என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள புனித அருளானந்தர் ஆலய 31-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. விழாவில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள புனித அருளானந்தர் ஆலய 31-ம் ஆண்டு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டு கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் சப்பர பவனி நடைபெற்றது. இதையொட்டி புள்ளம்பாடி மறைமாவட்ட பங்குத்தந்தை ஹென்றி புஷ்பராஜ், ஏலாக்குறிச்சி பங்குத்தந்தை சுவக்கீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் புனித அருளானந்தர் சப்பரம் சிறப்பு அலங்காரங்களோடு ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக பவனி சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டு வருகிற 14-ந் தேதி மாலை 4.40 மணிக்கு நன்றி திருப்பலியோடு விழா நிறைவு பெறுகிறது.

    கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருக்கொடி ஏற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆலஞ்சி மறை வட்டார அருட்தந்தைகள், பங்கு மக்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர் கன்சன் பிராங்கிளின், பங்கு அருட்பணி மரிய சூசை வின்சென்ட், வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் ஆகியோர் செய்துள்ளனர்.
    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள்.
    வங்கக் கடலோரம், அமைதியான சூழலில் சுமையோடு வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா. உலகப் புகழ் பெற்றுத் திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பாசலிக்க அந்தஸ்து பெற்ற பேராலயமாகவும், கீழை நாடுகளின் லூர்து எனவும் போற்றப்படுகிறது.

    இதனால் எல்லாச் சமயங்களைச் சார்ந்த பக்தர்களும், அன்னை மரியாளை வழிபட்டு தன்னை செபத்தின் மூலமாக ஒப்புக்கொடுக்கிறார்கள். இங்கு, திருவிழா நாட்கள் என்று இல்லாமல் எப்போதும் பல வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். திருவிழா காலங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிப்பட்டு செல்கின்றார்கள்.

    திருமண தடை, குடும்ப பிரச்னை, நினைத்த காரியம் நிறைவேறத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருவிழாவில் கலந்துகொள்ள வருவார்கள். அதேபோல், தனது வேண்டுதலுக்காகக் குறைந்தது மூன்று ஆண்டுகள், ஐந்து ஆண்டுகள் என்றும், மேலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தொடர்ந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தங்களது வேண்டுதல்கள் நிறைவேறினாலும், நிறைவேற வேண்டும் என்றாலும், வேளாங்கண்ணி புதுக்கோயிலின் பின் பக்கம் வாசலில் இருந்து, பழைய வேளாங்கண்ணி கோயில் மாதா குளம் வரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழந்தாட்படியிட்டுச் சென்று தங்களது வேண்டுதல்களை அன்னையின் பாதத்தில் சமர்ப்பிக்கிறார்கள். முக்கியமாக முழந்தாட்படியிட்டுச் புதுக்கோயிலில் இருந்து பழைய கோயில் வரை பக்தியுடன் நடந்து சென்றால், வேண்டியது நிச்சயம் நடந்தேறும் என்பது பக்தர்களின் காலம் காலமான அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    பாத யாத்திரையாக நடந்து வந்தாலும், முழந்தாட்படியிட்டுச் நடந்து வந்தாலும், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் பொருட்டும், வேளாங்கண்ணி பழைய கோயிலின் ஆலமரத்தில்.. திருமணம் கைகூட வேண்டும் என்று வேண்டிக் கொண்டவர்கள் தாலிக் கயிற்றையும், குழந்தை பாக்கியத்திற்காக வேண்டிக்கொண்டவர்கள் தொட்டிலையும், தீராத நோய் மற்றும் உடல் நலம்பெற வேண்டியவர்கள் அந்த உடல் உறுப்பு பகுதிளை தகடுகளாக அந்த ஆலமரத்தில் கட்டிவிட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், பின் மீண்டும் வந்து தங்களது பிரார்த்தனை மூலமாக நன்றியை பக்தர்கள்த் தெரிவிக்கிறார்கள்.

    சுமையோடு வருபவர்களின் மனதை சுகமாக்குவதாலும், வேண்டிக் கொண்டவர்களின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் மட்டுமல்லாமல், வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களைக் கருணையோடு தருவதாலேயே அனைவருக்கும் ஆரோக்கிய அன்னையாகத் திகழ்கிறார் அன்னை வேளாங்கண்ணி மாதா. இத்தகைய மாட்சிமிக்க வேளாங்கண்ணி மாதா புனித திருத்தலத்தில், இந்த ஆண்டுக்கான புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி மாதா பிறந்த நாளுடன் நிறைவடையும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி, வருகின்ற செப்டம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.

    வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், பல அற்புதங்களைப் தமது வாழ்வில் பெறுகிறார்கள். அன்னையின் கருணை மழையில் நாமும் நனைந்து, வாழ்வில் இன்னும் இன்புற்று இருப்போம்!
    தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது.
    தூய அமலோற்பவ அன்னை பேராலயம் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் தாய்க்கோவில் ஆகும். இது புதுச்சேரி நகரில் அமைந்துள்ளது. முதலில் திருத்தூதர் பவுலின் பெயரால் அர்ப்பனிக்கப்பட்டிருந்ததால் இக்கோவில் பிரெஞ்சு மொழியில் சான் பவுல் (san paul) கோவில் என எழைக்கப்பட்டு, அது பின்னர் தமிழில் மறுவி சம்பா கோவில் என அழைக்கப்படுகின்றது. இக்கோவில் இப்போது இயேசுவின் அன்னையாம் தூய கன்னி மரியாவின் அமலோற்பவ அன்னை என்னும் பெயரின்கீழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இயேசு சபை குருக்கள் அப்போது பிரெஞ்சு குடியேற்ற நாடாக இருந்த புதுச்சேரிக்கு மறைப்பணியாற்ற 1689இல் வந்தனர். பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரிடம் நிதியுதவிப்பெற்று 1692ஆம் ஆண்டு அப்போதைய பிரெஞ்சுக்கோட்டைக்கு மேற்கில் ஒரு ஆலயம் எழுப்பினர். அது மறு ஆண்டே இடச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது. இரண்டாம் கோவில் 1699இல் கட்டப்பட்டாலும், அதுவும் நிலைக்கவில்லை. 1728 முதல் 1736வரை தற்போதையக்கோவில் இருக்கும் இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது. 1761இல் இது ஆங்கிலேயர்களால் ஏழாண்டுப் போரின் போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

    1765ஆம் ஆண்டு இப்போது உள்ள நான்காம் ஆலயம் கட்டப்பட்டது. 20 ஜூன் 1791 ஆம் நாள் ஆலய வேலைகள் முடிந்து ஆயர் செம்பெனோயிஸால் இவ்வலயம் அருட்பொழிவு செய்யப்பட்டது. ஆலய மணி கோபுரம் பின்னாளில் கட்டப்பட்டது. 1905ஆம் ஆண்டு இடப்பக்க விரிவாக்கப் சேர்க்கப்பட்டது. 1970ஆம் ஆண்டு ஆலய மைய பீடம் சீரமைக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஆலய முகப்பில் உள்ள இடம் சீரமைக்கப்பட்டது.

    இவ்வலய விழா அமலோற்பவ அன்னையின் விழாவாகிய டிசம்பர் 8 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.

    இவ்வாலயம் புதுச்சேரியின் குறிக்கத்தக்க சுற்றுலா மையமாகும்.
    இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
    இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம். இந்த வார்த்தையை தேவதூதன் சொல்லும்போது தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது என்று எழுதப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்.

    அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று (ஏசாயா 7:14) முன்னுரைத்து விட்டார். கடவுள் மனித உருவமாய் பிறந்தார். இந்த செயல் கடவுள் மனிதருள் மனிதராய் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாயிருக்கிறது. ஏசாயா 8:8ல் இமானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விலாசத்தை மூடும் என்றான். இது அசீரியா ராஜாவால் ஆகாஷின் நாட்களில் யூதருக்கு வந்த கெடுதியை குறிக்கிறது என்றும், இதன்படி இமானுவேல் பாடனுவிப்பார் என்றும் விளங்கப்பட்டு உள்ளது.

    ஆகவே மேசியா வருவாரென்றும், அவர் நமக்காக பாடுபடுவார் என்றும் நம்பி இமானுவேல் ரட்சகர் என்று நினைத்தார்கள். இது சரித்திரம் கூறும் சான்று. ஏசாயா தீர்க்கனால் உரைக்கப்பட்டது. நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழ விடாமலும் அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததை போல நம்மோடு இருக்கிறார். (ராஜா 8:57) .

    இயேசு என்ற இம்மானுவேல் நம்மோடு இருந்து நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படி தன்னையே இவ்வுலகிற்கு கொடுத்தார். அந்த இமானுவேல் ஆகிய இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்டு அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற்று வாழ ஆண்டவர் கிருபை செய்வாராக.
    உவரி அந்தோணியார் திருத்தல திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
    தமிழ்நாட்டில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் பழமையானது உவரி அந்தோணியார் திருத்தலம். இத்திருத்தல திருவிழா கடந்த 19-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து நடந்து வந்தது. திருவிழா நாட்களில் தினசரி காலை திருப்பலியும், மாலையில் மறைரை, நற்கருணை ஆசீர் முதலியவை நடந்தது.

    நேற்று முன்தினம் மாலையில் திருவிழா மாலை ஆராதனையை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே. செல்வராஜ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டொமினிக் அருள் வளன் மற்றும் நிதிக்குழுவினர் செய்திருந்தனர்.
    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா முக்கிய நிகழ்ச்சியான புனிதரின் தேர்பவனி இன்று நடைபெறும்.
    ஈத்தாமொழி அருகே பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. திருவிழாவில் நேற்று மாலை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மறையுரை ஆற்றினார். தொடர்ந்து இரவு தேர் பவனி நடந்தது.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  கோட்டார் சமூக சேவை சங்க இயக்குனர் மைக்கேல் ராஜ் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். 11 மணிக்கு புனிதரின் தேர்பவனி நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானசேகரன் தலைமையில் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்துள்ளனர்.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 7-ந்தேதி வரை 10நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு முன்னோர் திருப்பலி நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. இதில் குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் சேல்ஸ், பங்குத்தந்தை மரிய செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா நடக்கிறது. வருகிற 2-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணிக்கு காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி நடைபெறுகிறது. 5-ந்தேதி காலை 7 மணிக்கு நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலியும், 6-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனையும் நடக்கிறது.

    7-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா முதல் திருப்பலி, 8 மணிக்கு கோட்டார் பிஷப் நசரேன் சூசை தலைமையில் பெருவிழா திருப்பலி, 10 மணிக்கு இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைகிறது.
    இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.
    இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல், கடவுளின் கட்டளையை மீறியதால், தாவீது இஸ்ரவேலின் புதிய மன்னனாக இறைவனால் அடையாளம் காட்டப்பட்டார்.இதையடுத்து மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு ‘எங்கே அவன் அரசனாகிவிடுவானோ’ எனப் பயந்து அவனைக் கொல்லத் துணிந்தார், சவுல். அவரது அந்த கொலை முயற்சியிலிருந்து பலமுறை தப்பித்த தாவீது, பல நகரங்களுக்கு ஓடி அங்கிருக்கும் ராஜாக்களிடம் அடைக்கலம் கேட்டு, எங்கும் நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்தார். சவுலோ தன் ஆட்களுடன் தாவீதைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருந்தார்.

    அதுல்லாம் என்ற குகையில் தாவீது மறைந்து வாழ்ந்தபோது அவருடைய அண்ணன்களும் தாவீது இருக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல் அநீதியினால் கொதித்துப்போய் அரசனுக்கு எதிராகப் புரட்சி செய்து பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும், கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களுமாக சுமார் 400 ஆண்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்த தாவீது அவர்களின் தலைவரானார். பின்னர் நோபு நகரில் கடவுளாகிய யகோவுக்கு ஊழியம் செய்துவந்த குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைச் சென்று சந்தித்தார்.

    தாவீது அவரிடம் உணவையும், ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டார். அகிமெலேக்கின் இந்தச் செயலை ஒற்றர்கள் வழியே கேள்விப்பட்ட சவுல், நோபு நகருக்கு ஆட்களை அனுப்பி தாவீதுக்கு உதவிய அகிமெலேக்கையும் 85 குருமார்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து, கொன்று போட்டான். நோபு நகரத்தையும் தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். அகிமெலேக்கின் மகன்களில் ஒருவராகிய அபியத்தார் கொலைக்களத்திலிருந்து தப்பியோடி தாவீதிடம் தஞ்சமடைந்து, சவுல் இரக்கமின்றி நடத்திய படுகொலைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். தன்பொருட்டு இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததை எண்ணி தாவீது மிகவும் வருந்தி அழுதார்.

    அதேசமயம் தாவீதிடம் பலமுறை தோற்ற பெலிஸ்தியர்கள் கேகிலா என்ற நகரத்தைத் தாக்கி, அங்குள்ள தானியங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, தனது சிறு படையுடன் விரைந்து சென்று கேகிலா நகரத்தாரைக் காப்பாற்றினார். இது பற்றிய செய்தி சவுலின் காதுகளுக்குச் சென்றதும் அவரது ரத்தம் கொதித்தது. பெரும் படையுடன் புறப்பட்ட சவுல், தாவீதை தீர்த்துக்கட்ட துடித்தார். இதை கடவுள் வழியாக அறிந்த தாவீது, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் பல இடங்களில் பதுங்கி வாழ்ந்தார். இறுதியாக என்கேதிக்கு என்ற செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கிருந்த குகைகளில் தங்கினார்.

    இதை அறிந்துகொண்ட சவுல், 3,000 தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான அந்தப் பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். தன் படை வீரர்களை விட்டு தனியாக ஒரு குகைக்குள் சென்ற சவுலுக்கு, அங்கே தாவீதும் அவரது படையும் பதுங்கி இருந்தது தெரியவில்லை.

    தாவீதின் வீரர்கள் அவரிடம், “இன்றைக்கு நம் கடவுளாகிய யகோவா உங்கள் கைகளின் வெகு அருகில் உங்கள் எதிரியைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவரை நீர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தூண்டினார்கள். ஆனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை மட்டும் வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையிலிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினார்.

    அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்து, “என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லவில்லை. ஏனெனில், நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடத் துடிக்கிறீர்கள். இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று கடவுளே தீர்ப்பு கொடுக்கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். கடவுள் முன்பாக தாவீதின் பணிவைக் கண்டு சவுலின் ஆணவம் உடைந்து நொறுங்கியது.
    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் 103-வது ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளையில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா மற்றும் 103-வது ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    சிறப்பு

    புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் உள்ள மாடத்தட்டுவிளையில் தங்கியதாகவும், இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் என்றும், மாடத்தட்டுவிளை ஆலயத்தில் உள்ள விளக்குத்தூண் மற்றும் கல்வெட்டு அதன் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.

    இந்த கல் விளக்குதூண் 15-2-1371-ல் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கல் விளக்குத்தூண் தற்போது ஆலயத்தி்ன் வடமேற்கு மூலையில் நிற்கிறது. இந்த கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள் கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கிறது. இங்கு சுமார் 653 ஆண்டுகளுக்கு முன்பே புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்தது என்பதை உறுதியாக கூறலாம்.

    முதல் ஆலயம்

    கி.பி. 1603-ல் இயேசு சபை குருக்களால் போர்ச்சுக்கீசியர் ஆதரவில் களி மண்ணால் ஆன முதல் ஆலயம் நாகர்கோவிலில் உள்ள கோட்டாருக்கு அடுத்தபடியாக மாடத்தட்டுவிளையில் அமைக்கப்பட்டது. அன்று முதல் மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கின்கீழ், கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்பட தொடங்கியது.

    கோட்டாறு பங்கில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளிவிவரத்தை கி.பி.1644-ல் ரோம் இயேசு சபை அதிபருக்கு அருட்தந்தை அந்திரேயாஸ் லோப்பன் அனுப்பி உள்ளார். அதில் மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்றும் புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்பட தொடங்கியதும், மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து கி.பி.1853-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி முதல் காரங்காடு பங்கின் கிளை பங்கானது.

    புனித செபஸ்தியார்

    பின்னர் கி.பி.1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இந்த சிலை உலகம் முழுவதும் காணப்படும் பொதுவான தோற்றத்தில் இருந்து வேறுபட்டு இடது கை மார்பிலும், வலது கை உடலோடு ஒட்டிய நிலையிலும் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

    கி.பி.1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து எலும்பின் சிறிய பகுதியை அருளிக்கமாக கொல்லம் ஆயர் மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கி, பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட்டார். அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான 9-ம் திருவிழாவின் போதும் பக்தர்களின் பார்வைக்கும், வழிபாட்டுக்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு புனிதரின் ஆசி பெற்று வருகின்றனர்.
    முக்கூடல் அருகே சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா தேர் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
    முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடைபெற்றது. தினமும் இரவில் பல்சுவை பட்டிமன்றம், கிராமிய கலைநிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது.

    9-ம் நாளான நேற்று முன்தினம் மாலை ஆராதனை நடைபெற்றது. இரவில் புனித சின்னப்பரின் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் தேரின் முன்பாக கும்பிடு சேவை செய்து வழிபட்டனர்.

    10-ம் நாளான நேற்று காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனிதரின் தேர் பவனி நடைபெற்றது. விழாவில் பங்குத்தந்தைகள் அலோசியஸ் அடிகளார், சந்தியாகு அடிகளார், அலெக்ஸ் அடிகளார், செல்வராஜ் அடிகளார், சுதர்சன அடிகளார், ஊர் தலைவர் பிரகாசம், செயலாளர் ஆர்.எஸ்.வில்சன், பொருளாளர் செபஸ்தியான், துணை தலைவர் ஆரோக்கியம், கணக்கர் சார்லஸ் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் இரவில் கொடியிறக்கம் நடைபெற்றது. தொடர்ந்து நகைச்சுைவ பட்டிமன்றம், மின்னொளி கபடி போட்டி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சிங்கம்பாறை இறைமக்கள் செய்து உள்ளனர்.
    சுரண்டை புனித அந்தோணியார் தேர்பவனி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    சுரண்டை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை ஜெபமாலை, திருவிழா திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது. மறை மாவட்டத்தை சேர்ந்த பங்குதந்தைகள் தினமும் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி அனைத்து தெருக்களிலும் பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தேர் பவனியை தொடங்கி வைத்தார். மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லாரன்ஸ் தலைமையில் அருட்சகோதரிகள், ஊர் பொறுப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
    ×