உலகம்

கூகுளின் ஆதிக்க வழிமுறையால் பிங் தோற்றது: மைக்ரோசாப்ட் சி.இ.ஓ. குற்றச்சாட்டு

Published On 2023-10-03 07:35 GMT   |   Update On 2023-10-03 07:56 GMT
  • அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
  • எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா

அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.

இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.

3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு  (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News