search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  நற்செய்தி சிந்தனை: இயேசுபிரான் மீது நம்பிக்கை
  X

  நற்செய்தி சிந்தனை: இயேசுபிரான் மீது நம்பிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.
  இயேசுபிரான் மக்கள் மத்தியில் தனது போதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ‘கப்பர்நாகும்’ என்ற ஊருக்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் இயேசுபிரானிடம், ஓர் உதவியை நாடி வந்தார்.

  நூற்றுவர் தலைவர் இயேசுபிரானைப் பார்த்து, ‘ஐயா! என் மகன் முடக்கு வாதத்தால், மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்’ என்று கூறினார்.

  இயேசு பிரான் அவரைப் பார்த்து, ‘நான் வந்து அவனைக் குணமாக்குவேன்’ என்று கூறினார்.

  அதற்கு அந்த நூற்றுவர் தலைவர், அவரைப் பார்த்து, ‘ஐயா! நீர் என் வீட்டிற்குள் வர நான் தகுதியில்லாதவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும். என் மகன் பூரணமாக நலம் அடைந்து விடுவான்’ என்று கூறினார்.

  அவர் மேலும், “ஐயா! நான் அதிகாரத்துக்கு உட்பட்டவனாக இருக்கிறேன். என் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களான ‘படை வீரர்கள்’ எனக்கு இருக்கின்றனர். நான் அவர்களில் ஒருவரைப் பார்த்து, ‘செல்’ என்றால் சென்று விடுகிறார். வேறு ஒருவரை நோக்கி ‘வா’ என்றால் வந்து விடுகிறார். என் பணியாளரைப் பார்த்து, ‘இதைச் செய்’ என்றால் செய்து விடுகிறார்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த இயேசுபிரான் ஆச்சரியப்பட்டார்.

  பிறகு, தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி இவ்வாறு உரைத்தார்:

  “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இஸ்ரவேலர் யாரிடமும் இப்படிப்பட்ட நம்பிக்கையை நான் பார்த்ததில்லை. கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பலபேர் வந்து, அபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன், விண்ணரசில் பந்தியில் அமருவார்கள். அரசுக்கு உரியவராக இருப்பவர்களோ, இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும், அங்கலாய்ப்பும் இருக்கும்” என்று கூறினார்.

  பிறகு இயேசுபிரான், நூற்றுவர் தலைவரைப் பார்த்து, ‘நீர் போகலாம். நீர் நம்பியபடியே நடக்கும்’ என்று கூறினார். அந்த நிமிடமே அவர் மகன் குணம் பெற்றான்.

  இயேசு பெருமான், பேதுருவின் வீட்டிற்குள் சென்றார். பேதுருவின் மாமியார் காய்ச்சலால் படுத்திருந்ததைக் கண்ணுற்றார். இயேசுபிரான், அவருடைய கையைத் தொட்டார். உடனே காய்ச்சல் அவரை விட்டு அகன்று போய் விட்டது. அவரும் உடனே எழுந்தார். இயேசுபிரானுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார். மாலை நேரம் ஆனது. பேய் பிடித்த பலரை, இயேசு பிரானிடம் அழைத்து வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொன்னதும், அசுத்த ஆவிகளெல்லாம், ஓடி விட்டன. அங்கு வந்த நோயாளிகள் அனைவரையும் குணப்படுத்தினார்.

  இப்படியாக ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டதோடு, நம்முடைய துன்பங்களைச் சுமந்து கொண்டார்’ என்று இறைவாக்கினர் எசாயா சொன்னது, இவ்விதமாக நிறைவேறியது.

  புனித மத்தேயு எழுதிய இந்நற்செய்தியைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தியுங்கள். இந்நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன? இயேசுபிரான், இம்மண்ணுலகில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபொழுது, பல புதுமைகளைச் செய்தார் என்பதை அறிய முடிகிறது. பல புதுமைகளுக்கு முன்பு, மக்களின் நம்பிக்கை எப்படி இருக்கிறது என்பதையும் சில இடங் களில் கவனிக்கிறார்.  இந்த நற்செய்தியில் நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை வெளிப்படுகிறது. அவரோ சகல அதிகாரங்களுக்கும் உட்பட்டவராக இருக்கிறார். இயேசு பிரானிடம் அவரே கூறும் வார்த்தைகளில் இருந்து நம்மால் அறிய முடிகிறது. அவர் இயேசு பிரானின் சக்தியை உணர்ந்தவராக அவரைச் சந்திக்கிறார். ‘நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் மகன் பூரண குணம் அடைவான்’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

  இந்த விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கண்ட இயேசு பிரான், தம்மைப் பின்தொடர்பவர்களைப் பார்த்து, ‘இஸ்ரவேல் மக்களிடம் இப்படிப்பட்ட நம்பிக்கையைப் பார்த்ததில்லை’ என்கிறார்.

  வெறுமனே பின்தொடர்ந்தால் மட்டும் போதாது. உறுதியான விசுவாசமும், நம்பிக்கையும் வேண்டும் என்பதைத் தெளிவுபடக் கூறுகிறார்.

  அதோடு தொடர்ந்து ‘பேதுரு’ என்ற ‘இராயப்பர்’ சீடரின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே படுக்கையில் உடல் நலமில்லாமல், படுத்துக் கிடக்கும் பேதுருவின் மாமியாரின் கையைத் தொட்டதும், காய்ச்சல் பறந்து போய் விடுகிறது. இவ்விதமாகத் தொடர்ந்து குணப்படுத்துகிறார் என்பதை நற்செய்தி வாயிலாக அறிய முடிகிறது.

  நோய்களை மட்டும் குணப்படுத்தவில்லை. பேய் பிடித்தவர் களையும் ஒரே வார்த்தையால் குணப்படுத்தி, பேய் எனும் அந்த அசுத்த ஆவியை விரட்டி விடுகிறார். அந்த அசுத்த ஆவிகள் அவரைக் கண்டதும் ஓடி விடுகின்றன.

  ‘எசாயா’ என்னும் பெயர் கொண்ட இறைவாக்கினர் சொன்னது நிறைவேறியது என்கிறார். இப்படி ஒருவர் உலகிற்கு வருவார். சகல சக்திகளையும் கொண்டவராக உலவுவார் என்றெல்லாம் கூறி இருப்பது நிறைவேறுகிறது என்கிறார்.

  ஒரு சாதாரண மனிதனால் இவற்றையெல்லாம் நிச்சயமாகச் செய்து விட முடியாது.

  நோய்த்துன்பம் என்பது, உடல் நோய் மட்டுமல்ல, உள்ள நோயும் சிலரைச் சேர்ந்து வாட்டுகிறது. உள்ளத்தைப் பீடிக்கின்ற அந்த மன நோயையும் போக்க வேண்டும். உடலுக்கு ஏற்படும் நோய்களையும் நீக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அடிப்படைத் தேவை, அசைக்க முடியாத விசுவாசமும், நம்பிக்கையும் தான் என்பதை, ‘இவ்வுலகில் தான் வாழ்ந்த நாளில்’ பல நிகழ்வுகள் வழியாக நமக்கு இயேசுபிரான் எடுத்துரைக்கிறார். தம்மைப் பின்தொடர்ந்து வருபவர்கள், தூய்மை உள்ளவர்களாக, உண்மை உள்ளவர்களாக, அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றி இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார்.

  இப்படியாகப் பல ஊர்களுக்கும் சென்று நம்பிக்கை வார்த்தைகளால் மக்களிடம் சிந்தனையை விதைக்கிறார்.

  இயேசுபிரான் இவ்வுலகில் புதுமைகளைச் செய்கின்ற பொழுது, ‘நம்பிக்கையுடையவர்கள், பெற்றுக்கொள்கிறார்கள்’ என்ற கருத்துதான் புலப்படுகிறது.

  இந்த நற்செய்தியைப் படிக்கும் ஒவ்வொருவரும், இயேசு பிரானின் போதனையை ஏற்று நல்வழியில் நடக்க முயற்சி எடுப்போம்.

  - செம்பை சேவியர்.
  Next Story
  ×