உலகம் (World)

'பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில்..' தூது சென்ற அஜித் தோவல் புதினிடம் கூறியது என்ன?

Published On 2024-09-13 06:01 GMT   |   Update On 2024-09-13 06:50 GMT
  • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
  • பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.

உக்ரைன் போரும் இந்தியாவும் 

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

அஜித் தோவல் தூது 

மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார்.  அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரமாகும் போர் 

இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.

Tags:    

Similar News