பிரிட்டனில் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்ட பாலஸ்தீன 'நாட்டின்' தூதரகம்!
- ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
- பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது.
விழாவில் பேசிய பாலஸ்தீனத் தூதர் ஹுசாம் சோம்லோட், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை என எங்கு இருந்தாலும், பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று" என்று தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகப் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இப்போது முழு அளவிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டுள்ளன.