புதுச்சேரி

மத்திய அரசின் சிறப்பு நிதியாக புதுவைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு- மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்

Published On 2022-11-05 14:41 IST   |   Update On 2022-11-05 14:41:00 IST
  • ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
  • புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி:

மத்திய இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் சுற்றுப்பயணமாக புதுவை வந்தார்.

இன்று அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் சிறப்பு நிதியாக ரூ.1400 கோடி ரூபாய் புதுவைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மேம்பாலம் கட்ட ரூ.500 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. புதுவை பெஸ்டு புதுவையாக மாற்ற முதல்-அமைச்சருடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். புதுவை-விழுப்புரம் சாலை ரூ.92 கோடியில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். புதுவையில் முதல்கட்டமாக 1400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் திட்டதின் கீழ் புதுவையில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டுவதும் அவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது குறித்து இலங்கை அரசிடம் பேசி மீனவர்களை மீட்டு வருகிறோம்.

சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

விமான நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News