உலகம்

மீண்டும் அதே தவறு.. பஹல்காம் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது இதுதான்

Published On 2025-04-30 14:00 IST   |   Update On 2025-04-30 22:40:00 IST
  • சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது.
  • மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் கண்டிக்கிறது.

பஹல்காம் தாக்குதல் குறித்து மோடி அரசை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கான் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பஹல்காம் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பு மிகவும் கவலையளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புல்வாமா சம்பவம் நடந்தபோது, நாங்கள் இந்தியாவிற்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்கினோம், ஆனால் இந்தியா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கத் தவறிவிட்டது.

2019 இல் நான் கணித்தது போல, பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகும் அதேதான் நடக்கிறது. சுயபரிசோதனை மற்றும் விசாரணைக்கு பதிலாக, மோடி அரசாங்கம் மீண்டும் பாகிஸ்தானைக் குறை கூறுகிறது.

நவாஸ் ஷெரீப் மற்றும் ஆசிப் சர்தாரி போன்ற சுயநலவாதிகளிடமிருந்து எந்தவிதமான கடுமையான நிலைப்பாட்டையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அவர்களின் சட்டவிரோத சொத்து மற்றும் வணிக நலன்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராகப் பேச மாட்டார்கள்.

1.5 பில்லியன் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், குழப்பமடைவதற்குப் பதிலாக பொறுப்புடன் செயல்பட வேண்டும். அமைதியே எங்கள் முன்னுரிமை, ஆனால் அதை கோழைத்தனம் என்று தவறாகக் கருதக்கூடாது.

2019 ஆம் ஆண்டில், முழு நாட்டின் ஆதரவுடன் எனது அரசாங்கம் செய்தது போல், எந்தவொரு இந்திய ஆக்கிரமிப்புக்கும் தகுந்த பதிலடி கொடுக்கும் முழு திறனையும் பாகிஸ்தான் கொண்டுள்ளது. ஐ.நா. தீர்மானங்களால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபடி, காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் இந்தியா இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. சட்டப்பிரிவு 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் இந்திய ஒடுக்குமுறை இன்னும் அதிகரித்துள்ளது. இது காஷ்மீர் மக்களின் சுதந்திரத்திற்கான விருப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.

மோடியின் போர் வெறியையும், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவரது ஆபத்தான லட்சியங்களையும் பாகிஸ்தான் ஒரு நாடாக வன்மையாக கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News