VIDEO: வெனிசுலா எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க ராணுவம்
- வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
- ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
அமெரிக்கா-வெனிசுலா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.
இதையடுத்து போதை பொருள் கடத்துவதாக கரீபியன் கடல் மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் வெனிசுலாவை சுற்றி கடலில் அமெரிக்கா தனது படைகளை குவித்து உள்ளது.
இந்த நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை அமெரிக்க ராணுவம் கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்ட் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல்படையினர் எண்ணெய் கப்பலுக்குள் சென்றனர்.
பின்னர் அந்த கப்பலை கைப்பற்றி தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த எண்ணை கப்பல், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் வகையில் சட்டவிரோத செயல்பட்டதால் தடை செய்யப்பட் டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் கூறும்போது, வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணை கப்பலை கைப்பற்றியுள்ளோம். இந்த கப்பல் இதுவரை கைப்பற்றப் பட்டவற்றில் மிகப்பெரியது. இது ஒரு மிக நல்ல காரணத்திற்காக கைப்பற்றப்பட்டது என்றார். கப்பல் கைப்பற்றப்பட்ட தற்கு வெனிசுலா அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.