
இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பங்குத்தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வேளாங்கண்ணியில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியால் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டம் கிழக்கு கடற்கரைசாலை ஆர்ச் அருகில் உள்ளது. அங்கு வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் முதல் கடற்கரை சாலையில் அமைந்திருந்த ராயப்பா கல்லறை தோட்டத்தில் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் அங்கு உள்ள கல்லறைகளில் மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர்.
நாகை புனித மாதரசி மாதா ஆலயத்தில் கல்லறை திருநாளையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பின்னர் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த கல்லறைகளை பங்குத்தந்தை தீர்த்தம் தெளித்து பிராத்தனைகள் நடத்தினார். தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து வைத்திருந்த கல்லறைகளில் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் உறவினர்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய பிராத்தனை செய்தனர். இதேபோல் ராயப்பன் கல்லறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.