கணினி

இந்தியாவில் 50 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்த ட்விட்டர்

Published On 2022-11-05 05:25 GMT   |   Update On 2022-11-05 05:25 GMT
  • எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ஏராளமான மாற்றங்கள் மற்றும் புது விதிகளை அறிவித்து வருகிறார்.
  • ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புது அம்சங்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றி இருக்கும் எலான் மஸ்க், அதில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருக்கிறார். உலகம் முழுக்க ட்விட்டரில் பணியாற்றி வரும் ஊழியர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த வகையில், இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் இந்தியாவில் பணியாற்றி வந்த ஒட்டுமொத்த விளம்பர குழுவும் நீக்கப்பட்டு இருக்கிறது. இதே போன்று பொறியியல், பிராடக்ட் மற்றும் தகவல் தொடர்பு துறைகளில் பணியாற்றி வந்த ஏராளமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். உலகளவில் நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு வருவதால், ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்றும், இதன் காரணமாக திங்கள் கிழமை முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும் ட்விட்டர் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

மேலும் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கைகள் முழுமை பெறும் வரையில் அடுத்த வாரம் வியாழன் கிழமை வரை உலகளவில் செயல்பட்டு வரும் ட்விட்டர் அலுவலகங்களை மூடவும், ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழையவும் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 300 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனினும், எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற விவரங்களை ட்விட்டர் இதுவரை வெளியிடவில்லை.

Tags:    

Similar News