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் இறையில்லத்திற்கு சென்று வரும்போது ‘இந்த இறையில்லத்தில் இருக்கும் போதெல்லாம் நான் இறைஉணர்வோடு, இஃதிகாப் எண்ணத்தோடு, இறையில்லத்தின் தொடர்பில் இருக்கிறேன்’ என மனதில் உறுதி கொள்ள வேண்டும். இதற்கு உபரியான (நபில்) இஃதிகாப் என்று கூறப்படுகிறது.
2) எனக்கு ஏதேனும் தேவை நிறைவேறினால், இறைவனின் நாட்டப்படி இத்தனை நாள், அல்லது ஒரு பகல், அல்லது ஒரு இரவு இறையில்லம் சென்று, இறைவுணர்வுடன் இறைதொடர்பில் என் உடலையும், என் உள்ளத்தையும் ஐக்கியமாக்கிக் கொள்கிறேன் என்று நேர்ச்சை செய்வது. இவ்வாறு நேர்ச்சை செய்வது கடமை (வாஜிப்) ஆகும். அதை நிறைவேற்றுவது கட்டாயமாகிவிடும்.
‘மஸ்ஜிதுல் ஹராமி (கஅபாவி)ல் ஓர் இரவு இஃதிகாப் இருப்பதாக அறியாமைக்காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்’ என்று உமர் (ரலி) நபி (ஸல்) அவர் களிடம் கூறினார். அதற்கு நபிகளார் ‘உமது வேண்டுதலை நிறைவேற்றுவீராக’ என்றார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)
இறையில்லத்தில் இஃதிகாப் இருப்பதாக வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவது கட்டாயம் (வாஜிப்) ஆகிவிடும்.
3) ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்கள் முழுவதுமோ, அல்லது ஓரிரு நாட்களோ இறையில்லத்தில் இஃதிகாப் இருப்பது வலியுறுத்தப்பட்ட நபி வழிமுறை ஆகும்.
ரமலானில் கடைசிப் பத்து தினங்களில் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தொடராக இஃதிகாப் இருந்து வந்துள்ளார்கள். இது நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்டது மட்டும் அல்ல, இறைவனாலும் வலியுறுத்தப்பட்ட வணக்கமாகத் திகழ் கிறது.
‘நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. உங்களுக்கு நீங்களே துரோகம் செய்து கொண்டிருந்தது இறைவனுக்குத் தெரியும். எனவே உங்கள் மன்னிப்பை ஏற்று, உங்களைப் பிழை பொறுத்தான். இப்போது (முதல்) அவர்களுடன் கூடுங்கள், இறைவன் உங்களுக்கு விதித்ததை (சந்ததியை)த் தேடுங்கள். வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிற்றிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள். பள்ளிவாசல்களில் தனித்து (இஃதிகாப்) இருக்கும்போது மனைவியருடன் கூடாதீர்கள். இவை இறைவனின் வரம்புகள். எனவே, அவற்றை நெருங்காதீர்கள். தன்னை அஞ்சுவதற்காகத் தனது வசனங்களை இறைவன் மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்’. (திருக்குர்ஆன் 2:187)
சூரியன் அஸ்தமானதில் இருந்து மறுநாள் சூரியன் அஸ்தமாகும் வரைக்கும், ஒரு நாள் இஃதிகாபாக கருதப்படுகிறது. ரமலானில் இஃதிகாப் இருப்பதின் பிரதான நோக்கம் யாதெனில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ‘லைலத்துல்கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவின் பலனை அடைவதாகும்.
ஆரம்ப காலங்களில் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ‘லைலத்துல் கத்ரை’ அடைய மஸ்ஜித் நபி பள்ளிவாசலில் ரமலானின் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். அதில் அந்த இரவு இல்லை எனத் தெரிந்ததும் இரண்டாவது பத்தில் இஃதிகாபை தொடர்ந்தார்கள். இரண்டாவது பத்திலும் அது இல்லை என அறிந்ததும் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலினுள் அமைக்கப்பட்ட கூடாரத்திலிருந்து வெளியேறி, ‘தோழர்களே, லைலத்துல்கத்ரைத் தேடி முதல் பத்து, மற்றும் இரண்டாவது பத்து ஆகிய இருபது நாட்கள் நாம் இஃதிகாப் இருந்தோம். எனினும், அது கடைசிப் பத்து நாட்களில் ஏதேனும் ஓர் இரவில் அமைந்திருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. எனவே நான் கடைசிப் பத்திலும் இஃதிகாபை தொடரப் போகிறேன். என்னுடன் தொடர விரும்புபவர்கள் தொடரலாம்’ என்றார்கள்.
‘நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி)
‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் (கடைசிப்) பத்து தினங்கள் இஃதிகாப் இருப்பார்கள். அவர்கள் மரணித்த ஆண்டில் (நடுப்பத்தையும் சேர்த்து) இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)
ஒரு மனிதன் வாழ் நாளின் கடைசி கட்டத்தை அடையும் போது, உலகத் தொடர்புகளை ஓரங்கட்டி விட்டு, இறையில்லத் தொடர்பையும், இறைவனின் நெருக்கத்தையும் இஃதிகாப் மூலம் பெற வேண்டும் என்பதை நபிகளாரின் இந்த செயல் ஒரு விழிப்புணர்வாக அமைந்திருக்கிறது.
ஆண்கள் இறையில்லங்களில் இஃதிகாப் இருப்பது போன்று, பெண்களும் தங்களது இல்லங்களில் இஃதிகாப் இருக்கலாம். இதற்கான அனுமதியை, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
‘நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருந்தார்கள். அவர் களுக்குப் பின் அவர் களின் மனைவியர் இஃதிகாப் இருந்தனர்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), புகாரி)
பெண்களைப் பொறுத்த அளவில் தமது இல்லத்தின் ஒரு ஓரப்பகுதியில் இஃதிகாப் எண்ணத்தில் இருந்து கொண்டே வீட்டு வேலைகளையும், கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், குடும்பத்தின் பிற உறவினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் தாராளமாகச் செய்யலாம். வீட்டை விட்டு அவசியமில்லாமல் வெளியே செல்லக்கூடாது. ஆண்களை விட பெண்களுக்கு இஃதிகாப் இருப்பது மிகவும் இலகுவானதாகும். பெண்கள் இதற்கு தமது கணவரிடம் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமானது.
இஃதிகாபின் நன்மைகள் வருமாறு:
இஃதிகாப் இருக்கும் போது, இறையில்லத்தில் தங்குவதினால் இறையில்ல நேசம் உள்ளத்தில் உதிக் கிறது. இறையில்லத்தில் தங்குவதால் தொழுகைகளை எதிர்பார்த்து இருக்கும் வாய்ப்பும், நன்மையும், வானவர்களின் ‘இறைவா, அவரை மன்னிப்பாயாக, அவருக்கு கிருபை செய்வாயாக’ என்ற பிரார்த்தனையும் கிடைக்கிறது.
இஃதிகாப் இருப்பதினால் உலகப்பற்று குறைந்து, இறைப்பற்று அதிகமாகிவிடுகிறது. இஃதிகாப் இருப்பதினால் தூங்குவது கூட இறைவணக்கமாக எழுதப்படுகிறது.
இஃதிகாப் பொறுமையை கற்றுத் தருகிறது. அது மன அமைதியை கொடுக்கிறது. திருக்குர் ஆனை ஓதுவதற்கும், அதன் தொடர்பில் நிலைத்திருப்பதற்கும் அது வழியை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இஃதிகாப், பாவ மீட்சி பெற பக்குவப்படுத்துகிறது. இரவு வணக்கம் புரிய வைக்கிறது. உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறது. உள்ளத்தை சீர்படுத்துகிறது.
இஃதிகாப் இருப்போர் தமது நலனுக்கும், தமது குடும்ப நலனுக்கும், நாட்டு நலனுக்கும், உலக அமைதிக்கும், சமூக ஒற்றுமைக்கும், மக்கள் நல்வாழ்விற்கும், அதிகம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார்.
மேற்கண்ட நன்மைகள் இஃதிகாப் இருப்பதன் மூலம் பெறலாம்.
மவுலவி அ.செய்யதுஅலி மஸ்லஹி, நெல்லை
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிராச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கிய ஆரம்ப காலத்திலேயே இந்த சமூக நோய்க்குப் பரிகாரம் காண்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கினார்கள்.
காலம் காலமாக மக்களிடையே ஊறிப்போன முடை நாற்றமெடுக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்துக்கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வன்மையாகக் கண்டிப்பதன் மூலம் மட்டும் காரியம் சாதித்துவிட முடியாது என்பதை பெருமானார் (ஸல்) அவர்கள் புரிந்துகொண்டார்கள். படிப்படியாகத்தான் இந்தப் பீடைக்கு பாடை கட்ட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். ஆம்.. மிகச் சிறந்த வழிமுறைகளினூடாக அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அடிமைத்தளையை ஒழித்துக்கட்டிய முறை ஆச்சரியம் மிக்கது.
அடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:
1) அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகள் என்ற சிந்தனையையும் உணர்வையும் மக்களிடையே பரப்பினார்கள். இறைவனை வழிபடுவதன் மூலம் மட்டுமே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு ஏற்படுமே தவிர, வேறு எதிலும் கிடையாது என்று சிந்தனையை மக்கள் மனங்களில் கட்டி எழுப்பினார்கள்.
2) மக்கள் மனங்களில் அன்பு, அரவணைப்பு, ஆதரவு, ஆறுதல் கூறுதல், கருணை ஆகிய அருங்குணங்களை வளர்த்து, அப்போதிருந்த அடிமைகளை ‘அம்போ’ என்று நடுத்தெருவில் தவிக்க விட்டுவிடாமல் அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தச் செய்தார்கள்.
3) அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதலை பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி.. பாழாய்போன அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
4) அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுதலைசெய்தனர்.
5) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.
6) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.
7) அடிமைகள் தங்களை விடுதலை செய்துகொள்ளநாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஜக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.
8) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி)
அஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். (புகாரி)
9) பல்வேறு குற்றங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் இனமாக அறிவிக்கவும் செய்கிறது.
உதாரணமாக; அ) ஒரு முஸ்லிம் தம் மனைவியுடன் ரமலானின் பகல் பொழுதில் பாலுறவு கொள்வதன் மூலம் நோன்பை முறித்துவிட்டால், இச்செயலுக்குத் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.
ஆ) ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது இத்தகைய உறவில் ஈடுப்பட்டாலும் இதே தண்டனை உண்டு என்று இஸ்லாம் அறிவித்தது.
இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். மட்டுமல்ல, உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவரை நரக நெருப்பில் இருந்து காப்பாற்ற உதவும் என்றும் அறிவித்தார்கள். (புகாரி)
இதனைச் செவியுற்ற ஆரம்ப கால முஸ்லிம்கள் தங்களிடமிருந்த அடிமைகளை மட்டுமல்ல, அடுத்தவர்களிடம் இருந்த அடிமைகளையும் விலைகொடுத்து வாங்கி இயன்ற அளவுக்கு உரிமை விட்டார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அன்னாரின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அப்பாஸ் (ரலி) 70 அடிமைகளையும், இப்னு உமர் (ரலி) 1000 அடிமைகளையும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) 30 ஆயிரம் அடிமைகளையும் விடுதலை செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. (நூல்: ஹுகூகுல் இன்சான் ஃபில் இஸ்லாம்)
அடிமைகளாக ஆக்கப்படுவோரிடம் மனித நேயத்தோடும் சகோதர பாசத்தோடும் நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி மூச்சின்போதுகூட “அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிநடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள்” (புகாரி). ‘அடிமை என்று அழைப்பதற்குக்கூட நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ (புகாரி).
இத்தகைய அருமையான மனிதாபிமானம் மிக்க திட்டங்களின் விளைவாக நாற்பது ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய உலகில் இருந்து அடிமைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அடிமைகளை விடுதலை செய்ய இவையல்லாத வேறு வழிமுறைகளைக் கையாண்டிருந்தால், சமூகத்தில் அடிமனதில் புரையோடிப்போயிருந்த இந்த அடிமை நோய் முற்றிலும் துடைக்கப்படாமல் இருந்திருக்கும். மட்டுமல்ல வேறுபல தீய விளைவுகளையும் தந்திருக்கும் என்பது சிந்தனைக்குரியது.
அடிமை வியாபாரம் அரபு நாடுகளில் இன்று கிடையாது. அதேசமயம் காலம் காலமாக மக்களை பல கோணங்களில் அடிமைகளாக்கி, அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டி, முதலாளித்துவத்தின் பெயரால் அவர்களை அடிமைகளாக்கி வைத்திருக்கும் போக்கு மேற்கத்திய நாடுகளில் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
இஸ்லாமியப் பார்வையில் நிதியுதவி வழங்கும் திட்டம் இரண்டு. ஒன்று ‘ஸதகா’ எனும் ‘தர்மநிதி’. மற்றொன்று ‘ஜகாத்’ எனும் ‘பொது நிதி’.
இந்த இரண்டு விதமான நிதி உதவிகளையும் இஸ்லாம் உடல் சார்ந்த இறை நம்பிக்கையின் பட்டியலில் சேர்த்துள்ளது. வெளிப் படையாக பார்க்கும் போது இவ்விரண்டுமே பொருள் சார்ந்த வணக்கமாகவும், பொருள் சார்ந்த இறைநம்பிக்கையாகவும் காட்சியளிக்கிறது.
அவ்வாறு இருந்தும் இவ்விரண்டையும் உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் வரிசையில் இணைத்ததற்கு முக்கியமான காரணம், பொருள் சம்பாதிப்பதற்கு அடிப்படையே உடல் உழைப்புதான்.
இவ்வாறு உடல் உழைப்பு மூலம் பொருளீட்டுவதினாலும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து தானதர்மம் செய்வதினாலும், கடமையான ஏழை வரியான ஜகாத்தை வழங்குவதினாலும், இவ்விரண்டையும் உடல் சார்ந்த இறைநம்பிக்கையில் இஸ்லாம் இணைத்திருக்கிறது.
‘ஸதகா’ என்பது ‘உபரியான தர்மம்’. இதில் பொருள் சார்ந்த பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கும். அறம் சார்ந்த, உடலுழைப்பு சார்ந்த பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
பசித்தவனுக்கு உணவு, தாகித்தவனுக்கு தண்ணீர், உடுக்கை இழந்தவனுக்கு உடை, வருமானம் இல்லாதவனுக்கு பணம், உதவி தேவைப்படுவோருக்கு உதவி என்று பிறரின் தேவைகளுக்கு ஏற்பத் தேவைப்படும் பொருட்களை வழங்குவதே ‘ஸதகா’ எனும் தர்மம் ஆகும்.
ஜாபிர் (ரலி) கூறுகிறார்: ‘நன்மையான ஒவ்வொன்றுமே தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (புகாரி)
‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: திர்மிதி)
‘மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவர் மற்றவரை தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும், அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மம் ஆகும். இன்சொல்லும் தர்மம் ஆகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
‘உன் மனைவியின் வாயில் ஒரு கவளம் உணவை ஊட்டுவதும் தர்மமே என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஃதுபின் அபிவக்காஸ் (ரலி), புகாரி)
‘செவிடருக்கும், வாய்பேச முடியாதவருக்கும் அவர்கள் விளங்கும் வரைக்கும் கேட்க வைப்பதும் தர்மமே. அநீதி இழைக்கப்பட்டவன் உதவி தேடும் போது அவனுக் காக விரைந்து செல்வதும் தர்மமே. பலவீனமானவருக்காக உதவிபுரிய உனது கையை உயர்த்துவதும் தர்மமே, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அஹ்மது)
மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் பலவிதமான தர்மகாரியங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்று கூட பொருளாதாரம் சம்பந்தப்பட்டது கிடையாது. இஸ்லாத்தின் பார்வையில் தர்மம் என்பது 90 சதவீதம் அறம், நல்லறம் சம்பந்தப்பட்டவையாகும்.
‘நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்’. (திருக்குர்ஆன் 2:272)
‘தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணிக்கும். தீய மரணத்தை தடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), திர்மிதி)
‘கஞ்சத்தனமும், தீயகுணமும் ஒரு இறைநம்பிக்கையாளரிடம் ஒன்று சேராது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி), நூல்: திர்மிதி)
இந்த நபிமொழிகளின் அடிப்படையில் இறைநம்பிக்கையாளர் உபரியான தான, தர்மம் செய்பவராகவும், கடமையான தர்மமாக உள்ள ஜகாத்தை நிறைவேற்றுபவராகவும் இருக்க வேண்டும்.
இதுவரை உபரியான தர்மங்கள் குறித்து பார்த்தோம். இனி கடமையான ஜகாத் குறித்து பார்ப்போம்.
ஜகாத் என்பது இஸ்லாமியச் சின்னம். இந்த ஜகாத் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் கடமையாக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் ரமலான் நோன்பும் கடமையாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகவும், ஐம் பெரும் கடமைகளில் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.
கிட்டத்தட்ட திருக்குர்ஆனில் 82 இடங்களில் தொழுகையுடன் ஜகாத்தையும் இணைத்து கூறப்பட்டிருக்கிறது.
‘தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்’. (திருக்குர்ஆன் 2:43)
ஜகாத் கடமையாகுவதற்கு சில தகுதிகள் உள்ளன. அவை: இறை விசுவாசியாக இருக்க வேண்டும், சுதந்திரமானவராக இருக்க வேண்டும், புத்தி சுவாதினமுள்ளவராக இருக்க வேண்டும், பருவ வயதை அடைந்திருக்க வேண்டும், 87 கிராம் தங்கமோ அல்லது 612 கிராம் வெள்ளியோ இருக்க வேண்டும். பணமாக இருந்தால் 612 கிராம் வெள்ளியின் மதிப்பில் ரொக்கம் இருக்க வேண்டும், பொருளின் மீது முழு அதிகாரம் படைத்திருக்க வேண்டும், இத்தகைய பொருளாதாரம் குறைவில்லாமல் ஒரு வருடம் முழுவதும் பரிபூரணமாக சேமிப்பில் இருக்க வேண்டும்.
இத்தகைய ஏழு பண்புகளும் ஒருவரிடம் பரிபூரணமாக அமைந்து விட்டால், அவர் ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதமோ, அல்லது வேறு மாதங்களிலோ கடமையான ஜகாத்தை நூற்றுக்கு இரண்டரை சதவீதம் இறைவன் சுட்டிக்காட்டும் எட்டு வகையினருக்கு வழங்கிட வேண்டும்.
இறைவன் சுட்டிக்காட்டும் அந்த எட்டு வகையினர் வருமாறு:
‘ஸகாத் எனும் நிதிகள் 1) வறியவர்கள், 2) ஏழைகள், 3) நிதியை வசூலிக்கும் ஊழியர்கள், 4) எவர்களுடைய இதயங்கள் (இஸ்லாத்தின் பால்) ஈர்க்கப்படுகின்றனவோ அத்தகைய (சகோதர சமுதாயத்த)வர்கள், 5) அடிமைகள் விடுதலை செய்வதற்கும், 6) கடனாளிகள், 7) இறைவனின் பாதையில் (அறப்போராட்டத்தில்) உள்ளவர்கள், 8) வழிப் போக்கர்கள் ஆகியோருக்கு உரியவை. இது இறைவன் விதித்த கடமையாகும். இறைவன் (யாவும்) அறிபவன்; மிக்க ஞானமிக்கவன்’. (திருக்குர்ஆன் 9:60)
மேற்கூறப்படும் எட்டு வகையினரில் இந்த காலத்தில் அடிமைகள் என்பது கிடையாது. அடிமை கலாசாரத்தை இஸ்லாம் முற்றிலும் ஒழிக்க பாடுபட்டது. செல்வந்தர்கள் தமது ஜகாத் நிதியை அடிமைகளை விடுதலை செய்வதற்கு பயன்படுத்திட அழகான வியூகம் அமைத்துக் கொடுத்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
மேலும் சகோதர சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் ஜகாத் நிதியை பயன்படுத்தலாம் என்று சிபாரிசு செய்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இவ்வாறு கொடுப்பதினால் அங்கே சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த வாய்ப்பை ஜகாத்தின் மூலம் நனவாக்கும்படி இஸ்லாம் கண்ட கனவு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
பொருளாதாரத்திலும் மனிதனிடம் ஏற்றத்தாழ்வு இருந்து விடக்கூடாது. பொருளாதாரம் செல்வந்தர்களிடம் மட்டுமே சுற்றிவராமல், ஏழைகளிடமும் செல்வச் சுழற்சியும், மறு மலர்ச்சியும் ஏற்பட ‘ஸகாத்’ எனும் ஏழைவரியான நலத்திட்டங்களையும், ‘ஸதகா’ எனும் தர்மநிதியையும் இஸ்லாம் செயல்படுத்தி, செல்வத்தை பரவலாக்கியது.
இஸ்லாம் ஒரு நடுநிலையான மார்க்கம். ஏழைகளை வாழ வைக்கும் மார்க்கம். தொழிலாளர்களை வாழவைக்கும் மார்க்கம். கடமையான ஸகாத்தை நிறைவேற்றாதவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு என இஸ்லாம் எச்சரிக்கிறது.
“இறைவன் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து, அவன் அதற்கான ஸகாத்தை நிறைவேற்ற வில்லையாயின், மறுமை நாளில் அச்செல்வம், கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு, தனது இரு விஷப் பற்களால் அவனது தாடையைக் கொத்திக்கொண்டே ‘நான்தான் உனது செல்வம்; நான் தான் உன் புதையல்’ என்று கூறும்” நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு திருக்குர்ஆனிலுள்ள (3:180) வசனத்தை ஓதிக்காட்டினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
‘ஸகாத் நிதி (ஸகாத் அல்லாத) பொருளாதாரத்துடன் கலந்துவிடுமானால் அந்த பொருளாதாரம் அழிந்துவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), பைஹகீ)
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
உலகில் உள்ள மற்ற எல்லா உயிரினங்களை விடவும், பல்வேறு வகையில் மனிதனை இறைவன் மேன்மையாக்கியே வைத்துள்ளான். மற்ற மிருகங்களும், பறவைகளும் தலை குனிந்து தான் நீர் அருந்தியாக வேண்டும். ஆனால், தனது இரு கைகளால் நீரை அள்ளி, தலை நிமிர்ந்து அதனை குடிக்கும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ளான்.
ஏன் என்றால், இந்த உலகில் தனது பிரதிநிதியாகத்தான் மனிதனை இறைவன் படைத்துள்ளான். அதனால் தான் மனிதனை, மிருங்கங்களை போல தலை குனிந்து நீர் அருந்தாமல், தலை நிமிர்ந்து நீர் அருந்த வைத்து கண்ணியப்படுத்தியுள்ளான்.
இதற்கு முக்கிய காரணம், ‘மனிதன், தன்னை (இறைவனை) வணங்க மட்டுமே தலைகுனிய வேண்டும்’ என்பது தான். ஆனால் மனிதனோ இன்று தன் சுயநலத் தேவைகளை பூர்த்தி செய்திட எதற்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் யாரிடமும் தலைகுனிய தயங்குவதில்லை.
இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனை நினைவுகூராமல், நிலையற்ற இந்த உலக வாழ்விற்காகவும், அற்ப சுய லாபத்திற்காகவும் மனிதன் செயல்படுகிறான். அதற்காக, அன்பை முறிப்பதையும், நீதியை கெடுப்பதையும், இரக்கத்தை கைவிட்டு அதனை தூக்கி எறிவதையும் சர்வ சாதாரணமாகச் செய்கின்றான். அது, ‘இறைவனுக்கு (இறைவன் மனிதனுக்கு செய்த உபகாரத்திற்கு) மாறு செய்வதாகவே ஆகிவிடுகிறது’.
இறைவனை நினைவுகூர்வது என்பது, அன்பு, நேர்மை, நீதி, பாசம், இரக்கம் ஆகியவற்றை ஒரு மனிதன் தன் மனதில் விதைப்பதாகவே அமையும். அவ்வாறு விதைப்பதே அந்த மனதை நமக்கு தந்த இறைவனுக்கு செய்யும் நன்றிக்கடனாக அமையும்.
அத்தகைய மனிதர்கள், தான் தவறு செய்யும் பட்சத்தில், தன் தவறை உடனே உணர்ந்து இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினால் அதனை அவன் ஏற்று மன்னிக்க தயாராக இருக்கின்றான். இதையே நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘உங்களில், வனாந்தரத்தில் (காட்டில்) காணாமல் போன தம் ஒட்டகம் (அது திரும்ப) கிடைக்கும் பொழுது (ஒருவன்) அடைகின்ற மகிழ்ச்சியை விட மிகஅதிகமான மகிழ்ச்சி (தவறை எண்ணி மனிதன்) மன்னிப்பு கோரும் போது இறைவனுக்கு ஏற்படுகிறது’.
இறைவனை நாம் நினைவு கூர்ந்தால், அந்த இறைவன் நம்மை எவ்வாறு நினைவு கூருகிறான் என்பதை அண்ணலார் இவ்வாறு இயம்புகிறார்கள்:
“என் அடியான் என்னைப்பற்றி என்ன நினைகின்றானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன். அவன் என்னை நினைவுகூரும் போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னை தன் உள்ளத்தில் நினைவுகூர்ந்தால், நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் (என்னை) நினைவு கூர்ந்தால், அந்த அவையை விட சிறந்ததோர் அவையினரிடம் அவனை நான் நினைவு கூருவேன். அவன் ஒரு சாண் அளவு என்னை நெருங்கினால், நான் ஒரு முழம் அளவுக்கு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவுக்கு என்னை நெருங்கினால் இரு கைகளின் நீள அளவிற்கு நான் (அதிகமாக) அவனை நெருங்குவேன். அவன் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவனை நோக்கி ஓடிச்செல்வேன்”, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
இஸ்ஸாம் வலியுறுத்தும் ஐந்து கடமை களான, கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் அனைத்தும் இறைவனை நினைவுகூர்வதை கொண்டும், அவனிடம் முழு ஆதரவு வைத்து பாவ மன்னிப்புகோருவதை கொண்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது. அக்கடமைகளின் நோக்கத்தை ஆழ்ந்து சிந்தித்தால் இதை புரிந்து கொள்ளமுடியும்.
இறைவனை நினைவுகூருவது குறித்து திருக்குர்ஆனும் இவ்வாறு கூறுகின்றது:
“(மனிதர்களே), என்னை நீங்கள் நினைவுகூருங்கள், நான் உங்களை நினைவுகூருகிறேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள்” (திருக்குர்ஆன் 2:152).
இறை வணக்கமும் இறைவன் மீது வைக்கின்ற நம்பிக்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை நபிகளார் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘நீ இறைவனை பார்ப்பதை போன்று வணங்க வேண்டும், அல்லது அவன் உன்னை பார்கின்றான் என்ற உளப்பூர்வமான உணர்வின் நம்பிக்கையோடு அவனை நீ வணங்க வேண்டும்’.
இதை நபிகளார் ‘இஹ்ஸான்’ என்று கூறினார்கள்.
எனவே மன்னிப்பாளனாகிய இறைவனை நமது நினைவில் நாம் என்றும் வைத்து போற்றுவோம். அதன்மூலம் அவனது பேரருளை பெற நம்மை தகுதியுடையோராக ஆக்கி மகிழ்வோம், ஆமின்.
மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக அமைந்துள்ளது. ரமலானில் பகல் காலங்களில் முஸ்லிம்கள் உண்ணாமலும், பருகாமலும், மனோ இச்சைகளை அனுபவிக்காமலும் நோன் பிருந்து இறைநம்பிக்கையை வெளிப்படுத்து கிறார்கள்.
நோன்பு உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக இருப்பதால், அவரவர் உடல் நலம் சார்ந்து நோன்பு நோற்பதும், நோன்பை விடுவதும், அதை நிரந்தரமாக விடுவதும், அல்லது தற்காலிகமாக கை விட்டு, பிறகு வைப்பதும் போன்ற பலவிதமான சூழ்நிலைகள் ஏற்படுகிறது.
உள்ளம் சார்ந்த, நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் இத்தகைய பலவிதமான சூழ்நிலைகள் ஏற்பட வாய்ப்பில்லை. நோன்பு உடல் சார்ந்த வணக்கமாக இருப்பதால் நோய் போன்ற காரணங்களினாலும், முதுமை போன்ற கஷ்டங்களாலும், பயணம் போன்ற அசவு கரியங்களாலும் நோன்பை தற்காலிகமாக விட்டு விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியும், சலுகையும் உண்டு.
சிரமங்கள் நீங்கியதும் விடுபட்டு போன நோன்புகளை நடப்பு ரமலான் முடிந்தபிறகு எதிர்வரும் ரமலானுக்குள் நிறைவேற்றிட வேண்டும்.
அவரவரின் உடல் அவருக்கு நன்றாக ஒத்துழைக்கும் நேரம் பார்த்து, வசதி வாய்ப்பை பெற்று, சீதோஷண நிலையையும் கருத்தில் கொண்டு விடுபட்டு போன நோன்புகளை நோற்பதில் அவர் மீது எந்தத் தவறும் கிடையாது. இஸ்லாம் மனித உடல் நலன்களை பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
இறைநம்பிக்கைக்குப் பிறகு செல்வங்களில் சிறந்த செல்வம் உடல் ஆரோக்கியமே என இஸ்லாம் சிறப்பித்து கூறுகிறது.
‘நீங்கள் இறைவனிடம் மன்னிப்பையும், உடல் சுகத்தையும் கேளுங்கள். ஏனெனில் இறைநம்பிக்கைக்குப் பிறகு உடல் சுகத்தை விட சிறந்ததொரு பாக்கியம் யாருக்கும் வழங்கப்படவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூபக்கர் (ரலி), நூல்: திர்மிதி, இப்னுமாஜா)
‘மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1) ஆரோக்கியம், 2) ஓய்வு, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
கஷ்டப்பட்டு நோன்பு நோற்பதை இஸ்லாம் விரும்பவில்லை. நலமாக, இஷ்டப்பட்டு நோன்பு நோற்பதை தான் இஸ்லாம் விரும்புகிறது.
சிறுவர்கள், புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள், வயது முதிர்ச்சி, நீங்காத நோய் ஆகியவற்றின் காரணமாக நோன்பு நோற்க சக்தியில்லாதவர்கள் மீது நோன்பை இஸ்லாம் கட்டாயப்படுத்தவில்லை.
85 கி.மீ. தூரம் பயணம் செய்பவர்கள், மாத விலக்கு அல்லது பேறுகால உதிரப்போக்கு உடைய பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள், நோன்பு நோற்பதால் நோய் குணமாகுவது தாமதமாகலாம் என அஞ்சும் நோயாளிகள் ஆகியோர் நோன்பை தற்காலிகமாக விட்டு விட்டு, பிறகு நோற்க வேண்டும். தள்ளாத வயது, நீங்காத நோய் கொண்டவர்கள் நோன்பை நிரந்தரமாக விட்டுவிடலாம். பிறகு இவர்கள் நோன்பு நோற்க வேண்டிய அவசியமில்லை.
எனினும், நாள் ஒன்றுக்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். தானியமாக இருந்தால் நாள் ஒன்றுக்கு 600 கிராம் வழங்கிட வேண்டும். இது குறித்து இறைவன் விளக்குவதை விவரமாகக் காண்போம்.
‘இறை நம்பிக்கை கொண்டோரே, உங்கள் முன்னோர்கள் மீது நோன்பு விதியாக்கப்பட்டிருப்பது போன்று உங்கள் மீதும் விதியாக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமானவர்களாகக் கூடும்’. (திருக்குர்ஆன் 2:183)
‘(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால், பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. நீங்கள் (நோன்பின் பலனை அறிந்தால்) நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்’. (திருக்குர்ஆன் 2:184)
ஆயிஷா (ரலி) கூறுவது:-
“ஹம்ஸா பின் அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் ‘பயணத்தில் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு’ என்றார்கள்”. (புகாரி)
“நபி (ஸல்) அவர்கள் ரமலானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டார்கள். மக்களும் நோன்பை விட்டார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), புகாரி)
நோன்புக்கு அரபியில் ‘ஸவ்ம்’ என்பதாகும். இதற்கு ‘தடுத்து நிறுத்துதல்’ என்று பொருள். வாயையும், வயிற்றையும், பாலின உறுப்பையும் உணவு, குடிப்பு, இச்சை கொள்வது ஆகியவற்றை விட்டும் தடுத்துக் கொள்வதுதான் நோன்பு என நாம் நினைப்பது முற்றிலும் தவறு.
நோன்பு உடல் சார்ந்த வணக்கமாகவும், இறை நம்பிக்கையாகவும் இருப்பதால் உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் கட்டுப்பாடுடன் இருந்து, தேவையில்லாதவற்றை தடுத்து நிறுத்த வேண்டும்.
நோன்பின் ஒழுக்கங்கள் 8, அவை: வயிற்றைப் பேணுதல், கண்களைப் பேணுதல், காதுகளைப் பேணுதல், மூக்கைப் பேணுதல், நாவைப் பேணுதல், கைகளைப் பேணுதல், கால் களைப் பேணுதல், மறைவிடத்தைப் பேணுதல்.
ஒட்டு மொத்தத்தில் பார்த்தறிதல், கேட்டறிதல், சுவைத்தறிதல், நுகர்ந் தறிதல், தொட்டறிதல் ஆகிய ஐம்புலன்களையும் அடக்கி ஆளுமை செலுத்துவதுதான் உண்மையான நோன்பு.
வயிறு: விலக்கப்பட்டவைகளை உண்ணுவது, பருகுவது ஆகியவற்றை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
கண்கள்: விலக்கப்பட்ட அனாச்சாரங்கள், ஆபாசங்கள், அருவெறுக்கத்தக்கவைகளை பார்ப்பதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
காதுகள்: பொய், புறம், கோள், அவதூறு, ஆபாசம், தீச்சொல், இசை போன்ற விலக்கப்பட்டவைகளை கேட்பதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
மூக்கு: தடை செய்யப்பட்ட மது வகைகள், புகையிலை பொருட்கள், போதையூட்டும் பொருட்கள் போன்றவற்றை நுகர்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
நாவு: பொய், புறம், கேள், அவதூறு, தீச்சொல், அறிவற்ற பேச்சுக்கள் ஆகியவற்றை பேசுவதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
கைகள்: அனுமதிக்கப்படாத பொருட்களை தொடுதல், லஞ்சம் வாங்குதல், வரதட்சணை வாங்குதல், வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டிக்கு சாட்சி கையெழுத்திடுதல், திருடுதல், வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவற்றி லிருந்து தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
கால்கள்: தடை செய்யப்பட்ட இடங்கள் அனைத்திற்கும் செல்வதை விட்டும் தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
மறைவிடம்: பாலியல், பலாத்காரம், வன்புணர்ச்சி, தகாத உறவு போன்றவற்றிலிருந்து தடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
பசித்திருப்பது, தாகித்திருப்பது மட்டும் நோன்பல்ல. தகாத காரியங்கள் அனைத்தில் இருந்தும் உடல் உறுப்புக்களை பேணி பாதுகாப்பதுதான் உண்மையான நோன்பு என்பதை உத்தம நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்:
‘எத்தனையோ நோன்பாளிகளுக்கு, அவர் களின் நோன்பிலிருந்து பசியையும், தாகத்தையும் தவிர வேறெதும் (கூலி) கிடைப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: தாரமீ)
அழகான முறையில் நோன்பை கடைபிடிக்கும் நோன்பாளிகளுக்கு இறைவனிடத்தில் மகத்தான கூலி உண்டு.
‘எவர் ரமலான் மாதம் (இறைவனின் நற்கூலி கிடைக்கும் என்ற அவனின் வாக்குறுதியை) நம்பியும், நன்மையை நாடியும் நோன்பிருக்கிறாரோ அவருக்காக அவர் முன் செய்த (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)
‘ஆதமுடைய மகன் செய்கின்ற ஒவ்வொரு செயலும், அவனுக்கே இருக்கிறது. எனினும் நோன்பைத் தவிர. நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என இறைவன் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்’. (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்’ (நூல்: புகாரி) என்றும், மற்றொரு அறிவிப்பில் ‘அதற்கு நானே கூலியாக இருப்பேன்’ என்றும் இறைவன் கூறியதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இத்தகைய நோன்புகளை காரணமில்லாமல் விடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. காரணமின்றி ஒரு நோன்பை விட்டு விட்டு அதை வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றினாலும், அந்த ஒரு நோன்புக்கு ஈடாக முடியாது.
நடப்பு ரமலான் மாதத்தை அடைந்தவர்கள் இறைவனுக்காக நோன்பிருந்து, நோன்பு ஏற்படுத்தும் மாற்றத்தையும் பெற்று, புனிதர்களாக, இறைநேசர்களாக, சொர்க்க வாசிகளாக, மனித நேயமுள்ளவர்களாக வாழ சபதம் ஏற்போம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.






