என் மலர்
சினிமா

சர்கார் பிரச்சனை - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தொடுத்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்துள்ளனர். #ARMurugadoss #Sarkar
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாக கூறி ஆளும் அதிமுக-வை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டன.
அரசை தாக்குவதுபோல் இருக்கும் காட்சிகள் மற்றும் கருத்துகளை நீக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடந்ததுடன், சர்கார் பட பேனர்களும் கிழிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழு அறிவித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையே படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய நேற்று இரவு போலீஸார் அவரது வீட்டின் கதவை தட்டியதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸை நவம்பர் 27-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தணிக்கை சான்றிதழ் கிடைத்தபிறகு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள், சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ARMurugadoss #Sarkar #Vijay
Next Story






