உலகம்

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவ தயார்- டிரம்ப் அறிவிப்பு

Published On 2026-01-11 12:13 IST   |   Update On 2026-01-11 12:13:00 IST
  • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
  • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

Tags:    

Similar News