தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கி உத்தரவாத தொகையை வழங்க டெலிகாம் தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2018-07-18 07:44 GMT   |   Update On 2018-07-18 07:44 GMT
ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு டெலிகாம் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Aircel



ஏர்செல் நிறுவனம் செலுத்திய வங்கி உத்தரவாத தொகையை அந்நிறுவனத்துக்கு திருப்பித்தர மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு தொலைதொடர்பு விவகாரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திவாலானதாக அறிவிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனத்துக்கு இந்த உத்தரவு உதவியாக இருக்கும்.

உத்தரவை தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ரூ.450 கோடிக்கும் அதிகமான தொகை கிடைக்கலாம் என்ற வகையில், தொகையை கொண்டு ஏர்செல் நிறுவனம் ஏற்கனவே செய்த செலவினங்கள், நிலுவையில் உள்ள ஊதியங்கள், இதர கட்டணங்களை செலுத்த முடியும். 

மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ஏர்செல் செலுத்த வேண்டிய ரூ.6,600 கோடி நிலுவை தொகையை முடிந்த வரை திரும்ப பெற முயற்சித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு பின்னடைவாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறை இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் கூறப்படுகிறது.


கோப்பு படம்

2016-ம் ஆண்டு மேக்சிஸ் தொலைதொடர்பு நிறுவனம் சார்பாக வங்கி உத்தரவாத தொகையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செலுத்தியிருந்தது. ஏர்செல் அலைக்கற்றைகளுக்காக செலுத்த வேண்டிய கட்டணங்களை ஏர்டெல் நிறுவனம் வங்கி உத்தரவாத கட்டணமாக ரூ.411.22 கோடி, ரூ.39.33 கோடி மற்றும் ரூ.3.16 கோடிகளை மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்தி இருக்கிறது.

இதுகுறித்த விவரம் அறிந்த வழக்கறிஞர்கள் தெரிவித்திருக்கும் தகவல்களின் படி, முதற்கட்டமாக வங்கி உத்தரவாத தொகை ஏர்டெல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றும், பின் அதனை ஏர்செல் நிறுவனத்துக்கு வழங்கும் என தெரிவித்திருக்கின்றனர்.

மத்திய தொலைதொடர்பு விவகாரங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவு பொதுவாக வெளியிடப்படவில்லை. எனினும் ஏர்டெல் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில் “ஏர்செல் நிறுவனத்துக்கு வங்கி உத்தரவாத கட்டணத்தை வழங்க வேண்டியதில்லை,” என தெரிவித்துள்ளார்.

ஏர்செல் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. ஏர்செல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் தனது 3000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. #Aircel #bankruptcy
Tags:    

Similar News