புதுச்சேரி

புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிரம்

Published On 2024-03-04 10:22 GMT   |   Update On 2024-03-04 10:22 GMT
  • அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர்.
  • 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். நன்னடத்தை விதிகள் அமலாகிவிட்டால் புதிய திட்டங்கள், பணிகளை செயல்படுத்த முடியாது.

ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களையும், தொடங்கிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும்.

இதனால் பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்திலிருந்தே புதுச்சேரி அரசு பல்வேறு புதிய பணிகளை தொடங்கி வருகிறது. புதுச்சேரியின் பல்வேறு தொகுதிகளிலும் தார்சாலை, சிமெண்டு சாலை, ஆழ்குழாய் கிணறு, சைடு வாய்க்கால் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜைகள் நடக்கிறது.

அதோடு அரசு ஊழியர்களுக்கு நியமன ஆணை, பதவி உயர்வு ஆணை ஆகியவற்றையும் வேகமாக வழங்கி வருகின்றனர். சமீபத்தில் பி.ஆர்.டி.சி.க்கு வாங்கப்பட்ட புதிய பஸ்களில் 12 பஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இயக்கி வைத்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறையில் காலி பணியிடங்களுக்கு நர்சுகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் கடந்த 1-ந் தேதிக்குள் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. மொத்தம் 144 பேர் சான்றிதழ்கள் சமர்பித்தனர்.

இதில் முதல்கட்டமாக 92 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இவர்களுக்கான பணி ஆணை வழங்கும் விழா நேற்று இரவு 9 மணியளவில் சட்டசபை வளாகத்தில் நடந்தது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தேர்வானவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் கணவர், கைகுழந்தையோடு பணி ஆணையை பெற்றுச் சென்றனர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே பணி ஆணை வழங்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மீதமுள்ள 52 பேருக்கும் புதுப்பிக்கப்பட்ட உரிய சான்றிதழ்களை சமர்பித்து பணி ஆணை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News