search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்
    X
    அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்

    அண்டை வீட்டாரிடம் அன்புடன் நடப்போம்

    நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அண்டை அயலாரிடம் அன்புடன் நடப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    அண்டை வீட்டாரிடம் அன்புடன் பழகுவது, அழகிய முறையில் உறவாடுவது இறைநம்பிக்கையை பசுமையாக்கும் சிறந்த செயலாக மதிக்கப்படுகிறது. இவ்வாறு நடந்து கொள்வது உடல் சார்ந்த இறை நம்பிக்கையாக இருப்பதால் உடல்ரீதியான நலன்களை அண்டைவீட்டாருக்கு முடிந்தளவு சேர்த்திட வேண்டும். உடல் ரீதியான கெடுதி களை கொடுப்பதைவிட்டும் தவிர்ந்திட வேண்டும். இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளராக கருதப்படுவார்.

    நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர் களுடைய கையைப்பிடித்து அற்புதமான ஐந்து விஷயங்களை கற்றுத்தருகிறார்கள். அவற்றில் ஒன்று அண்டை வீட்டாரிடம் அழகிய முறையில் நடந்து கொள்வதும் அடங்கும்.

    ‘உமது அண்டை வீட்டாரிடம் நீர் அழகிய முறையில் நடந்து கொள்வீராக. அப்போது நீர் ஒரு இறைநம்பிக்கையாளராக ஆகிவிடுவீர், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    இறைவனும், திருக்குர்ஆன் மூலம் ‘அண்டை வீட்டாரிடம் அழகியமுறையில் உறவாடும்படி’ உத்தரவு பிறப்பிக்கிறான்.

    ‘நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும் நன்மை செய்யுங்கள்’. (திருக்குர்ஆன் 4:36)

    3 வகையினர்

    அண்டை வீட்டார் மூன்று வகையினர் ஆவார்கள். அவர்களிடம் அன்பாக, பண்பாக, பாசமாக, உதவியாக நடந்திட வேண்டும் என இஸ்லாம் முஸ்லிம்களை வற்புறுத்துகிறது. இஸ்லாமிய எதிர்பார்ப்பை முஸ்லிம்கள் பூர்த்தி செய்வது அவர்கள் மீது தார்மீகக் கடமை. அண்டை வீட்டார் எந்த இனத்தவராயினும் அவர் தமது அண்டைவீட்டு முஸ்லிம் சகோதரரிடமிருந்து மூன்று வகையான உரிமைகளை பெறமுடியும்.

    1) அண்டை வீட்டார் முஸ்லிம் அல்லாதவராக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையை மட்டும் பெற முடியும். ஒரு முஸ்லிமும் அவரின் உரிமைகளை முழு மனதுடன் நிறைவேற்றிட வேண்டும்.

    2) அண்டை வீட்டார் முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமையையும், முஸ்லிமாக இருந்து பெற வேண்டிய உரிமையையும் சேர்த்து இரண்டு வகையான உரிமைகளை பெற முடியும்.

    3) அண்டை வீட்டார் உறவுக்கார முஸ்லிமாக இருந்தால், அவர் அண்டை வீட்டாரின் உரிமை, முஸ்லிமின் உரிமை, உறவுக்கார உரிமை ஆகிய மூன்று வகையான உரிமைகளையும் பெறமுடியும். ஒவ்வொரு இஸ்லாமியர்களுக்கும் தமது அண்டை வீட்டாருக்கும், சக முஸ்லிம் சகோதரனுக்கும், தமது உறவுக்காரருக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும், பொறுப்பும் உள்ளது.

    அவர் தமது அண்டை வீட்டாரை, சண்டை வீட்டாராக பாவிக்கக் கூடாது, வேறு நாட்டவரைப் போன்று நடத்தக் கூடாது. அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உபகாரங்களை செய்து, தோள் கொடுத்து தோழர்களாக வாழ்ந்திட வேண்டும்.

    ‘எவர் இறைவனின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனின் தூதரே, அண்டை வீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமைகள் யாவை?’ என நபித்தோழர்கள் வினவினர்.

    அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் அவர் ஏதேனும் கேட்டால், அவருக்கு அதைக் கொடுங்கள்; அவர் உதவி தேடினால், அவருக்கு உதவிடுங்கள்; அவர் தம் தேவைக்கு கடன் கேட்டால், அவருக்குக் கடன் கொடுங்கள்; அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால், அவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்; அவர் நோயுற்றால், அவரை நலம் விசாரியுங்கள்; அவர் இறந்துவிட்டால், அவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளுங்கள்; அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவருக்கு ஆறுதல் கூறுங்கள்; தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம். (ஏனெனில் வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்; அவரின் அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி, அவரின் வீட்டிற்கு காற்று வராதபடிக் கட்டாதீர்கள்’ எனக்கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: தர்கீப்)

    அண்டை வீட்டாரை நம் வீட்டாரைப் போன்று மதிக்க வேண்டும். நமக்கு எதுவெல்லாம் தேவைப் படுமோ அது அவருக்கும் தேவைப்படும் என நினைக்க வேண்டும். தான் விரும்புவதை அவருக்கும் விரும்ப வேண்டும். இவ்வாறு நடப்பது தான் இறை நம்பிக்கை. இவ்வாறு நடப்பவரே இறைநம்பிக்கையாளர் ஆவார். இதுதான் இறை நம்பிக்கையின் குறியீடு என நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்.

    யாருக்கு முதல் மரியாதை

    அண்டை வீடுகள் என்று வரும் போது அடுத்த வீடு, எதிர் வீடு, பின் வீடு யாவும் அடங்கும். ‘இந்த உரிமை எது வரைக்கும்?’ என இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் ‘முன் பக்கமாக 40 வீடுகளும், பின்பக்கமாக 40 வீடுகளும், வலதுபுறம் 40 வீடுகளும், இடதுபுறம் 40 வீடுகளும் அண்டை வீடு களின் உரிமையில் வரும்’ என்று பதில் கூறினார்கள்.

    இவர்களில் முன்னுரிமை பெற்றவர் யார்? எனும் கேள்விக்கு இதோ விடை:

    “ஆயிஷா (ரலி) அறிவித்தார்: ‘இறைத் தூதர் அவர்களே, எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர்; அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று நான் கேட்டேன்’. அதற்கு நபிகளார் ‘இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு’ என்றார்கள்”. (புகாரி)

    ஒரு முஸ்லிம் பெண் தமது வீட்டில் சமைக்கப்படும் உணவை தமது அண்டை வீட்டாருக்கு ருசிக்கவும், புசிக்கவும் அன்பளிப்பு செய்ய வேண்டும். இதில் ஜாதி, மதம், நிறம், மொழி போன்ற பாகுபாடு பார்க்கக் கூடாது. இவள் தரும் உணவை அண்டை வீட்டுப் பெண்மணியும் மனமகிழ்ந்து ஏற்க வேண்டும். அது சாதாரணமாக இருந்தாலும் அற்பமாகக் கருதக்கூடாது.

    சொத்துக்களை விற்கும் போது கூட அண்டை வீட்டாருக்கு அது தேவையா? இல்லையா? என்று கலந்தாலோசிக்க வேண்டும்.

    ‘ஒருவரின் தோட்டத்திற்கு பங்குதாரரோ, அல்லது அண்டை வீட்டாரோ இருந்தால் அவரிடம் தெரிவிக்காமல் விற்க வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (நூல் : ஹாகிம்)

    ‘அண்டை வீட்டார் குறித்து என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் அஞ்சினேன் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    ‘இறைவனையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    ‘இறைவனின் மீது ஆணை, அவன் இறை நம்பிக்கையாளன் அல்லன்’ என நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள். ‘அவன் யார்?’ என்று நபிகளாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) ‘எவனது நாச வேலைகளிலிருந்து அவனது அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் தான்’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஷுரைஹ் (ரலி), புகாரி)

    ‘எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)

    அண்டை வீட்டாருக்கு நோவினை தரும் விஷயங்கள்:

    1) இருவருக்கும் பொதுவான சுவரில் கட்டை, ஆணி, கம்பி போன்றவற்றை அடிப்பது. 2) அண்டை வீட்டாருக்கு காற்று, சூரிய வெளிச்சம் தடையாகும் விதத்தில் அவர்களது அனுமதியின்றி தமது வீட்டை உயரமாகக் கட்டிக் கொள்வது. 3) அவர் களது மறைவிடங்களை காணும் வகையில் தமது வீட்டில் ஜன்னல்களை அமைப்பது. 4) அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சப்தங்களை அதிகரித்து கதவுகளைத் தட்டுவது; குறிப்பாக இரவு நேரங்களில் அவர்களைத் தூங்கவிடாமல் சப்தமிட்டு பேசுவது, கூச்சலிடுவது, டி.வி., ரேடியோவின் ஒலிபெருக்கியை சப்தமாக ஆக்குவது.

    5) அவர்களின் பொருட்களை அவர்களின் அனுமதி பெறாமல் எடுப்பது. 6) அப்பொருட்களின் தேவை அவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவற்றை இரவல் கேட்டு தொல்லை கொடுப்பது. 7) இரவல் வாங்கியதை திரும்ப ஒப்படைக்கும் போது அதில் குறைகளை ஏற்படுத்துவது (அல்லது) அதை விட தரம் குறைந்த பொருளைத் தருவது. 8) கழிவு நீர், குப்பை போன்ற அசுத்தமானவற்றை அவர்களது வீட்டின் முன்பு எறிவது. 9) அவர்களது குழந்தைகளை அடிப்பது.

    10) அவர்களது குடும்ப விவகாரங்களில் தலை யிடுவது; அது பற்றி பிற வீடுகளில் புறம் பேசுவது. 11) அவர்களது வீடுகளில் திருடுவது. 12) அவர் களது குடும்பப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது.

    இவை யாவும் தொல்லைகள் தரும் செயல்கள். இவற்றிலிருந்து பாதுகாப்பு அளிப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார். நீ நல்லவன், அல்லது கெட்டவன் என்று உன்னை தீர்மானிப்பவன் உனது அண்டை வீட்டானே. எனவே அவனுடன் அழகிய முறையில் நடந்து கொள்.

    ‘நான் நல்லது செய்துவிட்டேன், அல்லது கெடுதல் புரிந்துவிட்டேன் என்று நான் அறிந்து கொள்வது எப்படி?’ என ஒரு மனிதர் நபிகளாரிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) ‘நீ நல்லது செய்துவிட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ நல்லது செய்துவிட்டாய். நீ கெடுதல் செய்து விட்டாய் என்று உனது அண்டை வீட்டாரிடம் கேள்விப்பட்டால், நீ கெடுதல் செய்து விட்டாய்’ என்றார்கள்’. (நூல்: அஹ்மது)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×