என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான நியாயமான ஆட்சி குறித்த தகவல்களை காண்போம்.
    நியாயமான ஆட்சி என்பது சத்தியத்தின் அடிப்படையில், சத்தியத்தை முன் வைத்து, அதையே தீர்வாக நினைத்து மக்களுக்கு மகத்தான சேவை செய்வதே. இவ்வாறு ஆட்சி அமைப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும். நியாயமான ஆட்சியின் வழிமுறைகளை இறைவன் பின்வருமாறு திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்:

    ‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். இறைவனின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. இறைவன் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:58)

    ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் நீங்கள் நீதியை நிலை நாட்டுபவராகவும், இறைவனுக்காக சாட்சி கூறுபவராகவும் ஆகிவிடுங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்) இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே, நியாயம் வழங்குவதில் மனஇச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும், நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக் கணித்தாலும் நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:135)

    ஆட்சி, அதிகாரம் என்பது இறைவன் கொடுத்த வரம், இறைவன் வழங்கிய அமானிதம். அதை வைத்து குடிமக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும். அதை பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து குடிமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பற்ற முறையில் ஆட்சியாளர்கள் நடந்து கொண்டால் நாளை இறைவனின் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டியது வரும் என்பதை பின்வரும் நபி மொழி இவ்வாறு உணர்த்துகிறது.

    ‘ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி (நாளை) அவர் விசாரிக்கப்படுவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி)

    ‘இறைவன் ஓர் அடியானுக்கு குடிமக்களின் பொறுப்பை வழங்கியிருக்க, அவன் அவர்களின் நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக் கூட அவன் நுகரமாட்டான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மஅகில் (ரலி), நூல்: புகாரி)

    நியாயமான ஆட்சிக்கு உதாரணம் நபி (ஸல்) அவர்களின் ஆட்சியே முன்னிலை பெறுகிறது. பிறகு அடுத்து வந்த நபித்தோழர்களின் ஆட்சி அழகான இடத்தைப் பெறுகிறது. அவர்களின் நியாயமான ஆட்சிக்கு ஏராளமான உதாரணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அதில் ஒன்று தான் இது:

    ஒரு யூதரும், முஸ்லிமும் ‘யாருடைய நபி சிறந்தவர்?’ என்ற சச்சரவில் ஈடுபட்டனர். பிரச்சினை பெரிதாகி முஸ்லிம் யூதரை அறைந்துவிட்டார். அந்த யூதர் நியாயம் வேண்டி நேராக நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டார். யூதரின் பக்கம் நியாயம் இருந்ததை நபி (ஸல்) கண்டுகொண்டு, பிரச்சினையை மிக எளியமுறையில் இவ்வாறு தீர்த்து வைத்தார்கள். ‘மூஸாவை விடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தமது பணியாளராக ஒரு யூதச் சிறுவனைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். யூதர்களுடன் நில குத்தகையில் ஈடுபட்டார்கள். யூதப் பெண் நடத்திய விருந்தில் கலந்து கொண்டார்கள். யூதரின் பிரேதத்தைக் கண்டு, எழுந்து மரியாதை செலுத்தினார்கள். அனைவரிடமும் மத, இன, மொழி, நிற, குல, தேச பாகுபாடு காட்டாமல் நீதியாக நடந்து கொண்டு, நியாயமான ஆட்சியை நிறுவி நடத்திவந்தார்கள்.

    நபிகளாருக்குப் பிறகு அவர் வழியில் அவரின் அன்புத் தோழரும், இறைநம்பிக்கையாளர்களின் முதல் ஜனாதிபதியுமான அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்கள். அவரும் நியாயமான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இவர் பதவியேற்ற போது இவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ‘உண்மை என்பது அமானிதம், பொய் என்பது மோசடி. உங்களில் பலவீனமானவர் என்னிடத்தில் சக்தி வாய்ந்தவராவார். இறைவன் நாடினால் நான் அவரின் உரிமையை மீட்டெடுத்துக் கொடுப்பேன். உங்களில் பலமானவர் என்னிடத்தில் சாதாரணமானவர் ஆவார். அவரிடமிருக்கும் அதிகப்படியான பிறர் உரிமையை நான் எடுப்பேன்’ என பிரகடனப்படுத்தினார்.

    அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் 6 மாத கால பஞ்சம் நிலவியது. அரசு கருவூலத்திலிருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம் என யோசனை வழங்கப்பட்டது.

    யாருக்கு முதலில் வழங்குவது என்ற பிரச்சினை முன் வந்த போது ‘முஹாஜிர்களாகிய மக்காவாசி அகதிகளிடமிருந்து ஆரம்பிக்கலாம்’ என உமர் (ரலி) யோசனை கூறினார். அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) ‘இது பஞ்சப் பிரச்சினை. சுகபோக பிரச்சினை இல்லை. யார் அதிகம் தேவை உடையவராக இருக்கிறாரோ அவரிடமிருந்தே தொடங்கலாம்’ என்றார். ஒரு யூதரிடமிருந்து இலவசம் கொடுப்பது ஆரம்பிக்கப்பட்டது. இதுவல்லவா நியாய மான ஆட்சி.

    இவருக்குப் பிறகு சிறந்த இரண்டாவது ஜனாதிபதியாக உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறார். சிறந்த உலக ஆட்சித் தலைவர்களில் இவருக்கு தலைசிறந்த இடமுண்டு. நீதிக்கு உமர் (ரலி) எனும் பெயரைப் பெற்றார்.

    ‘உமரின் ஆட்சிக்காலத்தில் ஒரு வழக்கை முஸ்லிமும், ஒரு யூதரும் உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு வந்தனர். யூதரிடம் சத்தியத்தைக் கண்ட உமர் (ரலி) அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினார். உடனே அந்த யூதர் கூறினார்: ‘நீர் உண்மையின்படி தீர்ப்பளித்தீர்’.

    அவரைத் தட்டிக் கொடுத்த உமர் (ரலி) ‘இது உமக்கு எப்படித் தெரியும்’ என வினவினார். அதற்கு அவர் ‘ஒருவர் சத்தியத்தைக் கொண்டு நீதி வழங்கும் வேளையில் அவரின் வலது, இடது பக்கமாக இரண்டு வானவர்கள் அவரை சீர்படுத்திக் கொண்டும், சத்தியத்திற்காக அவருக்காக அவ்விருவரும் நல்லுதவி செய்து கொண்டும் இருப்பார்கள். அவர் சத்தியத்தை கைவிட்டால், அவ்விருவரும் அவரை விட்டு மேலே சென்று விடுவார்கள்’. நிச்சயமாக இந்த செய்தியை நாங்கள் தவ்ராத் வேதத்தில் பெற்றுக் கொண்டுள்ளோம் என விளக்கமளித்தார்’. (அறிவிப்பாளர்: ஸயீத் பின் முஸய்யப் (ரலி), நூல்: மாலிக்)

    உமரின் (ரலி) பரம்பரையில் வந்தவர்தான் உமர்பின் அப்துல் அஜீஸ் என்பவர். இவர் இரண்டாம் உமர் என்றழைக்கப்படுகிறார். இவரும் உமரைப் போன்று நியாயமான ஆட்சியை மக்களுக்கு வழங்கினார். இவரின் நியாயமான ஆட்சியின் தாக்கம் குடிமக்களையும் தாண்டி மிருகங்களின் மீதும் தென்பட்டது.

    இது எந்தளவுக்கென்றால் ஒரே நீர்த்தேக்கத்தில் ஆடும், ஓநாயும் ஒன்றாக, ஒற்றுமையாக நீர் அருந்தியதை மக்களே கண்கூடாகக் கண்டார்கள். சில காலங்களுக்குப் பிறகு அதே நீர்த்தேக்கத்தில் ஓநாய் ஆட்டைக் கடித்துக் கொன்றது. இதை கவனித்த மக்கள் ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் இறந்துவிட்டாரோ என நினைத்தார்கள். அவரும் இறந்துவிட்ட செய்தியை மக்கள் உறுதிப்படுத்தினர்.

    இறைவனிடம் நாம் கோருவது உதவி. ஆட்சியாளர்களிடம் நாம் கேட்பது உரிமை. குடிமக்களின் உரிமைகளை வழங்கி, அவற்றை பாதுகாப்பது அரசின் கடமை. அவ்வாறு ஆட்சி செய்வதுதான் நியாயமான ஆட்சி.

    ‘இறைவனின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமைநாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களில் ஒருவர் நீதியை நிலைநாட்டும் ஆட்சியாளர் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : புகாரி)

    நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு மட்டும் போதாது. குடிமக்களின் பொறுப்புணர்வும், பங்களிப்பும் அவசியம் தேவை. அது எவ்வாறு அமைய வேண்டுமெனில் அவர்கள் நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். பாவத்தில் கூட்டாகாமல் நன்மைகளில் மட்டுமே ஆட்சியாளர்களுக்கு உடன்பட்டு நடக்கவேண்டும். அரசியல் சாசனத்தை மதித்து, பொது அமைதி காத்து, சட்டம் ஒழுங்கை பேணி நடக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், பொது நன்மைக்கும் பாடுபட்டு, அரசுக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.

    நியாயமான ஆட்சிக்கு ஆட்சியாளர் ஆட்சித் தகுதி, நிர்வாகத்திறமை மிக்கவராக இருக்கவேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் மக்கள் பணியாளராக வலம் வரவேண்டும். சாமானியர்கள் நெருங்கும் தூரத்தில் இருக்க வேண்டும். தவறு சுட்டிக் காட்டப்படும்போது அதை திருத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருவரும் இணைந்து பொறுப்புடன் செயல்படும் போது நியாயமான ஆட்சி தொடரும். ஆட்சியாளர் களின் மக்கள் தொண்டு இறைத் தொண்டாக மாறும்.

    மக்களுடன் மக்களாக, மக்களுக்காக நியாயமான ஆட்சி கொடுப்பதை, இஸ்லாம் விரும்பி வரவேற்கிறது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    நம் பிரார்த்தனைகளைஅல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக, ஆமின்.
    ஒவ்வொரு மனிதனுக்கும் எப்பொழுதுமே தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. மனிதன் தன் வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கித்தான் தன்இலக்கை அடைய முடியும்.

    இஸ்லாமிய தத்துவம், ‘மனிதர்களை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறும் போது, “மனிதர்கள் தம்வாழ்வில் ஏற்ற-இறக்கங்களை, மேடு-பள்ளங்களை, வறுமை-செழுமை இப்படி எல்லா நிலைகளையும் ஒருசேர கருதவேண்டும்” என்று சொல்கிறது. அதுமட்டுமல்ல இந்தநிலைகளில் எல்லாம் இறையச்சம் மேலோங்கி நிற்க வேண்டும் என்றும் போதிக்கிறது.

    “ஈமான் கொண்டோம், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம் என்பது இஸ்லாமிய இல்லத்தின் நுழைவு வாசல்மட்டுமே. அதற்குள் இருப்பதுதான் வாழ்வு நெறி தத்துவங்கள். காலை புலர்ந்ததில்இருந்து, அந்தி சாயும் வரை மனிதன் எப்படிவாழ வேண்டும் என்று ஒவ்வொரு நிலைப்பாட்டையும் செவ்வனே செய்யச் சொல்வது இஸ்லாம்.

    வியாபார தர்மங்கள், அளவு நிறுவைகளில் நியாயங்கள், வட்டியில்லா வாழ்வியல், உறவுகளில் அரவணைப்பு, பக்கத்து வீட்டாரோடு பங்களிப்பு, மாற்றுமத சகோதரர்களோடு இணக்கங்கள், கற்புநெறி காத்தல், பாவங்களை தவிர்த்தல், பார்வைக்கும், கேள்விகளுக்கும், கரங்களுக்கும், எண்ணங்களுக்கும் கற்பு நெறியை நிர்ணயம் செய்தல்... இப்படிஒவ்வொரு நிலைகளிலும் தவறுகளைத் தவிர்த்து, குற்றங்கள் நிகழாது காத்துக் கொள்ளும் போது, சோதனைகள் நம்வீட்டு வாசல் கதவுகளைத் தட்டு வதற்கு சிறிது யோசனைசெய்யும். இந்த நிலைகள் மாறும் போது சோதனைகள் நம்மை சூழ்வதை தவிர்க்க முடியாது.

    அருள்மறை குர்ஆன் (29:2) இதைப்பற்றி பேசும்போது, “மனிதர்கள் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினால் மட்டும் போதுமானது. அதனைப் பற்றி அவர்கள்சோதிக்காமல் விட்டு விடுவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனரா?” என்று இடித்துரைக்கின்றது.

    இறைவனை நம்பிக்கை கொண்டால் மட்டும் போதுமானது என்ற நிலைமை மாற வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நன்னெறிகளைச் சொல்லித் தந்தது மட்டுமல்ல. அவற்றை மக்களுக்கு போதிக்க தன் தூதர்களை அனுப்பினான். அந்த தூதர்களும் இறைவனின் சோதனைகளுக்கு தப்பவில்லை.

    “யாரும் என்னைப்போல் சோதிக்கப்படவில்லை என்று சொல்லாத அளவிற்கு அத்தனை சோதனைகளையும் அனுபவித்தவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்கள்.

    பாவங்கள் அற்ற சமூகத்தை நாம் ஒருபோதும் அழிப்பதில்லை என்றும்அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் செய்யும் பாவங்களால் மட்டுமே அவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்கிறது திருக்குர்ஆன் (29:40).

    “அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் செய்து கொண்ட பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம்”

    எனவே நாம் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டால், உடனே நம்மை சுய பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும். நம்மிடம் உள்ள பாவங்கள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதனை அறிந்து தவிர்க்கும் போது சோதனைகள் விலகி விடும்.

    சோதனைகள் இருவகைப்படும். தனிப்பட்ட சோதனைகள், ஒட்டுமொத்த சோதனைகள். தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் சோதனைகள் ஒரு வகை. ஒரு இனத்திற்கு, ஒரு நாட்டிற்கு ஏற்படுவது ஒட்டு மொத்த சோதனை ஆகும்.

    இந்த சோதனைகளில் இருந்து விடுபட ஒரே வழி, இறைவனிடம் கை ஏந்துவது தான். இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “உண்மை நம்பிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே நம்பி இருப்பார்கள்”. (29:59)

    “நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”. (2:153)

    “பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்” என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் பரவலாக சொல்லப்பட்டுள்ளது. பொறுமை என்ற உன்னத நிலையை அவ்வளவு எளிதாக அடைந்துவிட முடியாது. அதற்கு அபரிமிதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் எனும் போது, வேறு யாரால் நமக்கு கெடுதியை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்குமானால் பொறுமையை எளிதாக கையாளலாம்.

    “லவ்ஹுல் மஹ்ஃபூல்” என்ற ஏட்டில் எழுதப்பட்ட விதியையே மாற்றி விடும் சக்தி பிரார்த்தனைகளுக்கு இருக்கிறது என்ற அண்ணலாரின் பொன்மொழி ஒன்றிருக்கும்போது அதில் நம்பிக்கை கொள்ளாமல் நம் மனங்கள் மற்ற விஷயங்களில் அலை பாய்வதேன்? நம் சோதனைகள் நீக்கப்பட வேண்டும் என்றால் அல்லாஹ்விடம் நாம் சரண் அடைவது ஒன்றே வழி.

    “பூமியிலும் வானத்திலும் நீங்கள் அவனை இயலாமையில் ஆக்கக்கூடியவர்கள் அல்லர். அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றக்கூடிய எந்த ஒரு பொறுப்பாளரும் உதவியாளரும் உங்களுக்கு இல்லை” (திருக்குர்ஆன் 29:22).

    எனவே, நம் பிரார்த்தனைகளைஅல்லாஹ் ஒருவனிடமே சமர்ப்பிப்போம். சோதனைகள் நீங்கப்பெற்று வெற்றி அடைவோம். அல்லாஹ் நம் பாவங்களை மன்னித்து அருள் புரிவானாக, ஆமின்.

    மு.முகமது யூசுப், உடன்குடி.

    குலசேகரன்பட்டினம் சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் குத்துபுல் அமீர் மவுலானா சேரா முஸலியார் ஹாஜி செய்யது சிராஜூதீன் தர்காவில் கந்தூரி விழா நேற்று முன்தினம் இரவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலையில் அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. இரவில் தர்கா முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் துஆ ஓதி, நேர்ச்சை உணவு வழங்கப்பட்டது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு தொழுகை, மார்க்க சொற்பொழிவு நடைபெறுகிறது. வருகிற 8-ந்தேதி இரவில் மார்க்க சொற்பொழிவுக்கு பின்னர் சந்தனம் பூசப்பட்டு, அபூர்வ துஆ ஓதப்படுகிறது.

    விழாவின் சிகர நாளான 9-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சந்தனக்கூடு பவனி நடைபெறும். 10-ந்தேதி காலையில் நேர்ச்சை உணவு வழங்கல், ஹத்தம் தமாம் செய்தல் நடைபெறும். 11-ந்தேதி இரவில் விளக்கு ஏற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 12-ந்தேதி கொடி இறக்கப்பட்டு, நேர்ச்சை உணவு வழங்கப்படுகிறது.
    தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞான மாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா. இவரது ஆண்டு விழா ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக குமரி மாவட்டம் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியே‌‌ஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் இரவு மார்க்க பேருரைகள், மவுலிது ஓதுதல், ஞானமுற்றம் நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை மார்க்க பேருரைகள் நடக்கின்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப்புகழ்ச்சி பாடுதல் 9-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார் கள்.

    தொடர்ந்து அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல், 12-ந்தேதி இரவு 7.30 மணிக்கு 3-ம் சியாரத் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘குடும்பத்தாரின் கடமைகளையும் உரிமைகளையும் மதிப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.
    ஒரு குடும்பம் என்பது கணவன்-மனைவி, அவர்களது பிள்ளைகள் ஆகும். கூட்டுக்குடும்பம் என்பது தங்களது பெற்றோர், சகோதரர்கள் ஆகியோருடன் இணைந்து ஒரே குடும்பமாக வாழ்வது ஆகும்.

    ஒரு குடும்பத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தங்களுக்கிடையே பரஸ்பரம் இணக்கமாக வாழ்ந்து, ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும். உண்மையான இறைநம்பிக்கை, ஒரு மனிதன் இறைவனின் உரிமைகளை மதித்து, கடமையாற்றுவதில் மட்டும் அடங்கி விடவில்லை. குடும்பத்தாரின் உரிமைகளை மதித்து செயலாற்றுவதிலும் அடங்கிஉள்ளது.

    கணவனின் கடமைகள்

    இஸ்லாமிய திருமணம் என்பது மாலைகளை மாற்றுவதோ, மோதிரங்களை மாற்றுவதோ, கருக மணியை அணிந்து கொள்வதோ அல்ல. அது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் கணவன் மனைவியாக சேரப்போகிறவர்கள் கையெழுத்திடுகின்றனர்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (4:21) குறிப்பிடும்போது, ‘உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று, ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே’ என்று தெரிவிக்கின்றது.

    கணவன் தன் மனைவிக்கு ஆற்றவேண்டிய உரிமைகளை மதித்து, அவளின் உரிமைகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றான். இவ்வாறே மனைவியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றாள். இருவரும் அவரவர் உரிமையில் குறையேதும் வைக்கக் கூடாது.

    இதுகுறித்த விவரங்களை நபித்தோழர் முஆவியா பின் ஹைதா (ரலி) இவ்வாறு விளக்கியுள்ளார்.

    ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் அவர் தம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?’ என வினவினேன். அதற்கு நபிகளார் ‘நீர் சாப்பிடுவதை அவளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்; நீர் அணியும் (உயர்தர) உடையை அவளுக்கும் அணிவிக்க வேண்டும்; மேலும் நீர் அவளின் முகத்தில் அடிக்கக்கூடாது; அவளை கேவலமாகவும் பேசக்கூடாது; அவளை வீட்டில் தவிர வேறெங்கும் வெறுத்து ஒதுக்கக்கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’. (நூல்: அஹ்மது)

    மனைவியை புன்னகையுடன் காணவேண்டும்; அவளுக்கு அன்பாக ஊட்டிவிட வேண்டும். இதுவும் அவளுக்குச் செய்யவேண்டிய உரிமைதான் என்கிறது பின்வரும் நபிமொழி:

    ‘நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி, அதற்கும் நற்பலன் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத்பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிக்கு வீட்டு வேலைகளில் அதிகமாக உதவியிருக்கிறார்கள். இது குறித்த நபிமொழி வருமாறு:-

    ‘நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன வேலை செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். ‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பைச் செவிமடுத்தால் தொழுகைக்காகப் புறப்பட்டு விடுவார்கள்’ என்று ஆயிஷா (ரலி) பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது மனைவியரை அழைத்துச் செல்வார்கள். இதுவும் ஒரு கணவன் தமது மனைவிக்குச் செலுத்த வேண்டிய நியாயமான உரிமையாகும்.

    ‘இறைவனின் திருப்தியை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள். அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும்’. (திருக்குர்ஆன் 65:6,7)

    மனைவியின் கடமைகள்

    ஒரு மனைவி தமது கணவனுக்கு ஆற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்: வீட்டிற்கு வருகைதரும் கணவனை புன்சிரிப்புடன் வரவேற்று உபசரிக்க வேண்டும். ஆரோக்கியமான நல்ல உணவு வகைகளை சமைத்து, தமது கைகளால் பரிமாற வேண்டும். மிருதுவான குரலில் பேசவேண்டும். அவனின் அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது. இவை யாவும் மனைவியின் கடமைகளாகும்.

    இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:-

    ‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளாள்’ என நான் கேட்டதற்கு, ‘அவளின் கணவருக்கு’ என நபி (ஸல்) பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: ஹாகிம்)

    ‘சிறந்த பெண் யாரென்றால் நீ அவளைப் பார்க்கும் போது அவள் உன்னை சந்தோஷப்படுத்துவாள்; நீ அவளுக்கு ஆணையிட்டால், அவள் உனக்கு கட்டுப்படுவாள்; நீ அவளை விட்டும் மறைந்துவிட்டால், அவள் உனது செல்வத்தையும், அவள் தமது கற்பையும் பாதுகாப்பாள் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: நஸயீ)

    ‘ஒரு பெண் ஐவேளைத் தொழுகைகளையும், ரமலான் மாத நோன்பையும் நிறைவேற்றி, தமது கற்பையும் பாதுகாத்து, கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், அவள் சொர்க்கத்தில் தான் நாடிய எந்தவாசல் வழியாகவும் நுழையலாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது)

    குழந்தைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

    இறைவனுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் அதிகம் கடமைப்பட்டிருப்பது அவர்களின் பெற்றோருக்கே. இதுதான் இறைவனின் விருப்பமும் ஆகும்.

    “என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).

    பெற்றோரின் உரிமைகளை மதித்து, அவர்களை மரியாதையாக நடத்தினால், பிள்ளைகளின் எதிர்காலம் நலமாக அமையும். இறைவனுக்கு மாறு செய்வதை தவிர்த்து, அவர்களின் மற்ற அனைத்து பேச்சுக்களையும் கேட்டு நடக்க வேண்டும். வயோதிக பருவத்தில் ஒரு கைத்தடி உதவுவது போன்று அவர்களுக்கு கைத்தாங்கலாக இருந்து உதவிட வேண்டும். அவர்களை அருகில் வைத்து கண்ணின் இமை போன்று பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு பிள்ளைகளிடமிருந்து கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் குறைவில்லாமல் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் முறைதான் இறைநம்பிக்கை.

    பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய உரிமைகள்

    பெற்றோரும் தமது குழந்தைகளுக்கு செய்யவேண்டிய நிறைய கடமைகள் உள்ளன. அதை கவனத்தில் கொண்டு பெற்றோரும் நடந்து கொள்ள வேண்டும். குழந்தையின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், அழகான நடத்தைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு அதிகமான செல்லம் கொடுக்காமல், நல்லொழுக்கம் கற்றுக்கொடுத்து, கண்டிப்புடன் கூடிய இரக்கம் காட்டி வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அறம் சார்ந்த விஷயங்களையும், மார்க்க சம்பந்தமான விஷயங்களையும், நீதி போதனைகளையும் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களிடம் அதிகமான நேரங்களை செலவிட வேண்டும். அவர்களுக்கு இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு போன்ற இஸ்லாமியக் கடமைகளில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பருவ வயதை அடைந்த குழந்தைகள் செல்லும் பாதை சொர்க்கத்தின் பாதையாக இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். நரகத்தின் படுகுழியாக இருக்காமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக்காத்துக் கொள்ளுங்கள்.’ (திருக்குர்ஆன் 66:6)

    இவ்வாறு குழந்தைகளின் உரிமையை மதித்து நடப்பதும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த பகுதிதான்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘ஓடுகின்ற ஆற்றில் அங்கச் சுத்தி (உளு) செய்தாலும் உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர் வரம்பு மீறிவிட்டார்’.
    இதோ இன்னொரு கோடை காலம் நம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றது. தண்ணீர் தேவை குறித்தும், அதை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் எவ்வளவுதான் பேசினாலும், எழுதினாலும் போதிய விழிப்புணர்வு இந்த சமூகத்திற்கு இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

    மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழவேண்டுமென்றால் தண்ணீர்தான் ஆதாரமாக இருக்கிறது. ஒருசில பகுதிகளில் தண்ணீரைத் தேடி தினமும் நீண்ட தூரம் மக்கள் அலைகின்றார்கள். அப்படியும் கிடைக்காத பட்சத்தில் தண்ணீரை விலை கொடுத்தும் வாங்குகின்றனர். சில இடங்களில் பணம் கொடுத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை.

    கோடை காலத்தில் தண்ணீருக்காக அங்கும் இங்கும் மக்கள் அலைமோதுவது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வீதிகளில் இறங்கி பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

    வீட்டுப் பிரச்சினைகளுடன் உயிர் வாழலாம். நாட்டுப் பிரச்சினைகளுடன் உயிர் வாழலாம். சமூகப் பிரச்சினைகளுடன் வாழலாம். தங்க இடம் இல்லாவிட்டால் உயிர் வாழலாம். உணவு இல்லாவிட்டால்கூட ஒருசில நாட்கள் உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், ஏழையாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் நீரின்றி எவராலும் வாழவே முடியாது என்பது நிதர்சனம்.

    பாலைவனங்களில் தண்ணீர் பஞ்சம் இருக்கலாம். ஆனால் அனைத்து வளமும் செல்வமும் கொண்ட நம் தாய்த் திருநாட்டில் விவசாயம் சுருங்கிவிட்டது. அதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று தண்ணீர் தட்டுப்பாடு என்பது தான்.

    ஆனால் நம்மில் பலரும் இவை எது குறித்தும் அறியாமல் இன்னும் தண்ணீரை வீணடித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பணத்தை வீணடிப்பவர்களைப் பார்த்து சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ‘தண்ணீராய் செலவு செய்கின்றார்’ என்று கூறுவார்கள். ஆனால் இன்று அவ்வாறு கூறுவதில்லை. ஏனெனில் தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

    நாளை என்ன நடக்குமோ, எவற்றையெல்லாம் விலையாகக் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டுமோ என்பதை அல்லாஹ் அறிவான். இனி வருங்காலத்தில் மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடந்தால் அது தண்ணீருக்காகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். (அவ்வாறு நடக்காமல் இறைவன் காப்பானாக).

    பின்வரும் நிகழ்வை கற்பனை செய்து பாருங்கள். தாகத்தால் உதடுகள் வெடித்து, உலர்ந்து, நடை தளர்ந்த நிலையில் பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கின்றார் ஒருவர். கண்களும், கால்களும் தண்ணீரைத் தேடுகின்றன, அங்கும் இங்கும் அலைகின்றார். திடீரென பிரகாசிக்கும் ஒரு பாத்திரம் தென்படுகிறது. நிச்சயம் அது தண்ணீர் தான் என்று எண்ணி வேகமாக அருகே சென்று பார்க்கின்றார். ஆனால் அதுவோ மின்னும் தங்கப்பாத்திரம். அதில் முழுவதும் தங்கக் காசுகள்.

    அவர் என்ன கூறி இருக்க வேண்டும் ஆஹா.. நான் பாக்கியசாலி என்றுதானே? ஆனால், அவரோ ஐயோ.. எனக்கு ஏற்பட்ட நாசமே.. இது தங்கமா? நான் தண்ணீர் என்றல்லவா நினைத்தேன்.. என்று அரற்றினார்.

    தாகத்தால் உயிர் போகும் வேளையில் தங்கமும் பயன் தராது, வெள்ளியும் உதவிக்கு வராது.

    நீரின்றி அமையாது உலகு என்பார்கள். தண்ணீர்தானே வாழ்வின் அடிப்படை ஆதாரம். அந்த நீரைத் தந்த இறைவனுக்கு அதனைக் குடிக்கும்போது மனப்பூர்வமாக நாம் நன்றி செலுத்துகிறோமா? யோசித்துப் பாருங்கள். நாம்குடிக்கும் நீரை இறைவன் உப்பு நீராக மாற்றிவிட்டால் நமது நிலை என்னவாகும்?

    இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்: “நாம் நாடினால் இதனை உவர்ப்பு நீராக்கிவிட்டிருப்போம். அப்படியிருக்க நீங்கள் ஏன் நன்றி செலுத்துவதில்லை” (56:70)

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் குடித்து முடித்தவுடன் எவ்வாறு இறைவனைப் புகழ்வார்கள் தெரியுமா?

    “எங்களது பாவத்தின் காரணத்தால் இந்த நீரை உப்பு நீராக மாற்றாமல் தனது கருணையின் காரணத்தால் நல்ல நீராக மாற்றிய இறைவனுக்கு எல்லாப் புகழும்”.

    ஒருநாளாவது நாம் இறைவனை இவ்வாறு புகழ்ந்திருக்கின்றோமா?

    தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ‘ஓடுகின்ற ஆற்றில் அங்கச் சுத்தி (உளு) செய்தாலும் உறுப்புகளை மூன்று தடவைக்கு மேல் கழுவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர் வரம்பு மீறிவிட்டார்’.

    ஓடுகின்ற ஆற்றில் மூன்று தடவைக்கு மேல் சுத்தம் செய்தால் தண்ணீர் என்ன குறைந்துவிடவா போகிறது? இல்லையே. எதையும் வீணடிக்கும் எண்ணம் நம்மிடம் வந்துவிடக்கூடாது அதிலும் குறிப்பாக தண்ணீரை.. என்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு உபதேசிக்கின்றார்கள்.

    அல்லாஹ் கூறுகின்றான்: “உண்ணுங்கள் பருகுங்கள். ஆனால் விரயம் செய்யாதீர்கள்” (திருக்குர்ஆன் 7:31)

    தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் நமக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று நாம் ஒதுங்கிவிட முடியாது. மழை நீர் சேகரிப்புக்கும், தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கவும் நாம் என்னென்ன செய்திருக்கின்றோம் என்பதையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. தண்ணீரை சேமிப்பதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு. இல்லையென்றால் ஆண்டு தோறும் தண்ணீருக்காக தவம் கிடப்பதும், தண்ணீரைத் தேடி அலைவதும் நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

    முஹம்மது தாஜுதீன், திருச்சி.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘திருமணம் முடிப்பது நபிமார்களின் வழிமுறை’ குறித்த தகவல்களை காண்போம்.
    இஸ்லாம் ஆதரிக்கும் நற்கருமங்களில் ஒன்று திருமணம் முடிப்பது ஆகும். இறைவனை அடைவதற்கு திருமணம் தடையேதும் இல்லை. அனைத்து நபிமார்களும், இறைநேசர்களும் திருமணம் புரிந்து, அழகான குழந்தைகளை பெற்றெடுத்து, இல்லறத்தை நல்லறமாகவும், இறைவணக்கத்தை திருப்திகரமாகவும் அரங்கேற்றி வந்திருக்கிறார்கள்.

    திருமணம் என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால்தான் முதல் நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்து, இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் திருமணம் புரிந்து பூரண இறைநம்பிக்கையுடன் வாழ்ந்து சென்றுள்ளார்கள்.

    திருமணத்தை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையாக பாவிக்கிறது. உள்ளத்தால் தியானிப்பது மட்டுமே இறைநம்பிக்கை அல்ல. உடலாலும் கட்டுக்கோப்பாக, ஒழுக்கமாக இருப்பதும் இறைநம்பிக்கைதான்.

    மனிதன் தமது ஒவ்வொரு உறுப்புகளுக்கும் செய்ய வேண்டிய கடமையும், உரிமையும் உண்டு. அந்தந்த உறுப்புகளுக்கு அதன் கடமையையும், உரிமையையும் நிறைவேற்றியே ஆக வேண்டும்.

    ‘நல்லதை ஏவுதலும் தர்மமே; தீயதைத்தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு’ என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது மக்கள், ‘இறைவனின் தூதரே, எங்களில் ஒருவர் தம் மனைவியிடம் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?’ என்று கேட்டனர். அதற்கு நபிகளார் ‘நீங்களே சொல்லுங்கள்: தடை செய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக் கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா. அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்’ என்று விடையளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘ஒருவர் திருமணம் புரிந்தால், அவர் இஸ்லாமிய மார்க்கத்தின் பாதியை பரிபூரணமாக்கிவிட்டார். மீதி பாதியில் அவர் இறைவனை அஞ்சிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)

    ‘எவர் திருமணம் புரிகிறாரோ அவர் இறைநம்பிக்கையின் பாதியை பரிபூரணமாக நிறைவேற்றிவிட்டார். மீதி பாதியில் அவர் இறைவனை பயந்து நடந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)

    திருமணத்தின் மூலமாக தகாத பார்வைகள் தவிர்க்கப்படுகிறது. கற்பும் பாதுகாக்கப்படுகிறது. இது இறைநம்பிக்கையின் முன்னேற்றமாகும்.

    ‘இளைஞர்களே, தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது தகாத பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்கட்டும். ஏனெனில், நோன்பு ஆசையைக் கட்டுப்படுத்தக்கூடியதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

    இஸ்லாமிய ஆன்மிகம் என்பது அதனுள் திருமணமும் அடங்கும். இதனால்தான் இஸ்லாம் துறவறத்தை வெறுக்கிறது. இல்லறத்தை ஆதரிக்கிறது.

    ‘உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) துறவறம் மேற்கொள்ள விரும்பி நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டபோது நபியவர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி), புகாரி)

    திருமணம் நடைபெறாத பட்சத்தில், திருமணம் முடிப்பதற்கு திருமணக்கொடை ஏதும் இல்லாத நிலையில் ஒருவர் தவறான பாதைக்கு சென்று விடுவது சுலபமானது. இதிலிருந்து அவர் பாதுகாப்பு பெற சிறந்த வழி திருமணமே.

    பெண்களை மணந்து கொள்வதற்கு ஆண்மை மட்டும் போதாது. அவளுக்குரிய திருமணக்கொடையையும், அவளுக் குரிய செலவினங்களை கொடுப்பதற்கும் திராணி இருக்க வேண்டும். ஏதேனும் வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். மணப்பெண்ணிடமிருந்தோ, மணப்பெண் வீட்டாரிடமிருந்தோ வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் தடை செய்கிறது. வரதட்சணை அது ரொக்கமாகவோ, நகையாகவோ, வாகனமாகவோ, வீடாகவோ... அவை எந்த ரூபத்தில் வந்தாலும் மணமகன் வாங்கவும் கூடாது; மணப்பெண் வீட்டார் வழங்கவும் கூடாது.

    பெண்கள் என்பவர்கள் பெறுபவர்கள்; பெற்றுக் கொடுப்பவர்கள். ஆண்கள் கொடுப்பவர்கள். திருமண விஷயத்திலும் ஆண்களே மணப்பெண்களுக்கு ‘மஹர்’ எனும் திருமணக் கொடையை கொடுத்தே மணம் புரிய வேண்டுமென திருக்குர்ஆன் உத்தரவிடுகிறது.

    ‘பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள், அவர்களாக மனமுவந்து அதில் ஏதேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மனமகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்’. (திருக்குர்ஆன் 4:4)

    ‘மஹர்’ கொடுத்து நபி (ஸல்) அவர்கள் பெண்களை மணந்து கொண்டது, இந்த சமுதாயத்திற்கு சிறந்த ஒரு முன்மாதிரி ஆகும். மணமகன் ‘மஹர்’ கொடுக்காமல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது என இஸ்லாம் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், மணக்கொடை வழங்கிய மணமகன்தான், மணவிருந்தும் அளிக்க வேண்டும். இன்றோ திருமண விருந்தை மணமகன் வீட்டார், மணப்பெண் வீட்டாரின் தலையில் சுமத்துவதை காண்கிறோம். இதுவும் ஹராம் ஆகும்.

    திருமணத்தை இஸ்லாம் ஒரு சடங்காக மட்டுமே பார்க்கவில்லை. அதை ஒரு வணக்கமாகவும், இறைநம்பிக்கையாகவும் வைத்து அழகு பார்க்கிறது. எனவேதான் திருமணத்தை இறையில்லங்களில் நடத்தும்படி விரும்புகிறது.

    ‘திருமணத்தை நீங்கள் பகிரங்கமாக அறிவிப்பு செய்யுங்கள். மேலும், அதனை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்காக (சலங்கை இல்லாத) தப்பட்டம் அடித்துக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: திர்மிதி)

    இறையில்லங்களில் நடக்கும் இஸ்லாமிய திருமணமாகட்டும், அல்லது திருமண மஹால்களில் நடக்கும் திருமணமாகட்டும் எளிமையாகவே நடத்திடும்படி இஸ்லாம் கேட்டுக்கொள்கிறது.

    ‘செலவில் குறைந்த திரு மணமே அபிவிருத்தியில் நிறைந்ததாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: ஹாகிம்)

    இஸ்லாமிய திருமணத்தை பொறுத்த அளவில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ, தடபுடலான விருந்தோ, சீர்வரிசையோ இவற்றில் எதுவுமே முக்கியமானது அல்ல. மணமகனும், மணப்பெண்ணும் இறைநம்பிக்கை உடையவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும் இருப்பதே முக்கியம். இப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் இணையும் போது அவர்களால் வாழ்க்கையின் அனைத்து துன்பங்களையும் இன்பங்களாகவும், தடைக்கற்களை உயர செல்லும் படிக்கற்களாகவும் மாற்றமுடியும்.

    ‘இந்த உலகம் யாவும் சிற்றின்பமாகும். இந்த உலக சிற்றின்பத்தில் சிறந்தது நல்ல பெண் மனைவியாக வாய்ப்பதாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘நான்கு பாக்கியங்கள் வழங்கப்பட்டவர், ஈருலகின் நன்மை யாவும் வழங்கப்பட்டவர் ஆவார். அவை: 1) நன்றி கூறும் உள்ளம், 2) இறைதுதி பாடும் நாவு, 3) சோதனையில் சகித்துக் கொள்ளும் உடல், 4) கணவனின் உடமைக்கும், தமது மானத்திற்கும் பங்கம் விளைவிக்காத மனைவி என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), பைஹகீ)

    அழியும் உலகில் ஆனந்தமாக வாழ, அழகான துணையை தேர்ந்தெடுத்து, மனநிறைவுடன் வாழ, மனஅமைதி பெற வழி காண்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.
    உலகில் தோன்றியுள்ள அனைத்துச் சமயங்களின் அசல் நோக்கமும் நாம் ஒழுக்கமாக, ஒற்றுமையாக, ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பது தான். அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கல்ல.

    இதுகுறித்து திருக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

    “மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) ரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 4:1)

    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக்கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (திருக்குர்ஆன் 49:13)

    இவ்விரு வசனங்களும் நாம் எங்கிருந்து வந்தவர்கள், எப்படி இருக்க வேண்டியவர்கள் என்பதை தெள்ளத்தௌிவாக சொல்லிக்காட்டுகிறது. குறிப்பாக, ஜாதி, குலம், கோத்திரம் என்பதெல்லாம் ஒருவர் இன்னொருவரை இன்னாரென்று அடையாளம் காண்பதற்கே தவிர சண்டை, சச்சரவுகளுக்கல்ல என்று கூறுவதிலிருந்தே இஸ்லாம் கூறும் பொதுமைப் பண்பை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம்.

    “(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் (இறைவன் என) அழைக்கின்றார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு வகுப்பினருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக்கி வைத்திருக்கின்றோம். பின்னர் அவர்கள் தங்கள் இறைவனிடமே செல்வார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்த செயலைப்பற்றி (அவற்றில் நன்மை எவை, தீமை எவை என்பதை) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான்”. (திருக்குர்ஆன் 6:108)

    நீங்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள். சக சகோதர சமயத்தவர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை, அவர்களது தெய்வங்களை, அவர்களது வழிபாடுகளைத் திட்டாதீர்கள். உங்களுக்கு வணக்க வழிபாடுகள் இருப்பதைப் போலவே அவர்களுக்கும் பற்பல வணக்க வழிபாடுகள் உண்டு என மிக எதார்த்தமாகக் குறிப்பிடுகிறது மேலே உள்ள திருக்குர்ஆன் வசனம்.

    நாம் நம்மைச் சுற்றி குடியிருப்பவர்களோடு, நமது தொடர்பில் இருப்பவர்களோடு என்றைக்கும் ஜாதி, மத, இன, நிற, மொழி வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. எல்லோரும் ஒருதாய் மக்கள் என்ற உயர்ந்த சிந்தனையோடு தான் பேசிப் பழகவேண்டும். நபிகள் நாயகம் அப்படித்தான் அனைவரிடமும் பழகினார்கள்.

    நபிகளார் மக்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்டு மதீனா வந்தபோது, மதீனாவைச் சுற்றி பல சமயத்தவர்களும் வாழ்ந்தனர். அவர்கள் அனைவரோடும் நபிகளார் முதன் முதலில் உள்ளூர் வளர்ச்சிக்காக சமாதான ஒப்பந்தம் செய்தார்கள் என்ற செய்தி ஒன்றே போதும் நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு.

    ஒருமுறை இறந்துபோன யூதர் ஒருவரின் சடலம் வீதி வழியே வந்த போது நபிகளார் எழுந்து நின்றார்கள். இதைக் கண்ட நாயகத்தின் தோழர்கள், நாயகமே! அவர் யூதராயிற்றே நீங்கள் எப்படி? என்று ஆச்சரியமாய் வினவியபோது “அவரும் நம்மைப் போன்று உயிருள்ளவர் தானே” என்றார்கள். (நூல்: மிஷ்காத்)

    இன்னொரு முறை தன்னிடம் பணி புரிந்த யூதச்சிறுவன் ஒருவன் உடல் நலமில்லாமல் இருந்த போது அந்தச்சிறுவனின் வீட்டுக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார்கள். (நூல்: மிஷ்காத்)

    நபிகளார் தமது இருபத்தைந்தாம் வயதில் அல்அமீன் (நன்னம்பிக்கைக்குரியவர்) என்ற சிறப்புப் பெயரை ஊர் மக்களால் சூட்டப்பெற்றார்கள் என்பதிலிருந்தே அவர்கள் எந்த அளவுக்கு பொது மக்களுக்கு சேவை செய்திருக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது.

    இப்படியாக நபிகளார் அனைத்து மத சகோதரர்களிடமும், தொப்புள் கொடி உறவுகளிடமும் நல்லிணக்கத்தோடு தான் நடந்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல நபிகளாரிடமும் மற்ற சமுதாய மக்கள் அவ்வாறு தான் நடந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

    இன்றைக்கு நாம் செய்ய வேண்டியதும், கடைப்பிடிக்க வேண்டியதும் இந்த அற்புதமான பல் சமய நல்லிணக்க, சகோதரத்துவ தத்துவம் தான். இதுதான் என்றைக்கும் நிலையானது, நீடிக்கத்தக்கது, அதுதான் மெய்யானதும் கூட.

    நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை மதித்து நடக்கும் போதுதான் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் மதித்து நடப்பார்கள். இதில் நாம் வேறுபாடு காட்டுவதற்கு என்று ஒன்றும் இல்லை. இஸ்லாம் அப்படி எந்தவொரு இடத்திலும் சிறுவேறுபாட்டை கூறவும் இல்லை. சமூக நல்லிணக்கத்துடன் இருக்கும் எந்தச் சமுதாயமும் தோல்வியை சந்தித்ததாக வரலாறு இல்லை.

    வாருங்கள் தீய பிரிவினைகளை அகற்றுவோம், தூய இணைப்புகளை போற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அந்த இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘குழந்தைகளை அழகியமுறையில் வளர்ப்போம்’ என்பது குறித்த தகவல்களை இங்கு காண்போம்.
    மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே வித்தியாசம் பல உண்டு. அவற்றில் மிக மிக முக்கியமான வித்தியாசம் வாரிசுகளை வளர்த்தெடுப்பது. மிருகங்களின், பறவைகளின், கடல்வாழ் உயிரினங்களின் குட்டிகள், குஞ்சுகள் தானாக வளர்கின்றன. ஆனால், மனிதக்குழந்தைகள் அவ்வாறல்ல. குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள்.

    மீன்குஞ்சுகளுக்கு நீந்த தாய் கற்றுக்கொடுப்பதில்லை. குஞ்சுகள் தானாகவே நீந்த கற்றுவிடுகின்றன. குஞ்சு பறவைக்கு பறக்க தாய் கற்றுக்கொடுப்பதில்லை. அவை தானாகவே பறக்க கற்றுவிடுகின்றன. மிருகங்களின் குட்டிகள் நடப்பதற்கு, உண்ணுவதற்கு தாய் கற்றுக் கொடுப்பதில்லை. அவை தானாகவே நடக்கவும், ஓடவும், உண்ணவும், பருகவும் கற்று கரை சேர்ந்துவிடுகின்றன.

    பகுத்தறிவு இல்லாத இவைகள் தமது தேவைகளை தாமே நிறைவேற்றுகின்றன. பகுத்தறிவு உள்ள மனிதன் குழந்தையாக இருக்கும்போது தமது தேவைகளை தாமே நிறைவேற்ற முடியாமல் பெற்றோரை சார்ந்தே இருக்கிறது. குழந்தைகள் தானாக வளர்வதில்லை. அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

    அந்த வளர்ப்பு அழகிய முறையில் அமைவதை அன்னையின் வளர்ப்பிலும், சுற்றுச்சூழலும்தான் தீர்மானிக்கிறது. மனைவியை மார்க்கப்பற்றுள்ளவராக தேர்ந்தெடுத்தால் குழந்தை வளர்ப்பு சரியாகி விடும். குழந்தைகள் பெற்றோரின் குணநலன்களை தன்னுள் உணர்ந்து கொண்டு, தமது சிந்தனையில் உள்வாங்கிக் கொண்டு வளர்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் வேண்டுவோர், ‘இறைவா, எனக்கொரு நற்பாக்கியமுள்ள குழந்தையை நீ வழங்குவாயாக’ என்று தான் கேட்க வேண்டும். நபி இப்ராகீம் (அலை) அவர்கள் இறைவனிடம் குழந்தை வரம் வேண்டியதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘என் இறைவா, ஒரு மகனை எனக்கு நீ வழங்குவாயாக; அவர் உத்தமரில் ஒருவராக இருக்கவேண்டும்’. (திருக்குர்ஆன் 37:100)

    ‘(இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு) சாந்த குணம் கொண்ட ஒரு மகனைப் பற்றி நாம் அவருக்கு நற்செய்தி அறிவித்தோம்’. (திருக்குர்ஆன் 37:101)

    அதுபோல நபி ஸகரிய்யா தனக்கு ஒரு வாரிசு தருமாறு இறைவனிடம் வேண்டியது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்: இறைவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்”. (திருக்குர்ஆன் 3:38)

    இரு பெற்றோரின் அழகான பிரார்த்தனையால் அவ்விருவருக்கும் நற்பாக்கியமுள்ள குழந்தைபாக்கியம் கிடைத்தது அதிசயம் அல்ல. அவ்விரு குழந்தைகளுமே நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதுதான் வியப்பில் ஆழ்த்தக்கூடியது.

    குழந்தை பாக்கியம் கிடைத்த பிறகு ‘இறைவா, எனது குழந்தைகளிடமிருந்து எனக்குக் கண்குளிர்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையைத் தருவாயாக’ என பிரார்த்திக்க வேண்டும். இது அழகிய குழந்தை வளர்ப்பின் அடுத்த நிலையாக உள்ளது. இது இறைநம்பிக்கையாளர்களின் வேண்டுதலாகவும் அமைந்துள்ளது.

    குழந்தை பிறந்தவுடன் செய்யவேண்டிய கடமைகளில் தலையாயக் கடமை யாதெனில் குழந்தையின் வலது காதில் தொழுகையின் பக்கம் அழைப்பு வாசகங்களை (பாங்கு) கூறவேண்டும். அதன் இடது காதில் தொழுகையை நிலைநிறுத்தும் வாசகங்களை (இகாமத்) கூறவேண்டும்.

    இதுகுறித்த தத்துவத்தை அறிஞர் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுவதாவது:

    பிறந்த குழந்தை அது முதன்முதலாக உலகில் கேட்கும் வாசகங்கள் இறை வல்லமையையும், இறைவனின் மகத்துவத்தையும், இறைவன் ஒருவன் எனும் சாட்சியத்தையும், இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களே ஆவார்கள் எனும் உறுதிமொழியையும், தொழுகையின் பக்கம் கொடுக்கப்படும் அழைப்பிதழையும், வெற்றி நோக்கி வருவதையும் இவ்வாறாக அமைய வேண்டும். இவ்வாறு கூறப்படும் வாசகங்களை செவிமடுக்கும் சைத்தான் வெருண்டோடுகின்றான். சைத்தானின் அழைப்புக்கு முன்பு இறைவனின் அழைப்பு முந்திவிட வேண்டும். பிறகு, உடனே அர்த்தமுள்ள அழகான பெயரை சூட்ட வேண்டும்.

    ‘மறுமையில் உங்களின் பெயரைக் கொண்டும், உங்களின் தந்தை பெயரைக் கொண்டும் அழைக்கப்படுவீர்கள். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு அழகிய பெயரினைச் சூட்டுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: அபூதாவூத்)

    நல்ல பெயர் வைப்பது குழந்தையின் நன்நடத்தையையும், நல்ல எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. பெயர் என்பது மனிதனுடைய குணநலன்களில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது உளவியல் ரீதியான உண்மை. இந்த உண்மையை அன்றே உலகிற்கு உணர்த்தியவர்தான் உத்தம நபி (ஸல்) அவர்கள்.

    குழந்தைக்கு பெயர் சூட்டும் போது பெரியவர்கள் தேன் போன்ற இனிப்பு வகைகளை வாயில் தடவி துஆ செய்ய வேண்டும்.

    குழந்தை பிறந்த ஏழாவது தினத்தில் ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளையும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆட்டையும் அறுத்து தானும் சாப்பிட்டு, அடுத்தவருக்கும் தானம் செய்ய வேண்டும். இதற்கு ‘அகீகா’ என்று பெயர்.

    குழந்தை பிறந்த தினத்திலிருந்தே குழந்தைக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    ‘குழந்தைகள் ஏழு வயது எட்டும் வரை அவர்களுடன் விளையாடுங்கள். அடுத்த ஏழு வயதில் அவர்களுக்கு கல்வியைக் கொடுங்கள். அடுத்த எழு வயதில் அவர்களுடன் இணக்கமாகி விடுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: நஸயீ, அஹ்மது)

    ‘உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்தால், தொழும்படி ஏவுங்கள்; பத்து வயதை அடைந்தால், தொழுகையை விட்டுவிடுவதின் மீது மிருதுவாக அடியுங்கள்; மேலும், குழந்தைகளுக்கிடையில் படுக்கைகளை பிரித்து வையுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அம்ர்பின் சுஅய்ப் (ரலி), அபூதாவூத்)

    குழந்தையை அடித்து, ஏவி, சீர்திருத்தமாக வளர்ப்பதெல்லாம் ஏழு வயதிலிருந்து பத்து, பன்னிரெண்டு வயது வரைக்கும் தான். பன்னிரெண்டு வயதை தாண்டிய குழந்தைகள் ‘டீன்ஏஜ்’ பருவத்தை அடையும்போது சுயமுடிவை எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதற்குள் குழந்தைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக சீர்படுத்தி வளர்த்து ஆளாக்கி விட வேண்டும்.

    பருவ வயதை அடைந்த குழந்தைகளுக்கு ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், மனவளர்ச்சி, எழுத்தாற்றல், பேச்சாற்றல், ஞாபகத்திறன், அறம், கல்வியறிவு, நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பம், அறிவியல், அரசியல், பொருளியல், மருத்துவம், வரலாறு, கலை, இலக்கியம், ஆன்மிகம், விவசாயம், உழைப்பின் உன்னதம், வீரவிளையாட்டு, மனிதநேயம் போன்ற உன்னதமான அம்சங்களை குழந்தை விரும்பும் துறைகளில் அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக வளர்த்து ஆளாக்கி விடுவது பெற்றோரின் தார்மீகக் கடமையாகும். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடே கற்றலும், கற்பித்தலும் ஆகும். இதைவிட மேலானது நல்லொழுக்கம்.

    ‘தந்தை தன் தனயனுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் நல்லொழுக்கக் கல்வியை விட வேறு எந்த சிறந்த அன்பளிப்பையும் வழங்கிட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அய்யூப்பின் மூஸா (ரலி), திர்மிதி)

    ‘எவருக்கு குழந்தை பிறக்கிறதோ அவர், அந்த குழந்தைக்கு அழகான பெயர் சூட்டி, ஒழுக்கமும் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால், அவனுக்கு அவர் திருமணத்தையும் நடத்திவைக்க வேண்டும். இவ்வாறு செய்யாத பட்சத்தில் அந்தக்குழந்தை கேட்டில் விழும்போது, அதன் பாவம் குழந்தையின் தந்தையின் மீதும் சரிசமமாக போய் சேரும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

    பெற்றோர் இறந்த பிறகும் பெற்றோருக்காக பிரார்த்திக்கும் அழகான குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். இவ்வாறு வளர்ப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதிதான். குழந்தைகளை கொஞ்சி மகிழவேண்டும். அவர்களை கெஞ்சும் அளவுக்கு தறுதலையாக வளர்த்து விடக்கூடாது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது’ குறித்த தகவல்களை காண்போம்.
    ‘ஹிஜ்ரத்’ என்பது அரபி மொழி. அதன் பொருள் இறைநம்பிக்கையைக் காக்க, இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றி நடக்க முடியாத காரணத்தினால், ஒருவர் தமது தாய்நாட்டை துறந்து, தாம் பிறந்த மண்ணை, தமக்குச் சொந்தமான சொத்தை, தமது சொந்தங்களை, சில சமயங்களில் தமது தாய்-தந்தை, மனைவி-மக்களை கூட அப்படியே விட்டுவிட்டு, கொண்ட கொள்கைக்காக நாடு துறந்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது.

    மக்காவில் முஸ்லிம்களுக்கு தொல்லைகளும், நெருக்கடிகளும் அதிகமான போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பாசமிகு தோழர், தோழிகளை அண்டை நாடான எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

    அந்த நாட்டிற்கு இரண்டு கட்டங்களாக ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது.

    முதற்கட்டமாக கி.பி. 613, நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 5-ம் ஆண்டில் உஸ்மான் (ரலி) அவர்களின் தலைமையில் அவர்களின் துணைவியார் உட்பட 11 ஆண்கள், 4 பெண்கள் சென்றார்கள்.

    இரண்டாம் கட்டமாக நபித்தோழர்களான இப்னு மஸ்ஊத் (ரலி), ஜாபர் பின் ஆபூதாலிப் (ரலி), அபூமூஸா அஷ்அரீ (ரலி) ஆகியோர் உட்பட 83 ஆண்கள், 18 பெண்கள் சென்றார்கள். இவர்களில் பலர் பின்னாளில் மதீனாவில் குடியேறிவிட்டார்கள்.

    மதீனாவிற்கு பயணம்

    நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்து 14-ம் ஆண்டு வந்த நிலையில் கி.பி. 622 செப்டம்பர் 12-ம் தேதி (ஸபர் மாதம் 27-ம் தேதி) மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது. இந்தப் பயணத்தை நினைவுகூரும் முகமாகத்தான் இஸ்லாமிய ஆண்டு முறையும் ‘ஹிஜ்ரி’ என்று கணக்கிடப்படுகிறது. இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-

    ‘நிச்சயமாக எவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் ஊரை விட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவனின் பாதையில் தியாகம் செய்தார்களோ அவர்களும், இவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆவார்கள். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விசயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில். ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவி கோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவி கூட) உங்களுடன் உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’.

    ‘மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து இறைவனின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும் தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்கு பாவமன்னிப்பும், நற்பேறுகளும் இருக்கின்றன’. (திருக்குர்ஆன் 8:72,74)

    அனஸ் (ரலி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனாவிற்கு வந்த சமயம்... ஒரு நாள் மக்காவாசிகள் நபியவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நாம் யாரிடம் வந்துள்ளோமோ (மதீனாவாசிகளான அன்சாரிகள்) இவர்களைப் போன்று வேறு எவர்களையும் நாங்கள் பார்த்ததில்லை. அவர்கள் செல்வநிலையில் இருந்தால், நன்றாகச் செலவு செய்கிறார்கள். வசதிக்குறைவு ஏற்பட்டாலும் எங்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்கிறார்கள். உழைப்பிலும், சிரமத்திலும் எங்களுடைய பங்கையும் அவர்களே எடுத்துக் கொண்டு, லாபத்தில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். (தம்மை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கும் அவர்களின் இந்த அசாதாரண செயலால்) எல்லா நன்மைகளும், கூலியும் அவர்களுக்கே போய்விடுமோ, (மறுமையில் நாங்கள் நன்மை இழந்து விடுவோமோ) என்று நாங்கள் பயப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.

    ‘இல்லை, அப்படியில்லை, இந்த உபகாரத்திற்குப் பகரமாக நீங்கள் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து, அவர்களைப் புகழ்ந்து வரும் வரை (அவர்களுக்கு நன்றி கூறும் வரை) அவ்வாறு ஆக முடியாது’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

    மக்கவாசிகளுக்கு ‘முஹாஜிர்கள்’ என்று பெயர். இதன் பொருள்: இஸ்லாமிய மார்க்கத்தின்படி வாழமுடியாத நிலை தமது சொந்த நாடான மக்காவில் ஏற்பட்டபோது, கொண்ட கொள்கையை காத்துக் கொள்வதற்காக தாயகம் உட்பட அனைத்தையும் வெறுத்தவர்; அனைத்தையும் துறந்தவர்; அனைத்தையும் விலக்கிக் கொண்டவர்; அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவர்.

    இந்த வார்த்தையின் மூலச் சொல் ‘ஹிஜ்ரத்’ என்பதாகும். இதன் பொருள்: வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல்.

    மதீனாவாசிகளுக்கு ‘அன்சாரிகள்’ என்று பெயர். இதன் பொருள்: ‘உதவியாளர்கள்’ என்பதாகும். மக்காவாசிகளுக்கு அனைத்து விதத்திலும் சுயநலம் பாராமல் மனமுவந்து உதவி செய்து வந்ததால் இந்தப்பெயர் வர காரணமாயிற்று.

    அன்சாரிகளின் உதவியை இறைவனும், இறைத்தூதர் அவர்களும் மனதார பாராட்டுகிறார்கள்.

    ‘தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட நாடு துறந்த (ஹிஜ்ரத் செய்த) ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் இறைவனிடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள். அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (அப்பொருளில் பங்குண்டு). நாடு துறந்து (ஹிஜ்ரத் செய்து) தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 59: 8,9)

    ‘அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ, ஒரு கணவாயிலோ நடந்து சென்றால், அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக செம்மைப்படுத்துவாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    ‘யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக்கூடிய ஓர் ஊருக்கு ஹிஜ்ரத் செல்லுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனாநகர் தீயவர்களை வெளியேற்றிவிடும், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    இந்த ஹிஜ்ரத் மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்படும் வரை நடந்தது. ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 செவ்வாய்க்கிழமை நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி 10,000 தோழர்களுடன் சென்று மக்காவை வெற்றி கொள்கிறார்கள்.

    நாடு துறந்து செல்லும் மக்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மறுவாழ்வுக்கும், வளமான வாழ்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

    ‘இன்னும் எவர் இறைவனின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்.’ (திருக்குர்ஆன் 4:100)

    ‘கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் இறைவனுக்காக நாடு துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நாம் அழகான தங்குமிடத்தை இவ்வுலகில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள கூலி (இதை விட) மிகவும் பெரிது; இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழுநம்பிக்கை வைப்பார்கள்.’ (திருக்குர்ஆன் 16: 41,42)

    நாடு துறந்து வந்தவர்களுக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அடைக்கலம் கொடுத்து, ஆதரவு அளித்து, ஆறுதல் கூறி அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் வாரி வழங்கியது போன்று, அனைத்து நாட்டவரும் அவர்களை வரவேற்று அவர்களின் வளமான வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கட்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!
    நமது குடும்பங்களை இறைவன் விரும்பும் இஸ்லாமியக் குடும்பங்களாக மாற்றுவதில் இல்லாளின் பங்குதான் அளப்பரியதாக இருக்கிறது. குடும்பங்கள் இஸ்லாமியக் குடும்பங்களாக மாறாதவரை சமூக மாற்றம் என்பதும் சாத்தியம் அற்ற ஒரு கற்பனையாகவே தொடரும்.

    ஆரோக்கியமான குடும்பமே வளமான சமூகத்தை உருவாக்கும். அந்த ஆரோக்கியமான குடும்பத்தை உருவாக்குவதில் பெரும்பங்கு குடும்பத் தலைவிக்கே உள்ளது.

    திருக்குர்ஆன் அனைத்துத் துறைகளைக் குறித்தும் பொதுவாகவும் சுருக்கமாகவும் கூறும். ஆனால் குடும்பவியல் குறித்து மட்டும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசுவதைக் கவனித்திருக்கலாம். குடும்பவியலுக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

    நல்ல குடும்பம் என்பது அமைதியையும் மகிழ்ச்சியையும் அடித்தளமாகக் கொண்டே அமைக்கப் படுகிறது. குடும்பங்களில் அமைதியும் நிம்மதியும் ஏற்பட வேண்டுமெனில் தலைவனும்- தலைவியும், கணவனும்-மனைவியும் பரஸ்பரம் தமக்கிடையே நிறைவேற்ற வேண்டிய உரிமைகள் கடமைகள் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

    திருமணத்திற்குப் பின்னர் ஒரு பெண் ‘இல்லாள்’ என்ற உயர் பதவியை அடைகின்றாள். இல்லாள்... இல்லத்தை ஆள்பவள். இல்லத்தரசி என்றும் பெருமிதமாகவும் குறிப்பிடலாம். இல்லத்தை ஆள்வதில் தலைவனை விட தலைவிக்கே அதிக பொறுப்பு உள்ளது.

    கணவனும் மனைவியும் குடும்பத்தின் பங்காளிகள்தானே தவிர, மனைவி அடிமையுமல்ல, கணவன் எஜமானருமல்ல. ஆகவேதான் இல்லற வாழ்வில் இணையும் இருவரையும் ‘வாழ்க்கைத் துணை’ என்று அழைக்கிறோம்.

    சிறந்த சந்ததிகளை உருவாக்குவதுதான் குடும்ப வாழ்வின் இலக்கு. இன்பகரமான குடும்பப் பின்னணியின் மூலம்தான் தூய சந்ததிகளை உருவாக்க முடியும். அந்த இன்பகரமான குடும்பப் பின்னணியைத் தோற்றுவிப்பதில் குடும்பத்தலைவியின் பொறுப்பு பெரும் பங்காக இருக்க வேண்டும் என்பதை குடும்பத் தலைவிகள் மறக்கலாகாது.

    முன்மாதிரி தாய்

    பிள்ளைகளை வார்த்தெடுக்கும் விஷயத்தில் குடும்பத்தலைவி முன்மாதிரி தாயாகத் திகழ வேண்டும். வரலாற்றில் சாதனை படைத்த ஆளுமைகளுள் பெரும்பாலானோர் சிறு பருவத்திலேயே தாய்மார்களால் பட்டை தீட்டப்பட்டவர்களாகவே இருந்துள்ளனர். தாய்மார்களால் தனிக்கவனம் செலுத்தப்பட்ட பிள்ளைகளே பிற்காலத்தில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக திகழ்ந்துள்ளனர்.

    அன்றைய தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்கு ஊட்டும் அமுதுடன் அறிவையும் ஒழுக்கப் பண்பாடுகளையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர். அதுதான் பிற்காலத்தில் அவர்களது ஊட்டச்சத்தாக அமைந்துள்ளது.

    அலி (ரலி) அவர்களை, “அறிவின் தலைவாசல்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் கூறினார்கள். இதற்கான மூலகாரணம், அவரின் தாய் பாத்திமா பின்த் அசத் (ரலி) அவர்கள்தான் என்றால் அது மிகையல்ல.

    ஸுபைர் (ரலி) அவர்கள் அறிவும் ஞானமும் நற்பண்புகளும் மிக்கவராகவும் பெரும் வீரராகவும் திகழ்ந்தார்கள்.

    “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் ஒரு மெய்க்காப்பாளர் இருப்பார். எனது மெய்க்காப்பாளர் ஸுபைர் (ரலி)” என்று பெருமானார் (ஸல்) அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர். பெரும் போர் வீரர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள்கள் பிடித்து போர் செய்யும் ஆற்றல் பெற்ற தனிப்பெரும் வீரர்.

    இவ்வளவு சிறப்புக்கும் காரணம் யார்? அவரின் தாயார் ஸஃபிய்யா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள்தான். இதனை வரலாறு தெளிவுற பதிவுசெய்து வைத்துள்ளது.

    ‘இரண்டாம் உமர்’ என்றும் ‘நேர்வழி நின்ற ஐந்தாம் கலீபா’ என்றும் வரலாற்று ஆசிரியர்களால் பெருமையுடன் பாராட்டப்படுபவர்தான் உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள். இவரது தாயார், உமர் (ரலி) அவர்களுடைய மகனான ஆஸிம் (ரலி) அவர்களுடைய மனைவியாகும். இப்பெண்மணி நற்குணத்திலும் இறையச்சத்திலும் இறை வழிபாட்டிலும் மிகச்சிறந்தவராக விளங்கினார். ஆகவே தமது மகனை ஒரு தலைசிறந்த ஆளுமை மிக்க முன்மாதிரியாக மாற்றிக்காட்ட நாடினார். முயன்றார். அதில் வெற்றியும் பெற்றார்.

    இமாம் ஷாபி (ரஹ்) அவர்களை அறியாதவர்கள் இருக்க முடியுமா என்ன? சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆயினும் அன்னாரின் தாயார் இமாம் ஷாபி (ரஹ்) அவர்களைப் பேணி வளர்த்து, அமுதோடு அறிவையும் சேர்த்து ஊட்டி உலகம் போற்றும் உத்தம அறிஞராக மாற்றிக்காட்டினார். அனைத்துப் பெருமையும் அன்னாரின் தாயாரையேச் சாரும்.

    இமாம் அவர்களின் அன்னை கூறுகின்றார்: “நான் எனது மகன் ஷாபிக்கு எப்பொழுதெல்லாம் பாலூட்ட நினைப்பேனோ அப்போதெல்லாம் உளு (அங்க சுத்தி) செய்துகொள்வேன்”. தமது பிள்ளையை பெரிய ஆளாக வளர்த்தெடுக்க ஒரு தாய் எப்போது எப்படி திட்டம் போட்டுள்ளார்கள் என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

    பொதுவாக தந்தையைவிட தாய்தான் பிள்ளை களுடன் மிகவும் நெருக்கமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடுவார். இதன் காரணமாகத்தான் தாய்-சேய் உறவு பலமடைகிறது.

    தாயின் மடியே பிள்ளைகளின் முதல் பள்ளிக்கூடமாகத் திகழ்கிறது. அங்கு கற்பிக்கப்படும் பாடங்களும், கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்களும்தான் பிள்ளைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன, சிறந்த ஆளுமைகளாக அவர்களை உருவாக்குகின்றன என்பதை குடும்பத் தலைவிகள் மறந்துவிடலாகாது.

    ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் சிறுவயதிலேயே கற்றுக்கொடுத்து அன்னையால் வார்த் தெடுக்கப்படும் பிள்ளைக்கும், தாயால் வளர்க்கப் படாத பிள்ளைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அழகுறப் புரிந்துகொள்ளலாம். தாய் சரியில்லை என்றால் ஏறக்குறைய பிள்ளையும் சரியில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது.

    நூஹ் (அலை) அவர்களுடைய காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது மலை உச்சி மீது ஏறி நின்ற தமது மகனை நபி நூஹ் (அலை) அவர்கள் அழைக்கின்றார்கள். அவனோ கப்பலில் ஏற மறுகின்றான். இக்காட்சியை திருக்குர்ஆன் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது:

    “அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே”. அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” (11:42)

    இறுதியில் என்னவாயிற்று..? அதையும் திருக்குர்ஆனே விவரிக்கின்றது: “இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!” (11:43)

    வாழ வருமாறு தந்தை அழைக்கின்றார். மகன் மறுக்கின்றான். தந்தையின் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து தண்ணீரில் மூழ்கிப்போன ஒரு மகனின் பரிதாபக் கதை இது.

    காரணம் யார்? நூஹ் (அலை) அவர்களின் மனைவி. அதாவது மகனின் தாயார். அவர் முஸ்லிமாக இருக்கவும் இல்லை, ஒழுக்கப்பண்புகளை மகனுக்குக் கற்றுக்கொடுக்கவும் இல்லை.

    அதே சமயம் இன்னொரு தந்தையும் தனது மகனை அழைத்தார். அவர் யார் தெரியுமா? ஆம். அவர்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள். அறுத்துப்பலியிட மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அழைக் கிறார் தந்தையாகிய இப்ராஹீம் (அலை) அவர்கள். மகனின் பதில் என்னவாக இருந்தது? திருக்குர்ஆன் அழகாக இதனை எடுத்தியம்புகிறது:

    “என் அருமை மகனே! நான் உன்னை பலியிடுவதாய்க் கனவுகண்டேன். உனது கருத்து என்ன என்பதைச் சொல்!” அதற்கு அவர் கூறினார்: “என் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப்படுகிறதோ அதைச் செய்துவிடுங்கள். அல்லாஹ் நாடினால், என்னைப் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்” (37:102)

    தந்தை மரணத்தை நோக்கி அழைக்கின்றார். ஆயினும் மகனின் பதிலைப் பாருங்கள். இப்படியொரு வியத்தகு பதிலைக் கூறுவதற்குக் காரணமாக இருந்தவர் யார்? இப்ராஹீம் (அலை) அவர் களுடைய மனைவி, இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய தாயார் அன்னை ஹாஜிரா அம்மையார் அவர்கள்தானே. காரணம், அந்த அம்மையாரின் தனிப்பெரும் வளர்ப்பு அப்படி இருந்தது.

    ஒரு தந்தை தனது மகனை வாழ்வதற்காக அழைக்கின்றார். மகன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கின்றான், நிராகரிக்கின்றான். அதேசமயம் இன்னொரு தந்தையோ தமது மகனை அறுத்துப் பலியிட மரணத்தை நோக்கி அழைக்கின்றார். மகனோ உடனடியாக அந்த அழைப்புக்குச் செவி சாய்கின்றார்.

    இரு மகன்களுக்கும் இடையே நிலவும் இந்த வேறுபாடு உணர்த்துவது என்ன? தாயின் வளர்ப்பு மிகச்சரியாக அமைந்துவிட்டால் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இதுவே இல்லற வாழ்வில் இல்லாளின் கடமை!

    ஆகவே, நாமும் நமது குடும்பமும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தந்தையின் பங்களிப்பைவிட தாயின் பங்களிப்பே அதிகம் தேவைப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலே போதும், அநேக குடும்பங்கள் சுவனக்குடும்பங்களாக மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!

    மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது.
    நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்திபெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவர் என போற்றி அழைக்கப்படும் சாகுல்ஹமீது காதிர் நாயகம் மறைந்த நினைவு நாளையொட்டி கந்தூரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் மாலை வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று இரவு 10 மணிக்கு தர்காவில் பீர் அமர வைக்குதல் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை தொடங்கி நடக்கிறது. சந்தனக்கூடு நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்திய முழக்கங்களுடன் புறப்படுகிறது. அப்போது சாம்பிராணி சட்டி ரதம், நகராமேடை மற்றும் பல்வேறு மின் அலங்கார தட்டிகள் சந்தனக்கூட்டின் முன்னும், பின்னும் அணிவகுத்து செல்கின்றன. சந்தனக்கூடு ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹூசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, சர்அகமது தெரு உள்ளிட்ட தெருக்களில் பவனியாக செல்லும்.

    பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சந்தனக் கூடு சென்றடையும். தொடர்ந்து அங்குள்ள கூட்டுப்பாத்திகா மண்டபத்தில் பாத்திகா ஓதி பின்னர் நாகூர் பெரியகடை தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, மியான் தெரு, ரெயிலடி தெரு, நூல்கடை தெருவிற்கு வந்து அங்குள்ள பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தனக் குடத்தை வாங்கி கூட்டில் வைத்து மினரா வடப்புற தெரு, அலங்கார வாசல், செய்யது பள்ளி தெரு வழியாக சந்தனக்கூடு நாளை (புதன்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.

    பின்னர் நியூ பஜார் லைன் வழியாக தர்காவின் கால்மாட்டு வாசல் வழியாக சந்தனக்குடம் தர்காவின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, அதிகாலை 4.30 மணியளவில் சந்தனக்குடங்கள் தர்காவில் உள்ள ஆண்டவரின் சமாதி அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். விழாவையொட்டி நாகூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ×