search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    உண்மை எது: பிரிகோசின் மரணத்தை முன்னரே அறிந்திருந்ததா அமெரிக்கா?
    X

    உண்மை எது: பிரிகோசின் மரணத்தை முன்னரே அறிந்திருந்ததா அமெரிக்கா?

    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    Next Story
    ×