search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    இறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து ஹிஜ்ரத் செல்வது

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைநம்பிக்கையைக் காக்க தாய்நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது’ குறித்த தகவல்களை காண்போம்.
    ‘ஹிஜ்ரத்’ என்பது அரபி மொழி. அதன் பொருள் இறைநம்பிக்கையைக் காக்க, இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றி நடக்க முடியாத காரணத்தினால், ஒருவர் தமது தாய்நாட்டை துறந்து, தாம் பிறந்த மண்ணை, தமக்குச் சொந்தமான சொத்தை, தமது சொந்தங்களை, சில சமயங்களில் தமது தாய்-தந்தை, மனைவி-மக்களை கூட அப்படியே விட்டுவிட்டு, கொண்ட கொள்கைக்காக நாடு துறந்து மற்றொரு நாட்டில் தஞ்சம் அடைவது.

    மக்காவில் முஸ்லிம்களுக்கு தொல்லைகளும், நெருக்கடிகளும் அதிகமான போது, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் பாசமிகு தோழர், தோழிகளை அண்டை நாடான எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

    அந்த நாட்டிற்கு இரண்டு கட்டங்களாக ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது.

    முதற்கட்டமாக கி.பி. 613, நபி (ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 5-ம் ஆண்டில் உஸ்மான் (ரலி) அவர்களின் தலைமையில் அவர்களின் துணைவியார் உட்பட 11 ஆண்கள், 4 பெண்கள் சென்றார்கள்.

    இரண்டாம் கட்டமாக நபித்தோழர்களான இப்னு மஸ்ஊத் (ரலி), ஜாபர் பின் ஆபூதாலிப் (ரலி), அபூமூஸா அஷ்அரீ (ரலி) ஆகியோர் உட்பட 83 ஆண்கள், 18 பெண்கள் சென்றார்கள். இவர்களில் பலர் பின்னாளில் மதீனாவில் குடியேறிவிட்டார்கள்.

    மதீனாவிற்கு பயணம்

    நபி (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்து 14-ம் ஆண்டு வந்த நிலையில் கி.பி. 622 செப்டம்பர் 12-ம் தேதி (ஸபர் மாதம் 27-ம் தேதி) மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் எனும் பயணம் நடைபெற்றது. இந்தப் பயணத்தை நினைவுகூரும் முகமாகத்தான் இஸ்லாமிய ஆண்டு முறையும் ‘ஹிஜ்ரி’ என்று கணக்கிடப்படுகிறது. இதுகுறித்த திருக்குர்ஆன் வசனங்கள் வருமாறு:-

    ‘நிச்சயமாக எவர் இறைநம்பிக்கை கொண்டு, தம் ஊரை விட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் இறைவனின் பாதையில் தியாகம் செய்தார்களோ அவர்களும், இவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவியவர்களும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆவார்கள். ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்ட பின்பும் ஹிஜ்ரத் செய்யவில்லையோ, அவர்களுடைய எந்த விசயத்திற்கும் நீங்கள் பொறுப்பாளர்கள் அல்லர்; அவர்கள் ஹிஜ்ரத் செய்யும் வரையில். ஆயினும் மார்க்க விவகாரங்களில் உங்களிடம் அவர்கள் உதவி கோரினால் அவர்களுக்கு உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும். ஆனால், (இந்த உதவி கூட) உங்களுடன் உடன்படிக்கை செய்துள்ள கூட்டத்தாருக்கு எதிரானதாக இருக்கக்கூடாது. நீங்கள் செய்கின்ற அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’.

    ‘மேலும், எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, மேலும் ஹிஜ்ரத் செய்து இறைவனின் வழியில் போராடினார்களோ அவர்களும், எவர்கள் தஞ்சம் அளித்து உதவி புரிந்தார்களோ அவர்களும் தாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்களாவர். அவர்களுக்கு பாவமன்னிப்பும், நற்பேறுகளும் இருக்கின்றன’. (திருக்குர்ஆன் 8:72,74)

    அனஸ் (ரலி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து, மதீனாவிற்கு வந்த சமயம்... ஒரு நாள் மக்காவாசிகள் நபியவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நாம் யாரிடம் வந்துள்ளோமோ (மதீனாவாசிகளான அன்சாரிகள்) இவர்களைப் போன்று வேறு எவர்களையும் நாங்கள் பார்த்ததில்லை. அவர்கள் செல்வநிலையில் இருந்தால், நன்றாகச் செலவு செய்கிறார்கள். வசதிக்குறைவு ஏற்பட்டாலும் எங்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்கிறார்கள். உழைப்பிலும், சிரமத்திலும் எங்களுடைய பங்கையும் அவர்களே எடுத்துக் கொண்டு, லாபத்தில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். (தம்மை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கும் அவர்களின் இந்த அசாதாரண செயலால்) எல்லா நன்மைகளும், கூலியும் அவர்களுக்கே போய்விடுமோ, (மறுமையில் நாங்கள் நன்மை இழந்து விடுவோமோ) என்று நாங்கள் பயப்படுகிறோம்’ என்று கூறினார்கள்.

    ‘இல்லை, அப்படியில்லை, இந்த உபகாரத்திற்குப் பகரமாக நீங்கள் அவர்களுக்கு பிரார்த்தனை செய்து, அவர்களைப் புகழ்ந்து வரும் வரை (அவர்களுக்கு நன்றி கூறும் வரை) அவ்வாறு ஆக முடியாது’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

    மக்கவாசிகளுக்கு ‘முஹாஜிர்கள்’ என்று பெயர். இதன் பொருள்: இஸ்லாமிய மார்க்கத்தின்படி வாழமுடியாத நிலை தமது சொந்த நாடான மக்காவில் ஏற்பட்டபோது, கொண்ட கொள்கையை காத்துக் கொள்வதற்காக தாயகம் உட்பட அனைத்தையும் வெறுத்தவர்; அனைத்தையும் துறந்தவர்; அனைத்தையும் விலக்கிக் கொண்டவர்; அனைத்தையும் ஒதுக்கித் தள்ளியவர்.

    இந்த வார்த்தையின் மூலச் சொல் ‘ஹிஜ்ரத்’ என்பதாகும். இதன் பொருள்: வெறுத்தல், ஒதுக்குதல், விலகிக் கொள்ளுதல்.

    மதீனாவாசிகளுக்கு ‘அன்சாரிகள்’ என்று பெயர். இதன் பொருள்: ‘உதவியாளர்கள்’ என்பதாகும். மக்காவாசிகளுக்கு அனைத்து விதத்திலும் சுயநலம் பாராமல் மனமுவந்து உதவி செய்து வந்ததால் இந்தப்பெயர் வர காரணமாயிற்று.

    அன்சாரிகளின் உதவியை இறைவனும், இறைத்தூதர் அவர்களும் மனதார பாராட்டுகிறார்கள்.

    ‘தமது வீடுகளையும், சொத்துக்களையும் விட்டு வெளியேற்றப்பட்ட நாடு துறந்த (ஹிஜ்ரத் செய்த) ஏழைகளுக்கும் (அப்பொருளில் பங்குண்டு). அவர்கள் இறைவனிடமிருந்து அருளையும், திருப்தியையும் எதிர்பார்க்கின்றனர். இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் உதவுகின்றனர். அவர்களே உண்மையாளர்கள். அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (அப்பொருளில் பங்குண்டு). நாடு துறந்து (ஹிஜ்ரத் செய்து) தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ளமாட்டார்கள். தமக்கு வறுமை இருந்தபோதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர்’. (திருக்குர்ஆன் 59: 8,9)

    ‘அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ, ஒரு கணவாயிலோ நடந்து சென்றால், அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக செம்மைப்படுத்துவாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    ‘யஸ்ரிப் என்று மக்கள் கூறக்கூடிய, எல்லா ஊர்களையும் மிகைக்கக்கூடிய ஓர் ஊருக்கு ஹிஜ்ரத் செல்லுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். அதுதான் மதீனா. இரும்பின் துருவை உலை நீக்கிவிடுவதைப் போல் மதீனாநகர் தீயவர்களை வெளியேற்றிவிடும், என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    இந்த ஹிஜ்ரத் மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்படும் வரை நடந்தது. ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 செவ்வாய்க்கிழமை நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கி 10,000 தோழர்களுடன் சென்று மக்காவை வெற்றி கொள்கிறார்கள்.

    நாடு துறந்து செல்லும் மக்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அவர்களின் மறுவாழ்வுக்கும், வளமான வாழ்வுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

    ‘இன்னும் எவர் இறைவனின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்.’ (திருக்குர்ஆன் 4:100)

    ‘கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் இறைவனுக்காக நாடு துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நாம் அழகான தங்குமிடத்தை இவ்வுலகில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள கூலி (இதை விட) மிகவும் பெரிது; இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழுநம்பிக்கை வைப்பார்கள்.’ (திருக்குர்ஆன் 16: 41,42)

    நாடு துறந்து வந்தவர்களுக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அடைக்கலம் கொடுத்து, ஆதரவு அளித்து, ஆறுதல் கூறி அனைத்து சலுகைகளையும், உரிமைகளையும் வாரி வழங்கியது போன்று, அனைத்து நாட்டவரும் அவர்களை வரவேற்று அவர்களின் வளமான வாழ்வாதாரத்திற்கு துணை நிற்கட்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×