காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது
- காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
- வீ.விஜய் (என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி எந்திரத்தை, ஏமாற்றி கடத்திசென்ற நபரை, ஒரு வருடத்திற்கு பிறகு திருநள்ளாறு போலீசார் கைது செய்து, ஜே.சி.பி எந்திரம் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டையை சேர்ந்தவர் த.விஜய். இவரது ஜே.சி.பி எந்திரத்தை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச்சேர்ந்த வீ.விஜய் (வயது35) என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்துசென்றுள்ளார்.
ஒரு சில மாதங்கள் வாடகையை முறைப்படி வழங்கிய வீ.விஜய், அடுத்த சில மாதங்களாக வாடகையை தரவில்லை. மேலும், ஜே.சி.பி எந்திரம் எங்குள்ளது என்ற விவரத்தையும் கூற மறுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட த.விஜய், தனது ஜே.சி.பி. எந்திரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த மார்ச் 2023ல், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, வீ.விஜயை தேடிவந்தனர். இந்நிலையில், வீ.விஜய் வாடகைக்கு எடுத்த ஜே.சி.பி எந்திரத்தை, தனது நண்பர் பாருக்கிடம் விற்றது தெரிவந்தது. தொடர்ந்து, சீர்காழியில் பாருக்கை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், வீ.விஜயை போலீசார் கைது செய்து, ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.