search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்
    X

    நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன்

    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.
    நம் தந்தையாகிய கடவுள் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார் என்று நாம் சிந்தித்ததுண்டா? நம்முடைய ஒவ்வொரு அசைவுகளையும் அவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். நமது எண்ணங்கள், உணர்வுகள், செயல்கள், திட்டங்கள் அனைத்தும் அவருக்கு தெளிவாக தெரியும்.

    நாம் எங்கு செல்கிறோம், நம் கண்கள் எவைகளை பார்க்கின்றன, நமது செயல்கள் என்னென்ன? என்பது போன்ற அனைத்தையும் ஆராய்ந்து அறிந்திருக்கிற தேவன் அவர் என்கிறது சங்கீதம் 139.

    நமது நல்ல செயல்களை உலகறியச் செய்ய நமக்கு நன்றாகத் தெரியும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் நமது தீய செயல்களை யாரிடமும் சொல்ல நாம் விரும்புவதில்லை. நமது தேவன் அதையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்றால் நமக்கு பயம் வருகிறது தானே?

    தேவன் நம் மேல் மிகுந்த அன்பும் பாசமும் வைத் திருக்கிறவர். ‘உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது’ என்று வேதத்தில் பார்க்கிறோம். நம் தாயின் கர்ப்பத்தில் இருந்தே நம்மை தெரிந்துகொண்டு அன்பை பொழியும் தேவனுக்கு நாம் நல்ல பிள்ளை களாக வாழ்வது தான் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயலாகும்.

    ஆன்மிக வளர்ச்சி என்பது சட்டென நடந்து விடும் காரியம் அல்ல. நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மாற்றம் என்பது நாம் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தே அமையும். முதலாவதாக நம்முள் உள்ள கெட்ட சிந்தனைகளை அகற்றிவிட முயற்சி செய்வோம். அதற்கு கடவுளின் வழிநடத்துதல் மிகவும் அவசியம்.

    தொடர்ந்து நல்ல சிந்தனைகளை மனதுக்குள் புகுத்தினால் நல்ல உணர்வுகளை பெற்று கொள்வோம். இந்த நல்ல உணர்வுகள் ஏழைக்கு உதவுதல், நோயுற்றவர்களுக்கு ஆறுதல் கூறுதல், எல்லோரையும் மதித்தல், முதியோர்களை அரவணைத்தல் போன்ற நல்ல செயல்களை செய்ய தூண்டும். ஆதலால் நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதில் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. நம்முடைய வாழ்க்கை நல்வழியில் கட்டப்பட நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்வோம்.

    நாம் வேதத்தை தினமும் வாசித்தால் தேவன் நமக்கு நல்ல சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் கொடுப்பார். குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தினமும் வேதத்தை படிக்க முயற்சி செய்யுங்கள்.

    ரோமர் 12:2 சொல்லப்பட்டது போல “நீங்கள் இந்த உலகத்தின் போக்கின் படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக”. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

    நமது தேடல் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்போம். எப்படிப்பட்ட நண்பர்களை தேடுகிறோம், எங்கேயெல்லாம் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம், பணம் சம்பாதிக்க சரியான வழியை தேடுகிறோமா இல்லை குறுக்கு வழியில் செல்கிறோமா என்று வினா எழுப்புவோம். நாம் உண்மையான பக்தியுடன் கடவுளின் ஆலயத்திற்கு செல்கிறோமா இல்லை மற்றவர்கள் கண்களில் நல்லவன் என்று தெரிவதற்காக செல்கிறோமா?

    சங்கீதம் ஒன்றாம் அதிகாரத்தில் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது: “நற்பேறு பெற்றவர் யார்?, அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவி களின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினால் அமராதவர். ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தை இரவும் பகலும் சிந்திப்பவர்”.

    ஆம் பிரியமானவர்களே, அவரது வசனத்தை தியானிப்பவருக்கு நல்ல சிந்தனைகளே மனதில் பிறக்கும்.

    நாம் ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தால் எதுவும் தானாக நடக்காது. கடவுள் கொடுத்த நேரத்தை வீணடிக்காதீர்கள். மற்றவர்களுக்கு பயன்படும் செயலை முதலில் குடும்பத்தாரிடம் இருந்து ஆரம்பியுங்கள். பின்னர் அது மற்ற இடங்களுக்கெல்லாம் பரவட்டும்.

    இப்படி செய்வதின் மூலம் ஒரு சமுதாயமே நல்ல சிந்தனையுள்ள கூட்டமாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு நல்ல தொடர் அலையை அது உருவாக்கி நம் நாட்டின் அனைத்து மக்களும் பயன்பட்டு தீமை விலக அது வழி வகுக்கும். இதனால் நாட்டின் சட்டம் ஒழுங்கு காக்கப்படும், தவறு செய்பவர்கள் குறைவார்கள், அடுத்த தலைமுறை நம்மை பார்த்து கற்றுக்கொண்டு நல்ல எண்ணம் படைத்தவர் களாக மாறுவார்கள்.

    ஆம் பிரியமானவர்களே, நல்ல எண்ணங்களை மனதுக்குள் வைத்து தீய எண்ணங்களை அப் புறப்படுத்தினால் எவ்வளவு நன்மைகள் வரும் என்று பார்த்தீர்கள் அல்லவா. நாம் கடவுளுக்கு பிரியமில்லாத செயல்களை செய்தால் ஒரு வேளை அது தற்காலிக சந்தோஷத்தை கொடுத்தாலும் அதன் முடிவு தோல்வியே. ஆதலால் நல்ல சிந்தனை உடையவர்களாய் வேதத்தின் படி நடந்து நல்ல உணர்வுகளை பெற்று மற்றவர்களுக்கு மிக சிறப்பான செயல்களை செய்யலாமா?

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

    துலீப் தாமஸ், சென்னை.
    Next Story
    ×