உலகம்
null

காஷ்மீர் தாக்குதல் - டிரம்ப், புதின் உட்பட பல உலக தலைவர்கள் கண்டனம்

Published On 2025-04-23 07:58 IST   |   Update On 2025-04-23 10:39:00 IST
  • பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.
  • பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் கண்டனம் தெரிவித்தார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார்.

பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர். 

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, "காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிர் இழந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை டிரம்ப் தெரிவித்தார். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவை அளிப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.

ரஷிய அதிபர் புதின் கூறும்போது, "இந்த சம்பவம் எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம். அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்திய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கு ரஷியா உறுதி பூண்டுள்ளது. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் துயர விளைவுகளுக்கு உண்மையான இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

இத்தாலி பிரதமர் மெலோனி கூறும்போது, "பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பங்கள், காயமடைந்தவர்கள், அரசாங்கம் மற்றும் முழு இந்திய மக்களுக்கும் எனது ஒற்றுமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News