என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.
    விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு. திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு.

    இது கற்பனைக்கதையல்ல. காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறார். எசேக்கியேல் இறைவாக்கினர் தனது நூலில் மூன்று நீதிமான் களைப் பற்றி குறிப்பிடும்போது நோவா, தானியேல் மற்றும் யோபு என குறிப்பிடு கிறார். புதிய ஏற்பாட்டிலும் யோபுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது கற்பனை என சொல்பவர்கள் மனதில் நினைக்கும் காரணம் யோபுவின் வாழ்க்கையில் நடக்கின்ற அழிவுகள். தொடர்ச்சியாக அவரது கால்நடைகள், சொத்துகள், பிள்ளைகள் எல்லாரும் அழிகின்றனர்.

    எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் ஒரே ஒரு நபர் மட்டும் தப்பிப் பிழைக்கிறார். அதே போல கதாபாத்திரங்கள் எல்லாமே கவிதை நடையிலேயே பேசுகின்றன.

    இரண்டையும் கலந்து பார்த்தால் யோபு என்பவர் நிஜ மனிதர். ரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒருவர் கற்பனை கலந்து கவிதை நூலாக வடித்திருக்கிறார் என ஒரு முடிவுக்கு வரலாம்.

    எபிரேயக் கவிதையான இந்த நூலில் கவித்துவம், நாடகத் தன்மை, வழக்காடுதல் என பல தன்மைகள் மிக அழகாக கோர்க்கப்பட்டுள்ளன. இந்த நூலின் அழகை மார்ட்டின் லூதர் உட்பட பல்வேறு வரலாற்றுத் தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

    இந்த நூல் கவித்துவ அழகு மட்டுமல்லாமல் பல்வேறு தத்துவச் சிந்தனைகளையும் விதைக்கிறது. நாம் ஏன் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம்? ஏன் நமக்கு துன்பம் வருகிறது? துன்பத்தை அனுமதிப்பது யார்? வாழ்க்கை என்றால் என்ன? நமது வாழ்க்கையில் சாத்தானின் பங்கும், கடவுளின் பங்கும் என்ன? நல்லவர்கள் ஏன் துன்பத்தைச் சந்திக்கின்றனர்? போன்ற பல கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது இந்த நூல்.

    கடவுள் இருக்கிறார், அவர் அன்பும் வலிமையும் உடையவர், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தனது படைப்புகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் போன்ற பல சிந்தனைகளை நமக்கு இந்த நூல் தருகிறது. தொடக்கத்தில் உரைநடை, முடிவிலும் உரைநடை, இடையில் கவிதை என இந்த நூல் ஒரு அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது.

    இதை ‘ஞான இலக்கியம்’ என்றும் சொல்வார்கள். அறிவார்ந்த சிந்தனைகளும், உரையாடல்களும் இந்த நூலில் நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் சரியாய் இருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    யூதர்களின் காலத்தில் நன்மைக்கான பயனும், தீமைக்கான பயனும் இந்த காலத்திலேயே கிடைத்து விடும் என நம்பினார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தில் இவ்வுலக வாழ்க்கையின் பயனானது அடுத்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் என நம்பு கிறோம். யோபு நூல் யூத சிந்தனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.

    ‘யோபு நேர்மையாளர்’ என கடவுள் சொல்ல, அவருக்கு வசதிகள் இருப்பதால் தான் அவர் இப்படி இருக்கிறார் என சாத்தான் வாதிடுகிறான். கடவுள் யோபுவின் செல்வங்களை, குழந்தைகளை அழிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறார். பின்னர் யோபுவின் உடலில் நோய்களைக் கொடுக்கிறார்.

    கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை யோபுவுக்குத் தெரியாது. அவர் விசுவாசத்தில் நிலைத்திருந்தாரா? மனைவியும், நண்பர்களும் அவரை அவமானப்படுத்துகின்றனர். குற்றவாளியாக்குகின்றனர். பாவி என்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டியும் யோபு நீதிமானாகவே இருக்கிறார்.

    பிரமிப்பூட்டும் யோபுவின் விசுவாசம் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் சவால். விண்ணில் நிகழ்கின்ற விஷயங்களுக்கு மண்ணில் பாதிப்பு இருக்கும் என்பதும், மண்ணில் நாம் வாழும் வாழ்க்கை இறைவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதும் இந்த நூல் சொல்லும் இரண்டு பார்வைகளாகும்.

    இந்த நூல் சொல்லும் இரண்டு முக்கியமான பாடங்கள் வியப்பானவை. ஒன்று, சாத்தான் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடவுளைப் போல அவனும் எல்லா இடங்களிலும் இருப்பான் எனும் பொதுவான நம்பிக்கை தவறானது. இரண்டு, கடவுளின் அனுமதியில்லாமல் அவருடைய மக்களை சாத்தான் தொட முடியாது எனும் உண்மை. இந்த இரண்டு புரிதல்களும் நமக்கு யோபு நூலின் வாயிலாக கிடைக்கிறது.

    யோபுவின் நோய்க்குக் காரணம் அவனது பாவம் என அவனை குற்றம் சுமத்துகின்றனர் நண்பர்கள். யோபுவோ, தான் குற்றமற்றவன் என்கிறார். நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.

    சேவியர்
    காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    காவல்கிணறு புனித உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருயாத்திரை, திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடந் தது. 8-ம் திருநாளன்று மாலையில் நற்கருணை பவனியும், 9-ம் திருநாளன்று மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும், இரவில் தேர் பவனியும் நடந்தது.

    10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா பாடல் திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடந்தது. விழாவில் பணகுடி, காவல்கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானவர்கள் கலந்துகொண்டனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு குரு மைக்கிள் எஸ்.மகிழன் அடிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.
    தேவனுடைய பிள்ளைகளுக்கும், உலக மக்களுக்கும், தேவ ஊழியர்களுக்கும் பல விதங்களில் பிரச்சனைகளை உண்டாக்கி ஆத் மாவில் சோர்வையும், சரீரங்களில் பலவீனங் களையும் பிசாசானவன் கொண்டு வருகின்றான்.

    நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் ஆண்டவர் உங்களைப் பார்த்து சொல்கிறார், ‘தைரியமாயிருங்கள்’.

    ஜெபத்தோடு வாசித்து தியானம் செய்யுங்கள்

    ‘நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர், என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்’. சங்.138:3

    அதைரியம், சந்தேகம் பலவிதமான மனக்குழப்பம் ஒரு தேவபிள்ளைக்கு மனதளவில் உண்டாகும்போது சரிவர ஜெபிக்க முடியாமல், வேதத்தை வாசிக்க விருப்பமில்லாமல், மேலும் தேவனை தேடுவதற்கு இருதயம் தாகம் கொள்ளாமல் போய்விடும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது, அன்பான தேவனுடைய பிள்ளைகளே, ஒன்றை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். பிசாசானவன் உங்களுக்கு விரோதமாக கிரியை செய்து கொண்டிருக்கிறான்.

    இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மேற்கண்ட சங்கீதத்தை மீண்டும் ஒருமுறை ஜெபத்தோடு வாசித்து தியானம் பண்ணுங்கள். நான் கூப்பிட்ட போது எனக்கு மறு உத்தரவு அருளினார். தேவனுடைய பிள்ளையே, நாம் ஆண்டவரை நோக்கி ஜெபிக்கும் போது நம்முடைய விண்ணப்பத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்காத சூழ்நிலையில் ஆத்மாவிலே பலவீனம் தாக்கிவிடும்.

    அப்படியானால் நம்முடைய ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்க வேண்டுமல்லவா? சங்.37:5 சொல்லுகிறது, ‘கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்’.

    நாம் எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்பதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார். சந்தோஷத்தோடு ஆண்டவரை நோக்கி நாம் ஜெபம் பண்ணும்போது கட்டாயம் ஜெபம் கேட்கப்படும். ஆகவே நம்முடைய சந்தோஷத்தை சத்துரு திருடி விடாதபடி நாம் காத்துக்கொள்ள வேண்டும். அவர் நமக்கு பதில் கொடுக்கும் போதெல்லாம் ஆத்மாவில் பெலன் உண்டாகும். அப்போது நம்மை அறியாத ஒரு தைரியம் நமக்குள்ளே ஏற் படுவதை உணருவோம். ஆகவே எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்களோடிருக்கிறார்.

    எனக்கு செவி கொடுக்கிறார் என்கின்ற தைரியம்

    ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவி கொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்’. 1 யோவான் 5:14

    அப்போஸ்தலனாகிய யோவான் தன்னுடைய நிருபத்தில் பரிசுத்த ஆவியில் ஏவப்பட்டு மேற்கண்ட வசனத்தை எழுதினார். அன்பானவர்களே, நாம் ஜெபம் பண்ணும்போது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகிறது. அதை கொடுக்கிறவர் கர்த்தர். ஆகவே உடனே தேவ சமுகத்தில் போய் ஜெபிக்கிறோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு செய்ய கூடிய பெரிய உதவி ஒன்று உண்டானால் அது ஜெபம் என்று ஒரு பரிசுத்தவான் குறிப்பிடுகிறார்.

    அதே வேளையில் சிலர் ஜெபித்த பிறகும் ஆண்டவர் கொடுப்பாரா கொடுக்கமாட்டாரா? கிடைக்குமா கிடைக்காதா? போன்ற சந்தேக கண்ணோட்டத்தோடு ஆண்டவரைப் பார்ப்பார்கள்.

    நாம் ஜெபிப்பதற்கு முன்பு நாம் கேட்க வேண்டிய காரியங்கள் தேவனுக்கு சித்தம் தானா என்று முதலாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வேதம் சொல்கிறது, ‘நாம் அவருடைய சித்தத்தின்படி எதையாகிலும் கேட்டால் அவர் நமக்கு செவி கொடுக்கிறார்’ என்பதே நாம் அவரைப் பற்றிக் கொண்டிருக்கிற தைரியம்.

    என் அன்பு சகோதரனே! சகோதரியே! அவருடைய சித்தம் அறிந்து ஜெபிக்கிறவர்கள் எப்போதும் தைரியமாயிருப்பார்கள். ஆகவே, மனம் தளராமல் சோர்ந்து போகாமல் ஜெபத்தைக் கூட்டுங்கள், தைரியமடைவீர்கள். ஏனெனில் இயேசு உங்களோடிருக்கிறார்.

    விசுவாசம் தைரியத்தை கொண்டு வரும்

    ‘அவரைப் பற்றும் விசவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது’. எபேசியர் 3:12

    நமக்கு ஆண்டவர் கொடுத்திருக்கிற ஓர் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் வேதாகமம். அவருடைய வசனம் தான் நம்முடைய கால் களுக்கு தீபமாகவும், பாதைக்கெல்லாம் வெளிச்சமாகவும் இருக்கிறது.

    ஒரு மனிதனுக்கு, ‘ஆண்டவரால் எதையும் சாதிக்க முடியும்’ என்கிற தைரியம் வந்து விட்டால், எதையும் அவர்கள் சந்திக்க தயங்க மாட்டார்கள். ‘கர்த்தர் என்னோடிருக்கிறார்’ என்ற தைரியம் ஒரு தேவபிள்ளைக்குள் இருந்தால் ஆசீர்வாதங்களை அவர்கள் பெறுவது மிகவும் எளிது.

    ஆண்டவர் பேரில் நமக்கு எப்போதும் ஓர் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கவேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், ‘நன்றாக வேதம் வாசிப்பார்கள், ஜெபிப்பார்கள், ஆலயம் செல்வார்கள், ஏன்? ஆண்டவருக்கே ஊழியம் செய்வார்கள். ஆனால் அவர்களுடைய விசுவாசமோ, அவர்களது வேலை, அல்லது பணம், படிப்பின் மீது இருந்துவிடும். அப்படிப்பட்டவர்கள் பிரகாசிப்பதில்லை என்பதை நான் தெளிவாகக் குறிப்பிடுகிறேன்.

    உங்களுக்குள் எப்போதும் கிறிஸ்துவைக் குறித்த விசுவாசம் இருக்கட்டும். அப்படிப்பட்ட விசுவாசமே உங்களுக்குள் அசைக்கமுடியாத ஒரு தைரியத்தைக் கொண்டு வரும்.

    ‘தைரியமாயிருங்கள், இயேசு கிறிஸ்து உங்களோடிருக்கிறார்’.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.
    நம் தந்தையாகிய கடவுள் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்று நாம் சிந்தித்ததுண்டா? நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். நமது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், திட்டங்கள் அனைத்தும் அவருக்கு தெளிவாக தெரியும்.

    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.

    நமது நல்ல செயல்களை உலகறியச் செய்ய நமக்கு நன்றாகத் தெரியும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நமது தீய செயல்களை யாரிடமும் சொல்ல நாம் விரும்புவதில்லை. நமது தேவன் அதையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்றால் நமக்கு பயம் வருகிறது தானே?

    தேவன் நம் மேல் மிகுந்த அன்பும் பாசமும் வைத் திருக்கிறவர். ‘உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது’ என்று வேதத்தில் பார்க்கிறோம். நம் தாயின் கர்ப்பத்தில் இருந்தே நம்மை தெரிந்துகொண்டு அன்பை பொழியும் தேவனுக்கு நாம் நல்ல பிள்ளை களாக வாழ்வது தான் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும்.

    ஆன்மிக வளர்ச்சி என்பது சட்டென நடந்து விடும் காரியம் அல்ல. நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மாற்றம் என்பது நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தே அமையும். முதலாவதாக நம்முள் உள்ள கெட்ட சிந்தனைகளை அகற்றிவிட முயற்சி செய்வோம். அதற்கு கடவுளின் வழிநடத்துதல் மிகவும் அவசியம்.

    தொடர்ந்து நல்ல சிந்தனைகளை மனதுக்குள் புகுத்தினால் நல்ல உணர்வுகளை பெற்று கொள்வோம். இந்த நல்ல உணர்வுகள் ஏழைக்கு உதவுதல், நோயுற்றவர்களுக்கு ஆறுதல் கூறுதல், எல்லோரையும் மதித்தல், முதியோர்களை அரவணைத்தல் போன்ற நல்ல செயல்களை செய்ய தூண்டும். ஆதலால் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. நம்முடைய வாழ்க்கை நல்வழியில் கட்டப்பட நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்வோம்.

    நாம் வேதத்தை தினமும் வாசித்தால் தேவன் நமக்கு நல்ல சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் கொடுப்பார். குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தினமும் வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.

    ரோமர் 12:2 சொல்லப்பட்டது போல “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக”. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

    நமது தேடல் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்போம். எப்படிப்பட்ட நண்பர்களை தேடுகிறோம், எங்கேயெல்லாம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், பணம் சம்பாதிக்க சரியான வழியை தேடுகிறோமா இல்லை குறுக்கு வழியில் செல்கிறோமா என்று வினா எழுப்புவோம். நாம் உண்மையான பக்தியுடன் கடவுளின் ஆலயத்திற்கு செல்கிறோமா இல்லை மற்றவர்கள் கண்களில் நல்லவன் என்று தெரிவதற்காக செல்கிறோமா?

    சங்கீதம் ஒன்றாம் அதிகாரத்தில் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது: “நற்பேறு பெற்றவர் யார்?, அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவி களின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினால் அமராதவர். ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பவர்”.

    ஆம் பிரியமானவர்களே, அவரது வசனத்தை தியானிப்பவருக்கு நல்ல சிந்தனைகளே மனதில் பிறக்கும்.

    நாம் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தால் எதுவும் தானாக நடக்காது. கடவுள் கொடுத்த நேரத்தை வீணடிக்காதீர்கள். மற்றவர்களுக்கு பயன்படும் செயலை முதலில் குடும்பத்தாரிடம் இருந்து ஆரம்பியுங்கள். பின்னர் அது மற்ற இடங்களுக்கெல்லாம் பரவட்டும்.

    இப்படி செய்வதின் மூலம் ஒரு சமுதாயமே நல்ல சிந்தனையுள்ள கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு நல்ல தொடர் அலையை அது உருவாக்கி நம் நாட்டின் அனைத்து மக்களும் பயன்பட்டு தீமை விலக அது வழி வகுக்கும். இதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு காக்கப்படும், தவறு செய்பவர்கள் குறைவார்கள், அடுத்த தலைமுறை நம்மை பார்த்து கற்றுக்கொண்டு நல்ல எண்ணம் படைத்தவர் களாக மாறுவார்கள்.

    ஆம் பிரியமானவர்களே, நல்ல எண்ணங்களை மனதுக்குள் வைத்து தீய எண்ணங்களை அப் புறப்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் வரும் என்று பார்த்தீர்கள் அல்லவா. நாம் கடவுளுக்கு பிரியமில்லாத செயல்களை செய்தால் ஒரு வேளை அது தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் அதன் முடிவு தோல்வியே. ஆதலால் நல்ல சிந்தனை உடையவர்களாய் வேதத்தின் படி நடந்து நல்ல உணர்வுகளை பெற்று மற்றவர்களுக்கு மிக சிறப்பான செயல்களை செய்யலாமா?

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    துலீப் தாமஸ், சென்னை.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கடந்த 15-ந்தேதி திருமானூர் பங்குதந்தை பெல்லார்மின் தலைமையில் நடைபெற்றது.

    18-ந்தேதி இரவு 7மணிக்கு புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமானூர் அருளானந்த திருக்கோவில் பங்குதந்தை பெல்லார்மின், இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப் ராஜ், கோக்குடி பங்குதந்தை சந்தியாகு, கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த், புனவாசல் பங்கு தந்தை மைக்கேல்ராஜ், ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது. காரைப் பாக்கம் கிராமம் மற்றும் மஞ்ச மேடு கிராமங்களில் பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தேர் பவனியில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் கிராம தலை வர்கள், இளைஞர்கள், பங்குதந்தை பெல்லார்மின் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கம் நடைபெற்றது.
    பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.
    ‘நீதிமொழிகள்’ எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ‘ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள்’ என்பது தான் எளிமையான விளக்கம்.

    அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை?

    உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந்தனைகள் மட்டும் ஏன் பைபிளில் இடம் பெற வேண்டும்?

    அதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு.

    தாவீது மன்னன் இறைவனின் இதயத்துக்கு நெருக்கமானவர். அவரது மகன் தான் சாலமோன் மன்னன். ஒரு முறை கடவுள் அவருக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அரசனாய் இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் தோல்வியே காணாத மன்னனாக வேண்டும் என்றோ, செல்வத்தில் புரளும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றோ தான் கேட்பார்கள். சாலமோனோ, “மக்களை வழிநடத்தும் ஞானம் வேண்டும்” என்றார்.

    கடவுள் அவருக்கு அந்த வரத்தை கொடுத்தார். ‘உன்னைப் போல ஞானவான் இதுவரைப் பிறக்கவில்லை, இனியும் பிறப்பதில்லை” என வரம் அளித்தார். அப்படிப்பட்ட இறை ஞானம் நிரம்பிய மனிதரின் சொற்கள் தான் இவை.

    நீதி மொழிகள் அவருடைய வாழ்வின் நடுப்பகுதியில் எழுதப்பட்டவை. இந்த நூலில் மொத்தம் 915 நீதி மொழிகள் உள்ளன. அவற்றில் 851 நீதிமொழிகள் சாலமோன் மன்னன் எழுதியவை. மற்றவை, ஆகூர் மற்றும் இலமுவேல் ஆகியோர் எழுதியவை. 31 அதிகாரங்களில் 29 அதிகாரங்களை சாலமோனும் மற்ற இரண்டு அதிகாரங்களை இவர்கள் ஆளுக்கொன்றாகவும் எழுதியிருக்கின்றனர்.

    ‘சாலமோன் மொத்தம் எழுதிய நீதிமொழிகள் 3000’ (1 அரசர் 4:32) என்கிறது பைபிள். அவற்றில் பெரும்பாலானவை பைபிளில் இடம்பெறவில்லை என்பது வியப்பான விஷயம். பைபிளில் எது இடம்பெற வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிக்கிறார் என்பதன் உறுதிப்படுத்துதலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

    கிமு 931 களை ஒட்டிய வருடங்களில் தான் சாலமோன் மன்னனின் நீதிமொழிகள் எழுதப்பட்டன. ஆனால் அப்போதே எல்லாம் தொகுக்கப்படவில்லை. சில இறைவாக்கினர் எசேக்கியேல் காலத்தில் கிமு 700 களில் தொகுக்கப்பட்டது.

    மீட்பைப் பற்றிய செய்தி நேரடியாக இந்த நூலில் இல்லை. ஆன்மிக செழிவுக்கான இறை சிந்தனைகளும் இல்லை. ஆனால் இந்த நீதிமொழிகள் மனதைச் சலவை செய்யும் வல்லமை கொண்டவை. அன்றாட வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவை.

    கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை ஆன்மிக வாழ்வு, உலக வாழ்வு என தனித்தனி பிரிவு இல்லை. உலக வாழ்க்கையை முழுமையாய் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வாக மாற்ற வேண்டும் என்பதே கிறிஸ்தவ சிந்தனை. எல்லாவற்றையும் இறைவனுக்காய் செய்வதற்கு நீதிமொழிகள் வழிகாட்டுகின்றன.

    இறைவனோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? பிறரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? பெற்றோரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? அரசோடு எப்படி நடந்து கொள்ள‌ வேண்டும்? குழந்தைகளோடு எப்படிப் பழக வேண்டும்? தன்னோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும்? எதிரிகளோடு எப்படி பழக வேண்டும்? என்பது போன்ற எதார்த்தமான வாழ்க்கைப் பாடங்கள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.

    இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும்?, என்ன செய்யக் கூடாது? எனும் சிந்தனையே இந்த நூலின் அடிப்படை எனலாம். ஞானமா-முட்டாள் தனமா? தாழ்மையா-பெருமையா?, நீதியா-அநீதியா?, சோம்பலா-சுறுசுறுப்பா?, மதுவா- தெளிவா?, வாழ்வா-சாவா?, கோபமா-சாந்தமா?, காதலா-காமமா?, ஏழ்மையா-செல்வமா? என முரண்களால் கேள்விகள் அமைத்து, சரியான வழி எது என்பதை எளிமையாய்ச் சொல்கிறது நீதிமொழிகள் நூல்.

    இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டுமெனில் தாழ்மையை மனதில் கொண்டிருக்க வேண்டும், பிறருக்கு நீதியானவற்றை மட்டுமே செய்ய வேண்டும், இறையச்சம் நிரம்ப இருக்க வேண்டும் என மூன்று நிலைகளில் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது.

    ஒரு முட்டாள் எப்படி இருப்பான் என்பதைப்பற்றி மட்டுமே சுமார் 70 நீதிமொழிகள் பேசுகின்றன. அவற்றை விலக்கி விட வேண்டும். பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதை கணிசமான நீதி மொழிகள் பேசுகின்றன. அவற்றை கைக்கொள்ள வேண்டும்.

    உதாரணமாக, பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.

    தினம் ஒரு அதிகாரம் என மாதம் தோறும் நீதிமொழிகளைப் படித்தால் மனம் தெளிவாகும் என்பது திண்ணம்.

    - சேவியர்
    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
    சேரன்மாதேவி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. அம்பை வட்டார அதிபர் சைமன் தலைமை தாங்கி கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலை திருப்பலியும், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. வருகிற 24-ந் தேதி புனிதரின் சப்பரபவனியும், 25-ந் தேதி ஜூடு பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலியும், நற்கருணை பவனியும் நடக்கிறது.

    26-ந் தேதி திருவிழா திருப்பலி, தேர்பவனி, அசனவிருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ரெக்ஸ் ஜஸ்டீன் அடிகளார், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    திட்டுவிளை தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. அருட்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் திவ்வியன் மறையுரையாற்றினார்.

    இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8 மணிக்கு அன்பின் விருந்தும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நடக்கிறது. எட்மண்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 1 மணிக்கு அலங்கார சப்பர பவனி நடக்கிறது.
    பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனி நடைபெற உள்ளது.
    பட்டுக்கோட்டையை அடுத்த வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இந்த திருவிழா நடந்து வருகிறது.

    வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 
    கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.
    இந்த உலகில் வாழும் மக்களில் பலர் சந்தோஷமின்றி, சமாதானமின்றி வாழ்கிறதை நாம் காண நேரிடுகிறது. குறிப்பாக அநேக குடும்பங்கள் தங்களின் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தொலைத்து விட்டது என்றால் அது மிகையாகாது.

    சமாதானம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தேசத்தில் பெருகிவருகிறது. குடும்பங்களிலே கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒற்றுமையும், சந்தோஷமும் இல்லாமல் எத்தனையோ தம்பதிகள் வாழ்கின்றனர்.

    பிள்ளைகள்-பெற்றோர்கள் இடையே அன்பும் ஐக்கியமும் இன்றி எத்தனையோ குடும்பங்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றன. என் கணவர் என்னை உண்மையாய் நேசிக்கவில்லையே, புரிந்துகொள்ளவில்லையே என்று ஏங்கி தவிக்கும் குடும்பப் பெண்களின் எண்ணிக்கை ஏராளம். என் மனைவி என்னிடம் அன்பு காட்டவில்லையே என்று மனைவியின் பாசத்திற்காக ஏங்கி தவிக்கும் கணவன்கள் ஏராளம்.

    பெற்றோர்களின் இப்படிப்பட்ட ஜீவியம் பிள்ளைகளின் மனதை புண்படுத்துவதால் பிள்ளைகள் நொறுங்குண்ட இதயத்தோடு தங்களின் வாழ்க்கையை கழிக்க நேரிடுகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களை ஆசீர்வதித்து மெய்யான, நிலையான சமாதானத்திற்குள் மனுக்குலத்தை வழி நடத்தவே எம்பெருமான் இயேசு பூமியில் அவதரித்தார். அவருக்கு திருமறையில் இனியொரு பெயரும் உண்டு, அதாவது, ‘சமாதான பிரபு’ என்று.

    ஆம், அவர் சமாதான பிரபு. சமாதானத்தை அருளுகிறவர். அவர் மக்களுக்கு இந்த பூமியில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் அருளவே இறைமகனாக வெளிப்பட்டார். அவர் மனுக்குலத்தின் பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்து பரமேறிச் சென்றார். அவர் பரமேறிச் செல்வதற்கு முன் இப்படியாக கூறினார்:

    ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்து போகிறேன். என்னுடைய சமாதானத்தை உங்களுக்கு கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக. கலக்கம் வேண்டாம், பயம் வேண்டாம்’.

    இந்த கட்டுரையை வாசிக்கின்ற நீங்கள் எந்த காரியத்தைக் குறித்துக் கலங்கித் தவிக்கிறீர்களா?, பயப்படுகிறீர்களா? உங்களுக்கான நற்செய்தி இதோ: உங்கள் கலக்கத்தை மாற்றி பயத்தை போக்கி உங்களுக்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அருளவே இயேசு பிரான் பூமிக்கு வந்தார்.

    வருகிற வருமானத்தை எல்லாம் கணவர் குடித்து வீணாக செலவு செய்து குடும்பத்தை கவனிக்கவில்லை என்று வருந்திக் கண்ணீர் வடிக்கின்றீர்களா? நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் ஒரு வினாடி கண்களை மூடி நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ளுங்கள். கடவுள் நிச்சயமாய் உங்களுக்கு உதவி செய்து, உங்கள் பிரார்த்தனையை கேட்டு உங்கள் கணவனின் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலையாக்குவார். அவர் விடுதலையாகும் வரை தொடர்ந்து கடவுளிடம் விடாப்படியாய் வேண்டிக்கொள்ளுங்கள். ஆம், அவர் ஜெபத்தை கேக்கிற தேவன்.

    அநேக குடும்பங்களில் மனைவிகள் தங்கள் புருஷர்களை எதிர்த்துப் பேசுகிறது உண்டு, கணவன்மாருடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடாமல், கீழ்ப்படியாமல் ஜீவிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு வேதம் கூறும் பிரதானமான அறிவுரை என்னவென்றால், ‘மனைவிகளே, சொந்த புருஷருக்குக் கீழ்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்’. (எபேசியர் 5:22,23).

    ஆம், மனைவிகள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் பொழுது அநேக பிரச்சினைகள் முடிவுக்கு வரும், சமாதானம் உண்டாகும். சில குடும்பங்களில் கணவன்மார்களை காட்டிலும் மனைவிகள் அதிகம் சம்பாதிக்கிறது உண்டு. இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் தங்கள் கணவன்மார்களை நேசிப்பவர்களாகவும், அவர்களுக்கு கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருந்தால் சந்தோஷமும் சமாதானமும் பெருகும்.

    ‘பூர்வத்திலே தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்து, பரிசுத்த ஸ்த்ரீகளும் தங்களுடைய புருஷர்களுக்கு கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்’ (1 பேதுரு 3:5).

    காதிலும், கழுத்திலும், பொன் ஆபரணங்களை அணிந்து, விலையேறப்பெற்ற உயர்ந்த வஸ்திரங்களை உடுத்தி, கண்களுக்கு மையிட்டு, உதடுகளுக்கு சாயம்பூசி, வித விதமான வாசனை பவுடர்களால் வருகிற அலங்காரத்தைக் காட்டிலும் ஒரு குடும்ப ஸ்த்ரீக்கு மெய்யான, உண்மையான அலங்காரம் என்னவென்றால், அவர்கள் தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிவதே என்று வேதம் திட்டமாய் கூறுகிறது.

    அதே போல, இயேசு நம்மை அன்பு செய்தது போல, புருஷன்மார் தங்கள் மனைவியரை அன்பு செய்ய வேண்டும் என வேதம் கட்டளையிடுகிறது. “அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்பு கூருகிறான்.” (எபேசியர் 5:28)

    ஆக, கணவன் மனைவியை நேசித்து அவரது வார்த்தைக்கு மதிப்புக் கொடுப்பதும், மனைவி கணவன் சொல்லுக்கு கீழ்ப்படிந்து அவனை நேசித்து அன்பு கூர்வதும் ஒரு குடும்பம் சமாதானமாய் வாழ வேதம் காட்டும் வழியாகும்.

    இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ பரலோகத்தின் தேவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு அருள் புரிவாராக. ஆமென்.

    சகோ சி. சதீஷ், வால்பாறை.
    இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    இட்டமொழி அருகே உள்ள சுவிசேஷபுரம் தூய யோவான் ஆலயத்தில் சேர்ப்பின் பண்டிகை கடந்த 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் ஆயத்த ஆராதனை, நற்செய்தி கூட்டம் நடந்தது. 2-ம் நாள் அதிகாலையில் அதிசயபுரம் சேகர குரு ஜெசு விக்டர் தேவசெய்தி வழங்கினார். காலையில் வேதாகம தேர்வு, பெண்கள் பண்டிகை, இந்திய மிஷனரி சங்க ஊழிய பகிர்வு ஆராதனை நடந்தது.

    3-ம் நாள் அதிகாலையில் அருணோதய பிரார்த்தனை, காலையில் பரிசுத்த ஞானஸ்நான ஆராதனை நடந்தது. மதியம் வருடாந்திர கூட்டம், மாலையில் விளையாட்டு போட்டிகள், இரவில் பஜனை பிரசங்கம் நடந்தது. 4-ம் நாள் காலையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை நடந்தது.

    டோனாவூர் சேகர குரு வசந்தகுமார் தேவசெய்தி வழங்கினார். இரவில் சபைமன்ற அளவிலான கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர குரு பாஸ்கர் கனகராஜ் தலைமையில், சபை மக்கள் செய்து இருந்தனர்.
    இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.
    முத்தமிழும் முக்கடலும் முத்தமிடும் குமரி மண்ணில் நாகர்கோவிலுக்கு கிழக்கே 15 கிலோ மீட்டர் தூரத்தில் சுசீந்திரம், தோவாளை ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது இராஜாவூர். கி.பி. 1542-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி வந்திறங்கி 1545 வரை கிழக்குக் கடற்கரை, குமரிக் கடற்கரை மற்றும் திருவிதாங்கூர் கடற்கரைப் பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளைப் போதித்து கிறிஸ்தவ மறையை காலூன்றச் செய்த தூய பிரான்சிஸ் சவேரியாரால் மனந்திருப்பப்பட்ட கிறிஸ்தவர்களில் பலர் பல ஊர்களிலிருந்தும் பிழைப்புத் தேடி இராஜாவூருக்கு வந்து குடியேறியதாக வரலாறு உள்ளது.

    கி.பி. 18-ம் நூற்றாண்டு முதலே இராஜாவூர் இறைமக்கள் தூய மிக்கேல் அதிதூதருக்குச் சிறியதோர் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். கி.பி. 1919-ம் ஆண்டு கொல்லம் ஆயர் மேதகு பென்சிகர் ஆண்டகை உதவியுடன் ஆலயம் பெரிதாகக் கட்டப்பட்டு, குருகுல முதன்மைதந்தையால் அர்ச்சிக்கப்பட்டது. 1926-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் நாள் இராஜாவூர் தனி பங்காகச் சிறப்பு பெற்றது.

    தற்போதைய அழகுறு ஆலயம் 8-12-1991 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் தர்மராஜால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜூபிலி ஆண்டு 2000-ம் மே மாதம் 6-ம் நாள் அர்ச்சிக்கப்பட்டுள்ளது. ஜூபிலி ஆண்டின் தொடக்கத்தில் கோட்டாறு ஆயர் லியோன் தர்மராஜ் கோட்டாறு மறைமாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இராஜாவூரையும் அறிவித்துள்ளார்கள். இவற்றுள் தனிச்சிறப்புப் பெற்று விளங்குவது இராஜாவூர் தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமே.

    இத்திருத்தலத்தில் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டோருக்கு நோயிலிருந்து நற்சுகம், பொல்லாத நோய்களின் சொல்லொணா தொல்லைகளிலிருந்து விடுதலை, மன அமைதியைக் கெடுத்து குடும்பத்தை இருகூறாக்கும் மனநோயிலிருந்து மகிழ்ச்சிகரமான மாற்றம், குடும்பங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் பலவகைப் பிணிகள், பிரச்சினைகளுக்குப் பரிகாரத் தீர்வு ஆகிய புதுமைகள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன.

    தூய மிக்கேல் அதிதூதரின் அருள்நாடி குமரிமாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் இராஜாவூர் வந்து, செல்கின்றனர். இத்திருத்தலத்தில் சிறப்புற்றுத் திகழும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

    சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு நடைபெறும் நவநாள் திருப்பலியிலும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் நவநாள் மற்றும் சிறப்பு நற்கருணை ஆசிர்வாதத்திலும், 11 மணிக்கு தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில் திருப்பயணிகளால் நடத்தப்படும் சிறப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொள்ள பல ஊர்களிலிருந்தும் மக்கள் விழாக் கூட்டமெனத்திரண்டு வந்து, நன்மைகள் பெற்றுச் செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சிறப்பு பஸ்களும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் இத்திருத்தலத்தின் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவில் எண்ணற்ற மக்கள் கலந்துகொண்டு உடல், உள்ள நலம்பெற்றுச் செல்கின்றனர். அனைத்துச் சமயங்களின் சங்கமாக நம்பிக்கையில் அணிதிரளும் பக்தர்கள் அடைகின்ற அற்புதங்கள் ஆச்சரியத்துக்குரியவையாகும்.

    அன்றியும் நோயுற்றோரைப் பராமரிக்க மனநோயாளிகளுக்குச் சிறப்பு மனநல மருத்துவ உதவி முதலியவையும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன. ஏழைகள் மற்றும் நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. பங்கின் வளர்ச்சிக்காக பங்கு அருட்பணிப்பேரவை, பங்கு நிதிக்குழு, 21 அன்பியங்கள், பல்வேறு பக்த சபைகள் மற்றும் இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இத்திருத்தலத்திற்கு நீங்களும் வந்து இறையாசீர் பெற்றுச் செல்ல உங்களை அன்புடன் அழைக்கிறோம். இறை ஆசீர் உங்களுடன் இருப்பதாக!

    பங்குத்தந்தை, பங்குப் பேரவை மற்றும் பங்கு இறைமக்கள்.
    ×