என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து, நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அடுத்து சி.வி.குமார் தயாரித்து இயக்கிய மாயவன் படத்தில் நடித்திருந்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர், அந்தால ராக்சசி என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழ், இந்தி மொழிகளிலும் நடித்து வருகிறார்.

    ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் லாவண்யா திரிபாதி, ரூ.30 லட்சம் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி உள்ளனர்.

    லாவண்யா திரிபாதி

    சோதனையில் கைப்பற்றப்பட்டப் பொருட்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. வீட்டில் சோதனை நடந்த போது, நடிகை லாவண்யா படப்பிடிப்பில் இருந்தார். அதை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாவண்யா வீட்டில் மட்டுமல்லாமல், சில பிரபலங்களின் வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இந்த சோதனை நடந்துள்ளது.
    மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி உடல் தோற்றத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
    ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் போன்ற படங்களின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 

    முன்னணி நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சமூகத்திற்கு தேவையான கருத்துகளை சில ஹீரோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் தன்னுடைய சமூக பார்வையை தான் நடிக்கும் படங்கள் மூலம் சமுதாயத்தில் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் திரைப்படங்களின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாக ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

    ஜெயம் ரவி

    அதன் எதிரொலியாக தனி ஒருவன், பூலோகம், டிக் டிக் டிக் போன்ற சமூக கருத்துக்கள் கொண்ட படங்களை கொடுத்துள்ள ஜெயம் ரவி, தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சில மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து தன்னை தயார் படுத்திக்கொண்டார். தற்போது தாய்லாந்தில் இவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் லக்‌ஷ்மண் இயக்கும் பூமி, அகமது இயக்கும் ஜன கன மன போன்ற படங்களிலும் ஜெயம் ரவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
    மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார்.
    66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்றுள்ளார். தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.

    விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். இந்த ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றுக் கொண்டார். மகாநடி படத்தில் நடித்ததற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 

    சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழியில் எடுக்கப்பட்ட ‘ஹெல்லாரோ’ தேர்வு செய்யப்பட்டது. ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ படத்தில் நடித்த விக்கி கெளசால், ‘அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோர் சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை இணைந்து பெற்றுக்கொண்டனர். ‘உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக்‘ திரைப்படத்தின் இயக்குநர் ஆதித்யதர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    கீர்த்தி சுரேஷ்

    66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார். 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இதில் உத்தராகண்ட் மாநிலம் விருதை தட்டிச் சென்றது. 

    முழு விருது பட்டியல்: சிறந்த கல்வித் திரைப்படம்: சரளா விரளா, சிறந்த ஆக்‌‌ஷன் படம்: கேஜிஎப் (கன்னடம்), சிறந்த நடன அமைப்பு: குமார்(பத்மாவத்), பியூச்சர் பிலிம் அல்லாத சிறந்த படம்: விபா பக்‌ஷியின் சன் ரைஸ் மற்றும் தி சீக்ரெட் லைப் ஆப் பிராக்ஸ், அஜய் - விஜய் பேடி, சிறந்த இயக்குநர்: யுரி ஆதித்ய தார், சிறந்த திரைப்படம்: ஹெல்லாரோ, குஜராத்தி திரைப்படம், இயக்கம்: அபிஷேக் ஷா, சிறந்த நடிகர்: அந்தாதூன் படத்தின் ஆயுஷ்மான் குராணா, யுரியின் விக்கி குஷால்,

    சிறந்த நடிகை: மகாநடி கீர்த்தி சுரேஷ், சிறந்த துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே படம் கும்பக், சிறந்த துணை நடிகை: பாத்ஹை ஹோவின் சுரேகா சிக்ரி, சிறந்த ஆக்‌‌ஷன் பட இயக்கம்: கேஜிஎப் அத்தியாயம் 1, தேசிய ஒருமைப்பாட்டுக்கான சிறந்த படம்: ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்), சிறந்த வெகுஜனப் படம்: பத்ஹாய் ஹோ, சிறந்த அறிமுக இயக்குநர் படம்: நான், சிறந்த சமூக திரைப்படம்: பத்மன், சிறந்த ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம்), சிறந்த ஸ்பெ‌ஷல் எபெக்ட்ஸ்: கேஜிஎப், சுற்றுச்சூழல் காப்பு பற்றிய சிறந்த திரைப்படம்: பானி, சிறந்த மாநில மொழிப்படங்கள்: தமிழ்: பாரம், ராஜஸ்தானி: டர்ட்டில், பஞ்செங்கா: இன் த லேண்ட் ஆஃப் பாய்சனஸ் உமன், மராத்தி: போங்கா, இந்தி: அந்தாதூன், தெலுங்கு: மகாநடி, அசாமிய மொழி: புல்புல் கேன் சிங், பஞ்சாபி: அர்ஜேதா. சிறந்த பாடல்: நதிச்சிரமி (கன்னடம்), சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்)

    சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): யுரி, சிறந்த ஒலியமைப்பு: யுரி, சிறந்த பின்னணிப் பாடகி: மயவி மனவே கன்னடப் படத்துக்காக பிந்து, சிறந்தப் பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங், படம்: பிந்த்தே தில், சிறந்த மேக்அப் கலைஞர்: ஏவ், சிறந்த தயாரிப்பு: குமார சம்பவம் (மலையாளம்), சிறந்த ஆடை வடிவமைப்பு: மஹாநடி(தெலுங்கு), சிறந்த அசல் திரைக்கதை: சி லா சவ், சிறந்த தழுவல் திரைக்கதை: அந்தாதூன், சிறந்த வசனம்: தாரிக், சிறந்த குழந்தைகள் படம்: சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட், சிறந்த குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்), சமீப் சிங் (பஞ்சாபி), தல்ஹா அர்‌ஷத் ரோஹி (உருது), ஸ்ரீனிவாஸ் போகலே (மராத்தி), சிறந்த சினிமாட்டோகிராபி: ஒலு, மலையாளம், எம்.ஜே.ராதாகிருஷ்ணன், சிறப்பு நடுவர் விருதுகள்: ஸ்ருதி ஹரிஹரன், ஜோஜு ஜார்ஜ் ஜோசப், சுதானி ஃப்ரம் நைஜீரியாவுக்காக சாவித்ரி, சந்த்ரசூட் ராய்.
    டெல்லியில் நடைபெற்று வரும் தேசிய விருது விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.
    2018-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் வழங்கப்பட்டு வருகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இதில், சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக இந்தி திரையுலக ஜாம்பவான் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அமிதாப்பச்சனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் இன்றைய விருது விழாவில் பங்கேற்க முடியாது என அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘கடுமையான காய்ச்சல் காரணமாக பயணம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. எனவே இன்று டெல்லியில் நடைபெறும் தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்க முடியாது. 

    அமிதாப்பச்சன்

    இது துரதிர்ஷ்டவசமானது. எனது வருத்தங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப்பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்க தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.
    நடிகர் விஷ்ணு விஷால், ஜெகஜால கில்லாடி, எஃப்ஐஆர் படங்களை தொடர்ந்து தான் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
    தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. இதையடுத்து அவர் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் ஹிட் ஆனது. இருப்பினும் இந்தாண்டு அவர் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது ஜெகஜால கில்லாடி, எஃப்ஐஆர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

    விஷ்ணு விஷாலின் டுவிட்டர் பதிவு

    இப்படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இது விளையாட்டு சம்பந்தப்பட்ட குடும்ப திரைப்படம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் படத்தின் 2-ம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணியில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விஷால் ஜோடியாக ஆஷியா நடிக்கிறார். மேலும் நாசர், ரகுமான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கின்றனர்.

    துப்பறிவாளன் 2 படக்குழு

    இளையராஜா இசையமைக்க்கும் இப்படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, அடுத்த கட்டமாக இந்தியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை விஷால் பிலிம் பேக்ட்ரி சார்பில் விஷால் தயாரித்து வருகிறார்.
    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில், டி. ராஜேந்தர் அணி வெற்றி பெற்றுள்ளது.
    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் அண்ணா சாலை மீரான் சாகிப் தெருவில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 532 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 16 கமிட்டி உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு, நடிகர் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும், விநியோகஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன.

    தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா முன்னிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. நடிகர்கள் சரத்குமார், டி.ராஜேந்தர், ராதாரவி, நடிகைகள் ராதிகா, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குனர்கள் தங்கர் பச்சான், எஸ்.ஏ.சந்திரசேகர், கே.டி.குஞ்சுமோன் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பிரபலங்கள்

    இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட டி.மன்னன், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட பாபு ராவ், துணை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பங்களா சீனிவாசலு ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
    பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு காலமானார். அவருக்கு வயது 72.
    1947-ம் ஆண்டு செங்கல்பட்டு அருகிலுள்ள மதுராந்தகத்தில் பிறந்த ராமச்சந்திர பாபு, சென்னை லயோலா கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, புனே திரைப்பட கல்லூரியில் பயின்றார். இவர் ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில் கழுதை உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    தமிழில் அலாவுதீனும் அற்புத விளக்கும், தேவதை, சாவித்ரி, மணிரத்னத்தின் பகல் நிலவு, பாடும் வானம்பாடி உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    ராமச்சந்திர பாபு

    இந்நிலையில், ராமச்சந்திர பாபு கோழிக்கோடு அருகே புதிய படத்திற்கான இடங்களை பார்க்க சென்றிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ராமச்சந்திர பாபு, பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    2008-ல் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். 

    காஜல் அகர்வால்

    இந்நிலையில், குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இன்று அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. விரைவில் இவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
    சச்சின் ரவி இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள ”அவனே ஸ்ரீமன் நாராயணா” படத்தின் முன்னோட்டம்.
    ரக்‌ஷித் ஷெட்டி கதை எழுதி, நாயகனாக நடித்துள்ள படம் ”அவனே ஸ்ரீமன் நாராயணா”. அறிமுக இயக்குனர் சச்சின் ரவி இயக்கி, எடிட்டிங் செய்துள்ளார். கதாநாயகியாக ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், நாகர்ஜுன் ஷர்மா, அபிலாஷ், அனிருத் காட்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    ரக்‌ஷித் ஷெட்டி

    புஷ்கர் பிலிம்ஸ் சார்பில் எச்.கே.பிரகாஷ் மற்றும் புஷ்கரா மல்லிகார்ஜுனா இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சரண் ராஜ் மற்றும் பி அஜனேஷ் லோகநாத் ஆகியோர் இசையமைத்துள்ளனர். கன்னடத்தில் உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
    போர்ப்ஸ் பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட பிரபலங்கள் பட்டியல் போலியானது என கங்கனாவின் சகோதரி ரங்கோலி கடுமையாக சாடியுள்ளார்.
    போர்ப்ஸ் பத்திரிகை சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், தனுஷ், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். ரஜினிகாந்த் 13வது இடத்திலும், விஜய் 47, அஜித் 52, ஷங்கர் 55, கமல்ஹாசன் 56, தனுஷ் 64வது இடத்திலும் இருந்தனர். 

    அந்தப் பட்டியலில் ஹிந்திப் பட நடிகையான கங்கனா 17.5 கோடி ரூபாய் வருமானத்துடன் 70வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்தப் பட்டியலுக்கு கங்கனா ரனாவத்தின் அக்கா ரங்கோலி கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். ”இந்த ஆண்டில் தன்னுடைய வருமானம் எவ்வளவு என்பது கங்கனாவுக்கே தெரியாது. அவருடைய அக்கவுண்ட் குழுவினருக்கும், எனக்கு மட்டும்தான் தெரியும். அவை மிகவும் ரகசியமானவை. அதைப் பற்றிய விவரங்களை கங்கனாவுக்குத் தெரிவித்து விடுவோம். 

    கங்கனா ரனாவத், ரங்கோலி,

    போர்ப்ஸ் இந்தியா இந்த விவரங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இடம் பிடித்த தொகையை விட கங்கனா வருமான வரி கட்டியது அதிகம். இது ஒரு போலியான பட்டியல். எதன் அடிப்படையில் இதுதான் வருமானம் என்று நீங்கள் பட்டியலிட்டதைப் பற்றி பதில் சொல்லுங்கள்,” எனக் கேட்டிருக்கிறார்.

    அவர் சொல்வதைப் பார்த்தால் 13வது இடத்தில் ரஜினிகாந்த் மற்ற இடங்களில் உள்ளவர்களின் பட்டியல் அனைத்தும் தவறானவையாகவும் இருக்கலாம். ஒருவருடைய வருமானம் எவ்வளவு என்பது வருமான வரித்துறைக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் போலி கணக்கு காட்டும் பிரபலங்கள் நிறைய பேர் இருப்பார்கள்?.
    மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
    தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார். அதில், திரையுலக பிரபலங்களை அவர் விமர்சித்திருக்கிறார். 

    அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை கண்ணாடியில் தங்களை பார்த்துக் கொள்வர். ஏதாவது கேட்டால், எங்களுக்கு அனைத்தும் கிடைக்கிறது; நாங்கள் எதற்காக நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என்பர். வேறு சிலர் இருக்கின்றனர். அவர்கள், நாங்களே கலைஞர்கள். நாங்கள் ஏன் நாட்டை பற்றி கவலைப்பட வேண்டும் என கேட்பர். 

    அவர்களையெல்லாம் அழைத்து வந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கருத்துச் சொல்ல வைக்க வேண்டும். அதனால் தான் அவர்களை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களின் நடவடிக்கையை மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு விட்டால் போதும் என நினைக்கின்றனர். அது மட்டும்தான் அவர்களுடைய வேலையா? அவர்கள் மக்களால் உருவாக்கப்பட்டவர்கள். 

    கங்கனா ரனாவத்

    அப்படி இருக்கும் போது, மக்களுக்காக குரல் கொடுக்க பயந்தால், அவர்கள் இந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள் என்பதை, மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பது, இன்ஸ்டாகிராம் போஸ்ட் போடவும், போதை பார்ட்டிகள் நடத்தவுமா? திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள். அவர்கள் கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள். 

    அவர்கள் கோழைகளாக இருப்பதால் தான் சினிமா பின்னணி இல்லாதவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்துகிறார்கள்; பெண்களை அவமதிக்கிறார்கள். அவர்களை தலைவர்கள் போன்று பார்ப்பதை நிறுத்த வேண்டும். நம் நிஜ முன் மாதிரி யார் என்கிற தெளிவு, நமக்கு இருக்க வேண்டும்.இவ்வாறு நடிகை கங்கனா கூறியிருக்கிறார்.
    ×