search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    குடும்பத்தாரின் கடமைகளையும் உரிமைகளையும் மதிப்போம்

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அதில் ஒன்றான ‘குடும்பத்தாரின் கடமைகளையும் உரிமைகளையும் மதிப்போம்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.
    ஒரு குடும்பம் என்பது கணவன்-மனைவி, அவர்களது பிள்ளைகள் ஆகும். கூட்டுக்குடும்பம் என்பது தங்களது பெற்றோர், சகோதரர்கள் ஆகியோருடன் இணைந்து ஒரே குடும்பமாக வாழ்வது ஆகும்.

    ஒரு குடும்பத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தங்களுக்கிடையே பரஸ்பரம் இணக்கமாக வாழ்ந்து, ஒருவர் மற்றவரின் தேவைகளை நிறைவேற்றிட வேண்டும். உண்மையான இறைநம்பிக்கை, ஒரு மனிதன் இறைவனின் உரிமைகளை மதித்து, கடமையாற்றுவதில் மட்டும் அடங்கி விடவில்லை. குடும்பத்தாரின் உரிமைகளை மதித்து செயலாற்றுவதிலும் அடங்கிஉள்ளது.

    கணவனின் கடமைகள்

    இஸ்லாமிய திருமணம் என்பது மாலைகளை மாற்றுவதோ, மோதிரங்களை மாற்றுவதோ, கருக மணியை அணிந்து கொள்வதோ அல்ல. அது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப் பத்திரத்தில் கணவன் மனைவியாக சேரப்போகிறவர்கள் கையெழுத்திடுகின்றனர்.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (4:21) குறிப்பிடும்போது, ‘உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று, ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே’ என்று தெரிவிக்கின்றது.

    கணவன் தன் மனைவிக்கு ஆற்றவேண்டிய உரிமைகளை மதித்து, அவளின் உரிமைகளையும், கடமைகளையும் நிறைவேற்றுவேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றான். இவ்வாறே மனைவியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றாள். இருவரும் அவரவர் உரிமையில் குறையேதும் வைக்கக் கூடாது.

    இதுகுறித்த விவரங்களை நபித்தோழர் முஆவியா பின் ஹைதா (ரலி) இவ்வாறு விளக்கியுள்ளார்.

    ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் அவர் தம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?’ என வினவினேன். அதற்கு நபிகளார் ‘நீர் சாப்பிடுவதை அவளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்; நீர் அணியும் (உயர்தர) உடையை அவளுக்கும் அணிவிக்க வேண்டும்; மேலும் நீர் அவளின் முகத்தில் அடிக்கக்கூடாது; அவளை கேவலமாகவும் பேசக்கூடாது; அவளை வீட்டில் தவிர வேறெங்கும் வெறுத்து ஒதுக்கக்கூடாது’ என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்’. (நூல்: அஹ்மது)

    மனைவியை புன்னகையுடன் காணவேண்டும்; அவளுக்கு அன்பாக ஊட்டிவிட வேண்டும். இதுவும் அவளுக்குச் செய்யவேண்டிய உரிமைதான் என்கிறது பின்வரும் நபிமொழி:

    ‘நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவளம் உணவாயினும் சரி, அதற்கும் நற்பலன் உண்டு என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத்பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தமது மனைவிக்கு வீட்டு வேலைகளில் அதிகமாக உதவியிருக்கிறார்கள். இது குறித்த நபிமொழி வருமாறு:-

    ‘நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன வேலை செய்து வந்தார்கள்?’ என்று கேட்டேன். ‘நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக வீட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பைச் செவிமடுத்தால் தொழுகைக்காகப் புறப்பட்டு விடுவார்கள்’ என்று ஆயிஷா (ரலி) பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது மனைவியரை அழைத்துச் செல்வார்கள். இதுவும் ஒரு கணவன் தமது மனைவிக்குச் செலுத்த வேண்டிய நியாயமான உரிமையாகும்.

    ‘இறைவனின் திருப்தியை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: உக்பா பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    ‘உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள். அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும்’. (திருக்குர்ஆன் 65:6,7)

    மனைவியின் கடமைகள்

    ஒரு மனைவி தமது கணவனுக்கு ஆற்ற வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்: வீட்டிற்கு வருகைதரும் கணவனை புன்சிரிப்புடன் வரவேற்று உபசரிக்க வேண்டும். ஆரோக்கியமான நல்ல உணவு வகைகளை சமைத்து, தமது கைகளால் பரிமாற வேண்டும். மிருதுவான குரலில் பேசவேண்டும். அவனின் அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது. இவை யாவும் மனைவியின் கடமைகளாகும்.

    இதுகுறித்த நபி மொழிகள் வருமாறு:-

    ‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு பெண் யாருக்கு அதிகம் கடமைப்பட்டுள்ளாள்’ என நான் கேட்டதற்கு, ‘அவளின் கணவருக்கு’ என நபி (ஸல்) பதிலளித்தார்கள்.’ (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: ஹாகிம்)

    ‘சிறந்த பெண் யாரென்றால் நீ அவளைப் பார்க்கும் போது அவள் உன்னை சந்தோஷப்படுத்துவாள்; நீ அவளுக்கு ஆணையிட்டால், அவள் உனக்கு கட்டுப்படுவாள்; நீ அவளை விட்டும் மறைந்துவிட்டால், அவள் உனது செல்வத்தையும், அவள் தமது கற்பையும் பாதுகாப்பாள் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: நஸயீ)

    ‘ஒரு பெண் ஐவேளைத் தொழுகைகளையும், ரமலான் மாத நோன்பையும் நிறைவேற்றி, தமது கற்பையும் பாதுகாத்து, கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், அவள் சொர்க்கத்தில் தான் நாடிய எந்தவாசல் வழியாகவும் நுழையலாம் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது)

    குழந்தைகள் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

    இறைவனுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் அதிகம் கடமைப்பட்டிருப்பது அவர்களின் பெற்றோருக்கே. இதுதான் இறைவனின் விருப்பமும் ஆகும்.

    “என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா, இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).

    பெற்றோரின் உரிமைகளை மதித்து, அவர்களை மரியாதையாக நடத்தினால், பிள்ளைகளின் எதிர்காலம் நலமாக அமையும். இறைவனுக்கு மாறு செய்வதை தவிர்த்து, அவர்களின் மற்ற அனைத்து பேச்சுக்களையும் கேட்டு நடக்க வேண்டும். வயோதிக பருவத்தில் ஒரு கைத்தடி உதவுவது போன்று அவர்களுக்கு கைத்தாங்கலாக இருந்து உதவிட வேண்டும். அவர்களை அருகில் வைத்து கண்ணின் இமை போன்று பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு பிள்ளைகளிடமிருந்து கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் குறைவில்லாமல் நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் முறைதான் இறைநம்பிக்கை.

    பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய உரிமைகள்

    பெற்றோரும் தமது குழந்தைகளுக்கு செய்யவேண்டிய நிறைய கடமைகள் உள்ளன. அதை கவனத்தில் கொண்டு பெற்றோரும் நடந்து கொள்ள வேண்டும். குழந்தையின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், அழகான நடத்தைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு அதிகமான செல்லம் கொடுக்காமல், நல்லொழுக்கம் கற்றுக்கொடுத்து, கண்டிப்புடன் கூடிய இரக்கம் காட்டி வளர்க்க வேண்டும். பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அறம் சார்ந்த விஷயங்களையும், மார்க்க சம்பந்தமான விஷயங்களையும், நீதி போதனைகளையும் போதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

    பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசி, அவர்களிடம் அதிகமான நேரங்களை செலவிட வேண்டும். அவர்களுக்கு இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு போன்ற இஸ்லாமியக் கடமைகளில் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பருவ வயதை அடைந்த குழந்தைகள் செல்லும் பாதை சொர்க்கத்தின் பாதையாக இருப்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். நரகத்தின் படுகுழியாக இருக்காமல் பாதுகாப்பது பெற்றோரின் கடமையாகும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக்காத்துக் கொள்ளுங்கள்.’ (திருக்குர்ஆன் 66:6)

    இவ்வாறு குழந்தைகளின் உரிமையை மதித்து நடப்பதும் இறைநம்பிக்கையின் உடல் சார்ந்த பகுதிதான்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×