Recap 2024

2024 ரீவைண்ட் - தமிழக அரசியல் தலைவர்களும், சர்ச்சை கருத்துகளும்

Published On 2024-12-23 10:25 IST   |   Update On 2024-12-23 10:25:00 IST
  • திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
  • எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் - ஆதவ் அர்ஜூனா - விஜய்

சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை மக்களே 'மைனஸ்' ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்.

அதே மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதாகவும் யாரும் முதல்வராக பிறப்பதில்லை என்றும் திமுகவை விமர்சித்து பேசினார்.

இதற்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்களால் தான் முதலமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்த அறிவு கூட அந்த ஆளுக்கு இல்லையா. தமிழகத்தில் மக்களாட்சி தான் நடைபெறுகிறது என்று கூறினார்.

 

இதேபோல் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்திகளை தான் பார்ப்பதில்லை என தெரிவித்தது சர்ச்சையானது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சினிமா துறையிலிருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், சினிமா செய்தியைப் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். இன்று உதயநிதி ஸ்டாலின் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியிட முடியாது. மக்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார்கள் என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் - எச்.ராஜா

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் வளாகத்தில் 10-க்கு மேற்பட்ட தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடிய சம்பவம் சர்ச்சையானது.

 

இதற்கு பதில் அளித்த பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா, சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்கள் என்ன கோவிலின் கருவறையிலா கிரிக்கெட் விளையாடினார்கள். கருவறையில் விளையாடினால் தான் குற்றம் என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு ஆதரவாக எச். ராஜா கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின் - செல்லூர் ராஜூ

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. திமுக எனும் ஆலமரத்தை வெட்ட சிலர் பிளேடுடன் வருவதாக உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார்.

இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "ஆலமரமே பிடுங்கிக் கொண்டு போயிருக்கு வெள்ளத்தில். உலகமே அழிந்திருக்கிறது. ஆலமரம் அழியாதா? உதயநிதிக்கு தெரியவில்லை. என்ன தான் கூட்டணி பலமாக இருந்தாலும், மக்கள் பலம் இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும்" என்று கூறினார்.

விஜய் - சீமான்

திராவிடமும், தமிழ் தேசியமும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2 கண்கள் என்று கொள்கை விளக்க மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

 

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் பேசுகையில், திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என விஜய் சொன்னவுடன் நான் மிகவும் பயந்துவிட்டேன். திராவிடம் வேறு, தமிழ் தேசியம் வேறு.

தமிழ் தேசிய அரசியல் பேரரசன் மணியரசன் கூறுவார். ஒன்று சாம்பார் என்று சொல்லு. இல்லை கருவாட்டுக் குழம்பு என்று சொல். இரண்டும் சேர்த்து கருவாட்டு சாம்பார் என்று சொல்லாதே.

நீங்கள் இனிமேல்தான் பெரியார், அம்பேத்கரை படிக்க வேண்டும். நாங்கள் அதைப் படித்து பி.எச்டி வாங்கிவிட்டோம்.

75-வது ஆண்டு கொண்டாடிய கட்சிக்கே திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை.

எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது. இந்த பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்ட வேண்டாம். 2026ம் ஆண்டு என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின்

அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவது எதிர்க்கட்சியினரிடையே பேசுபொருளானது.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், உலகத்திலேயே அரசு நிகழ்ச்சிக்கு டி சர்ட் போட்டு செல்வது உதயநிதி ஸ்டாலின் தான். டி-சர்ட் போடுவதை நான் குறை சொல்லவில்லை. கட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் போட்டு செல்லுங்கள். உதயநிதியிடம் சட்டை இல்லை என்றால் நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறி இருந்தார்.

 

இதற்கு பதில் அளித்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி-சர்ட் அணியக்கூடாது என்ற சட்டம் இருந்தால் அதனை அமல்படுத்துவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.

இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள், மழை நீர் வெளியேற்றும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

 

அப்போது மழை பாதிப்புகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,

எடப்பாடி பழனிசாமிக்கு குற்றச்சாட்டு வைப்பதே வேலையாக உள்ளது. அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இதை பலமுறை சொல்லிவிட்டேன். எங்கள் வேலையை நாங்கள் செய்து வருகிறோம். ஓட்டு போட்டவர்கள் மட்டுமல்லாது, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துத்தான் பணிகளை செய்து வருகிறோம். அதுதான், எங்கள் குறிக்கோள். அதுதான் எங்கள் கொள்கை. அதைத்தான் செய்து வருகிறோம். அதனால், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது, தேவையும் இல்லை என்று கூறினார்.

Tags:    

Similar News