உலகம்

புதின் வீட்டை குறிவைத்து 91 டிரோன்களை ஏவிய உக்ரைன் - டிரம்புக்கு பரந்த Phone call - ஜெலன்ஸ்கி பதில்

Published On 2025-12-30 02:32 IST   |   Update On 2025-12-30 02:32:00 IST
  • இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார்.
  • இது ஒரு அப்பட்டமான பொய் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் ரஷியா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த டிரம்ப் அரும்பாடுபட்டு வருகிறார்.

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவின் தலையீட்டுடன் ரஷியா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அதிகாரப்பூர்வ இல்லத்தைக் குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதாக ரஷியா அறிவித்துள்ளது.

ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், நோவ்கோரோட் பகுதியில் உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை நோக்கி உக்ரைன் சுமார் 91 நீண்ட தூர டிரோன்களை ஏவியுள்ளது. இருப்பினும், ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் அந்த டிரோன்கள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தார்.

இது அரச பயங்கரவாதம் என்றும் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறிய லாவ்ரோவ், இந்தத் தாக்குதலால், தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷியாவின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர்  டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தாக்குதல்கள் நடப்பது பேச்சுவார்த்தையை வலுவிழக்கச் செய்யும் என்று புதின் சுட்டிக்காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. 

இதற்கிடையே ரஷியாவின் இந்தக் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் என்றும், உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தகுந்த காரணத்தை உருவாக்கவே ரஷியா இதுபோன்ற நாடகங்களை ஆடுவதாகவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

புதின் இல்லத்தின் மீதான இந்தத் தாக்குதல் குற்றச்சாட்டு, போர் நிறுத்த முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது. 

Tags:    

Similar News