என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கத்தில் யோகேஷ், அனிகா விக்ரமன் நடிப்பில் உருவாகும் ‘க்’ படத்தின் முன்னோட்டம்.
    தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் படம் ‘க்’. அறிமுக இயக்குனர் பாபு தமிழ் இயக்கும் இப்படத்தில் அனிகா விக்ரமன் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைகதை-வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    யோகேஷ், அனிகா
    யோகேஷ், அனிகா

    உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குனர் பாபு தமிழ். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். 

    அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவிருக்கிறது. ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராகுல் படத்தொகுப்பை கவனிக்கிறார். அவினாஷ் கவாஸ்கர் இசை அமைக்க, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக் வசமும், கலை கல்லை தேவா வசமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, ரீமேக் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
    கன்னடத்தில் வெளியான ‘கிரிக்பார்ட்டி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு, தமிழ், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தமிழில் நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்ற படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனிடையே நடிகை ராஷ்மிகா ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் பரவின. அதற்கான பணிகளும் நடந்து வருவதாக கூறப்பட்டன. 

    ராஷ்மிகா
    ராஷ்மிகா

    இந்த நிலையில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ரீமேக் படம் என்பதால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்திலும், இந்தியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக ‘மிஷன் மஜ்னு’ படத்திலும்,  அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். 
    தடுப்பூசி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
    நடிகை நயன்தாரா, கடந்த செவ்வாய்க்கிழமை தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின. 

    அதில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்டபோது எடுத்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக நடிகை நயன்தாராவை கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டு வந்தனர்.

    நயன்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட புதிய புகைப்படம்
    நயன்தாரா தரப்பில் வெளியிடப்பட்ட புதிய புகைப்படம்

    இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தரப்பில் புதிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது மற்றொரு கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படத்தில், நர்ஸ் கையில் ஊசி இருப்பது தெரிகிறது. இதன்மூலம் நயன்தாராவின் தடுப்பூசி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
    மாடல் அழகியை தாக்கிய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சஞ்சனா கல்ராணி. இவர் பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். நடிகை சஞ்சனா கல்ராணி, சமீபத்தில் போதை மருந்து வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டு, பின்னர் பல மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்தார். 

    இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மாடல் அழகி வந்தனா ஜெயின் என்பவரை தாக்கியதாக தற்போது, நடிகை சஞ்சனா கல்ராணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாடல் அழகி வந்தனா ஜெயின் மீது பீர் பாட்டிலை வீசி உடல்ரீதியாக தாக்கி, சஞ்சனா கல்ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

    சஞ்சனா கல்ராணி
    சஞ்சனா கல்ராணி

    சஞ்சனா கல்ராணி தாக்கியதில் வந்தனா ஜெயினுக்கு பார்வை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, வந்தனா சார்பில் கப்பன் பார்க் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாக வந்தனா ஜெயின் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    வந்தனாவின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், சஞ்சனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கப்பன் பார்க் போலீசாருக்கு உத்தரவிட்டது, இதை தொர்ந்து கப்பன் பார்க் போலீசார், நடிகை சஞ்சனா மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. 

    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ஜகமே தந்திரம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ‘ரகிடா ரகிடா’ மற்றும் ‘புஜ்ஜி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மே 22-ந் தேதி ‘நேத்து’ என்கிற பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
    இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. 

    மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இறுதிக்கட்டத்தில் உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
    ஆர்.ஆர்.ஆர் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

    இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான இன்று, ஆர்.ஆர்.ஆர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. கையில் ஈட்டியுடன் மாஸான கெட்டப்பில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய காஜல் அகர்வால், சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
    தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான காஜல் அகர்வால், பின்னர் அஜித், விஜய், கமல், தனுஷ் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த ஆண்டு தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கரம்பிடித்த அவர், திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார்.

    நடிகை காஜல் அகர்வால் கைவசம் பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா, கமல்ஹாசனின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா, கோஷ்டி போன்ற படங்கள் உள்ளன. 

    கணவருடன் காஜல் அகர்வால்
    கணவருடன் காஜல் அகர்வால்

    இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சினிமாவை விட்டு விலகுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் எவ்வளவு காலம் சினிமாவில் நடிப்பேன் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் சினிமாவில் இருந்து விலகும்படி சொன்னால் நடிப்பதை விட்டு விடுவேன். தற்போது எனது கணவரும், குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன்” என்றார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம்ரவி, மீண்டும் ‘ஜன கன மன’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. 

    ‘ஜன கன மன’ படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

    ஜெயம் ரவி
    ஜெயம் ரவி

    ‘ஜன கன மன’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் இந்தியாவிலேயே நடத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் இப்படத்தை ‘ஜன கன மன’ படத்திற்கு முன்னரே வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார்.
    கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது.

    ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

    ராம்சரண், ஷங்கர்
    ராம்சரண், ஷங்கர்

    ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது.

    இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது படத்தை முடித்த பிறகே ஷங்கர் அடுத்த படத்தை இயக்குவதாக உறுதிமொழி அளித்தால்தான் படத்தில் நடிப்பேன் என்று ராம்சரண் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
    நடிகை ஒருவர் டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
    கோரதாண்டவம் ஆடிய டவ்-தே புயல், குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் காரணமாக கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன. டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இந்த புயலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

    தீபிகா சிங்
    தீபிகா சிங்

    இந்நிலையில், இந்தி நடிகை நடிகை தீபிகா சிங், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். 
    மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கில் விதிமுறைகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
    நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கும் மலையாள ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிரமாண்டமான அரங்கு அமைத்து நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக வருகிற 31-ந் தேதி வரை தொலைக்காட்சி மற்றும் சினிமா என எந்தவித படப்பிடிப்பும் நடக்காது என பெப்சி தொழிற்சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்து இருந்தார். 

    ஆனால் 6 பேருக்கு கொரோனா உறுதியான பிறகும், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக வந்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மலையாள ‘பிக்பாஸ்’ படப்பிடிப்பு நடைபெறும் அரங்கிற்கு சென்று நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகத்திடம் விசாரணை செய்தனர்.

    பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நடிகர்- நடிகைகள்
    பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் நடிகர்- நடிகைகள்

    இதையடுத்து விதிமுறைகளை பின்பற்றாத மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கிற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மாவட்ட கலெக்டருடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் மலையாள ‘பிக்பாஸ்’ அரங்கத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து ‘பிக்பாஸ்’ அரங்கத்தின் 3 நுழைவு வாயிலுக்கும் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.

    இதையடுத்து ‘பிக்பாஸ்’ அரங்கத்திற்குள் இருந்த 7 நடிகர்கள், நடிகைகள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    ×