செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 2 லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபாடு

Published On 2019-04-23 08:18 GMT   |   Update On 2019-04-23 08:18 GMT
ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான தையல்நாயகி, உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் செல்வமுத்து குமாரசாமி, செவ்வாய் அதிபதியான அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். செவ்வாய் தோ‌ஷம் பரிகார தலமான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 2-ம் செவ்வாய்கிழமை நகரத்தார் பாத யாத்திரையாக வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழாவையொட்டி காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடந்த 16-ம் தேதி முதல் பாதயாத்திரையாக புறப்பட்டு நேற்று இரவு வரை வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

கையில் மஞ்சள் பூசிய குச்சியில் வேப்பிலைகளை கட்டி கொண்டு வந்த பக்தர்கள் அதனை வைத்தீஸ்வரன் கோவில் கொடி மரத்து முன்பு போட்டு விட்டு சென்று சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் 2-ம் செவ்வாய் கிழமையொட்டி வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று காலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்கள் தீர்த்த குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வைத்தீஸ்வரன் கோவிலில் இன்று 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்பதால் பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் டி.எஸ்.பி. வந்தனா, இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையில் செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவுக்கு மாட்டு வண்டிகளிலும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியை சேர்ந்த ஒருவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது கனவில் தோன்றிய தையல் நாயகி அம்மன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும்படி கூறியுள்ளார். அதனை ஏற்று அவர் பாதயாத்திரையாக வந்து தையல் நாயகி அம்மனை தரிசனம் செய்ததும் அவரின் நோய் குணமாகி விட்டது.

இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தையல் நாயகி அம்மனை தங்களது குல தெய்வமாக வழிபட தொடங்கினர். அவர்கள் சித்திரை 2-வது செவ்வாய் கிழமை கோவிலுக்கு வந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை உருவாக்கினர். அன்று முதல் இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News