search icon
என் மலர்tooltip icon

    பெலாரஸ்

    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    • உக்ரைன்- ரஷியா போரில் பெலாரஸ் ரஷியாவுக்கு உதவு செய்து வருகிறது
    • பெலாரஸ் அண்டை நாடுகளான போலந்து லிதுவேனியா பாதுகாப்பை அதிகரித்துள்ளது

    உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழு திடீரென ரஷிய ராணுவதிற்கு எதிராக கலகம் செய்து, ஆயுத கிளர்ச்சி ஏற்படுத்த முயற்சித்தது. ஆனால், பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு, கலகம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தார்.

    வாக்னர் குழு பெலாரஸ் செல்வது, ரஷியா அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளாது என ஒப்பந்தும் செய்யப்பட்டது. இதனால் வாக்னர் படையைச் சேர்ந்தவர்கள் பெலாரஸ் வந்துள்ளனர். இதனால் லிதுவேனியா, போலந்து நாடுகள் மேலும் பாதுகாப்பை எல்லையில் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இரு நாடுகள் எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதனால் மேலும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளது.

    இரண்டு நாடுகளுக்கும் இடையில் ரஷியா கட்டுப்பாட்டில் உள்ள கலினிங்ராட் பிராந்தியத்தில் ஆத்திரமுட்டும் செயலில் ரஷியா மற்றும் பெலாரஸ் ஈடுபட்டு வருவதாக லிதுவேனியா, போலந்து தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் பெலாரஸ் ஹெலிகாப்டர்கள் இரண்டு தங்கள் எல்லைக்குள் அத்துமீறி பறந்ததாக போலந்து குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பெலாரஸ் அதை மறுத்துள்ளது.

    லிதுவேனியா, போலந்து எல்லையில் அருகே உள்ள கிரோட்னோ மாகாணத்தில் பெலாரஸ் ராணுவப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

    போலந்து லிதுவேனியா எல்லையை இணைக்கும் 96 கி.மீட்டர் நீளம் கொண்ட எல்லைப் பகுதி சுவால்கி என அழைக்கப்படுகிறது. இந்த பகுதி ரஷியா கட்டுப்பாட்டில் இருக்கும் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் பெலாரஸ் எல்லைக்கும் இடையிலான பகுதி.

    இந்த பகுதிதான் நேட்டோவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட முக்கிய புள்ளியாக இருக்கிறது. ரஷியா இந்தப் பகுதியை ஆக்கிரமித்தால் லிதுவேனியா, லித்வியா, எஸ்டோனியா போன்ற நேட்டோ உதவி நாடுகளில் இருந்து போலந்து தனியாக பிரிக்கப்பட்டு விடும். இது ரஷியாவுக்கு ஆதாயமாக இருக்கும் என ராணுவ நடவடிக்கை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    பால்டிக் கடலில் உள் கலினிங்ராட் பிராந்தியத்திற்கும் ரஷியாவிற்கும் இடையில் நிலப்பரப்பு தொடர்பு கிடையாது.

    • பிரிகோசினின் அலுவலகத்திலும், இல்லத்திலும் காவல்துறை சோதனை நடத்தியதை காட்டும் காட்சிகளை ரஷியா வெளியிட்டது.
    • வாக்னர் படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், பெலாரஸ் நாட்டுக்கு சென்றதாக முதலில் கூறப்பட்டு வந்தது.

    ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். இவர் சென்ற மாத இறுதியில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியுற்றது. இவருக்கு எதிராக புதின் அதிரடி காட்ட தொடங்கிய வேளையில், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தலையீட்டால் ஏற்பட்ட சமாதான முயற்சியால், ரஷியாவை விட்டு வெளியேறினார். புதினுடனான ஒப்பந்தத்தின்படி பிரிகோசின், பெலாரஸ் நாட்டுக்கு சென்றதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் இன்னும் ரஷியாவில்தான் இருக்கிறார் என பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ கூறியுள்ளார்.

    "யெவ்ஜெனி பிரிகோசின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இருக்கிறார். இன்று காலை அவர் மாஸ்கோ நகருக்கோ அல்லது வேறு இடத்திற்கோ பயணிக்கலாம். ஆனால், அவர் இப்போது பெலாரஸ் பிரதேசத்தில் இல்லை" என சர்வதேச ஊடகங்களுடனான செய்தியாளர் சந்திப்பின்போது லுகாஷென்கோ தெரிவித்தார்.

    இதற்கிடையே செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பிரிகோசினின் அலுவலகத்திலும், அவரது இல்லத்திலும் காவல்துறை சோதனை நடத்தியதை காட்டும் காட்சிகளை ரஷியா வெளியிட்டது. இந்த காட்சிகளில் தங்கம், பணம், விக், ஆயுதங்கள் மற்றும் பல்வேறு மாற்றுப்பெயர்களில் பிரிகோசினுக்கு சொந்தமான பல பாஸ்போர்ட்கள் அந்த அலுவலகத்தில் இருப்பதாக காட்டப்பட்டது.

    ரஷிய அரசிலுக்கு எதிராக பேசுபவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடும் வழக்கத்தை ரஷியா கடைபிடிப்பதாக மனித உரிமை வழக்கறிஞர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.
    • எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.

    மின்ஸ்க்:

    உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழு போரிட்டது.

    இதற்கிடையே தங்களது குழு மீது ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின் குற்றசாட்டி ரஷியாவில் கிளர்ச்சியை நடத்தப் போவதாக அறிவித்தார்.

    இதையடுத்து அக்குழுவின் 25 ஆயிரம் வீரர்கள் தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிகோஷின் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    அதன்பின் பெலாரஸ் நாட்டு அதிபர் லுகா ஷென்கோவின் சமரசத்தை ஏற்று கிளர்ச்சியை கைவிடுவதாக எவ்ஜெனி ரிகோஷின் அறிவித்தார். ரஷியா-வாக்னர் குழு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் பதற்ற நிலை முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே வாக்னர் குழு வீரர்கள் ரஷிய ராணுவத்தில் இணையலாம் அல்லது பெலாரஸ் நாட்டுக்கு செல்லலாம் அல்லது தங்களது குடும்பங்களுடன் செல்லலாம் என்று ரஷிய அதிபர் புதின் அறிவித்தார்.

    வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷியாவில் இருந்து வெளியேறினார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது.

    அவர் சென்ற ஜெட் விமானம் பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் எவ்ஜெனி பிரிகோஷின், பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகா ஷென்கோ கூறும் பாோது, வாக்னர் குழு தலைவர் பெலாரஸ் நாட்டுக்கு வந்துள்ளார்.

    சமரச பேச்சின் போது பிரிகோஷினிடம், வாக்னர் படை ரஷிய தலைநகருக்குள் நுழைந்ததால் அவரது வீரர்கள் அழிக்கப்படுவார்கள். பாதி வழியிலேயே நசுக்கப்பட்டு விடுவீர்கள் என்று தெரிவித்தேன். வாக்னர் வீரர்களுக்கான முகாம்கள் பெலாரசில் அமைக்கவில்லை. தேவைப்பட்டால் சில வளர்ச்சியடையாத பகுதிகள் வழங்கப்படும் என்றார்.

    • பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி.
    • அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார்.

    மின்ஸ்க் :

    பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை போராளி அலெஸ் பியாலியாட்ஸ்கி. வக்கீலான இவர் பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980-களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் ஆவார்.

    பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவரான அலெஸ் பியாலியாட்ஸ்கி, கடந்த 1996-ம் ஆண்டு 'வியாஸ்னா மனித உரிமைகள் மையம்' என்கிற பெயரில் மனித உரிமை அமைப்பு ஒன்றை தொடங்கினார்.

    இந்த அமைப்பு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிதி மற்றும் சட்ட உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பெலாரசின் அதிபராக இருந்து வரும் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனையடுத்து, தேர்தலில் முறைகேடு செய்து அதிபரானதாக அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது. பல மாதங்கள் நீடித்த இந்த போராட்டம் பெலாரசை அதிரவைத்தது.

    இந்த போராட்டத்தை இரும்புகரம் கொண்டு ஒடுக்கிய அரசு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    இதனிடையே அரசு எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி செய்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது.

    அதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    ஆனால் அதை பொருட்படுத்தாத பெலாரஸ் அரசு அலெஸ் பியாலியாட்ஸ்கி மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

    இதற்கிடையில் அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

    இந்த நிலையில் அலெஸ் பியாலியாட்ஸ்கி மீதான வழக்கை விசாரித்து வந்த பெலாரஸ் கோர்ட்டு நேற்று அவரை குற்றவாளியாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    ×