என் மலர்
சினிமா செய்திகள்

விஜய், சிவகார்த்திகேயனை முந்துவாரா 'வா வாத்தியார்'?
- தணிக்கை சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்தை பட தயாரிப்பு நிறுவனம் நாடியது.
- உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’ வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் ஒரு திரைப்படத்தை எடுத்து வெளியிட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்களுக்கு படாதபாடு ஆகி விடுகிறது. இதிலும் விஜய் படம் என்று சொன்னாலே சில ஆண்டுகளாக வெளியாவதற்கு முன்னமே பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், 'தலைவா', 'மெர்சல்' உள்ளிட்ட படங்கள் வரிசையில் இன்று 'ஜன நாயகன்' படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தணிக்கை சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்தை பட தயாரிப்பு நிறுவனம் நாடியது. இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் நாளை காலை தீர்ப்பு வெளியிடுவதாக கூறியது. இதனால் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
'ஜன நாயகன்' படத்திற்கு ஏற்பட்ட சிக்கலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்திற்கும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலை குறித்து இந்த படங்கள் வெளியாக இருந்த நிலையில், மற்ற திரைப்படங்கள் வேறு தேதிகளுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 'வா வாத்தியார்' படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் யாருடைய ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






