தொழில்நுட்பம்

2019 இந்திய பொது தேர்தலுக்காக ஃபேஸ்புக் செய்யும் அதிரடி மாற்றங்கள்

Published On 2018-12-07 10:35 GMT   |   Update On 2018-12-07 10:35 GMT
ஃபேஸ்புக் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் 2019 இந்திய பொதுத் தேர்தலுக்காக அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. #Facebook



இந்தியாவில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை நிர்வகிக்கும் வழிமுறைகளில் பெருமளவு மாற்றங்களை செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதேபோன்ற மாற்றங்களை ஃபேஸ்புக் ஏற்கனவே அமெரிக்கா, பிரேசில் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்பும் அனைவரும் தங்களது அடையாளம் மற்றும் இருப்பிடம் சார்ந்த விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

அடையாளம் மற்றும் இருப்பிட விவரங்களை உறுதிப்படுத்த சில வாரங்கள் ஆகும் என்பதால், விளம்பரதாரர்கள் தங்களது பணிகளை முன்கூட்டியே துவங்க வேண்டி இருக்கும். இனி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அரசியல் விளம்பரங்களை பதிவிட விரும்புவோர் தங்களது அடையாளச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சமர்பிக்க வேண்டும்.



சமூக வலைதளங்களில் அரசியல் விளம்பரங்களை பதிவிடுபவர் பற்றிய விவரங்கள் விளம்பரங்களில் தெரியும். இத்துடன் ஆன்லைனில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில், சர்ச் வசதி கொண்ட விளம்பர மையம் ஒன்றும் வழங்கப்பட இருக்கிறது. 

ஃபேஸ்புக் விளம்பர மையத்தில் அரசியல் சார்ந்து குறிப்பிட்ட விளம்பரதாரர் பதிவிடப்பட்டு இருக்கும் விளம்பரங்கள், ஒவ்வொரு விளம்பரத்திற்கும் செலவிடப்பட்ட தொகை, விளம்பரத்தை எத்தனை பேர் பார்த்து இருக்கின்றனர் என்ற விவரங்களை பார்க்க முடியும். 

பொதுத் தேர்தலின் போது, அரசியல் சார்ந்த விளம்பரங்களை பதிவிடுவோர், ஏற்கனவே அதற்கான உரிமத்தை பெற்று இருக்க வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கும். விளம்பரதாரர்களை அடையாளப்படுத்தி, விளம்பரங்களில் அதிக விவரங்களை வழங்குவதன் மூலம் இந்திய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு முடிந்த வரை குறைக்கப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
Tags:    

Similar News