மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிப்பு: ஈரான் மீது தாக்குதல் நடத்த USA திட்டம்?
- இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை
- ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.
இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் ஆனால் இறுதிமுடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.