என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஈத்தாமொழி அருகே உள்ள பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தல பொன் விழா மற்றும் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவுக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார்.

    இதில் பெரியகாடு பங்குத்தந்தை ஜான் ரூபஸ், துணை பங்குத்தந்தை வில்சன், பங்கு மக்கள், பங்கு அருட்பணிப் பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கினார். தொடர்ந்து வந்த நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

    3-ம் நாளில் செங்கல்பட்டு மறைமாவட்ட கொளப்பாக்கம் பங்குத்தந்தை ஜான் பெஞ்சமின் தலைமையில் திருமுழுக்கு வழங்கும் திருப்பலியும், நற்கருணை பவனியும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

    6-ம் திருவிழாவில் நடந்த புனித செபஸ்தியார் தின திருப்பலியில் முரசன்கோடு பங்குத்தந்தை பெனிற்றோ தலைமை தாங்கினார். திருப்பலியை தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தமிடும் நிகழ்வு நடைபெற்றது.

    9-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு, முதல் திருவிருந்து திருப்பலியும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், சிறப்பு தவில் வாத்தியமும், வாணவேடிக்கையும் நடந்தன. விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணிக்கு தேர்பவனியும் நடைபெற்றது. இதில் 3 தேர்கள் கோவிலையொட்டி உள்ள நான்கு வீதிகளும் சுற்றி வந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்ச்சை காணிக்கைகளை செலுத்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குத்தந்தை ஷிஜின், பங்குபேரவை துணை தலைவர் சகாய பால் ததேயுஸ், செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பாபியோன் ராஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
    கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரியநாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டி 301-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கரயர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 301-வது பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. அப்போது பாரம்பரிய முறைப்படி பாளையக்காரர் பொன்.பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன.

    முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக செங்கல்பட்டு உயர் மறை மாவட்ட மேதகு டாக்டர் நீதிநாதன் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டத்தை பங்கு தந்தையர்கள், பாளையக்காரா் பொன்.பாலதண்டாயுதம் ஆகியோர் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
    பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தலமானது தனிப் பங்காக உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பொன்விழா மற்றும் திருத்தல பெருவிழா நாளை  (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5.30 மணிக்கு பொன்விழா பொங்கல், காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.

    27-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் திருப்பலிக்கு குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். விழாவை தொடர்ந்து தினமும் மாலை செப மாலையும், திருப்பலியும் அருட்பணியாளர்களின் மறையுரையும் நடக்கிறது.

    வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. இதற்கு அந்தோணியார்புரம் திரு இருதய ஆண்டவர் சபையின் அருட்பணியாளர் புஷ்ப தாசன் தலைமை தாங்க, எட்டாமடை இணை பங்கு தந்தை அன்பின் தேவ சகாயம் மறையுரையாற்றுகி றார். மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலிக்கு அனந்தன்நகர் பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமை தாங்க, புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.

    6-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். கிறிஸ்து நகர் பங்குத்தந்தை வில்சன் மறையுரையாற்றுகிறார்.

    7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்க, அழிக்கால் பங்குத்தந்தை ஜெல்பரின் மறையுரையாற்றுகிறார்.

    காலை 11 மணி திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்க, கன்னியாகுமரி இணை பங்கு பணியாளர் சுரேஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியுஸ் தலைமை தாங்க, கேசவன் புத்தன் துறை பங்குத்தந்தை ஜெகன் மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு தந்தைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
    திருமூலநகர் குருசு மலையில் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று திறந்து வைத்தார்.
    கன்னியாகுமரி அருகே அழகப்பபுரம் திருமூலநகர் குருசு மலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் மலைக்குகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயம் கட்டி கொடுத்துள்ளார்.

    இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. இந்த விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி. பன்னீர்செல்வம், முதன்மைச் செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசினார்.

    இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். இந்த விழாவில் சினிமா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலைகுகை மாதா ஆலயத்தை திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், இந்த ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வரும்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பி.டி.செல்வகுமார் என்னை அழைத்தார். அப்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வர முடியவில்லை. இந்த ஆலயத்தை ஒரு இந்து கட்டி கொடுத்திருப்பது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது இதை கட்டி கொடுத்த பி.டி.செல்வகுமாரை பாராட்டுகிறேன்.

    நான் எங்கு சென்றாலும் என்னை நடிகர் விஜய்யின் தந்தை என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். என் மகனுக்கு நல்ல ஒரு தந்தையாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் பேசுகையில், இந்த குருசுமலையில் மலைகுகை மாதா மற்றும் புனித தோமையார் ஆலயத்தை கட்டிக் கொடுத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இது கடவுள் எனக்கு கொடுத்த ஒரு பாக்கியமாகும். இந்த குருசுமலை சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது என்றார்.

    விழாவில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை பவி டீச்சர், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவ பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத்தலைவர் ஜெபர்சன், சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி தலைவி ஸ்ரீரங்கநாயகி, மாவட்ட மாணவரணி தலைவர் பழனிகுமார், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் காப்பித் துறை, பொட்டல்குளம் அன்னை வேளாங்கன்னி கல்லூரி நிறுவனர் பீட்டர் யேசுதாஸ் மற்றும் திருமூல நகர் குருசுமலை பங்கு பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    முன்னதாக புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    திருமூலநகர் குருசுமலையில் மலைகுகை மாதா, புனித தோமையார் ஆலயம் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
    உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே திருமூலநகர் குருசு மலையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் தனது சொந்த செலவில் மலைக்குகை மாதா, புனித தோமையார் ஆலயம் கட்டி கொடுத்துள்ளார். இதன் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.

    விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி.பன்னீர்செல்வம், முதன்மை செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசுகிறார்.

    விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். விழாவில் சினிமா டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அமீர், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகைகள் சாஷி அகர்வால், மாஸ்டர் புகழ் பவி டீச்சர், மறைந்த வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை பங்குதந்தை பீட்டர் பாஸ்டின், கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார், திருமூலநகர் ஊர் மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் ஏற்கனவே பொட்டல்குளம் அய்யன்மலையில் மூலிகை தியான மண்டபம் தனது சொந்த செலவில் கட்டிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா தொடங்கியது. 3 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.
    பெங்களூரு எச்.ஏ.எல். சுதாமநகரில் புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஜெப ஆலயத்தின் 23-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று முதல் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.

    2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புனித தொமையார் ஆலயத்தின் பங்கு தந்தை சின்னப்பா திருப்பலி நடத்துகிறார். அதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது. நாளை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை புனித ஆரோக்கிய அன்னை ஜெப ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
    கானான் நாட்டின் இன்னொரு பெயரே ‘இஸ்ரவேல்.’ அதன் முதல் நியாயாதிபதியாக யோசுவா இருந்தார். அதன்பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு வெவ்வேறு நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆட்சி செய்தனர். ஆனால் இஸ்ரவேலர்கள் மீது, தொடர் படையெடுப்புகள் மூலம் அந்நியர்கள் பலரும் ஆதிக்கம் செலுத்திவந்தனர். இப்படி அம்மோன் நாட்டின் மக்களாகிய அம்மோனியர்கள், இஸ்ரவேலர்கள் மீது 18 ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி வந் தனர். இரக்கமற்ற கொலைகள், கொள்ளையில் ஈடுபட்டுவந்தனர். அவர்களது அட்டூழியங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சி மன்றாடினார்கள்.

    அம்மோனியருடன் போர் செய்ய யெப்தாவைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டினார். உறவுகளாலும், ஊர்க்காரர்களாலும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட யெப்தாவை, இஸ்ரவேலர்கள் கெஞ்சி அழைத்தனர். அதை ஏற்றுக்கொண்டார் யெப்தா.

    “யாரால் புறக்கணிக்கப்பட்டோமோ அவர்களே வந்து நம்மைத் தலைவராக ஏற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்களே இது எத்தனை பெரிய தலைகீழ் மாற்றம். கடவுளாகிய யகோவா என் மீது காட்டிய கருணையன்றி இது வேறென்ன!” என்று கடவுளைப் புகழ்ந்த யெப்தா, போரில் வெற்றி பெற கடவுளின் உதவி தேவை என்பதை உணந்தார். கடவுளிடம் பிரார்த்தனை செய்வதற்காக ‘மிஸ்பா’வுக்குச் சென்றார். அங்கே போய் முழந்தாளிட்டுக் கடவுளை நோக்கி, “நீர் எனக்கு வெற்றியைத் தந்தால் போர் முடிந்து நான் வீடு திரும்பும்போது, என் வீட்டிலிருந்து என்னை எதிர்கொண்டு வரவேற்க முதல் நபராக யார் வருகிறார்களோ... அவர்களை உமக்கு அர்ப்பணிப்பேன்” என்று சத்திய நேர்த்திக் கடன் செய்து பிரார்த்தனை செய்தார்.

    யெப்தா செய்த சத்திய நேர்த்திக் கடனை கடவுள் கேட்டார். அம்மோனியர்களுடனான போரில் யெப்தாவுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கிறது. அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த 20 நகரங்களை யெப்தா மீட்டெடுத்தார். வெற்றிக் களிப்புடன் இஸ்ரவேலர்களுக்குத் தலைமையேற்பதற்காக ஊர் திரும்பினார். ஊருக்குள் நுழைந்ததும் அவரை வரவேற்க எதிர்கொண்டு வந்தவர்களில் முதலில் வந்தாள், அவருடைய ஒரே அன்பு மகள். யெப்தா அவளை மிகவும் நேசித்தார். மிகுந்த மனவேதனை கொண்டவராய், தனது ஆடையைக் கிழித்துக் கதறியழுதார். தனது தந்தையின் சத்திய நேர்த்தியைப் பற்றித் தெரிந்து கொண்டபோது முதலில் வருத்தப்பட்டாலும் பின்னர் அவள் வருந்தவில்லை. தந்தையையும், தோழிகளையும் பிரிய வேண்டியிருக்குமே என்று அவள் நினைத்தாலும் சீலோவிலிருக்கிற ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய முடியும் என்பதை நினைத்தபோது அவள் மனம் நிறைந்தது. பின்னர் தனது தந்தையை சமாதானப்படுத்தி, இறைச்சேவைக்காக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

    பின்னர் கடவுளுக்குச் சத்தியம் செய்தபடியே யெப்தாவின் மகள் சீலோவுக்குப் போகிறாள். அங்கே யகோவாவின் ஆசாரிப்புக் கூடாரத்தில் தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்கிறாள். தந்தை மற்றும் தோழிகளின் உறவை முற்றிலும் மறந்தவளாய், இறைச்சேவை செய்தபடியே இறை வாழ்க்கை வாழ்கிறாள். கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொள்வது மிகச் சிறந்த வாழ்வு என அவள் நிரூபித்ததை இஸ்ரவேல் மக்களும் பின்பற்றத் தொடங்கினர். கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்து, இறை வாழ்வு வாழ்ந்தனர். இவர்களை போல நாமும் இறை வாழ்க்கை வாழ முயல்வோம்.
    இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
    யூதேயாவில் நற்செய்தி ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, ஓர் ஓய்வுநாளில் இயேசு தன்னுடைய சீடர்களோடு வயல் வழியாக நடந்துபோனார். அப்போது, அவருடைய சீடர்களுக்குப் பசியெடுத்தது. அதனால் வயல்களில் முற்றிய கதிர்களைப் பறித்து சாப்பிட ஆரம்பித்தனர்.

    அவர்கள் மீது குற்றம் காண, இயேசுவையும் சீடர்களையும் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த பரிசேயர்கள் அதைப் பார்த்தனர். பதற்றம் அடைந்தவர்களைப்போல் இயேசுவின் அருகில் வந்து குரலை உயர்த்தி, “ஓய்வுநாளில் செய்யக்கூடாத காரியத்தை உமது சீடர்கள் செய்கிறார்களே!?, நீர் கண்டிக்க மாட்டீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

    அதற்கு இயேசு, “முன்னோராகிய தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசிக்கவில்லையா? அவர் கடவுளுடைய வீட்டுக்குள் போய், குருமார்களைத் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை தன் ஆட்களோடு சேர்ந்து சாப்பிட்டாரே. அதுமட்டுமல்ல, ஆலயத்தில் இருக்கிற குருமார்கள் ஓய்வு நாட்களில் வேலை செய்தாலும் குற்றமற்றவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பற்றித் திருச்சட்டத்தில் நீங்கள் வாசிக்கவில்லையா? ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆலயத்தைவிட மேலானவர் இங்கே இருக்கிறார். ‘விலங்குகளின் ரத்த பலியை அல்ல, இரக்கத்தையே நான் விரும்புகிறேன்’ என்று பரலோகத் தந்தையாகிய அவர் கூறியிருப்பதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொண்டிருந்தால், குற்றமற்றவர்களை இப்படி கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஏனென்றால், மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கு எஜமானாக இருக்கிறார்” என்று கூறினார்.

    இதைக் கேட்டு எதுவும் பேசமுடியாதவர்களாக பரிசேயர்கள் குமைந்தபடி அங்கிருந்து அகன்று, அவரையும் அவரது சீடர்களையும் கண்காணித்தபடி இருந்தனர்.

    பின்பு, இயேசு அங்கிருந்து புறப்பட்டு ஜெபக்கூடம் ஒன்றுக்குச் சென்றார். அங்கே சூம்பிய கையுடைய ஒருவன் இருந்தான். அவன் குணம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற தவிப்புடன் இயேசுவை நெருங்கினான்.

    அவனது தவிப்பை இயேசு உணர்ந்தார். அப்போது மக்கள் கூட்டத்துடன் கலந்திருந்த பரிசேயர்களில் சிலர், இயேசுவின் மேல் குற்றம் சுமத்த இது நல்ல சந்தர்ப்பம் என்ற எண்ணத்தோடு, “ஓய்வுநாளில் குணமாக்குவது சரியா?” என்று அவர் குணமாக்கும் முன்பே கேட்டார்கள்.

    அதற்கு அவர், “உங்களில் யாருக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் ஒரு குழிக்குள் விழுந்துவிட்டால், அதை வெளியே தூக்கிவிடாமல் இருப்பீர்களா? அப்படியானால், ஆட்டைவிட மனிதன் எவ்வளவு மதிப்புள்ளவன். அதனால், ஓய்வுநாளில் நல்ல காரியத்தைச் செய்வது சரிதான்” என்று சொன்னார்.

    பின்பு, சூம்பிய கையுடையவனைப் பார்த்து, “உன் கையை நீட்டு” என்றார். அவன் நீட்டியவுடன், அந்தக் கை குணமாகி, அவனுடைய இன்னொரு கையைப் போல் ஆனது. பரிசேயர்கள் இந்த அற்புதத்தைக் கண்டு மனம் புழுங்கி வெளியேறினார்கள்.

    இனியும் இவரை விட்டு வைக்கக்கூடாது என்று இயேசுவை கொலை செய்ய சதித்திட்டம் போட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு அந்த இடத்தைவிட்டு இயேசு தன் சீடர்களுடன் கிளம்பிப் போனார். நோய்வாய்ப்பட்டிருந்த நிறைய பேர் அவர் பின்னால் போனார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணமாக்கினார்.

    இன்னொருமுறை பரிசேயர்கள் சிலரும் நியாயப் பிரமாணப் போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்திருந்த அவர்கள், இயேசுவிடம், “நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீடர்கள் ஏன் பின்பற்றுவதில்லை; உணவு உண்பதற்கு முன் உமது சீடர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.

    இயேசு அவர்களிடம் “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படி எதிர்பார்க்கும் நீங்கள், ஏன் தந்தையின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். உங்களைப் பற்றி ஏசாயா தீர்க்கதரிசி சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:

    ‘இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை. அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!’.

    இயேசுவின் இந்தக் கடும் விமர்சனத்தை பொறுக்கமுடியாமல் பரிசேயர்களும் நியாயப்பிரமாண போதகர்களும் எருசலேம் நகரத்துக்குத் திரும்பிச் சென்றனர்.
    குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
    குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தி பவனி, செபமாலை நடக்கிறது. இதனைதொடர்ந்து குளச்சல் பங்குப்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும். அருட்பணியாளர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வரும் விழா நாட்களில் மாலை செபமாலை, திருப்பலி, திருவிருந்து, சிறப்பு ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 24-ந் தேதியன்று மாலை 5.45 மணிக்கு நாஞ்சில் பால்பண்ணை இயக்குனரும், அருட்பணியாளருமான ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் செபமாலை, நிறைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு உறவு விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 26-ந் தேதி நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.
    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பங்குத்தந்தைகள் வினோத் பால்ராஜ், லியோ ஜெரால்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) குடும்ப ஒன்றிணைப்பு விழா, 24-ந் தேதி புதுநன்மை, திருமுழுக்கு விழா நடக்கிறது. 25-ந் தேதி மதியம் 12 மணிக்கு சமபந்தி விருந்து, மாலை 5.45 மணிக்கு புனித அந்தோணியார் தேர் பவனி நடைபெறுகிறது. 26-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் விவிலிய போட்டி, விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றது.
    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்
    உவரி அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று இரவு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மாலை ஆராதனையை நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

    திருவிழா தொடர்ந்து வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலை மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 30-ந் தேதி திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள்வளன், நிதி குழு, மற்றும் சபையினர் செய்துள்ளனர்.
    ×