என் மலர்
சினிமா செய்திகள்
ஹரிஷ் கல்யான் நடிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படத்தின் விமர்சனம்.
இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ் கல்யாண், ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புகிறார். முதலீடு தேவை என்பதால் திருமணம் செய்துக் கொண்டு, வரதட்சணையை வைத்து செட்டிலாகி விடலாம் என்று நாயகி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க செல்கிறார்.
அப்போது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் இருவரும் சிக்கிக் கொள்கின்றனர். அந்த அறையின் கதவை திறக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் இருவரும் அங்கேயே அமர்ந்து தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக பேசிக்கொள்கின்றனர். அதில் இருவருக்குமே தங்களை பற்றியும் தங்கள் முன்னாள் காதல் முறிந்தது, தங்களின் வாழ்க்கையின் லட்சியம் என்ன போன்றவற்றை பரிமாறிக் கொள்கின்றனர்.

ஒரு கட்டத்தில் தவறுதலாக வீடு மாறி பிரியா பவானி சங்கரை பெண் பார்க்க வந்த விஷயம் ஹரிஷ் கல்யாணுக்கு தெரிய வருகிறது. இறுதியில், அவர் பார்க்க வேண்டிய பெண்ணை தேடி சென்றாரா? பிரியா பவானி சங்கரை திருமணம் செய்தாரா? ஓட்டல் வைத்து செட்டிலாகும் கனவு நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் நேர்த்தியான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகி இருக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் அஸ்வின். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பெல்லி சுப்பலு என்ற படத்தை தமிழ் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுந்தர். இந்த காலத்திலும் ஜோதிடம் சாஸ்திரம் போன்றவற்றை நம்பி பிள்ளைகளின் வாழ்க்கையை கெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ். மேலும், வரதட்சணை குறித்தும் நல்ல கருத்தை சொல்லி இருக்கிறார்.
விஷால் சந்திரசேகர் இசையும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். திரைக்கதை ஓட்டத்திற்கு இவர்களின் பங்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஓ மணப்பெண்ணே’ அழகான பெண்.
முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

விஷ்ணு விஷால்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் எனிமி படத்தை வெளியிட விடாமல் தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் வேதனையுடன் பதிவு செய்து இருக்கிறார்.
விஷால், ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தீபாவளிக்கு மற்றுமொரு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம் வர இருப்பதால் அனைவருமே அந்தப் படத்தைத்தான் திரையிட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகத் தகவல். அது உண்மையாக இருந்தால் என் சங்கத்திடம் ஆதரவு கேட்கிறேன். சினிமாவுக்கு இது ஆரோக்கியமான விஷயம் இல்லை.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 900 தியேட்டர்களிலும் ஒரே படத்தையே திரையிட்டால் எப்படி?. எல்லா தியேட்டர்களிலும் ஒரு படத்தை வெளியிட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் வசூல் வர வாய்ப்பில்லை. அப்படியொரு சாதனை இதுவரை நடந்ததும் கிடையாது. என் படம் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் கேட்பது வெறும் 250 தியேட்டர்கள் தான். அது கிடைத்தாலே போதும் எங்களுக்கு வரவேண்டிய ஷேர் சிறியது தான் என்றாலும் எங்களுக்கு அது கிடைத்துவிடும்.

தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. நல்ல விலைக்கு ஓடிடி நிறுவனங்கள் ஆபர் தந்தும் நாங்கள் தான் தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதனால் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்தும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்து ரிலீஸில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். படம் தீபாவளிக்கு வெளிவராமல் போனால் நீதி கிடைக்க என்ன போராட்டம் வேண்டுமானாலும் செய்ய தயார்.
இவ்வாறு அவர் அதில் பேசியிருக்கிறார்.
கவின் ஹீரோவாக நடிக்கும் ‘ஊர் குருவி’ படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லிப்ட் திரைப்படம், அண்மையில் ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ஊர் குருவி’ எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார்.

காவ்யா அறிவுமணி, கவின்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவர், இப்படத்தில் நடிப்பதற்காக அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... நயன்தாரா படத்தில் கவின்?
சுரேஷ் குமார் இயக்கத்தில் ஜான் விஜய், அஞ்சலி நாயர், சித்தார்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அகடு’ படத்தின் விமர்சனம்.
சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானலுக்கு ‘ஜாலி டூர்’ செல்கிறார்கள். அங்கு ஒரு டாக்டர், அவரது மனைவி, 12 வயது மகள் ஆகியோரும் வருகிறார்கள். 4 நண்பர்களும், டாக்டர் குடும்பமும் நண்பர்களாகி விடுகிறார்கள்.
இந்த நிலையில், டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போகிறார்கள். நண்பர்கள் மீது டாக்டர் சந்தேகப்பட்டு, அவர்களின் சட்டையை பிடிக்கிறார். நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. இந்த சூழலில், டாக்டரின் மகளுடன் காணாமல் போன இளைஞர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

போலீஸ் அதிகாரி ஜான் விஜய்க்கு ‘செக் போஸ்ட்’டில் இருக்கும் வன பாதுகாவலர் மீதும், காட்டுக்குள் கஞ்சா கடத்தும் 3 பேர் மீதும் சந்தேகம் ஏற்படுகிறது. விசாரணையில் அவர்கள் நிரபராதிகள் என்பது தெரிய வருகிறது. உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய் வழக்கமான அலட்டல்களுக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டு, யதார்த்தமான போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவர் விசாரணை செய்யும் ‘ஸ்டைல்’ புதுசு.

டாக்டராக வரும் விஜய் ஆனந்த், டாக்டரின் மனைவியாக அஞ்சலி நாயர் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ்சில், அஞ்சலியா இவர்? என்று ஆச்சரியப்படுத்துகிறார். நண்பர்களாக வரும் சித்தார்த், ஶ்ரீராம் கார்த்திக் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
போதையால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார். கதை முழுவதும் காட்டுக்குள் முடங்கிப்போனது, படத்தின் ஒரே பலவீனம். குறிப்பாக, ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன.

கடத்தல்காரன் மற்றும் கொலையாளி யார்? என்பதை மூடுமந்திரமாக வைத்து, கடைசி வரை காப்பாற்றி இருப்பதற்காக இயக்குனர் சுரேஷ்குமாருடன் கைகுலுக்கலாம். படத்தின் தலைப்புக்கு என்ன அர்த்தம்? என்று புரியாமல் தியேட்டருக்குள் சென்றால்... ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
சாம்ராட் ஒளிப்பதிவில், மலைகள் சூழ்ந்த காடுகள் கண்களுக்குள் நிற்கின்றன. இசையமைப்பாளர் ஜான் சிவநேசனின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்த்து இருக்கிறது.
மொத்தத்தில் ‘அகடு’ ஆச்சரியம்.
விஜய பாஸ்கர் இயக்கத்தில் சாந்தி, டோரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பில்டர் கோல்டு’ படத்தின் விமர்சனம்.
திருநங்கைகள் விஜி, சாந்தி, டோரா ஆகிய மூன்று பேரும் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் விஜி கொலைக்கு அஞ்சாதவர். திருநங்கைகளுக்கு ஒரு அவமானம் என்றால் அவர்களுக்கு முன்னால் நின்று தண்டனை கொடுக்கிறார். தச்சு தொழில் நடத்தும் ஒருவர் கொடுக்கும் கூலிக்கு கொலை செய்வதை விஜி தொழிலாக செய்து வருகிறார். அதன் விளைவுகளே மீதிக்கதை.
விஜியாக நடித்துள்ள விஜயபாஸ்கர் முரட்டு சுபாவம் சக தோழிகள் மீது அவர் காட்டும் பாசம், தங்களைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முன்னால் நிற்கும் அடிதடி குணம் என்று மைய பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். டோரா, சாந்தி கதபாத்திரங்களின் இயல்பான நடிப்பு நம்மை அவர்கள் உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. சுகு என்ற பாத்திரத்தில் வரும் சிறுவன் பயமுறுத்துகிறான். மரக்கடை முதலாளியாக வரும் சிவ இளங்கோ நல்ல தேர்வு.

முதல் முறையாக தமிழ் சினிமாவில் திருநங்கைகளைப் பற்றிய இவ்வளவு வெளிப்படையான ஒரு படம் வந்ததிருக்கிறது. சமூகத்தில் தங்களைப் புறக்கணிக்கும் மனிதர்கள் மீது கோபத்தில் கொந்தளிக்கும் விஜி, போகப்பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டதால் பாதிக்கப்படும் சாந்தி, பெண் உணர்வு தோன்றியதால் வீட்டிலிருந்து விரட்டப்படும் டோரா ஆகியோரின் மன உணர்வுகள் மூலம் ஒட்டு மொத்த திருநங்கைகள் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய பாஸ்கர்.

அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் கொச்சையான வார்த்தைகள் மௌனிக்கப்பட்டாலும் அது காதுகளில் ஒலிக்கவே செய்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். முழுவதும் திருநங்கைளை வைத்து எடுத்திருந்தாலும் திரைக்கதையில் சுணக்கம் இல்லாமல் கையாண்டு இருக்கிறார் இயக்குனர். சில குறைகள் இருந்தாலும் திருநங்கைகள் உலகத்தைக் காட்டிய இயக்குனர் விஜய் பாஸ்கர் பாராட்டுக்குரியவர். பரணிக்குமார் ஒளிப்பதிவும், ஹூமர் எழிலன் இசையும் சிறப்பு.
மொத்தத்தில் ‘பில்டர் கோல்டு’ - புது உலகம்
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இதனால் தான் அவர் உயிரிழந்ததாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. அவர் உயர் ரத்த அழுத்தத்தால் தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும் மத்திய அரசின் குழு விளக்கம் அளித்துள்ளது.
‘சீரடி சாய்பாபா மகிமை’ படத்தை இயக்கியுள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார்.
சீரடி சாய்பாபாவின் அற்புதங்களை சுவாரஸ்யமான திரைக்கதையாக்கி திரைப்படமாக எடுக்கின்றனர். பிரியா பாலு இயக்கும் இந்த படத்துக்கு, ‘சீரடி சாய்பாபா மகிமை’ என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். சாய்பாபாவாக ரவிக்குமார் நடிக்கிறார். இவர், ‘என் நெஞ்சை தொட்டாயே, ’ ‘திகிலோடு விளையாடு’ ஆகிய படங்களில் நடித்தவர்.
பல குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சாய்பாபா வேடத்துக்காக இவர், 60 நாட்கள் விரதம் இருந்து நடிக்கிறார். பல படங்களில் நடித்துள்ள வினாயகராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை இயக்கி உள்ள பிரியா பாலு, ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட குறும்படங்களையும், டெலிபிலிம்களையும் இயக்கி உள்ளார்.
சினிமா படப்பிடிப்பின் போது ஒளிப்பதிவாளர் பலியான விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார்.

அலெக் பால்ட்வின், ஹலினா ஹட்சின்ஸ்
மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நயன்தாரா கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார்.
சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அவர், தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தாவும், நயன்தாரா-வும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
இதையும் படியுங்கள்.... நேரடியாக ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் டோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இதனால் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில், மன அழுத்தத்தை போக்க, நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம்.

தோழியுடன் சமந்தா
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது மேலும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது.
இதையும் படியுங்கள்.... விவாகரத்துக்கு பின் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சமந்தா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஜெயம் எஸ்.கே.கோபி ஈர்த்துள்ளார்.
திரையரங்கு குத்தகைதாரராக திரையுலகிற்குள் நுழைந்து, விநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் முன்னேறி, நடிகராக வளர்ந்து இருப்பவர் ஜெயம் எஸ்.கே.கோபி. காஞ்சனா 3 மூலம் ராகவா லாரன்ஸால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயம் எஸ்.கே.கோபி, திரௌபதி திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இவரது நடிப்பு பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தகன், ஜகா, கோபி நயனார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்ட சுமார் 10 பத்து படங்களில் ஜெயம் எஸ்.கே.கோபி தற்போது நடித்து வருகிறார். கனவே கலையாதே உள்ளிட்ட மூன்று வலைத் தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
“ருத்ரதாண்டவம் படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து நடிகர் ராதாரவி, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். அனைத்து பெருமையும் இயக்குநர் மோகன் ஜி-யையே சேரும் என்கிறார் ஜெயம் எஸ்.கே.கோபி.






