புதுச்சேரி

மோடி, ரங்கசாமி படத்துடன் அதிமுக போட்டி போஸ்டர்

Published On 2024-03-03 09:49 GMT   |   Update On 2024-03-03 09:49 GMT
  • புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தொகுதியில் மும்முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.

ஆளும் கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா, இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் அல்லது தி.மு.க., அ.தி.மு.க. தேர்தலில் போட்டியிடுகிறது.

பா.ஜனதா வேட்பாளர் யார்? என தெரியாத நிலையில் கிராமப்புற பகுதிகளில் தாமரை சின்னம் வரைந்து, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் புதுவையில் பா.ஜனதாவின் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இதில் மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் படங்களுடன் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தலைவர் நட்டா, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோரின் படங்களை பிரசுரித்தும் வாக்களிப்போம் தாமரைக்கே எனவும் அச்சிட்டிருந்தனர்.

மேலும் சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய போது, தரமான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். அதனால்தான் ஏழை மக்கள் அனைவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்ற வரிகளையும் குறிப்பிட்டுள்ளனர்.

இது கூட்டணியை விட்டு வெளியேறிய அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகளை இழுக்கும் தந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது புதுவை அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இரவோடு, இரவாக புதுவை அ.தி.மு.க. சார்பில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுத்து ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், பிரதமர் மோடி, புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களுடன் பல்லடத்தில் பிரதமர் மோடி பேசிய வாசகங்களை குறிப்பிட்டுள்ளனர். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்தவர் என்றால் அது ஜெயலலிதாதான். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் என்று பிரதமர் மோடி பேசியதை அச்சிட்டுள்ளனர்.

மேலும் பிரதமர் மோடி பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் ஒப்பற்ற புகழை பேசியதன் மூலம் எடப்பாடியார் தலைமையில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்துக்கு பா.ஜனதா அதன் கூட்டணி தொண்டர்கள் வாக்களிக்க தயாராகி விட்டனர்.

புதுவையில் அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்துள்ள பா.ஜனதா கூட்டணி தொண்டர்களுக்கு நன்றி, நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாஜக - அ.தி.மு.க. கட்சிகள் இடையிலான இந்த திடீர் போஸ்டர் யுத்தம் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News