என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    இயேசு பூமியிலிருந்த போது எல்லோருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென்.
    'மரியாள் என்ற ஒரு சகோதரி இருந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள்' (லூக்கா 10:39).
    எருசலேமிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் பெத்தானியா கிராமத்தில் குஷ்டரோகியாக இருந்த சீமோன், குடும்பமாக இறைவனை நேசித்தான். அவனுடைய குஷ்டரோகத்தை குணமாக்கினார். அவனுக்கு மார்த்தாள், மரியாள், லாசரு என்ற பிள்ளைகள் இயேசுவினிடத்தில் மிகுந்த அன்புகூர்ந்த காரணத்தால் அந்த வீட்டில் இயேசு பிரவேசித்தார்.

    'மரியாள்' என்றால் 'கண்ணீர்' என்று அர்த்தம். மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து தேவனுடைய வசனத்தை கேட்டாள். மார்த்தாளோ அநேக வேலைகளை செய்து மிகவும் வருத்தமடைந்து, 'ஆண்டவரே நான் தனிமையில் வேலை செய்கிறேன். என் சகோதரியை அனுப்பும்' என்றாள்.
    இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக 'மார்த்தாளே நீவனின் இருதயத்திற்கு ஏற்றதாக இருந்தது. நாமும் ஆண்டவருக்கு பிரியமான காரியங்களை செய்யும்போது தேவனே நமக்கு சாட்சியாக இருப்பார்'.

    'பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான்' (யோவா.11:1).

    தன் சகோதரன் லாசரு வியாதிப்பட்டவுடன் மார்த்தாள், மரியாள் இயேசுவுக்கு தகவல் தெரிவித்தார்கள். இயேசு, மார்த்தாள், மரியாள், லாசருவினிடத்தில் மிகுந்த அன்பாக இருந்தார். இயேசு வர காலதாமதம் ஆனபோது லாசரு மரித்துப்போனான். குகை போன்ற ஒரு கல்லறையில் வைக்கப்பட்டு அதன்மேல் ஒரு கல்லை வைத்தார்கள்.

    நாலு நாளான பின்பு பெத்தானியா கிராமத்திற்கு இயேசு வந்தார். மார்த்தாள், மரியாள் இருவரும் இயேசுவின் பாதத்தில் விழுந்து 'ஆண்டவரே நீர் இங்கே இருந்தீரேயானால் என் சகோதரன் மரிக்க மாட்டான்' என்று கண்ணீர் விட்டு கூறினார்கள். தேவன்மீது அவர்கள் கொண்டிருந்த விசுவாசத்தை இது வெளிப்படுத்துகிறது.

    மார்த்தாள், மரியாள் அழுகிறதையும் அவர்களோடு இருந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கி துயரமடைந்து இயேசு கண்ணீர் விட்டார். அவர்கள்மேல் வைத்த அன்பை வெளிப்படுத்தினார். 'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டு கல்லறையினிடத்திற்கு வந்தார். கல்லறையின் மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. கல்லை எடுத்துப் போடுங்கள் என்றார்.

    மார்த்தாள், 'ஆண்டவரே இப்பொழுது நாறுமே நாலு நாளாயிற்றே' என்றாள்.

    இயேசு, 'நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்' என்று சொல்லி, 'பிதாவே நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்' என்று கூறினார். பின்னர் 'லாசருவே வெளியே வா' என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். மரித்தவன் உயிரோடு வெளியே வந்தான். அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

    லாசருவின் சரீரம் துணியினால் கட்டப்பட்டு இருந்தது. 'இவனை கட்டவிழ்த்து விடுங்கள்' என்றார். கட்டவிழ்த்த போது புது மனுஷனாக இருந்தான். அனைவரும் அவரை விசுவாசித்தார்கள். பிரதான ஆசாரியரும், பரிசேயரும், ஆலோசனை சங்கத்தாரும் 'இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறார். உலகமே அவருக்கு பின் செல்கிறது' என்றார்கள்.

    மரியாள் இயேசுவின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். தேவ வார்த்தையைக் கேட்டாள். விசுவாசம் வைத்தாள், அன்பு கூர்ந்தாள், தேவனை தேடினாள், மரித்து போன தன் சகோதரனை உயிருடன் மீட்டுக்கொண்டாள்.

    அவர் பூமியிலிருந்த போது எல்லோருக்கும் நன்மை செய்கிறவராக சுற்றித்திரிந்தார். அதைப்போல அற்புதங்களும், அதிசயங்களும் உலகம் முழுவதும் இன்றும் செய்து கொண்டிருக்கிறார்.

    நாம் இறைவனின் பாதத்தைப் பற்றிக்கொண்டால் சந்தோஷம், சமாதானம், விடுதலை, ஜெயத்தை பெற்றுக் கொள்ளலாம், ஆமென்.

    அயரின் பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
    உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும்.
    மிகவும் பொருள்வசதி கொண்ட பெண் ஒருவர், தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறிவிட்டது எனக்கூறி மனநல மருத்துவரை தேடி சென்றார். உடனே மருத்துவர், தன் அலுவலகத்தை சுத்தம் செய்யவந்த பெண்ணை அழைத்து, இவர் பெயர் வசந்தி. இவர் எப்படி தன் வாழ்வில் மகிழ்வை கண்டடைந்தார் என சொல்வார், தயவு செய்து கேளுங்கள், என்றார்.

    அப்பெண் கூறியது, எனது கணவர் 3 மாதங்களுக்கு முன்பு இறந்தார். எனது குழந்தைகள் திருமணமாகி வெளியூர் சென்று விட்டனர். எனக்கென யாருமே இல்லை. இனி எப்படி வாழ்வது என்ற எண்ணத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஒருநாள் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றபோது, ஒரு பூனை பின்தொடர்ந்து வந்தது. அந்த பூனைக்கு ஒரு தட்டில் உணவு வைத்து கொடுத்தேன். அது சாப்பிட்டுவிட்டு அங்கே தூங்கியது. அதைக்கண்டு நான் சிரித்தேன். அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட்டது என்று. மேலும், பிறருக்கு உதவி செய்தால் மகிழ்வு கிடைக்கும் என நினைத்தேன்.

    அடுத்தநாள் என் வீட்டுக்கு அருகில் படுக்கையாய் கிடந்த முதியவருக்கு உணவு கொடுத்தேன். கண்களில் கண்ணீர் வழிய அவர் தந்த புன்னகை என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் ஏதாவது உதவி செய்ய தொடங்கினேன். இன்று மிகவும் மகிழ்வோடு இருக்கிறேன்.

    நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பதைவிட, உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்பதே முக்கியம். நம் இதயத்தை நிறைக்கும் உண்மையான மகிழ்ச்சி, அழுவாரோடு அழுவதிலும், சோர்வடைந்து துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதலாக இருப்பதிலும், பிறர் கண்ணீரை துடைப்பதிலும் இருக்கிறது.

    இப்படி வாழ்கிற மனிதர்களை இம்மண்ணில் கண்டுபிடிப்பது அரிதாக உள்ளது. இருக்கும் இடம் போதும் என்ற மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இம்மண்ணில் வாழ்பவர்கள் வெகு குறைவே. குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமான பொருட்களையும், செல்வங்களையும் குவித்து விடவேண்டும் என்பதே மனித ஆவலாய் உள்ளது. இதற்காக எதையும் செய்ய துணிந்தவர்களாக மனிதர்கள் மாறிவருகிறார்கள். இதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும், அன்பையும், சமாதானத்தையும் இழந்து கொண்டே வருகிறார்கள். வேதனை, விரக்தி, நிராசை, அவநம்பிக்கை, வெறுப்பு, கோபம் என கணக்கற்ற மனக்காயங்களுக்கு உள்ளாகின்றனர்.

    இன்றைய மனிதர்களை மூன்று வகையாக பாகுபடுத்தலாம். 1) நிகழ்காலத்தை நிராகரித்து விட்டு இறந்த காலத்திலே வாழ்பவர்கள். இவர்களுக்கு சுமைகளை இறக்கவும் தெரியாது, சோகங்களில் இருந்து விடுபடவும் தெரியாது. 2) எதிர்கால கனவுகளில் நிகழ்காலத்தை இழப்பவர்கள். நாளை பற்றியே கவலைப்பட்டு நிகழ்காலத்தை இழக்கிறவர்கள். 3) வாழ்க்கையை அனுபவித்து வாழும் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள். இன்று புதிதாய் பிறந்தோம் என்ற உற்சாகத்தோடு ஒவ்வொரு விடியலையும் வரவேற்கிறவர்கள்.

    உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும். தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சி காண முடியும்.

    அருட்பணி.குருசு கார்மல்,

    இணை பங்குத்தந்தை, தூய சவேரியார் பேராலயம், கோட்டார், நாகர்கோவில்.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தல திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. விழாவுக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜோஸ் முட்டத்துப்பாடம் தலைமை தாங்குகிறார். கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் சாலமோன் மறையுரையாற்றுகிறார். ஆறுகாணி திருக்குடும்ப ஆலய வட்டார முதன்மை பணியாளர் டோபின் ஆலப்புரைக்கல், புனித அல்போன்சாவின் சிறப்பு நவநாள் வழிபாட்டை தலைமையேற்று நடத்துகிறார்.

    22-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நித்திரவிளை ஜெயமாதா ஆலய பங்குத்தந்தை குரியன் பந்திச்சிறைக்கல் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. குழித்துறை மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் ரசல்ராஜ் மறையுரையாற்றுகிறார்.

    23-ந் தேதி காலை 7.30 மணிக்கு முக்கூட்டுக்கல் புனித மேரி இளங்குருத்துவ கல்லூரி அதிபர் ஜஸ்டின் செறுவேலின் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. பள்ளியாடி திருஇருதய ஆலய பங்குத்தந்தை பெனடிக் அனலின் மறையுரையாற்றுகிறார்.

    28-ந் தேதி புனித அல்போன்சாவின் நினைவு நாள். காலை 9 மணிக்கு அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது. தக்கலை மறைமாவட்ட பொருளாளர் டென்சி முண்டுநடைக்கல் திருப்பலி நடத்துகிறார். 2016-17-ம் கல்வி ஆண்டில் முதலிடம் பெற்ற மாணவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள். விழாவில் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார்ஜார்ஜ் ராஜேந்திரன் கலந்து கொள்கிறார். மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆவணக்காப்பாளர் பெலிக்ஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 8 மணிக்கு திவ்ய நற்கருணை ஆராதனையும், திருப்பவனியும் நடக்கிறது.

    30-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் தேர்ப்பவனி நடக்கிறது. தொடர்ந்து நேர்ச்சை விருந்து நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தாமஸ் பவ்வத்துப்பறம்பில், துணை பங்குத்தந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    பாவத்தில் இருந்து விடுபட்டு, நற்செய்திகளை செவி மடுத்து, விண்ணரசை அடைய வேண்டும் என்று இயேசுபிரான் விரும்புகிறார். இயேசுவின் நற்செய்திக்குச் செவி மடுப்போம்.
    அந்தக்காலத்தில் இயேசுபிரான் அவருடைய சீடர்களை நோக்கிக் கூறுகிறார்: ‘விண்ணரசு நெருக்கமாக வந்து விட்டது எனப் பறைசாற்றுங்கள். உடலாலும், உள்ளத்தாலும் நலம் குறைந்தவர்களைக் குணமாக்குங்கள். இறந்தவர்களை உயிர் பெற்று எழச்செய்யுங்கள். தொழு நோயாளிகளை நலம் பெறச்செய்யுங்கள். பேய்களை ஓட்டி விடுங்கள். கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்பு எதையும் உங்கள் இடைக்கச்சைகளில் வைத்துக் கொள்ள வேண்டாம். பயணம் செய்யும் பொழுது, பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஏனென்றால், வேலையாள், நம் உணவுக்கு உரிமை உடையவரே’.

    ‘நீங்கள் எந்த நகருக்குள், ஊருக்குள் சென்றாலும், அங்கே உங்களை ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையவர், யாரெனக்கேட்டு அறியுங்கள். அவ்விடத்தில் இருந்து புறப்படும் வரை, அவர்களோடு தங்கியிருங்கள். அந்த இல்லத்திற்குள் செல்கிற போதே, அந்த இல்லத்தாருக்கு வாழ்த்தைக் கூறுங்கள்’.

    ‘அந்த வீட்டார்கள், தகுதி உள்ளவராக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்தின் அமைதியானது, அவர்கள் மேல் தங்கட்டும். அவர்கள் தகுதி அற்றவர்களாக இருந்தால், அது உங்களிடமே திரும்பி வரட்டும். உங்களை யாராவது ஏற்றுக்கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்ததற்குச் செவி கொடுக்காமலோ இருந்தால், அவருடைய வீட்டை, நகரை விட்டு வெளியே வரும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை, உதறி விடுங்கள். தீர்ப்பு சொல்லும் நாளில், ‘சோதோம் குமோரா’ பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட, அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனையானது கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

    இந்த நற்செய்தியை மிகவும் கவனமாகக் கவனியுங்கள். தம்மைப் பின்பற்றக் கூடிய சீடர் களுக்குப் பல வரங்களை, மனப்பூர்வமாக அளிக்கின்றார்.

    ‘விண்ணரசு சமீபமாக வந்து விட்டது’ என்ற செய்தியை முதலில் கூறுங்கள் என்கிறார். அடுத்தபடியாக, உடலாலும், உள்ளத்தாலும் நலிவடைந்தவர்களை, குணமாக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார். இறந்து போனவர்களை, உயிர் பெற்று எழச் செய்யுங்கள். தொழுநோய்த் துன்பத்தால், துயரப்படக் கூடியவர்களை, நலம் பெற்று மகிழ்ச்சி அடையச்செய்யுங்கள். பேயினால் பீடிக்கப்பட்டவர்களை, பேயானது அவர்களிடம் இருந்து ஓடுவதற்குக் காரணி களாய் இருங்கள் என்கிறார். இப்படிப்பட்ட அரிய பெரும் செயல்களைச் செய்வதற்கு, அவர்களுக்குப் பெரிய வரங்களைப் பொழிகிறார்.

    இவ்வளவு அதிகாரங்களையும், தம் சீடர்களுக்குக் கொடுத்த இயேசுபிரான், ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுகிறார், ‘கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குங்கள்’ என்கிறார். இத்தகைய வரங்கள், இயேசு பெருமானால், எதையும் எதிர்பார்க்காமல், கொடையாகச் சீடர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்பதால், கொடையாகப் பெற்றதைக் கொடையாகக் கொடுங்கள் என்கிறார்.

    சீடர்கள் அவர்களுடைய சக்தியினால் பெறவில்லை. இயேசுபிரானிடம் இருந்து கொடையாகப் பெற்றது. கொடையாகப் பெற்றதைக் கொடையாக வழங்குவதுதானே நியாயம்.

    இக்காலத்தில் அப்படியா நடக்கிறது?

    ஏதோ சில செயல்கள், நம்மையும் அறியாமல் நடக்கின்றபொழுது, நம்மால்தான் நடந்தது என்ற அகம்பாவமும், மனோபாவமும் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

    ‘நீங்கள் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளக் கூடாது. எதையும் எடுத்துச் செல்லவும் கூடாது’.

    இதில் இருந்து நாம் உணர்வது என்ன?

    ‘இறை மகனின் வார்த்தை ஒன்றுதான்’ குணப் படுத்தும் என்ற கருத்து, இங்கே வலியுறுத்தப்படு கிறது.

    அடுத்தபடியாக ஓர் எச்சரிக்கையும் விடுக் கிறார்.

    நீங்கள் எந்த நகரத்திற்குள் சென்றாலும் அல்லது எந்த ஊருக்குச் சென்றாலும், உங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதி உடையவர்கள் யார் என்பதைக் கேட்டு, அதற்குப் பிறகு அறிவியுங்கள் என்கிறார். இப்படிப்பட்டவர்களை, ஏற்றுக் கொள்பவர்கள் மிகுதியாக இருக்க மாட்டார்கள் என்பதால்தான், இவ்வார்த்தையைக் கூறுகிறார். முதலில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்; பிறகு நம்ப வேண்டும். பிறகுதானே நலம் கிட்டும்.

    ‘உங்களை ஒருவர் ஏற்றுக் கொண்ட பிறகு, அங்கிருந்து வரும் வரை அவரோடு தங்கி இருங்கள்’ என்ற வார்த்தையைக் கூறி விட்டு, ‘அந்த இல்லத்திற்குள் நுழைகிறபொழுதே வாழ்த்தைக் கூறுங்கள்’ என்கிறார். இப்படிச் செய்வதால் ஏற்படும் பயன் என்ன என்பதையும் எடுத்துரைக்கிறார்.

    ‘நீங்கள் செல்லும் அந்த இல்லத்தார்கள், தகுதி உடையவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்து அவர்களின் மேல் தங்கட்டும்’ என்கிறார். ‘தகுதி அற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன வாழ்த்தானது, உங்களிடமே திரும்பி வரட்டும்’ என்கிறார். ஒருவர் தகுதி உடையவரா? இல்லையா? என்பதை வாழ்த்தால் ஏற்படும் செயற்பாடுகளை வைத்து உணர்ந்து கொள்ளலாம்.

    உங்களை யார் ஏற்றுக் கொள்ளவில்லையோ அல்லது உங்கள் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்கவில்லையோ அவரது வீட்டையோ, அந்த நகரத்தையோ விட்டு வெளியே வரும்பொழுது, உங்கள் கால்களில் படிந்திருக்கும் ‘தூசி’யை உதறி விட்டு வாருங்கள்.

    பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த, ‘சோதோம் குமோரா’ பட்டணத்திற்குக் கிடைத்த தண்டனையை விட, ஏற்றுக் கொள்ளாத நகருக்குத் தண்டனை கிடைக்கும் என்கிறார்.

    இயேசுபிரான் நாடு முழுவதும் அலைந்து நல்ல செய்திகளை மக்களிடையே பரப்பினார் என்பதை நாம் அறிவோம். ஆகவேதான் அவர் சீடர்களை எல்லா வகையிலும் தயார்படுத்து கிறார். அதோடு மட்டும் அவர் விட்டு விடவில்லை. நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று, நற்செய்திகளை அறிவிக்க, அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். கட்டளையிட்டால் மட்டும் போதாது; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகிறார்.

    பாவத்தில் இருந்து விடுபட்டு, நற்செய்திகளை செவி மடுத்து, விண்ணரசை அடைய வேண்டும் என்று இயேசுபிரான் விரும்புகிறார். விண்ணரசு நெருக்கமாக வந்து விட்டது என்பதை உணர்த்து கிறார்.

    விண்ணரசுக்குத் தகுதியுடையவர்களாக ஆக்குவதற்காக, மக்களைத் தயார்படுத்தும்படி, தன் சீடர் களுக்கு இடும் கட்டளை என்பது, உண்மையானதாக இருப்பதால், இந்தக் கட்டளையை ஏற்போம். இயேசுவின் நற்செய்திக்குச் செவி மடுப்போம்.

    - செம்பை சேவியர்.
    தூய சந்தியாகப்பர் ஆலய 475-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் உள்ளது தூய சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தின் முகப்பு பகுதி இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை குறிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. ஆலய திரு விழாவில் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். இந்நிலையில் சந்தியாகப்பர் ஆலய 475-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சந்தியாகாப்பரின் உருவம் பதித்த கொடியை பங்கு தந்தை ஆனந்த் ஏற்றி வைத்தார். இதில் ஆலய பங்கு தந்தை ராஜஜெகன், விழாக்குழு தலைவர் அந்தோணிசந்தியாகு, தங்கச்சிமடம் ஜமாத் தலைவர் பசீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசிலன், முன்னாள் ஜமாத்தலைவர் ராஜசாகிப், இந்து சமூக தலைவர் கோவிந்தன், பவர் நாகேந்திரன் மற்றும் தண்ணீர் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா உள்பட 7 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் உள்பட மும் மதத்தை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    திரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி தேர் பவனியும், இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், இரவு 9 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய சந்தியாகப்பர் ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
    அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10).
    காட்டில் மூங்கில் ஒரு நாள் வெட்டப்பட்ட போதும், செப்புக்கம்பியால் அதை துளைத்த போதும் “ஐயோ வலிக்கிறதே” என்று அழுதது. “கொஞ்சம் பொறுத்துக்கொள் “ என்று மூங்கிலைப்பார்த்து ஆறுதல் சொன்னது காற்று. மூங்கில் புல்லாங்குழல் ஆனது. மேடையில் உலகமே வியக்கும் வண்ணம் இசையை பொலிந்து கொண்டிருந்தது. புல்லாங்குழலை பார்த்து மேனி சிலிர்த்தது காற்று. எல்லோரும் புல்லாங்குழலை பாராட்டினார்கள். மூங்கில் முணுமுணுத்தது. துன்பம் இல்லையேல் இன்பம் இல்லை என்று.

    நிலத்தை துளைத்தால் தான் விதை முளைக்கும். தங்கத்தை சுட்டால் தான் நகை கிடைக்கும். அதுபோல மனத்தை சுட்டால் தான் மனிதம் கிடைக்கும். வாழ்க்கை என்பது இறைவன் தந்த ஓவியம். வாழ்வது என்பது மனிதன் படைக்கும் காவியம் ஆகும்.

    “அன்புக்குரியவர்களே, துன்பத்தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென வியக்காதீர்கள். மாறாக, கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்பொழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள்” (1 பேதுரு 4:12-13).



    “கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச்சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளர்கள். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை. பழிக்கப்பட்ட போது பதிலுக்கு பலிக்கவில்லை; துன்புறுத்தப்பட்ட போது அச்சுறுத்தவில்லை; நியாயமாக தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார்” (1 பேதுரு 2:21-23).

    அன்பர்களே, நீங்கள் துன்பத்தை தாங்குவதிலும் பொறுமையை கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாக கொள்ளுங்கள் (யாக்கோபு 5:10). விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்; துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள். அனைத்தையும் அன்போடு செய்யுங்கள் (1 கொரிந்தியர் 16:13-14).

    அருட்திரு. வி.டேவிட்ராஜ், பங்குத்தந்தை, ஒட்டன்சத்திரம்.
    நமது குடும்பத்தாரோ, சொந்தக்காரரோ, நண்பரோ, நம்முடன் வேலைபார்ப்பவரோ அல்லது நமக்கு கீழே வேலை பார்ப்பவரோ யாராக இருந்தாலும் தவறு செய்தால் மன்னியுங்கள்.
    மன்னித்தல் மிகப்பெரிய நன்மை தரும் நற்செயலாகும். ஒருமுறை பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ‘நீ உனது சகோதரனை ஏழு எழுபது முறை மன்னிக்க வேண்டும்’ என்றார்.

    ‘ஏழு எழுபது முறை’ என்றால் ‘கணக்கில்லாமல் மன்னிக்க வேண்டும்’ என்று பொருள். இதை விளக்கும் வகையில் இரு உவமைகளையும் கூறினார். அதில் மனம் திரும்பும் மகன் உவமையும் ஒன்று.

    தந்தை ஒருவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். தரமற்ற தம்பி சொத்தைப் பிரிக்க தந்தையோடு சண்டையிட்டான். கைகளில் பணம் இருந்தால் உலகத்தின் இன்பங்களை எல்லாம் சட்டைப்பையில் சுருட்டிக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

    தந்தையின் அறிவுரைகள் எருமையின் காலில் மிதிபட்ட பறவை முட்டையாய் பயனற்று போயின. வேறு வழியின்றி தந்தையும் இருந்த சொத்தை இரண்டாக்கினார். பாதி சொத்தை இளையவனுக்கு கொடுத்தார். அவன் சொர்க்கத்தையே தன் சுருக்குப்பைக்குள் சொருகிக் கொண்டதாய் ஆனந்தம் அடைந்தான்.

    சொத்துகளை விற்று பணமாக்கினான். ஊதாரி நண்பர்களே ஆதாரமென்று நம்பினான். நண்பர்களோடு தூரதேசம் சென்று பணத்தை தண்ணீராய் பாய்ச்சி ஆனந்தத்தை அள்ளினான். மதுவில் கண்ணயர்ந்து மாதுவின் கரங்களில் விழித்தான். தகாத பாதைகளில் தவறாமல் நடந்தான்.

    மதகு திறந்த அணையில் தண்ணீர் தீர்வது எளிதல்லவா. அதுவும் தண்ணீர் வரத்தே இல்லாத அணையெனில் எப்படி இருக்கும். சொத்து கள் தீப்பந்தம் பட்ட பனித்துளி போல உலர்ந்து மறைந்தது. ஊதாரித்தனத்தின் உச்சத்தில் உறங்கி விழித்தவனிடம் உணவுக்கே மிச்சமில்லை.

    தண்ணீர் பாயாத அருவிகளில் குளிப்பதற்கு ஆளிருக்குமா என்ன?, பணம் தீர்ந்தது புரிந்ததும் நண்பர்கள் இரவோடு இரவாக கூடு மாறி ஓடினர். பின்னர் உணவுக்காய் வேலை தேடி அலைந்தான். அவனுக்கு பன்றி மேய்க்கும் வேலை பரிதாபத்துடன் கொடுக்கப்பட்டது.

    பட்டாடை உடுத்தியவன், வறுமை துரத்த பன்றிகளோடு புரண்டான். மதுவில் நீந்தியவன், பட்டினி துரத்த பன்றியின் உணவை பகிர்ந்துண்டான். பின்னர் அதற்கு கூட வழியின்றி தவித்தான்.

    தந்தையின் நேசம் நெஞ்சுக்குள் நெளிய, புத்தி தெளிந்தான் புத்திரன். திடீரென ஒரு ஆசை. தந்தையின் தேசத்தில் வேலைக்காரனாக பணியாற்றி மீதி காலத்தை ஓட்டிவிட நினைத்தான்.

    அவமானம் தலைமேல் அமர தலை கவிழ்ந்தான். இல்லம் நோக்கி சென்றான்.



    தொலைவில் இளைய மகனின் நிழல் கண்டதும், தந்தையின் கரம் நீண்டது. அவர் மனம் மகிழ்ச்சி தோட்டத்தில் மலர் கொய்தது. மண்ணை நோக்கிப் பாயும் மழையாய் மகனை நோக்கி பாய்ந்தார் அவர், திரும்பியவன் திருந்தியிருந்தான்.

    “மகன் என்னும் அந்தஸ்தை நான் இழந்துவிட்டேன். அதனால் வேலைக்காரனாக உங்களுடன் இணைந்துக்கொள்கிறேன். ஏதாவது ஒரு வேலையை எனக்கு கொடுங்கள்” என்று அழுதபடி கேட்க... தந்தையோ மகனைக் கட்டியணைத்தார். ஆனந்தக் கண்ணீரால் அவன் முகம் நனைத்தார். கொழுத்த கன்றைக் கொன்று விருந்தொன்றை அமைத்தார். முதல்தர ஆடை அணிவித்து, மிதியடி, மோதிரம் அணிவித்து மகனை உச்சி மோந்து உச்சத்தில் உலாவினார்.

    மூத்தவன் வந்தபோது ஆடல் சத்தத்தில் ஆடிப்போனான், விவரம் அறிந்து கோபத்தில் குதித்தான். தந்தையை நோக்கி கேள்விகளை தொடுத்தான். ‘தகாத உறவுக்காரனுக்கு தரமான விருந்தா?, தவறாமல் இருந்த எனக்கு தந்ததென்ன தந்தையே?’ என்றவனின் மூச்சில் கோபமிருந்தது.

    அதற்கு தந்தை சொன்னார்.... ‘உன் தம்பி இறந்திருந்தான், இப்போது உயிர்த்துவிட்டான். காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்து விட்டான். அதற்கே இந்த விருந்து. நீயோ, என்னுடனே இருக்கிறாய், பிரியாத பிரியத்துடன். எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதே. தொலைந்தவை கிடைக்கையில் ஆனந்தப்படு. தவறுதல் மனித இயல்பு, மீண்டு வருதலே மனிதனின் மாண்பு’ என்றார்.

    இந்த உவமையில் மனம் திருந்துதலையும், மன்னிக்கும் அவசியத்தையும் அள்ளித்தெளித்திருந்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு முத்தாய்ப்பாக அடுத்த உவமையும் கூறப்பட்டது.

    “ஒரு ராஜா, ஊழியக்காரன் தன்னிடம் வாங்கியிருந்த கடனை திருப்பி கொடுக்குமாறு கூறியிருந்தார். பதினாயிரம் தாலந்து என்பதால் அவனால் திருப்பி கொடுக்க முடியவில்லை. அதற்கு சொத்துகளை விற்றுக்கொடுக்கும்படி கூறியிருந்தார்கள். அப்போது அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து வணங்கி, ‘என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்’ என்றான்.

    அவனது வேண்டுதலை ஏற்றுக்கொண்ட ராஜா, அவனை மன்னித்ததோடு கடனையும் மன்னித்துவிட்டார்.

    அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப் போகையில் அவனிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடன் சேர்ந்து பணிபுரியும் வேலைக்காரர்களில் ஒருவனை கண்டான். உடனே அவனை பிடித்து, கழுத்தை நெரித்து, ‘நீ பட்ட கடனை எனக்கு கொடுத்து தீர்க்கவேண்டும்’ என்றான்.

    அப்போது அவன் காலிலே விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன்’ என்று அவனை வேண்டிக் கொண்டான். அவனோ சம்மதிக்காமல், பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனை காவலில் போட்டுவித்தான்.

    இந்த விவகாரம் ராஜாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை கேட்டு ஆத்திரமடைந்த ராஜா... அவனை அழைத்து, ‘நான் உன்னை மன்னித்தது போல நீயும் அவனை மன்னித்திருக்க வேண்டும். ஆனால் நீயோ மன்னிக்க தவறினாய். அதற்கான தண்டனை நிச்சயம் உனக்கு உண்டு. எனக்கு தரவேண்டிய கடனை திருப்பிக்கொடு..!’ என்று கூற அவன் அதிர்ந்துவிட்டான்” என்று இரு உவமைகளையும் சொல்லி முடித்த இயேசு... “மனிஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” (மத்தேயு 6:15) என்று கூறினார்.

    எனவே நமது குடும்பத்தாரோ, சொந்தக்காரரோ, நண்பரோ, நம்முடன் வேலைபார்ப்பவரோ அல்லது நமக்கு கீழே வேலை பார்ப்பவரோ யாராக இருந்தாலும் தவறு செய்தால் மன்னியுங்கள். அப்போதுதான் நம்முடைய குற்றங்கள் மன்னிக்கப்படும். இந்த கருத்தையே இரு உவமைகளும் வெளிப்படுத்துகின்றன.
    மனம் மாறினால் சன்மானமும், மாறாவிட்டால் தண்டனையும் திருவிவிலியத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவிவிலியம் முழுவதும் மனமாற்றத்தின் செய்தி பரவிக்கிடக்கிறது.
    “உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி ஆண்டவரிடம் திரும்புங்கள் (தி.ப.3:19)“

    “உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்கமாட்டார் (மத் 18:35)“

    மனமாறத் தேவை இல்லாத தொன்னூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட மனம்மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். (லூக் 15:7)

    பல நேரங்களில் நாம் பழக்கவழக்கங்களாலும், பலவீனங்களாலும், சில நேரங்களில் தெரிந்தும் திட்டமிட்டும் சில பாவங்களைச் செய்கிறோம். திட்டமிட்டு செய்கின்ற தவறுகளை நாம் இயல்பாகவே மாற்றிவிடுகிறோம். இதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது. குறைபாடுகள் நம்முடைய கோட்பாடுகளாக மாறவே கூடாது. தவறுகள் நம்முடைய தத்துவங்களாக மாறக்கூடாது. அப்படி ஒரு வேளை மாறினால் தாங்காது பூமி. இவர்களை மையப்படுத்திதான் ஏசு கூறினார் “மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள் (லூக் 13:3) “



    மனம் மாறினால் சன்மானமும், மாறாவிட்டால் தண்டனையும் திருவிவிலியத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. திருவிவிலியம் முழுவதும் மனமாற்றத்தின் செய்தி பரவிக்கிடக்கிறது. மனமாற்றம் கிரேக்க மொழியில் ‘மெட்டநோயா‘ என்று சொல்லப்படுகிறது. இதன்பொருள் மனம் கசிந்து உருகுதல் ஆகும். நம்முடைய செயல்பாடுகளும், வாழ்வுமுறைகளும், வார்த்தை பரிமாற்றங்களும் நேர்மையானவையாக இருக்கவேண்டும்.

    தவறுவது இயற்கை, தவறிக்கொண்டிருப்பதே இயற்கை அல்ல. திருந்துவதும் இயற்கையாக இருக்க வேண்டும். நாம் மனம் மாறும்போது இறைவனோடும் பிறரோடும் ஒப்புரவு ஆகிறோம். இந்த ஒப்புரவு நம்மை வாழ்வில் உயர்த்திப் பிடிக்கும். விவிலியத்தில் சவுல் தன் தவறுகளை உணர்ந்து உதறித் தள்ளியதால் சவுல் பவுலானார்.

    ஏசு சொன்ன ஊதாரிப்பிள்ளை உவமையில் தன் தவறுகளால் தன்னையும் தன் தந்தையையும் தொலைத்துவிட்ட இளையமகன், தன் தவறுகளை உணர்ந்து, உதறித்தள்ளி, மீண்டும் தன் தந்தையிடம் வந்து மனம் வருந்தி மன்னிப்புக்கேட்டபோது சீரோவாக இருந்தவன் ஹீரோவாக மாறினான். நாம் என்றும் ஹீரோதானே?

    - அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு
    வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோமையார் உருவச்சிலையுடன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.
    வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழா நடந்தது. வட்டார பங்கு தந்தை சேவியர், மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்தினர். இதைத்தொடர்ந்து தோமையார் உருவச்சிலையுடன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.

    ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி கடைவீதி, மெயின்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    இந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.
    இயேசுபிரான் மக்கள் மத்தியில் தனது போதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ‘கப்பர்நாகும்’ என்ற ஊருக்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுபிரானிடம், ஓர் உதவியை நாடி வந்தார்.

    நூற்றுவர் தலைவர் இயேசுபிரானைப் பார்த்து, ‘ஐயா! என் மகன் முடக்கு வாதத்தால், மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்’ என்று கூறினார்.

    இயேசு பிரான் அவரைப் பார்த்து, ‘நான் வந்து அவனைக் குணமாக்குவேன்’ என்று கூறினார்.

    அதற்கு அந்த நூற்றுவர் தலைவர், அவரைப் பார்த்து, ‘ஐயா! நீர் என் வீட்டிற்குள் வர நான் தகுதியில்லாதவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும். என் மகன் பூரணமாக நலம் அடைந்து விடுவான்’ என்று கூறினார்.

    அவர் மேலும், “ஐயா! நான் அதிகாரத்துக்கு உட்பட்டவனாக இருக்கிறேன். என் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களான ‘படை வீரர்கள்’ எனக்கு இருக்கின்றனர். நான் அவர்களில் ஒருவரைப் பார்த்து, ‘செல்’ என்றால் சென்று விடுகிறார். வேறு ஒருவரை நோக்கி ‘வா’ என்றால் வந்து விடுகிறார். என் பணியாளரைப் பார்த்து, ‘இதைச் செய்’ என்றால் செய்து விடுகிறார்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுபிரான் ஆச்சரியப்பட்டார்.

    பிறகு, தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி இவ்வாறு உரைத்தார்:

    “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேலர் யாரிடமும் இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் பார்த்ததில்லை. கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பலபேர் வந்து, அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன், விண்ணரசில் பந்தியில் அமருவார்கள். அரசுக்கு உரியவராக இருப்பவர்களோ, இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும்” என்று கூறினார்.

    பிறகு இயேசுபிரான், நூற்றுவர் தலைவரைப் பார்த்து, ‘நீர் போகலாம். நீர் நம்பியபடியே நடக்கும்’ என்று கூறினார். அந்த நிமிடமே அவர் மகன் குணம் பெற்றான்.

    இயேசு பெருமான், பேதுருவின் வீட்டிற்குள் சென்றார். பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருந்ததைக் கண்ணுற்றார். இயேசுபிரான், அவருடைய கையைத் தொட்டார். உடனே காய்ச்சல் அவரை விட்டு அகன்று போய் விட்டது. அவரும் உடனே எழுந்தார். இயேசுபிரானுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார். மாலை நேரம் ஆனது. பேய் பிடித்த பலரை, இயேசு பிரானிடம் அழைத்து வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அசுத்த ஆவிகளெல்லாம், ஓடி விட்டன. அங்கு வந்த நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்தினார்.

    இப்படியாக ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டதோடு, நம்முடைய துன்பங்களைச் சுமந்து கொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா சொன்னது, இவ்விதமாக நிறைவேறியது.

    புனித மத்தேயு எழுதிய இந்நற்செய்தியைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள். இந்நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? இயேசுபிரான், இம்மண்ணுலகில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபொழுது, பல புதுமைகளைச் செய்தார் என்பதை அறிய முடிகிறது. பல புதுமைகளுக்கு முன்பு, மக்களின் நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதையும் சில இடங் களில் கவனிக்கிறார்.



    இந்த நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை வெளிப்படுகிறது. அவரோ சகல அதிகாரங்களுக்கும் உட்பட்டவராக இருக்கிறார். இயேசு பிரானிடம் அவரே கூறும் வார்த்தைகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. அவர் இயேசு பிரானின் சக்தியை உணர்ந்தவராக அவரைச் சந்திக்கிறார். ‘நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் மகன் பூரண குணம் அடைவான்’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

    இந்த விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கண்ட இயேசு பிரான், தம்மைப் பின்தொடர்பவர்களைப் பார்த்து, ‘இஸ்ரவேல் மக்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கையைப் பார்த்ததில்லை’ என்கிறார்.

    வெறுமனே பின்தொடர்ந்தால் மட்டும் போதாது. உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் வேண்டும் என்பதைத் தெளிவுபடக் கூறுகிறார்.

    அதோடு தொடர்ந்து ‘பேதுரு’ என்ற ‘இராயப்பர்’ சீடரின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே படுக்கையில் உடல் நலமில்லாமல், படுத்துக் கிடக்கும் பேதுருவின் மாமியாரின் கையைத் தொட்டதும், காய்ச்சல் பறந்து போய் விடுகிறது. இவ்விதமாகத் தொடர்ந்து குணப்படுத்துகிறார் என்பதை நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது.

    நோய்களை மட்டும் குணப்படுத்தவில்லை. பேய் பிடித்தவர் களையும் ஒரே வார்த்தையால் குணப்படுத்தி, பேய் எனும் அந்த அசுத்த ஆவியை விரட்டி விடுகிறார். அந்த அசுத்த ஆவிகள் அவரைக் கண்டதும் ஓடி விடுகின்றன.

    ‘எசாயா’ என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் சொன்னது நிறைவேறியது என்கிறார். இப்படி ஒருவர் உலகிற்கு வருவார். சகல சக்திகளையும் கொண்டவராக உலவுவார் என்றெல்லாம் கூறி இருப்பது நிறைவேறுகிறது என்கிறார்.

    ஒரு சாதாரண மனிதனால் இவற்றையெல்லாம் நிச்சயமாகச் செய்து விட முடியாது.

    நோய்த்துன்பம் என்பது, உடல் நோய் மட்டுமல்ல, உள்ள நோயும் சிலரைச் சேர்ந்து வாட்டுகிறது. உள்ளத்தைப் பீடிக்கின்ற அந்த மன நோயையும் போக்க வேண்டும். உடலுக்கு ஏற்படும் நோய்களையும் நீக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை, அசைக்க முடியாத விசுவாசமும், நம்பிக்கையும் தான் என்பதை, ‘இவ்வுலகில் தான் வாழ்ந்த நாளில்’ பல நிகழ்வுகள் வழியாக நமக்கு இயேசுபிரான் எடுத்துரைக்கிறார். தம்மைப் பின்தொடர்ந்து வருபவர்கள், தூய்மை உள்ளவர்களாக, உண்மை உள்ளவர்களாக, அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றி இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

    இப்படியாகப் பல ஊர்களுக்கும் சென்று நம்பிக்கை வார்த்தைகளால் மக்களிடம் சிந்தனையை விதைக்கிறார்.

    இயேசுபிரான் இவ்வுலகில் புதுமைகளைச் செய்கின்ற பொழுது, ‘நம்பிக்கையுடையவர்கள், பெற்றுக்கொள்கிறார்கள்’ என்ற கருத்துதான் புலப்படுகிறது.

    இந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.

    - செம்பை சேவியர்.
    நாமும் ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம். மறப்போம். மன்னித்தல் ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வீரம். கடவுளின் தனிப்பட்ட வரம்.
    மன்னிக்கத் தெரிந்தவனின் உள்ளம் மாணிக்கக் கோவிலப்பா, இதை மறந்தவன் வாழ்வு தடந்தெரியாமல் மறைந்தே போகுமப்பா என்று பாரதிதாசன் முழங்கினார். நாம் பிறரின் குற்றங்களை மன்னிக்க வேண்டும். மன்னிக்க பழக வேண்டும். மன்னித்து மறக்கவேண்டும்.

    உங்களுள் ஒவ்வொருவரும் தன் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். (மத் 19:35) எத்தனை முறை மன்னிப்பது? ஒரே நாளில் ஒருவர் ஏழுமுறை உங்களுக்கு எதிராக பாவம் செய்து ஏழுமுறையும் உங்களிடம் திரும்பி வந்து நான் மனமாறி விட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

    ஏழுமுறை மட்டுமன்று எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன் (மத் 18:22) ஏசு சொன்னதைச் செய்தார். செய்ததைச் சொன்னார். மன்னிக்கச் சொன்னார். மன்னித்தார். பாலப்பருவத்தில் தன்னைக் கொலைச் செய்யத் தேடின ஏரோதுவை மன்னித்தார். வாலிபப்பருவத்தில் மனந்திருந்திய பலரை மன்னித்தார். பாடுகளின் நேரத்தில் தன்னை மும்முறை மறுதலித்த பேதுருவை மன்னித்தார்.



    தான் சிலுவையில் தொங்கியபோது தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையே மன்னித்தார். எனவே நாமும் ஏசுவின் அடிச்சுவட்டில் மன்னிப்போம். மறப்போம். மன்னித்தல் ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வீரம். கடவுளின் தனிப்பட்ட வரம். ஒருவரின் குற்றங்களை மட்டும் மல்ல, நம்முடைய பொருளையும் ஏசு மன்னிக்க வேண்டும் எனக்குறிப்பிடுகிறார்.

    கடன்பட்ட ஒருவன் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாத சூழலில் அவன் பட்ட கடனையும் (மத் 18-21:35) மன்னிக்க வேண்டும் என ஏசு அறிவுறுத்தினார். மன்னிக்கத் தெரியாமல் மன்னிக்க முடியாமல் சஞ்சலப்படுகிறோம். உறக்கத்தை இழக்கிறோம். கவலையில் மூழ்கித் தேய்கிறோம். இவை தேவைதானா? கடவுளுக்கு ஏற்றப்பிள்ளையாக மகிழ்ச்சியோடு வாழ பிறரை மன்னிப்போம், மறப்போம்.

    -அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு
    ‘கொடை’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் இயேசு தனது போதனைகளின் மூலமாக வைத்தார்.
    ‘நிறைய பணம் வேணும், என்னங்க செய்யலாம்?’ என யாரிடமாவது கேட்டுப்பாருங்கள். பல யோசனைகளைச் சொல்வார்கள். நல்ல சேமிப்புத் திட்டம், நீண்டகால வைப்புத் திட்டம், தங்க நகைத் திட்டம், ரியல் எஸ்டேட் இப்படி ஏதோ ஒரு சேமிப்பு திட்டம் குறித்து சொல்வார்கள்.

    ஆனால் கிறிஸ்தவமோ, ‘இருப்பதை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்போது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்’ என்கிறது.

    பிறருக்குக் கொடுப்பதை இயேசு அழுத்தம் திருத்தமாகப் போதித்தார். ‘ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார்’ என பகிர்தலை உற்சாகப்படுத்துகிறது விவிலியம்.

    நியாயத்தீர்ப்பு நாள் ஒன்று உண்டு. அன்று நல்லவர்கள் வலப்பக்கமும், தீயவர்கள் இடப்பக்கமும் நிற்பார்கள். இருவருமே இறைவனை நேசித்தவர்கள், மத செயல்களில் ஈடுபடுபவர்கள், வழிபாட்டில் குறை வைக்காதவர்கள். ஆனால் இரு பிரிவினருக்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.

    ‘வலப்பக்கம் நிற்பவர்கள் ஏழைகளுக்கு உதவியவர்கள். பசியாய் இருந்தவர்களுக்கு உணவளித்தவர்கள். தாகமாய் இருந்தவர்களுக்கு நீர் கொடுத்தவர்கள். ஆடையின்றி இருந்தவர்களை உடுத்தியவர்கள். நோயுற்று இருந்தவர்களைப் பார்க்க வந்தவர்கள். அன்னியனாய் இருந்தவர்களை வரவேற்றவர்கள். அப்படி அவர்கள் ஏழைகளுக்குச் செய்தது எல்லாமே இறைவனுக்குச் செய்ததாயிற்று’ என்கிறார் கடவுள்.

    ‘பிறருக்கு உதவுகின்ற மனித நேய சிந்தனை இல்லாதவர்கள் விண்ணகத்தில் நுழைய முடியாது’ என்பது தான் இயேசு போதித்த சிந்தனைகளில் முக்கியமான ஒன்று.

    அவருடைய வாழ்க்கையிலும் அவர் எப்போதுமே ஏழைகளின் பக்கமாகவே நின்றார். பிறந்த போது மாட்டுத் தொழுவம், வளர்கையில் தச்சுத் தொழிலாளியின் குடிசை, சாவின் போது சிலுவையில் குற்றவாளியாய் மரணம், மரித்தபின் ஏதோ ஒருவருடைய கல்லறையில் அடக்கம்... என ஏழைகளின் சாயலாகவே ஒவ்வொரு கட்டத்திலும் இருந்தவர் இயேசு.

    ‘பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை’ எனும் போதனையையே இயேசு முன்வைத்தார். ‘கொடை’ என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சில வழிகாட்டல்களையும் அவர் தனது போதனைகளின் மூலமாக வைத்தார்.

    1. முகமலர்ச்சியோடு கொடுக்கவேண்டும். பிறருக்குக் கொடுப்பது என்பது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம் என நினைத்து உதவ வேண்டும்.



    2. ரகசியமாய் உதவ வேண்டும். வலது கையால் நீங்கள் செய்யும் உதவி இடது கைக்குக் கூட தெரியக்கூடாது. மறைவாய் கொடுப்பதைக் காணும் இறைவன் பலன் தருவார்.

    3. நல்ல சிந்தனையோடு கொடுக்க வேண்டும். கட்டாயத்தினாலோ, தனது பெயருக்காகவோ, கடமைக்காகவோ, பிறருடைய வசைக்குத் தப்பியோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கொடுப்பது தவறு. சக மனித கரிசனை, அன்பு இதன் அடிப்படையில் மட்டுமே உதவ வேண்டும்.

    4. பிறருக்குக் கொடுப்பது என்பது விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைப்பது போல. அது பூச்சியாலும் துருவாலும் சேதமடையாது என்கிறார் இயேசு. அந்த மனநிலையோடு கொடுக்க வேண்டும்.

    5. பிறருக்குக் கொடுப்பது என்பது இறைவனைப் புகழ்வதைப் போன்றது என்கிறது பைபிள். எவ்வளவு கொடுத்தோம் என்பதை அளவிட வேண்டுமெனில், மீதம் நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதை வைத்தே அளவிடவேண்டும்.

    6. குற்ற உணர்விலிருந்து விடுபட பிறருதவிப் பணிகளை செய்யக் கூடாது. இயேசுவின் மீதான அன்பும், சக மனிதன் மீதான அன்பும் மட்டுமே ஈகையை தூண்டவேண்டும். உள்ளதிலிருந்து கொடுப்பதை விட, உள் ளதையெல்லாம் கொடுப்பதும், உள்ளத்தையே கொடுப்பதும் உயர்வானவை.

    7. கடவுள் திரும்பத் தருவார் எனும் எண்ணத்தில் நாம் உதவக் கூடாது. கடவுள் இதயத்தைப் பார்க்கிறவர், நமது உண்மையான தேவைக்கு ஏற்ப அவர் நமக்கு அளிப்பார்.

    8. நம்மிடம் இருக்கும் மண்ணுலக செல்வங்களை நாம் பிறருக்கு அளிக்கும்போது, இறைவன் விண்ணுலக செல்வங்களை நமக்கு அளிப்பார்.

    9. எவ்வளவு கொடுத்தோம் என்பதல்ல, எந்த மன நிலையில் கொடுத்தோம் என்பதே முக்கியம். அளவைப் பார்த்து மதிப்பிடுவது மனித இயல்பு, அகத்தைப் பார்த்து மதிப்பிடுவது இறை இயல்பு.

    10. கொடுங்கள். மனிதநேயம் என்பது பெறுதலில் அல்ல, கொடுத்தலில் தான் நிறைவு பெறும். கொடுக்கக் கொடுக்க வளர்வது அன்பு மட்டும் தான்.

    ‘கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்’. (நீதிமொழிகள் 22:9)

    சேவியர், சென்னை.
    ×