என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, 6.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    3-ம்நாள் விழாவான 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஜகத் கஸ்பார் ராஜ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆக்ரா மறைமாவட்ட அருட்பணியாளர் அஜித் பிராங்கோ தலைமையில் திருப்பலி, இரவு 8.30 மணிக்கு கலைக்குழு மற்றும் இளைஞர் இயக்கம் நடத்தும் ஆன்லைன் கலைநிகழ்ச்சி நடக்கிறது.

    9-ம்நாள் விழாவான 21-ந்தேதி மாலை 5.45 மணிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி தலைமை தாங்கி ஜெபமாலை, பிரார்த்தனை, சிறப்பு மாலை ஆராதனையை நிறைவேற்றுகிறார். தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம்நாள் விழாவான 22-ந்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு ஆன்லைன் கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் வின்சென்ட் பி. வில்சன், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமென், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜாய்சிங் மரியஜாண், செயலாளர் மரியஜாண் சேவியர், பொருளாளர் இளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும், ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார்.
    நற்செய்தியின் இறைமனிதர்; உலகின் மாபெரும் புனிதர்; திருச்சபையின் மறைவல்லுநர்; காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறையைப் பாதுகாத்த இறைவாக்கினர். நற்செய்தியைச் சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்த இறைதூதர். ஏராளமான அற்புதங்கள் செய்தவர். திருச்சபையின் மாணிக்கமாய்த் திகழ்ந்தவரே புனித அந்தோணியார். இவர் ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் 1195ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பெர்தினாந்து ஆகும்.
     
    அந்தோணியார் லிஸ்பன் மறைமாவட்ட பாடசாலையில் கல்வி கற்றார். குழந்தைப் பருவத்தில் படிப்பிலும், ஒழுக்கத்திலும், கூரிய நுண்ணறிவிலும் சிறந்து விளங்கினார். இறைபற்றும், ஞானமும் மிகுந்தவராகக் காணப்பட்டார்.  தினந்தோறும் தவறாமல் ஆலயம் சென்று திருப்பலியில் பங்கு கொண்டார். நீண்ட நேரம் இறைவனைப் போற்றுவதிலும், திருப்பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் ஆர்வமாகச் செயல்பட்டார். திருப்பலியில் பீடசிறுவனாக பணிபுரிவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தர்.

    ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக  அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது  பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.
     
    அந்தோணியார் உலகை வெறுத்து ஒரு துறவியாக மாறத் தீர்மானித்தார். தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்தார். தினந்தோறும் இறைவார்த்தையை வாசித்து, தியானித்து, வாழ்வாக்கி சான்று நல்கினார். இறைபாதத்தில் அமர்ந்து இறையன்பை நிறைவாகப்பெற்று சான்று பகிர்ந்தவர். கி.பி.1219ஆம் ஆண்டு குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். பிரான்சிஸ் அசிசியாரின் துறவிகள் மீது அன்பும் மதிப்பும் கொண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையில் 1220ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22ஆம் நாள் சேர்ந்தார். பெர்தினாந்து என்னும் இயற்பெயருக்குப் பதிலாக அந்தோணியார் என்ற பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதல் போன்ற நற்பண்புகள் அந்தோணியாரை மிகவும் கவர்ந்தன.

    ஒருநாள் இரவு அந்தோணியார் தமது அறையில் வெகுநேரம் கண்விழித்து செபித்துக் கொண்டிருந்தார்.  விவிலியத்தைத் திறந்து வைத்திருந்தார். திடீரென பேரொளி அந்த அறையை நிரப்பியது. குழந்தை இயேசு விவிலியத்தின் மேல் நின்று அந்தோணியாரின் கழுத்தைக் கட்டித் தழுவினார். அந்தோணியார் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். விண்ணகம் இந்த மண்ணுலகில் உண்டானது போல் உணர்ந்தார். புனிதர் குழந்தை இயேசுவைத் தனது மார்போடு சேர்த்து அரவணைத்து  முத்தமிட்டார்.  அந்தோணியார் பேரானந்த நிலையில் மெய்மறந்து நின்றார். குழந்தை இயேசுவைக் கரங்களில் ஏந்தும் பாக்கியம் பெற்றவர். இதை திர்சோ என்பவர் நேரில் கண்டு சான்று கூறினார்.
     
    அந்தோணியார் தமது வாழ்நாள் முழுவதும் அன்பையும், ஏழ்மையையும், தாழ்ச்சியையும்,  ஞானத்தையும் அணிகலன்களாக அணிந்திருந்தார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறைவனின் அருளையும் ஆசீரையும் நிறைவாகப் பெற்றுக்கொண்டார். இவரது வெற்றியின் இரகசியம் தாழ்ச்சியே. தம் சகோதரர்கள் முன்பாக தாழ்ச்சியோடு எளிமையாகவே வாழ விரும்பினார். ஏழ்மையில் எப்பொழுதும் மகிழ்ந்திருந்தார். நான் ஆண்டவரைப் பார்க்கிறேன்; ஆண்டவர் என்னை வாஞ்சையோடு உற்றுபார்கிறார்; அவரின் இரக்கம் நிறைவாக என்னில் பொழிகின்றது; நான் அவரிடம் செல்ல ஆவலோடு இருக்கிறேன். இறைவனிடம் செபித்தவாறே 1231ஆம் ஆண்டு ஜூன் 13 அன்று தமது 36ஆம் வயதில் இயற்கை எய்தினார். 
    உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.
    ‘இஸ்ரவேலர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தி, அவர்களை எகிப்தின் அடிமைத் தளையிலிருந்து விடுவித்துச் செல்லும் கலகக்காரனாக மோசே மாறக்கூடும்’ என்று பயந்தான், பார்வோன் மன்னன். அதனால் மோசேயைக் கண்டுபிடித்து, கொல்லும்படி ஆணையிட்டான். உயிரைக் காத்துக்கொள்ள எகிப்திலிருந்து தப்பித்து ஓடிய மோசே, வறட்சியும் பாலைவனச் சோலைகளும் கொண்டிருந்த மீதியான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்தார்.

    அங்கே ஆண்கள், பெண்கள் எனப் பலரும், ஆட்டு மந்தைகளை மேய்த்துக்கொண்டிருந்ததை மோசே கண்டார். மோசே மந்தைகளை மேய்த்தவர் இல்லை என்றாலும், அவரது பெற்றோர் மற்றும் முன்னோர்களின் குலத்தொழிலாக மேய்ப்புத் தொழிலே இருந்ததால், அங்கே மேய்ப்பர்களையும் கனிவான முகங்களைக் கொண்ட பெண்களையும் கண்ட அவரது மனதில் நிம்மதியும் அமைதியும் உண்டானது. அவர் இளைப்பாறுவதற்காக அங்கே இருந்த கிணற்றருகே சென்றார். அப்பகுதியில் இருந்த ஒரே கிணறு அது.

    அங்கே பிரதான மேய்ப்பனாகவும், பல நூறு குடும்பங்களுக்குத் தலைமை மதகுருவாகவும் இருந்தார் எத்திரோ. அவருக்கு ஏழு புதல்வியர் இருந்தனர். அவர்கள் ஆண் பிள்ளைகளைப்போல் தங்களது கிடைகளை மேய்த்துப் பேணிக் காத்துவந்தனர். மோசே கிணற்றருகே சென்றபோது அப்பெண்கள் மிகுந்த சிரமத்துடன் தண்ணீர் இறைத்து தொட்டிகளை நிரப்பி தங்களது ஆடுகளுக்குக் காட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கே வந்து சேர்ந்த சில ஆண் மேய்ப்பர்கள், அப்பெண்களை மிரட்டிக் கிணற்றை விட்டு அகன்று செல்லுமாறு பயங்காட்டினார்கள்.

    இதனால் அச்சமடைந்த அவர்கள் கலக்கமுற்று நகர, அவர்களைத் தடுத்து நிறுத்தினார், உயிருக்குப் பயந்து ஓடிவந்த மோசே. “வீணாகப் பயம் காட்டுகிறவர்களை நினைத்து அஞ்சத் தேவையில்லை” என்று நம்பிக்கை தந்த அவர், அவர்களது ஆடுகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். “வாட்டசாட்டமான இந்த ஆண்மகன் யார்? எளிதில் மிரண்டுபோகும் இப்பெண்களுக்கு அரணாக இருக்கட்டும் என்று எகிப்திலிருந்து எத்திரோவால் தருவிக்கப்பட்டிருப்பானோ?” என்று முணுமுணுத்தவாறு அந்த ஆண் மேய்ப்பர்கள் பின்வாங்கினர்.

    பிறகு ஆடுகளுடன் கூடாரத்துக்குத் திரும்பிய பெண்கள், தந்தையிடம் ஓடிச் சென்று தங்களுக்கு உதவிய எகிப்திய மனிதனைப் பற்றிக் கூறினார்கள். எத்திரோ தன் மகளிரிடம் “அம்மனிதர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? அவரைப் போய் அழையுங்கள், நம்மோடு அவர் உணவருந்தட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போதே மோசே அவர்களது கூடாரத்தை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவரை வரவேற்ற எத்திரோ “அடைக்கலம் தேடும் உம் கண்களில் அமைதி உண்டாகட்டும். எங்களோடு நீர் இங்கே தங்கிவிடும்” என்று கூறி ஆதரவு தந்தார்.

    அப்பகுதியின் தலைமை குரு தனக்குக் காட்டிய தயவைக் கண்டு, மோசே அவர்களோடு தங்குவதில் மகிழ்ச்சியடைந்தார். நாட்கள் எரிநட்சத்திரங்களைப்போல் வீழ்ந்தன. எத்திரோ தன் மூத்த மகளாகிய சிப்போராளை மோசேக்குத் திருமணம் செய்துவைத்தார். மோசே, சிப்போராள் தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குக் கெர்சோம் என்று பெயரிட்டனர்.

    மாமனாரின் குடும்பத்துக்கு நன்றியுள்ள மருமகனாக, அவர்களது மந்தைகளை திறம்படக் காத்து பெருக்கி வந்தார், மோசே. பொதுவாகவே வெயிலால் வாடிவந்த மீதியான் நாட்டை, கோடைக்காலம் மேலும் வாட்டியது. காய்ந்த புற்களும் கூட இல்லாமல் ஆடுகள் பசியால் வாடுவதை மோசேவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    எனவே ஆடுகளுக்குத் தேவையான புல்லைத் தேடி, கண்களுக்குப் பசுஞ்சோலையாகக் காட்சியளித்த ஓரேப் மலைக்கு தன் ஆடுகளோடு வந்து சேர்ந்தார். ஆடுகள் வயிறாரப் புற்களை மேய்ந்துகொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்டு மோசேயின் மனம் நிறைந்தது. அந்த சமயத்தில் அங்கே அவருக்கு ஓர் எதிர்பாராத அனுபவம் ஏற்பட்டது. பசுமையான செடிகள் சூழ்ந்த புதர் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. பெரும் தீயாக அது இருந்தாலும், அப்புதரில் இருந்த செடிகளும், இலைகளும், பூக்களும் நெருப்பால் கருகிப்போகாமல் அப்படியே இருந்தன.

    ‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று அதிசயித்தவாறே, எரியும் புதர் அருகே சென்று கவனித்தார் மோசே.

    அவர் புதரின் அருகில் சென்றபோது அதிலிருந்து ஒரு குரல் ஒலித்தது. “மோசே.. அங்கேயே நில். நெருப்பின் அருகில் வராதே. உன் பாதணிகளைக் கழற்றி வை. ஏனென்றால் நீ நிற்கிற இந்த இடம் புனிதமானது.” ஒரு வானதூதன் மூலமாகக் கடவுள், மோசேயுடன் பேசினார். அப்போது மோசே தன் முகத்தை மூடிக் கொண்டார்.

    கடவுள் தொடர்ந்து பேசினார் “எகிப்தில் என் மக்கள் படுகிற துன்பத்தைக் கண்டேன். அவர்களை நான் விடுவிக்கப்போகிறேன். என் மக்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வர நான் உன்னைத்தான் அனுப்பப் போகிறேன்” என்றார். மோசே மெல்ல கண்களைத் திறந்து பார்த்தார். கடவுளிட்ட பணியை செய்ய ஆயத்தமானது அவரது கண்களில் தெரிந்தது.
    இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார்.
    இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை கைகொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அறிந்திருந்தார். பலநேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.

    ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை பூடகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.

    ஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு திராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட் டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தைப் பாதுகாக்க ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடைக் காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன.

    பிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார். அறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றா வதாக ஒருவரை அனுப்பினார், அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.

    “என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்” என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், “இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவ னைத் தீர்த்துக்கட்டிவிடலாம், அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்” என்று கலந்து பேசி சதித்திட்டம் தீட்டினார்கள்.

    அதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து அவன் கைகளைப்பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, தன் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர்களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.

    அப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலைசெய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண் டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால் அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.

    இந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன? இந்த உலகம் வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். இதற்காக நேர்மையாகவும் நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத்தோட்டத்தைப் பராமாரிக்கும்படி மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். இதற்காக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டல்களாக பத்து கட்டளைகளைக் கொடுத்தார். அவற்றைக் கடைபிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.

    தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு வரை ஒருயொருவர் தீர்ப்பிட்டார்கள். பொறாமையிலும், அடுத்தவர் மண்ணையும் பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலைபாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப்பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.

    மனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. விழா 13-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின் விளக்கு அலங்காரம், வாணவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஆன்டனி அல்காந்தர், இணை பங்குத்தந்தையர்கள் லெனின், சுரேஷ், பங்குப்பேரவை துணைத் தலைவர் நாஞ்சில் மைக்கேல், செயலாளர் சந்தியா வில்லவராயர், துணை செயலாளர் தினகரன், பொருளாளர் ஆன்றின் செல்வகுமார் மற்றும் பங்குப்பேரவை நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.
    பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களை நோக்கிய இயேசுவின் வசைமொழிகள் நாளைய நற்செய்தியிலும் (காண். மத் 23:27-32) தொடர்கின்றன.

    மத்தேயு 23 வாசிப்பதற்கு ஒரு நெருடலான பகுதி. ஏன்? 'வெளிவேடக்காரரே,' 'குருட்டு வழிகாட்டிகளே,' 'குருட்டு பரிசேயரே,' 'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே' என்ற வார்த்தைகளால் இயேசு பரிசேயரையும், மறைநூல் அறிஞர்களையும் சாடுகின்றார். 'இரக்கமுள்ளோர் பேறுபெற்றோர்' என்றும் 'ஒரு கன்னத்தில் உங்களை அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுங்கள்' என்றும், அன்பு, கருணை, மன்னிப்பு என போதித்த இயேசுவின் உதடுகள் மேற்காணும் தூற்றும் அல்லது சபிக்கும் வார்த்தைகளை எப்படி உச்சரித்தன?

    மேற்காணும் இயேசுவின் சாபச் சொற்களை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே பதிவு செய்கின்றார். மேலும் இந்தச் சாபத்திற்கு ஆளாபவர்கள் பரிசேயர்களும். மறைநூல் அறிஞர்களும் மட்டுமே. சதுசேயர்கள், ஏரோதியர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். மத்தேயுவின் பதிவு மற்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறது: இந்த எல்லா சாபங்களையும் இயேசு ஒரே நேரத்தில் சொன்னாரா? அதாவது, ஒருநாள் இதற்கென ஒதுக்கி, அவர்களைக் கூட்டி வைத்து அவர்களிடம் இப்படிச் சபித்தாரா? அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை. வேறு வேறு இடங்களில் சொன்னதை மத்தேயு மொத்தமாகக் கோர்த்து இங்கே போட்டிருக்கிறாரா? அதுவும் இல்லை. அப்படியிருந்தால் மற்ற நற்செய்தியாளர்களும் இதைப் பதிவு செய்திருக்க வேண்டுமே!

    இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய மத்தேயு நற்செய்தியின் பின்புலம் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

    உரோமையருக்கு எதிரான யூதர்களின் எதிர்ப்பிற்குப் பின் யூத மதம் தன்னையே ஒரு சுயஆய்வுக்கு உட்படுத்துகின்றது. இரண்டு பிரச்சினைகளை அது சந்திக்க நேரிடுகின்றது: ஒன்று, கடவுள் தங்களுக்கென வாக்களித்த நாட்டில் தங்கள்மேல் புறவினத்தார்கள், அதாவது, உரோமையர்கள் ஆட்சி செலுத்துகின்றனர். இவர்களின் ஒரே அடையாளமான ஆலயத்தையும் ஆக்கிரமித்துக்கொள்கின்றனர். இறைவனின் சட்டத்திற்கு மாற்றாக சீசரின் சட்டத்தைக் கடைப்பிடிக்குமாறு சொல்கின்றனர். இரண்டு, புதிதாய் உருவாகி வரும் நசரீன்கள் (கிறிஸ்தவர்கள் முதலில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்).

    உரோமையர்கள் இனி தங்களை ஆளக்கூடாது என நினைத்தவர்கள் புரட்சியில் ஈடுபட, அந்தச் சண்டையில் கி.பி. 70ஆம் ஆண்டு அவர்களின் அடையாளமான எருசலேம் ஆலயம் தரைமட்டமாகிவிடுகிறது. ஆலயம் தரைமட்டமானாலும் உரோமைப்படை யூதேயாவிலிருந்து பின்வாங்குகிறது. இப்போது யூதர்களுக்கு ஆலயம் கிடையாது. வேறு ஏதாவது ஒரு அடையாளத்தை அவர்கள் கையில் எடுக்க வேண்டும். அப்படி அவர்கள் எடுப்பதுதான் 'சட்டநூல்' அல்லது 'தோரா'. இந்தச் சட்டநூலை மக்களுக்கு எங்கு வைத்து அறிவிப்பது? ஆலயத்திற்கு மாற்றாக தொழுகைக்கூடங்கள் முளைக்கின்றன. அவை ஆலயம் இல்லாத குறையை நீக்குகின்றன. ஆக, உரோமையர்களின் பிரசன்னத்திற்கு முடிவு கட்டியாயிற்று.

    இப்போது யூத மதத்தில் இன்னும் கொஞ்சம் அழுக்காக ஒட்டிக்கொண்டிருப்பது, 'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் இருக்கும்' நசரீன்கள். யூதர்களாய் இருந்து நசரீன்களாய் மாறியவர்களும் தொடர்ந்து யூத தொழுகைக்கூட வழிபாடுகளில் பங்கேற்கின்றனர். ஏனெனில் நசரீன்களுக்கென்று வழிபாடுகள் எனவும் தொடங்கப்படவில்லை. இப்படி இவர்கள் தங்களின் தொழகைக்கூட வழிபாடுகளில் கலந்துகொள்வதை விரும்பாத 'தூய்மையான' யூதர்கள், இவர்களைச் சபிப்பதையே செபங்களாகச் சொல்ல ஆரம்பிக்கின்றனர். இந்தச் சாபமொழியைக் கேட்கமுடியாமல் நசீரீன்கள் தாங்களாகவே தொழுகைக்கூடங்களை விட்டு வெளியேறுகின்றனர். அப்படி வெளியேறாதவர்கள் வற்புறுத்தி வெளியேற்றப்படுகின்றனர்.

    இவர்களின் வெளியேற்றத்திற்கு காரணமானவர்கள் பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். ஏனெனில் வழிபாட்டை நெறிப்படுத்தும், ஆளுகை செய்யும் அதிகாரம் இவர்களிடம்தான் இருந்தது. இப்படி வெளியேறியவர்கள் பெரும்பாலும் மத்தேயுவின் திருச்சபையில்தான் இருந்தனர். ஆக, அவர்களுக்கு ஏற்பட்ட இந்த அநீதியைக் கண்டிக்கும் விதமாக, அவர்களுக்கும் இயேசுவுக்கும் முன்பே இருந்த பகையை மனதில் வைத்து உருவாக்கும் 'சாபமொழிகளே' மத்தேயுவின் 23ஆம்; அதிகாரம். (முதல் ஏற்பாட்டில் சாபங்கள் அதிகமாக உள்ள ஒரு பகுதி இணைச்சட்டம் 28).

    நாளைய நற்செய்தியில் இயேசு முதலில் பரிசேயர்களை வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே என்றும், இரண்டாவதாக, இவர்கள் பழைய கல்லறைகளை அலங்காரம் செய்கின்றனர் என்றும் சாடுகின்றனர். ஆக, முதல் 'கல்லறை' உருவகம். இரண்டாம் 'கல்லறை' எதார்த்தம்.

    'போலித்தனம்', 'நெறிகேடு' - இந்த இரண்டும்தான் பரிசேயர்களுக்குள் இருப்பதாகச் சொல்கின்றார்.

    'எனக்கும், எனக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'போலித்தனம்'. அதாவது, நான் நல்லவனாக இருப்பதாக என் மனதில் நினைத்துக்கொள்கிறேன். ஆனால் நான் நல்லவனாக இருப்பதில்லை. இது மற்றவர்களுக்குத் தெரியாது. எனக்கு மட்டுமே தெரியும்.

    'எனக்கும், பிறருக்கும் உள்ள உறவில்' வெளிப்படுவது 'நெறிகேடு'. 'ஒழுங்கின்மை' என்கிறது கிரேக்கப்பாடம். அதாவது என் செயலால் நான் பிறழ்வை ஏற்படுத்துகிறேன்.

    இந்த இரண்டும் தன்னிடம் இல்லை என்று நாளைய முதல் வாசகத்தில் (1 தெச 2:9-13) என்று பெருமைப்பட்டுக்கொள்கின்றார் பவுலடியார்.

    'என்னிடம் இவை இருக்கின்றதா?' - என்று கேட்கிறேன் நான்!
    இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.
    'விழிப்பாய் இருங்கள்!' - எப்படி? திருடன் கன்னமிட்டுத் திருடாதவண்ணம்!

    'ஆயத்தமாய் இருங்கள்!' - எப்படி? தலைவன் வரும்போது பணிசெய்து கொண்டிருக்கும் பணியாள் போல!

    இப்படி இரண்டு வார்த்தைகளால் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 24:42-51) அறிவுரை சொல்வதற்குப் பதிலாக, 'ஒரு அம்மாவைப் போல இருங்கள்!' என்று இயேசு எளிதாகச் சொல்லியிருக்கலாம்!

    ஆம்! தன் பிள்ளைக்காக விழிப்பாய், ஆயத்தமாய் இருப்பவள் ஒரு தாய்மட்டுமே!

    நம் வாழ்க்கை என்பது பிள்ளை என்றால் நாம் அனைவரும் அன்னையர்தானே!

    'Manichaeism' என்ற தவறான மெய்யியல் போதனை என்னும் திருடன் தன் மகன் அகுஸ்தினாரை திருடிவிடாத வண்ணம் 'விழிப்பாய் இருந்தும்!', மனமாற்றம் என்ற வீட்டுத்தலைவன் தன் மகனின் கதவை எப்போது வேண்டுமானாலும் தட்டலாம் என 'ஆயத்தமாய் இருந்தும்!' மாதிரி காட்டியவர்தான் நாளை நம் கொண்டாடும் மோனிக்கம்மாவின் வாழ்க்கைப்பாடம்.

    இந்த இரண்டு மதிப்பீடுகளில் மோனிக்கா நமக்கும் அம்மாவே!

    மோனிக்கா என்றாலே 'கண்ணீரால் கடவுளை வென்றவர்!' என்று நாம் சொல்ல முடியும்.

    'தென்னையை வைத்தா இளநீரு! பிள்ளையைப் பெத்தால் கண்ணீரு!' என்ற சொலவடை மோனிக்கம்மாளின் வாழ்வில் 'கல்யாணம் முடிச்சால் கண்ணீரு!' என்றும் கசந்து போனதுதான் மிகப்பெரிய சோகம்.

    தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தன் கணவன் இளவயதில் இறந்துவிட, தன் மகன் அகுஸ்தினார் 17 வயதில் தப்பறைக் கொள்கை ஒன்றில் மூழ்கி அதில் திளைத்துக் கிடக்க, அவன் மனமாறி கத்தோலிக்க நம்பிக்கையை தழுவமாட்டானா என்று அவனின் 31 வயது வரை கண்ணீர் வடிக்கின்றார் மோனிக்கா.

    'உன் மகன் என்றும் உன்னோடு!' 'உன் கண்ணீரின் மகன் அழிந்து போகமாட்டான்!' - இந்த இரண்டும் மோனிக்கம்மாளுக்கு ஒரு தலத்திருஅவை ஆயர் வழியாக இறைவன் சொன்ன வார்த்தைகள்.

    கார்த்தேஜிலிருந்து, ரோம், ரோமிலிருந்து மிலான் என தப்பி ஓடிய அகுஸ்தினாரை அவருக்கே தெரியாமல் பின்தொடர்கின்றார் மோனிக்கா.

    இறுதியில் வென்றுவிடுகின்றார்! அகுஸ்தினார் தூய அம்புரோசியாரின் திருமுன் கத்தோலிக்க நம்பிக்கையை ஏற்று திருமுழுக்கு பெறுகின்றார்.

    மோனிக்கா மரணப்படுக்கையில் தன்னை நோக்கிப் பேசிய மூன்று வார்த்தைகளை தன் 'உள்ளக்கிடக்கைகளில்' (Confessions) இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார் அகுஸ்தினார்:

    1. 'நான் எதற்காக இன்னும் உயிர் வாழ்கிறேன் என்றும், நான் இன்னும் செய்ய வேண்டிய பணி என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. நான் விரும்பியதெல்லாம் உன்னை ஒருநாள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவனாகவும், வான்வீட்டின் மகனாகவும் பார்ப்பதுதான். ஆனால் நான் கேட்டதற்கும் மேலாக கடவுள் எனக்குக் கொடுத்துவிட்டார். ஆம்! வாழ்வின் சுகங்கள் எதுவும் வேண்டாம் என்று நீ எல்லாவற்றையும் விலக்கி உன்னையே அவரின் பணிக்கு ஒப்படைத்துவிட்டாயே! எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?'

    2. 'நான் எங்கு புதைக்கப்பட்டால் என்ன, கடவுளின் கைக்கு எதுவும் தூரமா என்ன? அவர் என்னை எழுப்பி என்னைத் தன் கரங்களால் அணைத்துக்கொள்வார்!'

    3. 'என் கண்ணீரின் மகனே!'

    இன்று எந்தத் தாயும் தன் மகன் அல்லது மகள் திருமுழுக்கு பெறவில்லையே என்பதற்காக அழாவிட்டாலும், பிள்ளைகளின் எத்தனையோ செயல்பாடுகள் அவர்களின் கண்களைக் குளமாக்குகின்றன.

    நாளைய முதல்வாசகத்தில் (காண். 1 தெசலோனிக்கர் 3:7-13) தூய பவுலடியார் 'அல்லும் பகலும் ஆர்வமுடன் சிந்தும் மன்றாட்டு' என்னும் கண்ணீரும் அவரின் திருச்சபை என்ற குழந்தையைக் கடவுளை நோக்கித் திருப்புகிறது.

    நம் வீட்டின் தலையணைகளுக்கு மட்டும்தான் தெரியும் நம் தாயின் கண்ணீர்!

    இந்தத் தாய் ஒரு உன்னதமான பிறவி!

    அதிக மகிழ்ச்சி என்றாலும் அழுதுவிடுவாள்! அதிக துக்கம் என்றாலும் அழுதுவிடுவாள்!

    இவளே கண்ணீரை நிறுத்தினாலன்றி இவளின் கண்ணீருக்கு யாரும் மடை கட்ட முடியாது!

    கண்ணீரால் கண்கள் கலங்கினாலும் இவளின் கண்கள் 'விழிப்பாகவும்', 'ஆயத்தமாகவும்' இருக்கும் எப்போதும்!
    வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், பல அற்புதங்களைப் தமது வாழ்வில் பெறுகிறார்கள். அன்னையின் கருணை மழையில் நாமும் நனைந்து, வாழ்வில் இன்னும் இன்புற்று இருப்போம்!
    வங்கக் கடலோரம், அமைதியான சூழலில் சுமையோடு வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா. உலகப் புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாசலிக்க அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.

    இதனால் எல்லாச் சமயங்களைச் சார்ந்த பக்தர்களும், அன்னை மரியாளை வழிபட்டு தன்னை செபத்தின் மூலமாக ஒப்புக்கொடுக்கிறார்கள். இங்கு, திருவிழா நாட்கள் என்று இல்லாமல் எப்போதும் பல வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.

    திருமண தடை, குடும்ப பிரச்னை, நினைத்த காரியம் நிறைவேறத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருவிழாவில் கலந்துகொள்ள வருவார்கள். அதேபோல், தனது வேண்டுதலுக்காகக் குறைந்தது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தொடர்ந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி புதுக்கோயிலின் பின் பக்கம் வாசலில் இருந்து, பழைய வேளாங்கண்ணி கோயில் மாதா குளம் வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள். முக்கியமாக முழந்தாட்படியிட்டுச் புதுக்கோயிலில் இருந்து பழைய கோயில் வரை பக்தியுடன் நடந்து சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் காலம் காலமான அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பாத யாத்திரையாக நடந்து வந்தாலும், முழந்தாட்படியிட்டுச் நடந்து வந்தாலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும், வேளாங்கண்ணி பழைய கோயிலின் ஆலமரத்தில்.. திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தாலிக் கயிற்றையும், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலையும், தீராத நோய் மற்றும் உடல் நலம்பெற வேண்டியவர்கள் அந்த உடல் உறுப்பு பகுதிளை தகடுகளாக அந்த ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை பக்தர்கள்த் தெரிவிக்கிறார்கள்.

    சுமையோடு வருபவர்களின் மனதை சுகமாக்குவதாலும், வேண்டிக் கொண்டவர்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் மட்டுமல்லாமல், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களைக் கருணையோடு தருவதாலேயே அனைவருக்கும் ஆரோக்கிய அன்னையாகத் திகழ்கிறார் அன்னை வேளாங்கண்ணி மாதா.
    பூண்டி மாதா பேராலயத்தில் கல்லறை திருநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
    உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைத்து உருக்கமாக வழிபாடு நடத்தும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. கல்லறை தோட்டங்களில் உள்ள கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலைகள் அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி சாம்பிராணி புகை போட்டு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துகிறார்கள்.

    கல்லறை திருநாளையொட்டி நேற்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பேராலய அதிபர் பாக்கிய சாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஆன்மிக தந்தையர்கள் கலந்துகொண்டு கல்லறை திருநாள் திருப்பலியை நிறைவேற்றினர். திருப்பலிக்கு பின் பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட்தந்தை லூர்துசேவியரின் கல்லறைக்கு சென்று கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்தனர்.

    மேலும் பூண்டி மாதா பேராலய பூங்கா பகுதியில் அமைந்துள்ள அருட்தந்தை ராயப்பர் கல்லறையிலும் புனிதம் செய்து வழிபாடு நடைபெற்றது. சிறப்பு திருப்பலியில் சமூக இடைவெளியை கடைபிடித்து கைகளை தூய்மை செய்து பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் பூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் கல்லறைகளை அருட்தந்தையர்கள் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்தினர்.

    மைகேல்பட்டி, பூதலூர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களிலும் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடந்தது.
    வேளாங்கண்ணி, நாகையில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதி கல்லறை திருநாள் கொண்டாடப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், திருநாளாக கொண்டாடுவர். அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது வேளாங்கன்னி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் கிழக்கு கடற்கரைசாலை ஆர்ச் அருகில் உள்ளது. அங்கு வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் முதல் கடற்கரை சாலையில் அமைந்திருந்த ராயப்பா கல்லறை தோட்டத்தில் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் அங்கு உள்ள கல்லறைகளில் மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர்.

    நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் கல்லறை திருநாளையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை தீர்த்தம் தெளித்து பிராத்தனைகள் நடத்தினார். தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் உறவினர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய பிராத்தனை செய்தனர். இதேபோல் ராயப்பன் கல்லறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
    இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கல்லறை விழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே இறந்தவர்களுக்கு ஜெப வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
    சென்னை :

    கிறிஸ்தவர்கள், தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி கல்லறை திருநாளை அனுசரிக்கிறார்கள்.

    ‘கல்லறை திருவிழா’ என்று அழைக்கப்படும் இந்த நாளில், கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று, இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்கள் குடும்பத்தினர் கல்லறையில் மலர் அலங்காரம் செய்வார்கள். மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவார்கள்.

    கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். பாதிரியார்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடு நிறுத்தப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாக ஆலயத்துக்கு வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில், இறந்தவர்களை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கல்லறை விழா இந்த வருடம் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லறை தோட்டத்துக்கும் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் வருவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

    எனவே இந்த விழாவை தவிர்க்க வேண்டும் என்று கிறிஸ்தவ சபைகள் அறிவித்து உள்ளன. இதனால் இன்று கல்லறை திருநாள் அனுசரிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

    வீடுகளிலேயே இறந்தவர்களுக்கு ஜெப வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விதிக்கப்பட்டு உள்ளது.

    எனவே இன்று கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே இறந்தவர்களை நினைத்து ஜெப வழிபாடு செய்தனர். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் கல்லறை தோட்டத்துக்கு தனித்தனியாக சென்று மறைந்தவர்கள் கல்லறைகளை தரிசிக்கலாம் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    இன்று கல்லறை திருநாள் நிறுத்தப்பட்டு உள்ளதால், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லறை தோட்டங்கள் பூட்டப்பட்டு உள்ளன.

    கல்லறை தோட்டங்களுக்கு கிறிஸ்தவர்கள் செல்வதை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    இதுபோல், சிறிய கிராமங்களில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கும் இன்று செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    கொரோனா காலத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இன்று சகல ஆன்மாக்கள் நினைவு (கல்லறை திருநாள்) நாளாக கடைப்பிடிக்கிறார்கள்.
    உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியான இன்று சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு அன்று கல்லறை தோட்டங்களில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள்.

    வழக்கம்போல இந்த ஆண்டும் நவம்பர் 2-ந் தேதியான இன்று சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களிலும் இருக்கும் புல் மற்றும் செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு, சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்படும். பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    கல்லறை தோட்டங்களுக்கு அன்று காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்துவதால், அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. அன்று மாலையில் பங்கு தந்தையர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்திரிப்பார்கள். மேலும் காலை மற்றும் மாலையில் ஆலயங்களில் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக திருப்பலி நடைபெறும்.

    இது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கல்லறை தோட்டங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் பங்கு தந்தைகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்களது முன்னோரின் நினைவாக அந்தந்த பகுதிகளில் உள்ள கல்லறைகளில் அஞ்சலி செலுத்துவார்கள்.
    ×