அறிந்து கொள்ளுங்கள்

இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி S23 சீரிஸ் விலை விவரங்கள்

Published On 2023-01-20 07:14 GMT   |   Update On 2023-01-20 07:14 GMT
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
  • புது கேலக்ஸி ஃபிளாக்‌ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி S23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வெளியீட்டுக்கு முன் புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள் பற்றி ஏராளமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் கேலக்ஸி S23 சீரிஸ் ஆஸ்திரேலிய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது.

தற்போது அமெரிக்க விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. வெரிசான் தரவுகளில் இருந்து புதிய விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ்-க்கு பழைய விலையையே நிர்ணயம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் இதே நிலையை பின்பற்ற சாம்சங் முடிவு செய்திருக்கும் என தெரிகிறது.

விலை விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி S23 பேஸ் வேரியண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 64 ஆயிரத்து 950 என துவங்கும் என கூறப்படுகிறது. இதன் 256 ஜிபி விலை விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கேலக்ஸி S23 பிளஸ் 8 ஜிபி ரேம் விலை 999 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 81 ஆயிரத்து 134 என துவங்கும் என தெரிகிறது. கேலக்ஸி S23 பிளஸ் மாடலின் பேஸ் வேரியண்ட் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

வழக்கமாக சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல்களின் விலையை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 3 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான கேலக்ஸி S22 சீரிஸ் துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில், விலையை மாற்ற வேண்டாம் என சாம்சங் முடிவு செய்யும் பட்சத்தில் கேலக்ஸி S23 துவக்க விலை ரூ. 72 ஆயிரத்து 999 என்றே நிர்ணயம் செய்யப்படும்.

அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி S23 மாடலில் அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட AMOLED இன்ஃபினிட்டி O ஃபிளாட் ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து சந்தைகளிலும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இதன் முன்புறம் 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் மாடல்களில் முறையே 3900 எம்ஏஹெச் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரிகள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 2000 எம்ஏஹெச் பேட்டரி பூஸ்ட் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News