2K கிட்ஸ்களால் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் இந்தியர்கள் முதலிடம்..!
- இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது.
- மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.
இந்தியாவில், அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது. சரி..! எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமா..?
1. இந்தியா
இந்தியாதான் உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1 சதவிகிதம் பெண் பயனர்கள், 66.9 சதவிகிதம் ஆண் பயனர்கள். இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2-கே கிட்ஸ்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
2. அமெரிக்கா
உலக வல்லரசான அமெரிக்கா, இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கிறது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை கையாளுகிறார்கள்.
3. பிரேசில்
இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 58 சதவிகிதம் பெண்களும், 42 சதவிகிதம் ஆண்களும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கிறார்கள். இணைய வசதிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தரும் பொழுதுபோக்கே இதற்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.
4. இந்தோனேசியா
இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் பொழுதை போக்குகிறார்கள். அதில் பெண்கள் 54 சதவிகிதம் பேர், ஆண்கள் 46 சதவிகிதம் பேர். இந்தோனேசிய மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு அதன் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் சமூக ஊடக கலாசாரம் காரணமாக விளங்குகிறது.
5. துருக்கி
58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவிகிதத்தினர் ஆண்கள். மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.
இந்த டாப்-5 நாடுகளை தொடர்ந்து, ஜப்பான் 6-வது இடத்திலும், மெக்சிகோ 7-வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கின்றன.