காரைக்கால் திரு.பட்டினத்தில் மனைவி, மாமனார், மாமியார் மீது தாக்குதல்
- கணவர் மீது மனைவி போலீசில் புகார்
- மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் காமன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பூம்பொழில் (வயது 37). இவருக்கும், சீர்காழி தென்பாதியைச்சேர்ந்த சிவா (40) என்பவருக்கும், கடந்த 2011-ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு நித்திக் சூரியா(12), பிரணவ் சூரியா(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனால், பூம்பொழில் தனது தந்தை ஊமைத்துரை, தாய் அமுதா ஆகியோருடன் தனியே வசித்து வருகிறார். கணவர் சிவா, திரு.பட்டினம் வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், பூம்பொழிலுக்கு கடந்த 29-ந் தேதி பிறந்தநாள் வந்ததால், 2 மகன்களையும் தனது வீட்டில் கொண்டு வந்து விடும்படி, கணவர் சிவாவிடம் பூம்பொழில் கேட்டுள்ளார்.
அதன்படி, மதியம் பள்ளி விட்டதும், இளைய மகன் பிரணவ் சூரியாவை சிவா பூம்பொழில் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். மாலை மூத்த மகனுடன் சென்ற சிவா, இளைய மகனை அனுப்பும்படி கூறியுள்ளார். அப்போது மழை பெய்ததாலும், இளைய மகன் தன்னை விட்டு செல்ல மறுத்ததாலும், மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த சிவா, வீட்டுக்குள் நுழைந்து, பூம்பொழிலை தகாதவார்த்தைகளால் திட்டி, அடித்து கீழே தள்ளியுள்ளார். தடுக்க வந்த மாமனார், மாமியாரையும் சிவா தாக்கி விட்டு, 2 மகன்களுடன் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் காயம் அடைந்த பூம்பொழில் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் திரு.பட்டினம் அரசு ஆரம் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.