புதுச்சேரி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது

Published On 2026-01-02 08:20 IST   |   Update On 2026-01-02 10:54:00 IST
  • கைது செய்த 11 மீனவர்களை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
  • விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

தமிழக-புதுச்சேரி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படை தொடர்ந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலுக்கு மின்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த 11 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகம் வடமேற்கு கடற்பரப்பில் இன்று காலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களது படகை பறிமுதல் செய்து 11 மீனவர்களையும் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்த 11 மீனவர்களையும் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் விசாரணை நடத்தியபோது கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் என தெரியவந்தது.

விசாரணை முடிந்து மீனவர்கள் 11 பேரும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக-புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வரும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Tags:    

Similar News